மடல்: ’வெற்றிக் கொடி’ இன்று

நான் மதுரைக்காரன்; கரிசல் சீமையில் பிறந்து வந்திருந்தாலும், பள்ளிப்படிப்பு, பல்கலைக் கல்வி, விரிவுரையாளர் என கால் நூற்றாண்டுக்கு மேல் மதுரையில் கழிந்தது. சின்னப் பையனாயிருந்து பெரியவனான வரையிலும் எத்தனை பேரை மதுரை திருமலைநாயக்கர் மஹால் கூட்டிச் சென்று காட்டியிருக்கிறேன். கட்டிடத்தின் பிரம்மாண்டத்தை மாத்திரம் காட்டி வந்திருக்கிறேன் என்பது தெரிகிறது. நண்பர் ஆதி வள்ளியப்பன் மஹாலைத் திறந்து காட்டுகிறவரை, அது தென்னகத்தின் தாஜ்மஹால் என நான் அறிந்திலேன். இது எனது முதல் அறிகை! அதற்குள் இத்தனை வரலாற்று அடுக்குகள் உள்ளது தெரிந்திருந்தால், அழைத்துச் சென்றவர்களை இன்னும் பிரமிப்பில் ஆழ்த்தியிருப்பேன்.

“தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் ஒரு மாணவர் கூட சேராததால் மூடப்படுகின்றன; ஆனால் தனியார் பள்ளிகளில் 1.25 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர்“ என்ற செய்தியின் பின்னணியில், புதுச்சேரி கிருகம்பாக்கம் பனித்திட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் அறிவியல் சாதனைகள் பற்றிய ”உலக அரங்கில் அசத்தும் பள்ளி” என்னும் அ.முன்னடியான் பதிவைக் கண்டோமேயானால், அந்தக் குளுந்த மழைக்காற்றின் வலிமை புரியும். இந்த மழைக்காலம் தமிழகத்தையும் அசைக்கத் தொடங்கிவிட்டது என்று எண்ணுகிறேன். மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு, தங்களுடைய கடமை முடிந்ததாக ஆசிரியர்கள் இருப்பதில்லை; கூடுதலாக கைப்பிடித்து அழைத்துப் போகிறார்கள் என்பது கல்வித் தொண்டு எனச் சொல்லாமல் சொல்கிறது. 

”பல்வேறு கனவுகளை விதைத்து அவற்றைப் பத்துகாத்து வளர்க்கும் வழிமுறைகளையும் வாய்ப்புகளையும் வளர்க்க வேண்டும்“ என்ற ரெ.சிவாவின் ஆதங்கம் ”மாணவராற்றுப் படை” யில் வெளிப்படுகிறது. பள்ளிப்படிப்பின் போது பீறீடும் மாணவச் சாதனைகள்  உயர்கல்விக்குப் போகும்வேளையில் புதைகுழிக்குள் போய் வீழ்கின்றன என்ற யதார்த்தத்தை மறக்கக் கூடாது.

“குவியும் புதிய வேலை வாய்ப்புகள்: கனவா, நிஜமா?” என்ற ம.சுசீத்ராவின் பதிவு  இதற்கான விடையைக் கோடிட்டுக் காட்டுகிற சரியான எடுத்துரைப்பு. “அரசாங்கம் ’பிக் டேட்டாவில்’ லட்சக்கணக்கான இளையோருக்கு பயிற்சி தருவதானால், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை கல்வி நிறுவனங்களில் செய்தாக வேண்டும்” என்கிறார் சுசீத்ரா. அவையாவும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் செய்யப்பட வேண்டும், அரசு வினையாற்ற வேண்டுமென்பதுதான் பதிவின் நோக்கம். இங்கு ”அரசாங்கமே ஒரு பிரச்சினை” என்னும் ஒரு வாசகம் நம் முன் வந்து நிற்கிறது. ஏனெனில் அரசாங்கம் என்பது  பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானது அல்ல.  

ஜி.எஸ்.எஸ்-ஸின் ”ஆங்கிலம் அறிவோம்” முழுமையான உண்மையைத் தேடி எம்மை நடத்துகிறது. இந்த ஜூலை 16, வெற்றிக்கொடி பன்முகக் கவனத்துடன்  வார்க்கப்பட்ட கம்பத்தின் மேல்  பறக்கவிடப்பட்டுள்ளது. ”ஒரு பூங்காவுக்கு ஒரு பூ சாட்சி” என்பது போல, இந்த ஜூலை 16 வெற்றிக்கொடிக்கு பலருடன் எனது வாழ்த்துக்களும் இணையட்டும்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்