அஞ்சலி: வீ.தேவராசன் - தொடுவானத்தின் இழப்பு
நெல்லுட்ல ரமாதேவி தெலுங்கில் எழுதிய “பெயர்” என்ற கதை:
வீ.தேவராசனின் மொழியாக்கக் கதை என்னை வெகுவாகப் பாதித்தது; வாசக தாகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் எல்லோரையும் ஈரத்திருக்கும்.
பெண்ணடிமைத்தனம் பழைய பாணியில் இயங்குவதில்லை. முதலாளித்துவ வளர்வினூடாக, பெண்ணடிமை புதிய புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப உத்திகளுடன் மறு வளர்ச்சி பெறுகிறது. ஆண் பெருமிதம், பாலியல் சீண்டல், பெண்ணைத் துன்புறுத்தல், மட்டுப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்தல் போன்ற பல்வேறு வினைகளால் மீண்டும் மீண்டும் புதிய வடிவத்தில் புதிய அனுபவத்தில் இங்கு உருவாக்கப்படுகிறது; இத்தனை தெளிவாகச் சொன்ன ஒரு கதையை மிகச் சிறப்பாக தமிழில் ஆக்கம் செய்த நண்பர் வீ.தேவராசனை பாராட்டி உரையாட அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன்.
அலைபேசி எடுப்பதற்கு மறுமுனையில் அவர் இல்லை; அலைபேசியும் தொட முடியாத மற்றொரு முனைக்கு அவர் மறைந்து போயிருந்தார்.
மகள் அன்புமலர் பேசினார்.
”அப்பா இறந்து இன்றுடன் 32- வது நாள்” என தகவல் தந்தார்.
தேனி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊர் அம்பாசமுத்திரம். ஜூலை 26 - அன்று சொந்த ஊர் சென்று சென்னை திரும்பிய போது, ஆதம்பாக்கத்தில் உள்ள மகள் வீட்டுக்குச் செல்ல தாம்பரத்தில் தொடர் வண்டியிலிருந்து இறங்கியுள்ளார். இறங்கியதும் தள்ளாடிக் கீழே விழுந்துள்ளார். நடைமேடையில் அவர் நிலை தடுமாறி விழுந்த வேளையில் வயது 81.
உண்மையில் கழுத்து எலும்பு முறிவாகி நரம்பு அறுந்து போயிற்று. அப்போலா மருத்துவமனையில் நரம்பியல் பிரிவில் சேர்த்து, அறுவை மருத்துவம் வெற்றிகரமாய் முடிவுற்ற பின்னும், 12 நாட்கள் அவசர சிகிச்சைப் பிரிவிலேயே சுயநினைவோடு இருந்தவர் இன்றில்லை.
2
பெங்களூரில் பேராசிரியராகப் பணியாற்றி 1999ல் பணி ஓய்வு பெற்ற போது, வீ.தேவராசன் அம்பாசமுத்திரம் என்கிற சொந்த ஊரில் வேளாண்மை செய்வதற்காக புறப்பட்டு வந்துவிடுகிறார்.
அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் பணி ஓய்வு பெற்றதும் அவரவருடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக - சொத்து சுகம் சேர்க்கும் குறிக்கோளுடன் தனியார் துறைகளில் ஆலோசகர்களாக (Consultants) பணிபுரிய முன்கூட்டி ஏற்பாடு செய்திருப்பார்கள். பலரும் அவ்வாறு சென்று வெற்றியின் முகட்டுக்குச் சென்றார்கள்; பணி ஓய்விற்குப் பின் வேளாண்மை செய்திட கிராமத்திற்குச் செல்வதற்கு ஒரு மனநிலை வேண்டும். அதற்கென்று ஒரு சமூக நோக்க உறுதிப்பாடு வேண்டும். இரண்டு இணையப் பெற்றிருந்தார் வீ.தேவராசன்.
இந்த மனநிலை அவருடைய பணி ஓய்விற்குப் பின் உருவானதல்ல.
நான் மதுரைத் தியகராசர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு பயின்ற போது, தேவராசன் இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு சேருகிறார். கவிஞர் இன்குலாப் அவருடைய வகுப்புத் தோழர். இன்குலாப்பின் உணர்ச்சிப் பிரவாகமான கவிதைப் படைப்புகள், பலரையும் ஈர்த்தது போல் பயில்கிற காலத்திலேயே ஈர்ப்புக்குள்ளாகி, கவிஞரின் அணுக்க நண்பராகிறார்.
மதுரைத் தியாகராசர் கல்லூரி தமிழ்ப் புலமை, கவிதைத் துய்ப்பு, தனித்தமிழியக்கக் கோட்பாட்டுப் பாரம்பரியங்களின் பெயர் பெற்ற பூமி. வைகையாற்றின் கரை மேல் அமைந்ததால் உருவான மண் வாசனை அது. தமிழ் கற்பித்தலை உயிர்ப்புடன் முன்னெடுத்துச் சென்ற தமிழ்த் துறை அங்கிருந்தது. எங்களை அங்கு ஈர்த்த இந்த மையப் புள்ளி தேவராசனையும் ஈர்த்திருக்க வேண்டும்.
