ஏழு செம்மறி ஆட்டுக்காரர் கதை பற்றிய கடிதம்

வணக்கம் வே.ராமசாமி,

தி இந்து தமிழ் ‘பொங்கல் மலர்' முகப்பு “மண் மணக்கும் வாசனையுடன்” எனக் குறிப்பிட்டுள்ளது. இவ்வாசகம் தங்கள் “ஏழு செம்மறி ஆட்டுக்காரர்" என்ற கதைக்கு அச்சாகப் பொருந்தும். அடுத்து என்.ஸ்ரீராமின் “பிடார வடிவம்” கதையைச் சொல்லலாம். மற்றவைகள் பற்றி நான் இங்கு குறிப்பிட வேண்டியதில்லை. ஆனாலும் வெண்ணிலாவின் கதையில் ”ஆதி ரெண்டு மாசக் குழந்தையா இருக்கறப்போ, போன ஒங்க அப்ப இன்னும் வரலயேடா” என்ற கடைசி வரி கதையின் மொத்தக் கதவுகளையும் திறந்து பார்க்கச் செய்துவிட்டது. “இது தானய்யா பொன்னகரம்” என்று முடியும் புதுமைப் பித்தனின் கடைசிச் சித்தரிப்புக்கு இணையானது.

தங்களின் கதை ஆட்டுக்கிடை அமர்த்துகிற தொழில் போட்டிகளினூடு புகுந்து விவரிக்கிறது. மனித மனம் எங்கெல்லாம் செயற்படுமோ, அங்கெல்லாம் பொறாமையும் போட்டியும் உருவாவது இயல்பு தானே. வித்தைகளினூடாக நிற்கும் கதைகளை மற்றவர்கள் முயலும்போது, மண், நிலம், நீர், விவரிப்புனூடாக தங்கள் எழுத்து போகிறது.

சம்சாரி ஒழுக்கம் என்று கரிசலில் ஒரு சொல் உண்டு. பொழி வழியே போய் பொழி வழியே வருதல் அந்த ஒழுக்கம். இந்த ஒழுக்கம் எல்லா வாழ்வியல் துறைகளுக்கும் உண்டு. ஆடு வளர்ப்பு போன்ற உழைப்பும் வணிகமும் இணைந்து தொழில்களுக்கும் உண்டு. அது மீறப்படுவதை தன்  இடப்பெயர்வின் மூலம் எதிர்ப்பைக் காட்டுகிற புள்ளியில் அவன் மாமனிதனாக உயருகிறான்.

இயல்பான, உயிரோட்டமான ஒரு மொழி கைவசப்பட்டுள்ளது. பொத்திப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இந்த மொழியால் எத்தனையோ உயரங்களைத் தொடலாம். அதற்காக தங்களின் திறமைகள் இந்த வகை வாசல்கள் வழி மாத்திரமே வெளித் தெரிய வேண்டுமென்றில்லை; பல்வேறு எடுத்துரைப்பு வகைமை மூலமும் தங்கள் கதை சொல்லும் திறன் வெளிப்பட வேண்டும். வாழ்த்துக்கள்.

நட்புடன் 

பா.செ

18 ஜனவரி 2018

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி