பா.செயப்பிரகாசம் விழி.பா.இதயவேந்தனுக்கு எழுதிய மடல்
சென்னை
27 ஏப்ரல் 2004

அன்புள்ள தோழருக்கு

இத்துடன் புரட்சிப்பாதை இதழ், கலை - ஏப்ரல் இதழில் வெளியான
ஜேம்ஸின் "தேர்தல் அம்பேத்கர் முதலாக" கட்டுரை நகல் அனுப்பியுள்ளேன்.

சிறுகதைத் தொகுப்பான 'இருள் தீ' பற்றி விமர்சனம் எழுதுவதற்கான சாத்தியம் இப்போது இல்லை. இவ்வகையில் பலரின் எதிர்பார்ப்பை என்னால் நிறைவு செய்ய இயலுவதில்லை. உழைப்பு சக்தி குறைந்து விட்டதாகக் கொள்ளலாம். கூடவே எனது குறிப்பான திசைப்பணிகளை முடக்கிவிடுகின்றன.

விழுப்புரத்தில் நடைபெறும் மாநாட்டுக்கு வாழ்த்துக்கள். அதற்கான ஆதாரப் பணிகளில் ஈடுபட்டிருப்பீர்கள். தூரத்தில் நின்றுதான் வாழ்த்துச் சொல்ல முடிகிறதே தவிர, நெருங்கி வந்து கலக்க முடிவதில்லை. இதனால் அனுபவ இழப்பு நிகழ்கிறது என்பதொரு முக்கியமான யதார்த்தமாக இருந்தாலும், முடியாமல் காரணங்களையும் யோசிக்க வேண்டும்.

முதலில் தலித், தலித்தல்லாதோர் என்ற சொல்லாடலை பார்க்க வேண்டும். அதை நான் ஏற்பதில்லை அது அப்பாற்பட்டவர்கள் என்ற பொருளில் கையாளப்படுகிறது: அல்லது எதிரிகள் என்ற அர்த்தத்தில் கையாளப்படுகிறது. பெரும்பாலும் எதிரிகள் என்ற நிலையில் தான். தலித்துகள், தலித்தியவாதிகள் என்ற சுட்டலே சரியாக இருக்கும். தலித்தியக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்கிற எவராக இருந்தாலும் தலித்தியவாதிகள் தான்: மனம், வாக்கு, செயலால் இதை எடுத்துச் செல்கிறவர்கள் தலித்தியவாதிகள்: இவ்வாறு, மனம், வாக்கு, செயலால் எடுத்துச் செல்லாதவர்கள் தலித்துகளாக, தலித் தலைமைகளாக இருக்கிறார்கள் என்பதும் பரிசீலிக்கப்பட வேண்டிய விசயம்.

இந்தப் பரிசீலனைக்கு உட்படுத்த, மோ.ஜேம்ஸின் கட்டுரை பயன்படும். அதில் வெளிப்பட்டுள்ள பல கருத்துக்கள் சுய விவாதத்திற்கு உரியவை வெறுமனே விவாதத்திற்குரியவை அல்ல, விவாதம் பரிசீலனை என்பவை விமரிசனம், சுயவிமரிசனத்துக்கு அழைத்துச் செல்வதாக இருக்க வேண்டும்.

தலித் ஒற்றுமையைச் சிதறடிக்கும் 'கலைப்புவாதம்' என்று ஒற்றைச் சொல்லால் ஒதுக்கிவிடுவது எளிது. நீங்கள் அவ்வாறு பார்க்க மாட்டீர்கள்
என நம்புகிறேன்.

“தலித் இயக்கங்கள் அம்பேத்கரின் தத்துவார்த்தத்தைப் புரிதலின்றி, எதிரி - நண்பன், எதிர்க்கப்பட வேண்டிய பிரதான சக்தி, ஆதரவு சக்திகள் என்பதைக் கணிக்கத் தவறி, தங்களது பதவி நலன் வாழ்க்கையோடு தலித் அரசியலை சுருக்கி விட்டனர்"

ஜேம்ஸின் இந்தக் கணிப்பு, தலித் இயக்கங்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக இயக்கச் செயல்பாடு பற்றிய புரிதலுக்கும் வழி அமைக்கும்.

தோழமையுடன் பேசுவோம்
பா.செயப்பிரகாசம்

- நன்றி பொன் குமார், ஆலம்பொழில் இதழ், செப்டம்பர் 2021

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்