வீ.தேவராசன் அமைதியானவர்; சாது; குழந்தை போல் மிருது! இத்தகைய இயல்புகள் நானும் கொண்டிருந்ததால் அவர் என் இதயத்துக்கு அருகில் எப்போதும் அமர்ந்திருந்தர்.
அவர் ஒரு விவசாயியின் மகன்; அம்பாசமுத்திரத்தில் வைகை ஆற்று நீர்ப்பாசனம் அருந்தலாகும் காலத்தில், ஆற்றுக்குள் குழாய்களைச் செலுத்தி மோட்டார் போட்டு நீர் எடுப்பார்கள். விவசாயக் குடும்பங்களின் தற்காலம் எப்படியோ, அந்த விவசாயக் குடும்பம் சூழ்ச்சியும் வஞ்சனையும் கொண்ட வாழும் கலையை அவருக்குக் கற்றுத் தரவில்லை. விவசாயக் குடும்பத்திலிருந்து கல்லூரிக்கு வந்த பின்னர் ஒரு விவசாயியின் அமைதியான, வெள்ளந்தியான, உழைப்புக் குணம் தொடர்ந்திருந்தது.
முதுகலைத் தமிழ் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்றார். 1967இல் திமுக ஆட்சியில் அமர்ந்திருந்தது; முதுகலை முடித்த நான் முரசொலி நாளிதழில் அப்போது உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன்.
“பேரு பெத்த பேரு, தாக நீலு லேது”
என்ற முதுமொழி தெலுங்கிலிருந்து தமிழிலும் வழங்குகிறது. முரசொலி ஊதியம் கைக்கும் மெய்க்கும் போதாமல் துவள வைத்தது. ஆறு மாசம் உருண்டு புரண்டு பணியாற்றி விட்டு, என்னைப் போல் பணியைத் தலைமுழுகி வந்தவர்கள் நிறையப் பேர்.
நான் முரசொலியில் பணியாற்றிய ஆறு மாத காலமும் நண்பர் தேவராசன் தங்கியிருந்த திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கி இருந்தேன். அவரும் இன்னொரு அறை நண்பரும் இருந்தபோதும், நான் நண்பன் என்ற உரிமை அடிப்படையில் அங்கு தங்கினேன். முரசொலியில் நள்ளிரவு வரை கடுமையான வேலை. முடித்துவிட்டு நள்ளிரவில் முரசொலியில் இருந்து பீட்டர்ஸ் சாலை, பைகிராப்ட் சாலை வழியாக விக்டோரியா மாணவர் விடுதிக்கு நடந்து வந்து சேருவேன். மறுநாள் இரவு 10 மணிக்கு மீண்டும் பணிக்கு செல்லவேண்டும்: இன்னும் நன்றாக நினைவிருக்கிறது - தேவராசனோ அவருடன் உடனுறை அறை நண்பரோ துளியும் முகம் சுளித்ததில்லை.
முதுகலை முடித்த பின் தேவராசன் பெங்களூர் கல்லூரியில் பணிபுரியச் சென்றார். தமிழ்த் துறை விரிவுரையாளர்களுக்கு மிகக் குறைந்த ஊதியம் அக்காலத்தில் கொடுத்தனர்.
கல்லூரியில் பயில்கிற காலத்தில் அவருக்குள் சமூகத் தொண்டுள்ளம் முளைவிட்டுக் கிளம்பி மரமாகச் செழித்து நின்றது. அதன் தொடர்ச்சியாக பணி ஓய்வு பெற்ற பின் அவர் தன்னுடைய சொந்த ஊரில் சிறுவர் பூங்கா ஒன்றை உருவாக்கியதனைக் காணமுடியும்.
பூங்கா என்றால் சிறுவர்களுக்கான விளையாட்டுக் கருவிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளடக்கியது: பன்னீரெண்டு ஆண்டுகள் வேளாண்மை வாழ்வினூடாக சிறுவர் பூங்காவையும் செம்மையாகப் பராமரிப்பு செய்து காத்து வந்தார்.
வீ.தேவராசனின் ஒரே மகள் அன்புமலர் சென்னையில் ஒரு கணிணிப் பொறியாளர். கணிணி நிறுவனத்தில் பணியாற்றியதின் காரணமாக, அவரும் துணைவியாரும் மகளுடனேயே தங்கியிருந்தனர். மகளுடைய வீடு சென்னை ஆதம்பாக்கம். தேவராசன் சென்னையில் இருந்து ஒவ்வொரு முறையும் சொந்த ஊர் சென்று தான் உருவாக்கிய சிறுவர் பூங்காவை பாராமரிப்பது இயலாது போயிற்று. சிறுவர் பூங்காவை ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து விடுகிறார்.
