ஈரமற்ற பொருளாதார ஆய்வுகளையும் கவித்துவத்தின் ஈரமுள்ளதாக மாற்றியவன்


மார்ச் 1983 மார்க்ஸின் நினைவு நூற்றாண்டு ஒட்டி ‘மனஓசை’ கலை இலக்கியத் திங்களிதழில் அவரைப் பற்றியும், ஜென்னிஃபர் மார்க்ஸ் பற்றியும் சில பதிவுகளைச் ஆசிரியர் குழு செய்தார்கள். அதிலிருந்து ஒரு மீள்பதிவு இங்கே.


கார்ல் மார்க்ஸ்
பிறந்த நாள்: 1818 மே 05
மறைவு: 1883 மார்ச் 14

தொழிலாளி வர்க்கத்தின் சுதந்திர வேட்கையைத் தடுத்து நிறுத்த முயலும் முரட்டுத்தனமும், குறுகிய எண்ணமும் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னால் நம்ப முடியாத பழங்கதைகளாகிப் போகும். அப்போது, இந்தக் கல்லறையின் முன்னால் நின்று கேட்கிற குழந்தைகளுக்கு, உண்மையாகவே சுதந்திரமும் மாட்சிமையும் பெற்ற மனிதர்கள் சொல்வார்கள் “இங்கே தான் கார்ல் மார்க்ஸ் உறங்குகிறார் ”.

‘வில்கெம் லீப்னஹெட்’டின் இந்த வார்த்தைகள், எவ்வளவு சத்தியமாகிப் போய்விட்டன. பூமி உருண்டை மேல் அடிமைகளாய் உருட்டி வீசப்பட்ட மனிதர்களை மனிதர்களாக, வாழ்க்கையை வாழ்க்கையாக அவன் ஆக்கிவிட்டான்.

மார்க்ஸ் – மனித விடுதலைப் போராடிகளுக்கு எரிதழல் பிழம்பு.
அவனது அறிவுக்கூர்மை, போர்வாளின் வீச்சு.
அவன் – உறுதிக்கும் தெளிவுக்கும் ஊற்றுக்கண்கள்.
கற்றுக்கொள்வதை அவன் சுவாசிப்பது போல், இடைவிடாது செய்தான். எளிய மக்களிடமிருந்து கற்றான். எதிரிகளிடமிருந்து கற்றான்.

தத்துவத்தின் கூறுகளை, எதிர்மறையாக வைத்த ஹெகல் பாயர்பெக்கிடமிருந்தும் கற்றான்.தொழிலாளிகள், உழைப்பவர்கள் மட்டுமல்ல, முதலாளித்துவ தொழிற்சாலை அலுவலர்கள், அரசு அலுவலகங்கள் ஆகியோரிடமிருந்தும் தகவல்கள் பெற்றான். பெற்ற தகவல்கள் முதலாளித்துவத்தை அதன் முழு உருவுடன் காட்டக் கைக்கொடுத்தது.

அவன் மன நேர்மை கொண்ட ஒரு படைப்பாளி. ஆதாரமில்லாத ஒரு தகவலையோ புள்ளி விபரத்தையோ அவன் தந்தது கிடையாது.தகவல்களைச் சேகரிப்பதில், மூல அடிப்படைக்குப் போவது, ஆராய்வது என்பதைச் செய்தான். அதுபற்றி அவன் விளக்கினான்.
“நான் வரலாற்று நீதி வழங்குகிறேன்”.
போராடுவதை விரும்பினான். போராடிப் போராடி மனிதநேயங்கள் பூக்கப் பாடுபட்டான்.

அவனுக்கு வாழ்க்கை துயரமிக்கதாக இருந்தது.இரண்டு வயது மகன் ஏழ்மையில் இறந்து, எளிய முறையில் அடக்கம் செய்யப்பட்டதை, துணைவி ஜென்னிபர் கடிதத்தில் தெரிவித்தபோது அவன் எழுதினான். “இந்தக் குழந்தை பிறந்தபோது, ஒரு தொட்டில் வாங்கக்கூட முடியாமல் போனது: தொட்டில் கிடைக்காத இந்தக் குழந்தைக்கு, சவப்பெட்டியா வாங்கிவிட முடியும்”. 
ஆனால் வாழ்க்கையைச் சோர்வற்றதாக மாற்றிக் கொண்டான்.

சிந்தனையாளனாக மட்டும் அல்ல: கவிஞனாக, கலைஞனாக இருந்தான். ஈரமற்ற பொருளாதார ஆய்வுகளைக் கூட, கவித்துவத்தில் ஈரமுள்ளதாக மாற்றினான்.

அவனுடைய வரலாற்று அறிவு, பொருளாதாரத்தை வறட்டுத்தனமாக ஆய்வதில் கொண்டு போய்விடவில்லை. கருத்து முதல்வாதிகளால் தலைகீழ் விகிதமாகக் காட்டப்பட்ட கலையை நேர் நிறுத்தினான். கலை என்பதே கற்பனையென்றும், களிப்பு என்றும் அவர்கள் ஆடித்திரிந்தபோது, அதுவும் வாழ்க்கையிலிருந்து வந்ததே என்பதை எடுத்து வைத்தான்.
எவ்வளவு அறிவு இருந்தாலும், சாதாரணமான மனிதனைப் போல் வாழ்ந்தான். மக்களிடையே பழகினான். அதுதான் அவனுடைய வீரத்தின் சாரமாக இருந்தது.

அவன்  மறைந்த நாள்  1883 மார்ச் 14.

மறைந்து ஒரு நூற்றாண்டாகி விட்டது. அவனை மறக்க இந்த உலகுக்கு இன்னும் பலப்பல நூற்றாண்டுகள் ஆகும். மனிதகுலம் வாழுவரை அவன் சிந்த்திப்பு உயிர்த்திருக்கும்.

அவன் தோன்றிய நாட்கள் அடிமைத்தனத்துக்கும் சுரண்டலுக்கும் இறுதி நாட்களாய் அமைந்தன என்பதாலேயே – வாழ்க்கைக்கும் மனித குல மீட்புக்கும் போராளிகளைத் தந்தது என்பதாலேயே – அவன் தத்துவம், உலகை நேராய் நிறுத்தியது என்பதாலேயே நாம் அவன்  நூற்றாண்டைக் கொண்டாடுகிறோம்.

‘சரியானதின் பக்கம் உலகம் முழுவதையும் சாரச் செய்வோம். போராட்டக் களங்களின் வழியே சாதிப்போம்’ என்பதை இந்நாளில் சபதமேற்போம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்