என் ஆசிரியர் தோழர் பா.செயப்பிரகாசம் - பெருமாள் முருகன்

1988ஆம் ஆண்டு இறுதியில் தோழர் பா.செயப்பிரகாசம் (பாசெ) அவர்களைச் சந்தித்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவனாகச் சேர்ந்திருந்தேன். அப்போது அறிமுகமான ‘மனஓசை’ இதழுக்குச் சிலவற்றை எழுதி அனுப்பினேன். அதன் வழியாகப் பாசெவைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.  ‘மனஓசை’ இதழின் பொறுப்பாசிரியராக அவர் இருந்தார். அச்சில் அவர் பெயர் இருக்காது. மார்க்சிய லெனினிய இயக்கம் ஒன்றின் கலை இலக்கிய இதழ் அது என்பதாலும் பாசெ அரசு ஊழியர் என்பதாலும் பெயர் இடம்பெறவில்லை. ஒரு ஜெருசலேம், காடு, கிராமத்து ராத்திரிகள் ஆகிய அவரது சிறுகதைத் தொகுப்புகளை வாசித்திருந்த பிரமிப்பு எனக்குள் இருந்தது. அப்பேர்ப்பட்ட எழுத்தாளர் பொறுப்பு வகிக்கும் இதழ், அவர் இணைந்து இயங்கும் அமைப்பு ஆகிய காரணங்களால் மார்க்சிய அறிவு ஏதும் இல்லாமலே அவ்வமைப்பில் ஐக்கியமானேன்.

அப்போது ‘மனஓசை’ இதழ் ஆசிரியர் குழுவில் நால்வர் இருந்தனர். பாசெ (ஜெபி என்று அவரைக் குறிப்பிடுவோம்; பின்னாளில் பாசெ என்று அழைப்பது வழக்கமாயிற்று), பொருளியல் பேராசிரியராகிய சீனிவாசன் என்கிற சுரேஷ், வசந்தன், திருஞானம் என்கிற சங்கர். பாசெ அப்போது உயரதிகாரியாக இருந்தார். அலுவலக வேலைகள் கூடுதல். அமைப்புப் பேச்சாளராகக் கூட்டங்களுக்குச் செல்லும் பணி. அவற்றுக்கிடையே  ‘மனஓசைப்’ பொறுப்பு. ‘சூரியதீபன்’ என்பது அவர் மகன் பெயர். அப்பெயரிலும் வேறு பல புனைபெயர்களிலும் ‘மனஓசை’ இதழில் எழுதுவார். இதழின் உள்ளடக்கம் சார்ந்தது சுரேஷின் பங்களிப்பு. வடிவமைப்புப் பணி சங்கருடையது. கணக்கு வழக்குப் பார்த்தல், விநியோகம் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வசந்தன். அவரவருக்கு ஒதுக்கிய பணிகளைத் தவிர இதழுக்கு எழுதுவது, பங்களிப்பாளர்களிடம் படைப்புகள் பெறுவது முதலியவற்றையும் பகிர்ந்து செய்வர். இதழ்ப் பணிக்குக் கூடுதலாக இன்னொருவர் தேவைப்பட்டதால், அதற்குப் பொருத்தமானவன் என்று என்னை அவர்கள் உணர்ந்ததால் அறிமுகமான சில மாதங்களிலேயே ஆசிரியர் குழுவில் இணைந்தேன். 1989 முதல் 1991இல் இதழ் நிற்கும் வரை ஆசிரியர் குழுவில் செயல்பட்ட அந்த மூன்றாண்டுகள்  என் வாழ்வில் மிக முக்கியமான காலகட்டம்.

இதழியல் பாடத்தை முதுகலை வகுப்பில் பயின்றிருந்தேன். அதைக் கற்பித்த ஆசிரியர் ச.மருதநாயகம் அத்துறையில் ஆர்வலர். அவரிடமிருந்து எனக்கும் ஆர்வம் தொற்றியிருந்தது. என்றாலும் நடைமுறை அறிவு எனக்கில்லை. அதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுத்தவர் பாசெ. படைப்புகளைத் தேர்வு செய்வதில் உள்ள வாசிப்பு நுட்பங்களை உணர்த்தினார். ஒவ்வொரு இதழுக்குமான உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் சமகால உணர்வு எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைக் காட்டினார். படைப்புகளைச் செம்மைப்படுத்தும் விதத்தை அருகில் அமர வைத்து விளக்கினார். படைப்பாளர்களை அணுகும் முறைகளைச் சொல்லிக் கொடுத்தார். எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதும்போது மனம் புண்படாத சொற்களைப் பயன்படுத்த வழிகாட்டினார். மெய்ப்புத் திருத்தத்தின் படிநிலைகளை ஒவ்வொன்றாகக் கற்பித்தார்.