இறப்பிற்கு பின் சொந்த ஊரிலே எரியூட்டப் படுகிறார். இறப்புக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள், ஊர்க்காரர்கள் சோகம் தரும் ஒரு சேதியைப் பகிர்ந்து கொண்டனர். ஊராட்சி வசம் தேவராசன் ஒப்படைத்த பூங்கா, கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்தவித பராமரிப்புமின்றி மூடியே கிடக்கிறது என்பதே அந்தச் சேதி.
சமூக ஆர்வலர்கள், இயற்கை விரும்பிகள், ஊராட்சித் தலைவர்கள் எனப் பலரும் செய்வதை விட, தேவராசனுக்கு இயற்கையைப் பேணுவதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஒரு எழுத்தாளராய், இதழாசிரியராய் சுமார் நூறு மரங்களைத் தன்னுடையசொந்த ஊரில் நட்டுக் காத்திருக்கிறார்.
ஊர்ச் சுடுகாடு ஒரு நேரத்தில் மட்டும் கவனம் பெறும். உயிரிழப்பு ஏற்படுகிற போது சுடுகாட்டிற்குச் செல்வார்கள், அதன் பின் கவனிப்பாரற்று வெறும் பொட்டல் வெளியாகக் காட்சி தந்த ஊர்ச் சுடுகாட்டை, சுமார் ஐம்பது எண்ணங்கள் கொண்ட புளியங்கன்றுகள், வேப்பங்கன்றுகள், அரசமரக் கன்றுகள் நட்டு வளர்த்து நிழல் தரும் சோலையாக ஆக்கியுள்ளார். இழப்பின் துயர வெக்கையில் தவிக்கும் மக்கள் வீ.தேவராசன் நட்டு வளர்த்த மரங்களின் குளுமையால் இன்றும் ஆற்றுப்படுத்தப்படுகிறார்கள்.
அவருடைய சமூகப்பணிகளில் ஒன்று ”ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்பது. எட்டயபுரத்துக் கவிஞன் சொன்னது போல நிறைய ஏழைகளுக்கு கல்விக் கட்டணம் போன்ற பல்வேறு உதவிகளைச் செய்து முன்னேற்றியிருக்கிறார். கல்வி வாய்ப்பு அரிதாகிப் போன ஏழை எளிய மாணவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் தொடுவானத்தை ஒளிவீசச் செய்திருந்தார்.
”தொடுவானம்” என்ற இலக்கிய இதழின் ஆசிரியர். இதழ் எழுபதுகளில் தொடங்கி இலக்கிய ஊழியம் செய்துவந்தார். சிற்றிததழ்களுக்கு என்ன தலைவிதியோ, அது தொடுவானத்துக்கும் நிகழந்தது.
அவர் இருந்திருந்தால் இன்றும் வாசிப்பு மனத்தோடு, படைப்பு இதயத்துடன் இயங்கி இருப்பார்; முதிய வயதில் ஆதம்பாக்கத்திலிருந்து பேருந்து ஏறி, பரங்கிமலை சென்று, மின்தொடர் வண்டியில் மாறி, எழும்பூரில் அமைந்துள்ள கன்னிமாரா நூலகம் செல்வார். கார் ஏற்பாடு செய்யவா எனக் கேட்டால் மறுத்து விடுவார். அவர் மகள் அன்புமலர் உருக்கமுடன் குறிப்பிட்டார்
”என் அப்பா எங்கு சென்றாலும் யார் துணையும் விரும்பாதவர். பல வசதிகள் இருந்தும் கூட மிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆதலால் காரில் பயணம் செய்வதை தவிர்த்து விட்டார்.”
கன்னிமாராவில் அவர் உறுப்பினர்; வாசிப்புக்குத் தேவையான நூல்களாக மட்டுமின்றி, படைப்பு மனத்தை தூண்டிடச் செய்யும் நூல்களாகவும் தேர்வு செய்வார். நூலகச் சூழலில் அமர்ந்தும் வாசித்துத் திரும்புவார்.
“எப்படி உங்களால் இவ்வளவு தொலைவு, இந்த முதுமையில் போய் வர முடிகிறது” வியப்புடன் கேட்டேன். ஒரு அமைதியான புன்னகை. வீட்டில் சும்மாவே உட்கார்ந்திருக்க முடியுமா? சோம்பல் - சாத்தானின் இருப்பிடம் போன்ற பதில்கள் புன்னகைக்குள் கிடந்தன.
காய்ந்து விறைத்த நரம்பு நட்டுக்க நிற்பது போல தோன்றினார். கல்லூரிக் காலத்திலிருந்து அதுதான் அவர் உடல். எந்த வகையில் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற, எந்த வகையில் எனது தோழன் இழப்பின் சோகத்தைப் பகிர்ந்து கொள்ள? குடும்ப உறுப்பினர்கள் போல, இழந்து விட்ட அந்த தொடுவானத்தை நோக்கிக் கொண்டிருக்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக