உன் காலடித் தடத்தில்... - சண் தவராஜா

வீரகேசரி இதழ் - 31 அக்டோபர் 2022

- சண் தவராஜா 

மரணச் செய்திகள் எப்போதும் துயர் தருபவையே. அதிலும் மனதுக்கு மிக நெருக்கமானவர்கள் நம்மை விட்டுப் பிரியும் போது ஏற்படும் வேதனை அளவிட முடியாதது. பிறப்பு எவ்வளவு நிச்சயமானதோ அதேபோல் இறப்பும் நிச்சயமான ஒன்றே என்பது அறிவுக்குப் புரிந்தாலும், மரணச் செய்திகள் பல வேளைகளில் அறிவையும் வென்று விடுவதைப் பார்க்க முடிகின்றது. இறப்பில்லாத வாழ்க்கையே மனிதனின் விருப்பமாயினும் அது சாத்தியமாவதில்லை. இந்த உண்மை தெரிந்தும் சிலரது மரணச் செய்திகள் காதுகளை வந்தடையும் போது, அது பொய்யாக இருந்துவிடக் கூடாதா என மனம் அங்கலாய்க்கின்றது. இந்த உணர்வு பெரும்பாலும் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஏற்பட்டிருக்கும். அத்தகைய ஒரு மரணச் செய்தி கடந்த ஞாயிற்றுக் கிழமை (23.10) என்னை எட்டியது. 

அவ்வப்போது முகநூல் பக்கம் செல்வதே எனது வழக்கம். அன்றும் அப்படித்தான் வேறு ஏதோ ஒரு விடயமாக முகநூலைத் தட்டிப் பார்க்கும்போது அந்தச் செய்தி தட்டுப்பட்டது. தோழர் செயப்பிரகாசம் அவர்களின் முகநூல் பதிவாக அது இருந்தது. 'எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் காலமாகி விட்டார்" என்ற தகவலோடு தொடர்பு எண் ஒன்றும் தரப்பட்டிருந்தது. அந்தத் தொடர்பு இலக்கம் இலங்கையைச் சேர்ந்த ஒருவரின் கைப்பேசி இலக்கமாக இருந்தது.

தோழர் செயப்பிரகாசம் உடல்நலக் குறைவாக இருக்கிறார் என்பது நான் அறிந்த சங்கதியே. அண்மையில் சுவிஸ் நாட்டுக்கு வருகை தந்திருந்த இலக்கியவாதியும், திரைப்பட நடிகருமான பவா செல்லத்துரை அவர்களைச் சந்தித்த போது தோழர் பற்றி நாங்கள் பேசியிருந்தோம். அவர் உடல்நலக் குறைவோடு இருக்கும் தகவலையும், சொந்த ஊரான விளாத்திக்குளத்தில் வசிக்கும் தகவலையும் அவர் என்னிடம் பகிர்ந்திருந்தார்.

81 வயது நிரம்பிய ஒருவரின் மரணச் செய்தி ஒன்றும் நம்ப முடியாத விடயமல்ல. என்ற போதிலும் தோழர் தொடர்பான அந்தச் செய்தியை என்னால் உடனடியாக நம்ப முடியவில்லை. கூடுதல் காரணம் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்த இலங்கைக் கைப்பேசி இலக்கம். முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் 'ஹக்' செய்யப்படும் செய்திகளை அறிந்திருந்த நான் சிலவேளைகளில் விசமிகள் யாரும் தோழரின் முகநூல் கணக்கில் திருட்டுத்தனமாக நுழைந்து விட்டார்களோ என நினைத்தேன். தமிழ் நாட்டில் உள்ள ஒருசில நண்பர்களை அழைத்து செய்தியை உறுதிசெய்ய முயன்றேன். யாருக்கும் தகவல் தெரிந்திருக்கவில்லை. வருவது வரட்டும் என நினைத்துக் கொண்டு தோழரின் கைப்பேசி எண்ணுக்கே அழைப்பை மேற்கொண்டேன். மறுமுனையில் பேசிய நபர் தோழரின் மரணத்தை உறுதி செய்தார். விபரிக்க முடியாத் துயரத்துடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டேன். 

2015 செப்டெம்பர் மாதத்தில் ஒருநாள் நோர்வேயில் இருந்து ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா அழைத்திருந்தார். மறைந்த கவிஞரும், ஈழப் போராளியுமான கி.பி. அரவிந்தன் தொடர்பில் அவரது நண்பர்கள் வெளிக் கொணரும் ஒரு நூலை சுவிஸ் நாட்டில் அறிமுகம் செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார். கி.பி. அரவிந்தன் - ஒரு கனவின் மீதி என்ற அந்த நூலின் அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு எனக்கு அறிமுகமானவரே தோழர் பா.செயப்பிரகாசம்.

அவர் என்னை அறிந்து வைத்திருந்த அளவுக்கு நான் அவரை அறிந்து வைத்திருக்கவில்லை. அவரோடு பழகப் பழகவே அவரின் ஆழ ஆகலங்களை அறிந்து கொண்டேன். நெருங்கிய தோழராகவும் ஆகினேன். தான் எழுதிய நூல்கள் ஒன்றிரண்டை எனக்குத் தந்தார். 2002இல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வில் தான் கலந்து கொண்ட அனுபவத்தை அவர் விபரித்த போது, அந்த நிகழ்வில் நானும் கலந்து கொண்டிருந்தாலும் அவரோடு அறிமுகம் செய்து கொள்ளாததையிட்டு நொந்து கொண்டேன்.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எனது இரண்டு நூல்களின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தார். தமிழ் நாட்டின் பல இடங்களுக்கும் என்னைக் கைப்பிடித்து அழைத்துச் சென்ற அவர் பல ஆளுமைகளையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். தோழர் நல்லகண்ணு, கி.ரா, பவா செல்லத்துரை என எனது வாழ்நாளில் நான் சந்திக்க முடிந்திராத முன்னோடிகளை எனக்கு அருகாமையில் அமர்த்தி அளவளாவச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்ததை வாழ்நாளில் மறக்கவே முடியாது.

மிகப் பெரிய எழுத்தாளர். கவிஞர். சமூகச் செயற்பாட்டாளர். இடதுசாரிச் சிந்தனையாளர். முற்போக்குவாதி. மொழிப் போராட்டத் தியாகி. மாணவப் பருவத்துத் தீவிரவாதி. அனுபவசாலி. ஆனாலும் அவர் எப்போதுமே இளைஞர். அவரை விடவும் வயதில் குறைந்தவன் நான். ஆனாலும், அவரோடு இருந்த வேளையில் எப்போதுமே அதனை நான் உணர்ந்ததில்லை. எப்போதுமே உற்சாகம் குன்றாமல் ஒரு மனிதனால் இருக்க முடியும் என்றால் அதற்கு எடுத்துக்காட்டு அவர்தான்.

அவரது இறுதிக் காலகட்டத்தில் அவரோடு பேச முடியாமல் போய்விட்டமை பெருந் துயரம். வேலைப் பழு என எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டாலும் குற்ற உணர்வு எழவே செய்கிறது. சில வேளை, என்னிடம் பகிர்வதற்கும் அவரிடம் ஏதேனும் இருந்திருக்கும்.

எனது சிறை அனுபவத்தை நூலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். அதற்கான அணிந்துரையை அவரே எழுதித் தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன். பல ஆண்டுகள் ஆனபின்னும் என்னால் நூலை எழுதி முடிக்க முடியவில்லை. எழுதி முடித்தபின் அணிந்துரை வழங்குவதற்கு இன்று தோழர் இல்லை.

வலிக்கிறது.

வாழ்க்கை முழுவதும் பல சோதனைகளைச் சந்தித்திருந்தாலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்காத தோழர் செயப்பிரகாசம் (கவிஞர் சூரியதீபன்) தமிழ் கூறும் நல்லுகுக்கு பல படைப்புகளை வழங்கிச் சென்றிருக்கின்றார். என் போன்றோருக்கு பயனுள்ள வாழ்க்கைக்கான வழிகாட்டல்களையும் வழங்கிச் சென்றிருக்கின்றார். அவரது காலடித் தடம் பற்றித் தொடர்வோம் என்ற உறுதிமொழியே அவருக்கான சரியான அஞ்சலியாக அமையக் கூடும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி