எனைக் காத்த சூரியதீபம் - கந்தா ராமய்யன்
பா.செ எனப்பட்ட பா.செயப்பிரகாசம் அவர்களைப் புதுச்சேரியில் நான் சந்தித்த தருணம் என் வாழ்வின் துயர் மீதூர்ந்த ஒரு காலக்கட்டம்..
முனைவர் பட்ட ஆய்வேட்டை அளித்துவிட்டு வா.. உன்னை எங்கள் நிறுவனத்திற்குத் தங்கத் தாம்பாளத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்கிறோம் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் வாய் மணக்கச் சொன்னார். அதாவது வேலை தருவதாக..
ஒருமுறை ஆய்வேடு முடிக்க முடியாமல் அல்லல் பட்டு, மறுமுறை முயன்றபோது இவன் எங்கே முடிக்கப் போகிறான் என்று நினைத்தாரோ என்னவோ, அந்நிறுவனத்தோடு தொடர்புடைய அவ்வளவு வேலைகளையும் வாங்கிக் கொண்டு, ஆய்வேட்டை முடித்துப் போய் நின்றபோது பேய் முகம் காட்டி விரட்டினார்.
அப்போது ஐம்புலம் இலக்கியப் பேராயம் தொடங்கி, புதுவையில் இலக்கிய ஆய்வுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தோம். வேலையோ காசோ நிம்மதியோ இல்லாமல் தவித்தபடி இருந்த நாட்களில் எனக்குற்ற ஒரே மருந்து ஆய்வுக் கூட்டங்களே!
அப்போது பா.செ அவர்களைப் பற்றி அறிந்தேன். ஜீவா காலனியில், இளவேனிலின் ரத்தினம் ஸ்டுடியோ பின்புறம் அவர் தன் அண்ணன் வீட்டில், மேல் தளத்தில் தங்கியிருந்தார். மரியாதை நிமித்தம் சென்று சந்தித்தேன். விசாரித்தார். தன் காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் சிறுகதைத் தொகுப்பை வாசிக்கக் கொடுத்தார்.
வாசித்துவிட்டு, அதைப் பற்றிய என் விமர்சனத்தை எழுதிக் கொண்டுபோய்க் கொடுத்தேன். என்ன சொல்வாரோ எனும் பதற்றம் இருந்தது. வாங்கிய வாக்கில் வாசித்து முடித்தார். அவர் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.. இவ்வளவு நுட்பமா எழுதி இருக்கீங்களே! என்ன ஒரு அற்புதமான மொழி உங்களுடையது என வியந்தார். அந்த வியப்பு என் கவலைகளைத் தூர ஓட்டியது.
இதை அப்படியே கணினி அச்சு செய்து கொண்டு வாங்க என்றார். எங்க Sir? என்று அலுத்தேன். ஏன்? எனக்குக் கணினி அச்சு வராது. ஏன்? என்னிடம் மடிக்கணினி இல்லை. அடடா.. அப்படியா?
வாரம் ஒன்று கடந்திருக்கும். அழைத்தார். சென்றேன். அவர் இதுவரை பயன்படுத்திய மடிக்கணினியை எனக்குக் கொடுத்தார். தனக்குப் புதிய ஒன்றை வாங்கிக் கொண்டதைக் காட்டினார். நான் வெலவெலத்து விக்கித்து நின்றேன். கணினி அச்சுப் பழகிக் கொள்ளுங்கள் என்றார். புதுவையில் பேராசிரியர் க.பஞ்சாங்கம், பேராசிரியர் ச.பிலவேந்திரன் தவிர்த்து நான் மதித்த பலராலும் துயர்களையே சந்தித்த காலம் அது. பாலை மண்ணில் பால் வார்த்தது போல் அப்போது பா.செ எனும் சூரியதீபம் என்னைக் காத்து அரவணைத்தது.
அடிக்கடி ஐயா வீடு செல்வேன். புத்தகம் துடைத்து அடுக்குவேன். அவருடன் வீடு துடைப்பேன். அப்போதெல்லாம் பேசுவோம். மனஓசை பற்றி, கி. ரா பற்றி, ஈழம் பற்றி, பதிப்புப் பணிகள், மனஓசை இதழ்ப் பணிகள், அரசுப் பணி காரணமாய்த் தன் எழுத்து வாழ்க்கை தொய்ந்து போனதாகத் துயர்ப்படுவார். அந்திமத்தில் தான் என் முதல் நாவலை எழுதத் தொடங்கி இருக்கிறேன். பள்ளிக்கூடம் என்றார். சிறப்பு Sir என்பேன்.
பள்ளிக்கூடம் வெளிவந்தது. ஆவலுடன் தந்தார். வாசித்தேன். வெளியீட்டுவிழா திருவண்ணாமலையில் வம்சி புக்ஸ் விழா. விழாவில் பல நூல்கள் வெளியிடப்பட்டன (வம்சி வெளியீடுகள்), நூலைப் பெற்றுக்கொள்ள, பேராசிரியர் க. பஞ்சாங்கம் அவர்கள். வெளியிட..? நீங்கதான் வெளியிடறீங்க.. என்றார். புதுவையில் எல்லாப் பக்கமிருந்தும் எத்துண்ட இந்தச் சிறுவனுக்கு எவ்வளவு பெரிய சிறப்பை ஓசையின்றிச் செய்துவிட்டார். எனைக் காத்த சூரியதீபம்.
வெளியிட்டுப் பேசினேன். ஐந்து மணித்துளிகள் மட்டும். அது ஜல்லிக்கட்டு எழுச்சி தோன்றி மாணவர்கள் மரியாதை பெற்றிருந்த நேரம். அவ்வெழுச்சிக்கு முன்பே நாவல் அச்சேறிவிட்டது. நாவலில் அப்படி ஒரு மாணவர் எழுச்சி பற்றி எழுதியிருந்தார்.
அறிஞர்கள், மக்கள் எழுத்தாளர்களைக் காலம் உருவாக்குவதில்லை. அவர்களே (சமூக விடுதலைக்கான) காலத்தை உருவாக்குகிறார்கள்; பா.செ.வும் பள்ளிக்கூடமும் சான்று எனப் பேசினேன். ஒன்று மட்டும் ஒற்றைப் புள்ளியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.
இந்த நாவலில் ஒரு சில இடங்கள் தட்டையாக இருப்பதாகத் தோன்றக்கூடும் என்று. இச்சிறிய கூற்று அவரைப் பாதித்திருக்கும் என்று நான் அறியவில்லை.
இடைக்கிடையே சந்தித்துக் கொண்டோம். ஆறு திங்கள் கழிந்திருக்கலாம். அட்டைப்படம் மாறிய பள்ளிக்கூடம் நாவலைத் தந்தார். புரியாமல் வாங்கினேன். நீங்க வெளியீட்டு விழாவில் விமர்சனம் பண்ணீங்க இல்லையா? அதைக் கருத்தில் கொண்டு நாவலை பெருமளவு மாற்றி இருக்கேன். இப்போ படிச்சிட்டு சொல்லுங்க என்றார். தலை கிறுகிறுத்துப் போனேன். என்ன ஒரு மனிதர் இவர்? எனைக் காத்த சூரியதீபம்.
வாசித்தேன். வைத்த விமர்சனத்தை ஒட்டி மாற்றியிருந்தார். வாசிப்பில் நிறைவு ஏற்பட்டது. ஓர் எளியவனின் விமர்சனத்துக்கு இவ்வளவு பெரிய மதிப்பா? இப்படி இதுவரை வரலாற்றில் உண்டா? தெரியவில்லை.
ஐம்புலம் சார்பாக, பள்ளிக்கூடம் நாவலுக்கு விமர்சனக் கூட்டம் நடத்தினோம். வந்திருந்தார். நிறைவு கொண்டிருப்பார் என நம்புகிறேன். பேரா. பஞ்சாங்கம் அவர்களும் ஆயிஷா நடராஜன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பேசினார்கள்.
பள்ளிக்கூடம் நாவலுக்கு விமர்சனம் எழுதித் தந்தேன். தளம் இதழில் வெளியிடச் செய்தார்.
எனைக் காத்த சூரியதீபம் இன்னும் என்னை எங்கெங்குக் கொண்டு சென்றது? அது குளிர்ந்து அனைந்த போது யாரிடமும் பகிராது ஏன் அழுதேன்?
2
பள்ளிக்கூடம் நாவல் குறித்து ஐம்புலம் இலக்கியப் பேராயம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கின் பின்னணியில் பா. செ. அவர்களின் துயர்மிகு அனுபவம் ஒன்று காரணமாக இருந்தது.
நாங்கள் இளையவர்கள் சேர்ந்து பணியாற்றிய அமைப்பு ஐம்புலம்.. நாங்கள் அறிந்து எந்தப் பொருள் பற்றிக் கருத்தரங்கை ஒழுங்கு செய்கிறோமோ அப்பொருண்மையில் உழைத்தவர்கள் அல்லாமல் வேண்டியவர் என்று ஒருவரையும் உரையாற்ற அழைத்தது இல்லை.
நாங்கள் ஒவ்வொரு முறை கூட்டம் நடத்தும் போதும், நான் அவரை இப்படிப் படிச்சிருக்கேன். அப்படிப் படிச்சிருக்கேன். என்னை அவுங்க கூப்பிடலை. எனக்கு மரியாதை கொடுக்காத இடத்துக்கு நீங்களும் போகாதீங்க என்று பேராசிரியர் ஒருவர் அலைபேசியில் அழைத்துத் தன் நண்பர்கள் ஒவ்வொருவரையும் அன்போடு கேட்டுக் கொள்வாராம். மீறி வருபவர்கள் சொல்வார்கள். நான் அவர்களுக்கு இப்படிப் பதில் சொல்வேன் : அவர் எங்கள் கருத்தரங்கப் பொருண்மையில் ஒரே ஒரு கட்டுரை மட்டுமாவது எழுதி இருக்கட்டும். அவரை அழைக்கலாம்.
பா.செ.வும் ஒருமுறை இதையே என்னிடம் கேட்டார். மேற்குறித்த பதிலையே அவரிடம் சொன்னேன். அவர் அதை ஏற்றாரா என்பதை நான் அறியவில்லை.
பள்ளிக்கூடம் நாவல் வெளிவந்த பிறகு சொன்னார் : என் நாவல் பற்றிக் கருத்தரங்கு நடத்தலாம் என்று சிலர் வந்து கேட்டார்கள் என்று பெயர்களைக் கூறினார். Sir.. வேண்டாம் சரியாக வராது என்றேன். இல்லை சரி என்று சொல்லி நாளும் குறித்தாயிற்று என்றார். அப்போ சரி Sir. கொஞ்சம் கவனமாக இருங்கள் என்றேன்.
நாட்கள் சில கழித்து அழைத்தார். வருத்தமுற்ற தொனியில் பேசினார். அவர்கள் இப்படிப் பண்ணுவாங்கன்னு நினைக்கல. விழா ஒருநாள் நிகழ்வாம். புதுவையின் கொஞ்சம் வசதியான பெண் கவிஞர் பெயர் ஒன்றைச் சொல்லி, அவர் கவிதை நூல் வெளியீட்டு விழா காலையிலும் என் நூல் விமர்சனக் கூட்டம் மாலையிலுமாம். அதிலும் என் நூலைப் பற்றிப் பேச இருக்கும் பேராசிரியருக்கு அவசர வேலையாம். அதனால் அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்து இருக்கோம்னு சொல்றாங்க. இது சரியா வராது போல இருக்கேன்னு கேட்டேன். அதற்கு அந்த நிர்வாகி கேட்டாராம், நீங்க மட்டும் சரியா நடந்துக்கிட்டீங்களா? என்று. என்ன நான் சரியா நடந்துக்கல? அந்தப் பெரிய நிகழ்ச்சிய ஒருங்கிணைச்சீங்களே! அப்போ ஏன் எங்க பேராசிரியருக்கு பொன்னாடை போர்த்தி, கௌரவம் செய்யலை?
இப்படி ஒரு கேள்வியால் துவண்டு போனதை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
நான் முன்னமே சொன்னேனே Sir என்றேன். எவ்வளவு பெரிய ஆளுமை அவர்? சட்டென நினைவு வந்தவராகக் கேட்டார்.
ஆமாம் உங்களுடைய ஐம்புலம் அமைப்பு சார்பா முடிவு பண்ண தேதியிலேயே நிகழ்ச்சியை வச்சுக்கிடலாமா? எங்கள் அமைப்பு நிர்வாகிகள் கிட்ட கேக்கணும் Sir. கேட்டுச் சொல்லுங்க. நிர்வாகிகளிடம் உள்ளதைச் சொன்னேன். அனுமதி பெற்றேன். கருத்தரங்கம் சிறப்பாகவே அவர் குறித்த நாளில் நடந்தது. எங்கள் அமைப்பின் சார்பாக எந்தக் கூட்டம் நடந்தாலும் பிறரிடம் காசு கேட்காமல் எங்கள் கைக்காசு போட்டே நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம் (காசு வாங்கிட்டா கொடுத்தவர் தலைமை உரையை ஆத்து ஆத்துன்னு ஆத்தித் தொலைப்பார் எனும் பயம்தான்) அந்த ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் ஆகும் செலவைத் தானே பார்த்துக்கொள்வதாகச் சொன்னார். தேநீர்ச் செலவு மட்டுமாவது நாங்கள் பார்த்துக் கொள்கிறோமே என்றோம். சரி என்று ஒப்புக்கொண்டார்.
இவ்வளவையும் சொல்லித்தான் ஆகவேண்டுமா என்று ஒரு தயக்கம் மேலெழவே செய்கிறது.
பா.செ அவர்களுக்குப் புதுச்சேரியில் புதுச்சேரி கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் நினைவஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. அதில் புதுச்சேரியைச் சார்ந்த பலரும் பரவலாகக் கலந்து கொண்டார்கள் என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
3
பா.செ.வைச் சந்திக்க வீட்டுக்குச் சென்றால், எப்போதும் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டே இருப்பார். சும்மா இருந்து பழகிய எனக்கு அவருடைய ஓயா உழைப்பு ஒருவகைப் படபடப்பை உருவாக்கும். இந்த மனிதர் எப்படி இப்படி இருக்கிறார் என. வீட்டுக்குப் போனதும் கொஞ்சம் இருங்க எனக் கூறிவிட்டு, உள்ளறை செல்வார். பால் இல்லாத மூலிகை கலந்த தேநீர்ச் சாற்றைச் சுடச்சுடக் கொண்டுவந்து தருவார். எப்போதும் ஏதாவது ஒரு பணிப் பொறுப்பிலேயே இருப்பார். அவர் முகம் அதற்கேற்ப அவரின் எண்ண ஓட்டத்தைக் காட்டி நிற்கும். அவரிடம் கொஞ்சம் சிரித்து உரையாட எனக்குள் ஒரு தயக்கம் நிலவும். கி.ரா இறங்கி நின்று அடிப்பார். அவரிடம் நன்றாகக் கலந்து சிரிக்கலாம். பிரபஞ்சன் பெரும்பாலும் நம் செய்திகளைக் கேட்டுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவார். நடுவாந்திரமான ஒரு தன்மையை, பிரபஞ்சன் அவர்களிடம் உணரலாம். பா.செ எப்போதும் தன்னுடைய பணிகள் குறித்த ஒரு நுண்ணதிர்வைச் செயலிலும் முகத்திலும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பார். அதனால் அவரிடம் நெருங்கிக் கலந்து பேசத் தயங்குவேன். எப்போதும் அவர் பேசுவதைக் கேட்டுக் கொள்வேன். என்னோடு அவரைப் பார்க்கவரும் சந்துரு மாயவனும் இப்படியே உணர்ந்ததுண்டு. இந்த மாந்தத் தொகுதிக்கு எவ்வளவு காலம் மீந்து இருப்போமா, அவ்வளவு காலமும் நொடியும் தவறவிடாது உழைத்துக் கொட்டவேண்டும் என்பதுபோல் அவர் செயல்பட்டார்.
கி.பி.அரவிந்தன் நினைவுமலர், கரு.அழ.குணசேகரன் நினைவுமலர், இன்குலாப் நினைவுநாள் கூட்டங்கள்,
கி.ரா.வின் இறுதிப் பயணம் என அவர் பம்பரமாகிச் சுழல்வார். 40 வயதைத் தொடுவதற்குள் ஒருவகை அயர்ச்சி தோன்றி, 'முடிந்துவிட்டால் தேவலாம் போல..' என்று ஒரு முடிவிற்கு வந்துவிட்ட என் போன்றவர்க்கு,
பா.செ.வின் இருப்பு, வாழ்வின் மீதான ஒரு கடமை உணர்வை அற்புதமாக ஊட்டி அதை விழிப்புக் கொள்ளச் செய்வதாக இருக்கிறது. என்னுடையது என்று தனிப்பட்ட ஏக்கம், துயர், கனா, இன்பம் என ஏதுமில்லை. நம்முடைய துயர், கனா, இன்பம் எல்லாமே இந்த உயிர்க்குலத்தை மொத்தமாய்த் திரட்டி அதனுள் கலப்பது என்பதை அவர் தன் வாழ்முறை மூலம் எனக்குச் சொல்லித் தந்தவண்ணம் இருக்கிறார். எனைக் காக்கும் சூரியதீபம்.
எளியவன்; பிறரால் வலிகளைச் சுமந்த ஒருவன்; அருகிருந்து ஆதரிப்பார் ஆருமற்றவன் ஒருவனுக்குச் சனவரித் திங்கள் நடுநாள் ஒன்றில் பிறந்தநாள் வருகிறது. பா.செ அவனிடம் பழகிய அன்பிற்கு அவனைக் காண, வாழ்த்த மகிழ்ச்சியுறுத்த அவன் கிராமத்திற்கு, அவன் வீட்டிற்கு வருகிறார். அவனுக்குத் தனக்கு யாருமில்லை எனும் குறை எங்கோ ஓர் உள்ளத்தின் அடுக்கிலிருந்து மறைவது போல் ஓர் உணர்வு.. மதிப்புக்கு உகந்த அவனுடைய பேராசிரியர் ஒருவரின் குடும்பத்தாருடன் அவன் வீட்டிற்குச் செல்கிறார். ஊரின் ஏரிக்கரையில் தண்ணீரையும் மரஞ்செடிகளையும் கண்கள் மாந்த உலவினார்.
அவன் வீட்டுச் சிறுவர்களிடம் அப்படி உரையாடினார். அந்த இறுகிய தொனியிலான அந்த முகச்சாயல் வழியிலேயே எங்கோ கழன்று விழுந்து விட்டது போல. அவனுடைய குடும்பத்தாரிடம், சிறுவர்களிடம் கதைகள் பேசி ஒரு குழந்தையின் முகத்தைத் தனக்குள் அவர் ஏந்திக் கொண்டிருந்ததை அப்போது அவன் பார்த்தான்.
மறக்கவியலா விருந்தும் பேச்சுகளும் பாட்டுமாய் அவனுடைய எளிய பிறந்தநாளை அவர்.. அவனுடைய நினைவுகளுக்கு உரியதாக ஆக்கித் தந்துவிட்டு்ச் சென்றார்.
பா.செ போலும் ஆளுமைகளை நம்மில் பெரும்பாலோர் அதி மனிதர்களாகக் கருதிக் கொள்கிறோம். ஓடி வேகமாக மாறும் காலம் அவர்களின் உள்ளங்களில் எத்தகைய சுமைகளை ஏற்றுகின்றன; அவர்களின் தேவைகள், அவர்கள் தொட்டுப்பார்க்க விரும்பும் வாழ்வின் மென்கணங்களின் பூஞ்சிரிப்பு எத்தகையது; அவர்களின் தனிப்பட்ட வாதை என்று ஏதாவது இருக்குமா?
பா.செ அவர்களையும் இந்தப் புள்ளியில் நிறுத்தி இப்போது எண்ணிப் பார்க்கிறான் எளியவன்.
சூரியதீபம் சுடரும்..
கருத்துகள்
கருத்துரையிடுக