இதழுக்கு வரும் படைப்புகளை ஆசிரியர் குழுவினர் அனைவரும் வாசித்து அவரவர் கருத்தை ஓரிரு வரிக் குறிப்பாக எழுத வேண்டும். ஆசிரியர் குழுக் கூட்டத்தின் போது அக்குறிப்புகளின் அடிப்படையில் விவாதித்துத் தீர்மானிப்பது நடைமுறை. குறிப்பெழுத நான் தயங்கியபோது மூன்று விஷயங்களைக் கவனத்தில் கொள்ளும்படி சொன்னார். வாசித்ததும் மனதில் படைப்பு ஏற்படுத்தும் தாக்கம், வெளியீட்டுக்கு உகந்ததா என்பதைப் பற்றிய எண்ணம், நம் இதழுக்குப் பொருந்துமா  என்னும் கேள்விக்குப் பதில். பிறர் எழுதும் குறிப்புகளையும் வாசிக்கும்படி சொன்னார். அந்தப் பயிற்சி படைப்புகளைப் பற்றிச் சிந்திக்கப் பெரிதும் பயன்பட்டது. ஓரிரு வரியில் செறிவாக எழுதுவது சாதாரணமல்ல. தோழரின் குறிப்புத்தான் முதலில் இருக்கும். அவரது கையெழுத்து அபூர்வமானது. ஒவ்வொரு எழுத்தையும் முழுமையாக எழுதுவார். ஒவ்வொன்றும் சாவகாசமாகப் படுக்கையில் படுத்திருப்பது போலத் தோன்றும்.

‘மனஓசை’ அலுவலகத்திலேயே தங்கியிருந்து இதழ்ப் பணிகளை மேற்கொண்டேன். பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களையும் விடுமுறை நாட்களையும் எழுதுவதற்கும் இதழ் வேலைகளைச் செய்வதற்கும் செலவிட்டேன். பக்க வடிவமைப்பு, ஒரு படைப்பு எந்தப் பக்கத்தில் தொடங்க வேண்டும், பக்கங்களில் வரும் சிறுஇடவெளிகளை நிரப்பும் விதம் முதலியவற்றை எல்லாம் போகிறபோக்கில் சொல்லுவார்.   ‘லெட்டர் பிரஸ்’ எனப்படும் கையால் எழுத்துக்களைக் கோத்து அச்சிடும் முறையில்தான் இதழ் அச்சாகும். அதனால் வேலைகளும் அதிகம்.  ‘மனஓசை’ அலுவலகமும் அவர் வீடிருந்த ஷெனாய் நகரும் நடைதூரம்தான். என்னிடம் மிதிவண்டி இருந்ததால் போய்வரவும் சிரமமில்லை. மூன்றாண்டு காலம் அன்றாடம் ஏதேனும் ஒருவேளையில் அவரைச் சந்தித்துவிடுவேன்.

அவர் வீட்டுக்குச் சென்றாலும் அலுவலகம் சென்றாலும் எனக்கான உணவில் கவனம் செலுத்துவார். அப்போது சுயசமையல் செய்து கொண்டிருந்தேன். வயிற்றை நிரப்ப ஏதோ ஓர் உணவு. அதைப் புரிந்திருந்ததால் வாய்ப்புக் கிடைக்கும்போது என்னை நன்றாகச் சாப்பிட வைப்பார். பசி அறிந்த ஏழ்மைக் குடும்பத்திலிருந்து வந்தவர். எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ தோழர்களின் பசி போக்கியவர். அவர் வீட்டுச் சாப்பாட்டைப் பலநாள் சாப்பிட்டுள்ளேன். அலுவலகத்திலும் தம் உணவைப் பகிர்ந்துண்ணச் செய்வார். சமையலிலும் அவர் வல்லுநர். கூட்டங்களின் போதெல்லாம் அவரே முன்னின்று சமைப்பார். என் அறைக்கு வரும்போது  ‘நான் செய்கிறேன்’ என்று முன்வந்து செய்வதோடு என்னுடன் உண்ணுவார்.

ஒருமுறை அவர் வீட்டில் பாகற்காய்ப் பொரியல் இருந்தது. விதையோடு சேர்த்துச் செய்திருந்த அதில் மிகுகசப்பு. ‘என்னங்க தோழர், இவ்வளவு கசப்பு?’ என்றேன். ‘பாகற்காய் கசக்கத்தானே செய்யும்’ என்று சொல்லிச் சிரித்தார். எங்கள் பகுதியில் கசப்பு இல்லாமல் அல்லது குறைந்த கசப்புடன் செய்வோம். வெல்லம், சர்க்கரை என இனிப்பு எதுவும் கலவாமலே செய்யலாம். அதைச் சொன்னபோது ஆர்வத்துடன் செய்முறையைக் கேட்டுக்கொண்டார். இன்னொரு தடவை அவர் வீட்டில் உண்டபோது ‘இன்னைக்கு உங்க முறையில பாகற்காய்’ என்று சொன்னார். நன்றாகவே செய்திருந்தார்.

