கரிசல்காட்டுச் சூரியன் காலத்தில் கரைந்தது - சூரியதீபன் (எ) பா.செயப்பிரகாசம் (1941- 2022)


முற்போக்கு இலக்கிய வட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கியவர் ஜே.பி. எனத் தோழர்களால் அன்போடு அழைக்கப் பட்ட சூரியதீபன்(எ) பா.செயப்பிரகாசம் அவர்கள்.

எழுத்தாளர்களிலேயே மிகவும் மாறுபட்டவர் ஜே.பி. எழுத்தோடு வேலை முடிந்து விட்டது என ஓய்வெடுப்பவரல்ல இவர். மக்களின் மீதான தாக்குதல் எங்கிருந்து வந்தாலும் களத்தில் குதிக்கும் போராளி. போராட்ட உணர்வு அவரது இரத்த அணுக்களிலேயே இருந்த ஒரு நற்கூறு ஆகும்.

அதனால்தான் கல்லூரிக் காலத்திலேயே இந்தித் திணிப்பை எதிர்த்து இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். இத்தகைய போராட்டக் கனல் இறுதிவரை அவரது உள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மொழிக் காப்புப் போராட்டமானாலும், ஈழத் தமிழர் சிக்கலானாலும், எழுதுகோலை வாளாகப் பயன்படுத்தியவர் அவர்.

மனித உரிமை மீறல் குறித்து எந்தவொரு முன்னெடுப்பினை எடுக்க நினைத்தாலும், எழுத்தாளர்களில் நமக்கு முதலில் நினைவுக்கு வருபவர் ஜே.பி. அவர்கள்தான்.

முற்போக்கு இலக்கிய உலகில் அடர்த்தியான சுவடுகளைப் பதித்த "மனஓசை" இதழ் மூலம் அவராற்றிய பணி காத்திரமானது. எண்ணற்ற இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து அவர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக விளங்கியவர்.

கதைகளையும், புதினங்களையும், விமர்சனங்களையும் எழுதிக் குவித்தவர். பட்டங்கள், விருதுகளுக்குப் பின்னால் ஓடாதவர்.

எப்பொழுதும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தவர். தோழமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்.

அவரோடான நினைவுகள் மறக்க முடியாதவை. அவரது சிறுகதைத் தொகுப்பாகிய இரவு மழை (2000), ஈழம் -வன்மமும் அவதூறுகளும் (2009), ஈழம் - உலகை உலுக்கிய கடிதங்கள் (2009) ஆகிய நூல்களை எமது புதுமலர் பதிப்பகம் சார்பாக வெளியிட்டோம்.

அவரது பங்களிப்போடு உருவான, தமிழ்ப் படைப்பாளிகள் முன்னணியோடு புதுமலர் பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட ஈழத்து எழுத்தாளர் மு. திருநாவுக்கரசு அவர்களது "தமிழீழ விடுதலைப் போராட்டமும் இந்தியாவும்" எனும் நூல், மிகப்பெரும் அதிர்வலைகளை அந்தக் காலகட்டத்தில் உருவாக்கியது.

அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது என்றாலும், அவரது இடம் வெற்றிடமாகி விடக்கூடாது. சனாதனம் சமூகத்தில் மட்டுமல்ல, இலக்கிய உலகிலும் மேலோங்கி வரும் நெருக்கடியான இக்காலகட்டத்தில் தோழரது இழப்பு, உறுதியாக ஈடுசெய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அதையே அவர் விரும்புவார் என்பதை மீண்டும் சொல்ல வேண்டியதில்லை.

தோழருக்கு எமது நெஞ்சார்ந்த அஞ்சலி.

- கண.குறிஞ்சி, புதுமலர் - ஜனவரி 2023 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்