சுய தரிசனம்01-10-2020

சென்னை


தீபன், 

சில விசயங்களை உன்னுடன் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். தொலைபேசியில் இத்தனை தர்க்கரீதியாக பேச இயலாது. எழுத்துக்கள் மூலமாக ஓரளவுக்கு  எண்ணங்களை தெளிவாகக் கொண்டுவர சாத்தியமாகும்.

அன்பு செலுத்துதல், அன்பை வெளிப்படுத்துதல் என்பது வேறு; ஏமாளியாக இருப்பது வேறு. அன்பை, பாசத்தை குடும்ப உறுப்பினர்களிடம் மட்டுமல்ல, உறவு, நட்பு என என்னைச் சூழவுள்ள அனைத்துத் திசைகளிலும் பரிமளிக்கச் செய்துவிட்டு, பண விசயத்தில் நான் ஏமாளியாக இருந்திருக்கிறேன். இப்போதும் இருந்து வருகிறேன்.

பெரியப்பா சொன்னதாக அம்மா ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறாள்; ”பணத்தின் அருமை இப்போது இவனுக்குத் தெரியாது”. பின்னர் இவன் எக்கசக்கமாக கஷ்டப்படப் போகிறான் என்ற அர்த்தத்தில் சொன்னது உண்மை என உணரமுடிகிறது. ஆனால் எனது குணவியல்பை மாற்றிக்கொள்வது இனிமேல் சாத்தியமில்லை எனக் கருதுகிறேன்; இனிமேல் சரிப்படுத்திக் கொள்வதால் என்ன பெரிதாய் விளையப் போகிறது என்னும் கேள்வி எழுந்தாலும், ஓரளவு என்னை நிலைப்படுத்திக் கொள்ளலாம்.   

முழுதும் ஒரு புனைவு உலகத்திலேயே நான் வாழ்ந்து வந்ததாக கருதுகிறேன். பணம், சொத்து எல்லாமும் அர்த்தமற்றது, மனித உறவு ஒன்றே பிரதானமனது என நான் ஒரு திசையில் சென்றேன்.

இந்த சமையற்கார அம்மா நன்றாக சமைப்பதால் என்னுடைய இப்போதைய வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது: வீடும் நன்றாக அமைந்துவிட்டது. நல்ல குணவானான வீட்டுக்காரர் அசோக் லே லேண்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதற்குள் என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இனி சீராகப் போக முடியும் என நான் எண்ணுகிறேன்.  

முதலில் நம்மை சுற்றியுள்ள மனிதர்களின் அசைவுகளை நாம் கணக்கிட வேண்டியிருக்கிறது. அந்த அசைவுகள் நம்முடைய வாழ்வின் அசைவுகளில், நகர்வுகளில் பெரும்பகுதியைத் தீர்மானிக்கின்றன. சில நேரங்களில் சில விசயங்களில் அவையே நம் திசையைத் தீர்மானிக்கின்றன. நாம் சுயமாய் இயங்குவதாக நினைத்துக் கொண்டிருந்தாலும், நம்முடைய இயக்கம் புறநிலையின் தாக்கத்தால், பிறரது அழுத்தத்தால் பெரும்பாலும் நடைபெறுகிறது.

நம்முடைய குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான பாதிப்புகளை குடும்ப உறுப்பினர்கள் மீது உண்டாக்கி இருக்கிறோம்; நான் சுத்த சுயம்பிரகாச மனிதனாக என்னை கூறிக்கொள்ள மாட்டேன். என்னுடைய போக்குகள் குடும்பத்திற்குள் குறிப்பாக அம்மாவுக்கு அதிகமான பாதிப்புகளை உண்டாக்கி இருக்கின்றன. அம்மாவின் எதிர்வினைகளும் பாரதூரமான விளைவுகளை என் மீதும், உன் மீதும் உண்டாக்கி விட்டன.

ஒவ்வொருவரும் பிறருடைய வாழ்க்கையில் பாதிப்பை தொடர்ந்து செலுத்திக் கொண்டே இருக்கிறார்கள்; மனிதர்களை புரிந்து கொள்வது என்பது தான் வாழ்க்கையைப் புரிதல். மனித உறவுகளை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொள்வது: தகவமைத்துக் கொள்வது என்றால் சுயநலவாதிகளாக ஆகிக் கொள்வது அல்ல. 

மற்றவர் மேல் ஏற்படுத்திய பாதிப்புகளை விமர்சனப்படுத்துகிற போதே, மற்றவர்கள் நமக்கு காலத்தால் செய்த உதவிகளையும் அவர்களுக்கு நாம் செய்தவைகளையும் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

லெப்டோ பைரஸி – நோயில் நீ மருத்துவமனையிலிருந்த போது ஒரு மாசம் அல்லது அதற்கு மேலாகவும் அம்மா தான் அருகிருந்து கவனித்துக் கொண்டாள். நான் அலுவலகத்துக்கும் மருத்துவமனைக்குமாய் அலைந்து கொண்டிருந்தேன். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு என்னுடைய பணியைச் செய்யவிடாமல் எல்லா வகையிலும் தொல்லை தந்து நிம்மதி இழந்து, விடுப்பில் இருந்த நேரம் அது. பதவியிலிருந்து வேறு துறைக்கு மாற்றியடிக்கிற அளவுக்கு நிலைமை போய்க்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அம்மாவின் கவனிப்பும் அர்ப்பணிப்பும் இல்லையென்றால் உன்னை மீட்டிருக்க முடியாது. 

அது போலவே நான் ரத்த அழுத்தத்தால் மூளையில் ரத்த நாளங்கள் வெடித்து பெங்களூரு மருத்துவமனையில் ஆபத்தான நிலையிலிருந்த போது, அம்மா உடனே புறப்பட்டு வந்து அருகிருந்து கவனித்துக் கொள்ளாதிருந்தால் நான் பிழைத்திருக்க மாட்டேன். நீ கூட சிங்கபூரிலிருந்து வந்து வீட்டில் என்னைக் கவனித்துக் கொண்டாய்.

அதுபோலவே தான் நெஞ்சுச்சளி பிடித்து, தொடர்ந்து அலுவலகத்துக்குப் போய்க்கொண்டிருந்த அம்மா, ஒருநாள் வீட்டுக்கு வந்ததும் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டாள். மூச்சுத் திணறல். உடனே ஒரு ஆட்டோ பிடித்து ஹண்டே மருத்துவமனைக்குக் கொண்டுபோயிருக்காவிட்டால் அம்மாவைக் காப்பாற்றியிருக்க முடியாது. அந்த இரவில் மருத்துவமனையில் சேர்த்ததும் பரிசோதனை செய்த மருத்துவரே கேட்டார் “ஏன் இவ்வளவு தாமதமா கொண்டு வந்தீங்க”. பிறகு ஆக்சிஜன் கொடுத்து காப்பாற்றியிருக்காவிட்டால் அம்மாவைப் பறிகொடுத்திருப்போம்.

இவ்வாறு ஒவ்வொருவரும் மரணத்திற்குள்ளே போய், பின்னர் மற்றவர்களால் மீட்கப் பட்டிருக்கிறோம்.

இப்போது நாம் எல்லாவற்றையும்  எல்லாரையும் மறுபரிசீலனை செய்தாக வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்; முதுமை என்னை அருகில் அன்பு செலுத்துகிறவர்களை தேடி நடக்கச் செய்கிறது. நட்பாக இருந்தாலும் உறவாக இருந்தாலும் அவர்களுடன் கலந்துகொள்ள கட்டாயப்படுத்துகிறது. அதனால் புதுச்சேரிக்குப் புகலிடம் நாடிச் சென்றேன். 

“நீ உன் பிள்ளைக பேரில பிரியமா இருக்க; அதுபோல அவங்க தன்னுடைய பிள்ளைக பேர்ல பிரியமா இருக்காங்க. அந்தப் பிரியம் உன்னை நோக்கி வராது. இதுதாம் நெசம். இதை அறியாதவர்கள் தான் தங்கள் பிள்ளைகள் தங்கள் பேரில் பிரியமா இருக்க மாட்டேங்கிறாங்களே என்று நினைத்து வருத்தப்படுவார்கள். முதுமையடைந்த பெற்றோர்களைப் பிள்ளைகள் கவனிப்பார்கள், கவனிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கக்கூடாது. அந்தக் கொடிகள் பெற்றோரை நோக்கி மேல் நோக்கித் திரும்பாது. தனது குடும்பம், குழந்தைகளென கீழ் நோக்கி வேர் பாயும் என்ற உறவு விதிகளையைப் புரிந்து கொள்ளனும்” என்று நயமாக உரைத்திருப்பார் கி.ராஜநாராயணன்.

நான் என்னுடைய பிள்ளைகள் பற்றிக் கவலைப்பட்டேன். நீ உனது பிள்ளைகள் பற்றிக் கவலை கொள்கிறாய். அவர்களின் எதிர்கால வாழ்வு பற்றிச் சிந்திக்கிறாய். இது இயல்பானது, தவறு என்று கூறமுடியாது. 

இந்த வாழ்வு விதியை நான் முழுமையாக உணர்ந்து உள்வாங்கியுள்ளேன். ஒரு சிந்தனையாளனாக, எழுத்தாளனாக இருப்பதால் இன்னும் கூடுதலாக  உணர்ந்திருக்கிறேன். அவ்வாறிருப்பதனாலேயும் நிறைய கற்பனை உலகிலும் உலவுகிறேன். நீயொரு பக்கம், சாரு ஒரு பக்கம் என என்னுடைய உதிரங்கள் நாடுகடந்து சிதறிக் கிடக்கிறபோது, அருகிருந்து என்னை ஆற்றுப்படுத்த வேண்டும், ஆறுதல் தரவேண்டுமென நான் எதிர்ப்பர்ப்பது அர்த்தமில்லாதது.  இன்றைய வாழ்வின் சுழல்கள் மனிதர்களை வாழுதலுக்காக எங்கெங்கோ சுழற்றியடிக்கின்றன. இதை ஏற்கத்தான் வேண்டும். இதனையும் எதிர்கொண்டு, வாழ்வில் எது வந்தாலும் எதிர்கொள்ளும் பக்குவம் எனக்குள் திடப்பட்டுள்ளது.

அன்புடன்

அப்பா.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்