பிறருக்கு உதவும் குணம் அவர் இயல்பு. என் துடுக்கான பேச்சுக்களையும் வாதங்களையும் மெல்லிய சிரிப்பில் கடந்துவிடுவார். இதழ் சார்ந்து நடக்கும் விவாதங்களில் என் கருத்துக்கள் பெரும்பாலும் அவருக்கு எதிராக இருக்கும். பொறுப்பாசிரிய என்பதால் கட்சி சார்ந்த தோழர்கள் எதுவும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். என் பார்வை அதில் மாறுபடும். என் பேச்சை மனதில் வைத்துக்கொண்டு சுட்டிக் காட்டுவதோ குத்திக் காட்டுவதோ செய்ய மாட்டார்.  உதவி என்று வரும்போது தன்னால் முடியுமானால் தாராளமாகச் செய்வார்.  ‘நான் செய்கிறேன்’ என்று ஒருபோதும் காட்டிக்கொள்வதில்லை. இவருக்கு இதைச் செய்தேன் என்று பிறரிடம் சொல்வதும் இல்லை. என் சொந்த விஷயங்கள் சார்ந்து அவருடைய உதவியைப் பலமுறை பெற்றிருக்கிறேன். தோழர்கள், நண்பர்கள் எனப் பலருக்கு அவர் மூலம் உதவி பெற்றுக் கொடுத்துள்ளேன்.

அவர் அதிகாரியாக இருந்ததாலும் எழுத்துலகில் புகழ் பெற்றிருந்ததாலும்  சிறுசிறு உதவிகளை எளிதாகச் செய்து கொடுப்பார். அவருக்கு அது சிறிதாக இருந்தாலும் எங்களைப் போன்றவர்களுக்கு மிகப் பெரிதாக இருக்கும். என் மனைவி அப்போது பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவராக இருந்தார். பல்கலைக்கழக ஆராய்ச்சி உதவித்தொகை கிடைக்கத் தேர்வாகியிருந்த நிலையில் ஏதோ காரணத்தால் தடைபட்டிருந்தது. தோழரை அணுகினோம். அப்போது துறைத்தலைவராக இருந்த பொற்கோ அவர்களிடம் ‘என் அண்ணன் மகள்’ என்று சொல்லிப் பரிந்துரை செய்து தடை நீக்கினார். எங்களுக்கு நெகிழ்ச்சி தந்த சம்பவம் அது.  ‘என் சித்தப்பா’ என்றுதான் இப்போதும் என் மனைவி சொல்வார்.

தாம் வரித்துக்கொண்ட கொள்கைகளை இயன்றவரை வாழ்விலும் கடைப்பிடித்தார். மார்க்சியத்திலிருந்து தமிழ்த் தேசியத்தை நோக்கி நகர்ந்தார். 1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவத் தலைவர்களில் பாசெவும் ஒருவர். பின்னர் திமுகவின் பாதை அவருக்கு உவப்பானதாக இல்லை. மார்க்சியம் நோக்கி நகர்ந்தார். திராவிட இயக்கத்தின் மீது கடும் விமர்சனங்களை வைத்தார். தம் இறுதிக்காலத்தில் திராவிட இயக்கப் பங்களிப்பு பற்றிய அவர் கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதாக உணர்கிறேன். சாதியொழிப்புக் கருத்தில் அழுத்தமாக நின்றார். அவர் குடும்பத்தில் நடந்த பலவும் சாதி மறுப்புத் திருமணங்கள். எல்லாவற்றுக்கும் அவரே முதன்மைக் காரணம்.

எழுத்தாளராகத் தாம் இன்னும் சிறப்பாகப் பங்காற்றியிருக்க இயலும் என்னும் ஏக்கம் அவருக்கு இருந்தது. கட்சியமைப்பு வேலைகள் தம் நேரத்தையும் படைப்பாற்றலையும் விழுங்கிக் கொண்டதாக நினைத்தார். அது உண்மையும்கூட. அவரைப் படைப்பாளராக இனம் கண்டு அதற்கேற்ற வகையில் கட்சி நடத்தவில்லை. கட்சியைப் பொருத்தவரைக்கும் எல்லோரும் சமம். எந்த வேலையாக இருந்தாலும் எல்லோரும் செய்ய வேண்டும். யார்யாருக்கு என்னென்ன திறமை இருக்கிறது என்று அறிந்து அதற்கேற்றபடி இயங்க விடாத அமைப்பு முறை. அதற்குப் பலியான சாட்சி பாசெ.

ஒரு நள்ளிரவில் சென்னை நகரத் தெருக்களில் சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருந்த அவரைக் கண்ட மூத்த மார்க்சிய அறிஞர் ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுத் ‘தமிழ்நாட்டின் மாக்சீம் கார்க்கி நீங்கள். எழுதுவதை விட்டுச் சுவரொட்டி ஒட்டலாமா?’ என்று கேட்ட சம்பவம் உண்டு.  ‘மாக்சீம் கார்க்கி’ என்று சொன்னது மிகையல்ல. உத்வேகம் இருந்த காலத்தில் எழுதியிருந்தால் இன்னும் சிறந்த படைப்புகள் அவரிடமிருந்து வந்திருக்கும். இரவுகள் உடையும், மூன்றாவது முகம் ஆகிய தொகுப்புகள் புரட்சி எழுத்தாளருக்கான கூறுகளைக் கொண்டவையே. இடையில் தேங்கிவிட்டார். பிற்காலத்தில் தம் எழுத்தாற்றலை மீட்டெடுக்க முயன்றார். அது அவ்வளவாகக் கைகூடவில்லை.

1999இல் அவர் ஓய்வு பெற்ற பிறகு மாற்று அரசியல் சார்ந்த அமைப்புகளோடு இணைந்து இயங்கினார். எழுத்தாளர் என்பதுடன் செயல்பாட்டாளராவும் அவரது பங்களிப்பு முக்கியமானது. நாவல், சிறுகதைகள்,  கட்டுரைத் தொகுப்புகள், மொழிபெயர்ப்பு என அவர் பிற்காலத்தில் பல தளங்களில் இயங்கியுள்ளார். கணிசமான நூல்கள் வெளிவந்துள்ளன. குடும்பக் கடமைகளை முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றிய பிறகு தம் குடும்பத்திலிருந்து விலகித் தனித்திருக்கவும் தனித்தியங்கவும் செய்தார். அதற்குக் காரணம் அவர் தேர்வு செய்துகொண்ட போராட்டப் பாதை; எழுத்தார்வம்.

அவரோடான நினைவுகளைக் கிளர்த்தும் சம்பவங்கள் பல. அவர் தந்து என்னிடம் தங்கிவிட்ட நூல்கள் பல. என் மாணவப் பருவத்தில் தேவையறிந்து வழங்கிய பொருட்கள் பல. ‘மனஓசை’ அலுவலகத்தில் தங்கியிருந்த காலத்தில் சமையலுக்கு என்று மிகக் குறைவான பாத்திரங்களையே வைத்திருந்தேன். சோற்றுச்சட்டியை மூடும் தட்டத்தையே உண்பதற்கும் பயன்படுத்திக் கொள்வேன். அதைக் கண்ட அவர் அடுத்த முறை வந்தபோது இரண்டு வட்டில்கள் புதிதாக வாங்கி வந்து கொடுத்தார். முட்டை வடிவத்தில் பெரிதும் சிறிதுமான அவ்வட்டில்கள் முப்பத்திரண்டு ஆண்டுகளாக என்னிடம் உள்ளன. அவற்றில் சாப்பிடுவதே எனக்கு விருப்பம். ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டின் போதும் அவ்வட்டிலைக் கையிலெடுத்ததும் அவர் நினைவு வந்துவிடும்.

அன்றாடம் அவரை நினைப்பதற்கு இப்படி எத்தனையோ காரணங்கள் உள்ளன. அவர் மதுரையில் ஓரிரு ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளராக இருந்துள்ளார். அதன் தாக்கமோ என்னவோ எந்த விஷயத்தையும் எளிமையாகக் கற்பிக்கும் ஆற்றல் இருந்தது.  ‘மனஓசை’யில் செயல்பட்ட அந்த மூன்றாண்டு காலம் அவரிடம் கற்றுக்கொண்ட மாணவன் நான். அதனால்தான் எல்லாவற்றிலும் முதன்மையாக  ‘என் ஆசிரியர்’ என்று அவரை மேலேற்றி வைத்திருக்கிறேன்.

–   25-10-22, பெருமாள் முருகன்

(25-10-22 அன்று விளாத்திக்குளத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

வெளியீடு: இந்து தமிழ் திசை (30-10-22), காக்கைச் சிறகினிலே (டிசம்பர் 2022)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஜெயந்தன் - நினைக்கப்படும்

பலியாடுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை