தெக்கத்தி ஆத்மாக்கள் - வாசகர் மதிப்புரை

தெக்கத்தி ஆத்மாக்கள்
பா.செயப்பிரகாசம்
விகடன் பிரசுரம் (2007)
160 Pages
விலை ₹60

தான் பிறந்து, வளர்ந்த கரிசல் காட்டையும், அங்கு வாழ்ந்த/வாழ்கின்ற 
மனிதர்களையும் மனம் நெகிழ எடுத்துரைக்கும் உன்னதமான நூல்.

ஆனந்த விகடனில் வந்த இந்த தொடருக்காக, தான் வாழ்ந்த மண்ணுக்கு பயணித்து, இன்றைய நிலமையையும் கண்டு இந்நூலை எழுதியுள்ளார்.

கிராமத்துப் பாதை என்ற முதல் கட்டுரையில் சொந்த ஊருக்கு செல்லும் பாதையில் செல்லும் பொழுது, இன்று இழந்து போனவைகளை விவரிக்கிறார். ஆனாலும், "பிறந்த ஊரை நோக்கி செல்லும் அந்த பாதையைப் போல இனிமையானதில்லை" என்று குறிப்பிடுகிறார்.

அடுத்து வரும் ஒவ்வொரு கட்டுரையிலும், கரிசல் காட்டு மாந்தர்களை, மண் மணம் மாறாமல், அவர்களது, அன்றைய வாழ்க்கை முறையும், இன்றைய நிலமையையும் எடுத்து இயம்புகிறார்.
     
வெள்ளாமை காவலில் பேரெடுத்த, இளவட்டங்களுக்கு சிலம்பாட்டம் கற்றுக் கொடுக்கும், மனா செனா, வியர்வைத் தண்ணி சிந்தாத, காலோடு கால் உரசிடாத, சதங்கைகள் பேசவைக்கிற தேர்ந்த ஆட்டக்காரர்களை
உருவாக்கிய எஸ்.சிவசங்கரம் பிள்ளை என்ற ஒயில் கும்மி வாத்தியார், சன்னம் சன்னமாக குயத்தொழிலை ஏறக் கட்டிவிட்டு விவசாயியாக மாறிவிட்ட பொன்னையன், துவைப்புத் தொழிலை விட்டு, தேய்ப்புத் தொழிலுக்கு மாறின சிவசங்கு, கக்கத்தில் சேவலை இடுக்கிக் கொண்டு, சேவல் கட்டுக்கு (சண்டைக்கு) செல்லும் முடி வெட்டும் தொழிலாளி மல்லையா, ரேக்ளா வண்டி பந்தயத்திற்கு மாடுகளை தயார் பண்ணுவதில் தேர்ந்த சாமல்மட்டி மைனர் என்று அழைக்கப்பட்ட திருமால், திருடு போன ஆடு, மாடுகளைப் பற்றி துப்புக் கொடுத்து, துப்புக் கூலி வாங்கும்சாமர்த்தியசாலிகள், கோமணத்தாண்டியாக அலையும், ஓய்வு பெற்ற போலிஸ்காரரான முத்துக் கருப்பன், பசித்தவர்களுக்கு வயிராற உணவிட்ட லிங்கம்பட்டி கிட்ணம்மா, குற்றவாளிகளைப் பிடிப்பது, பிடித்ததும் அவன் ஆத்தா கொடுத்த சேனையைக் கக்குவது மாதிரி அடிப்பது, உள்ளே தள்ளுவது, இதிலெல்லாம் சிரத்தையில்லாத, பொருளாசை இல்லாத, இரக்க சுபாவமுள்ள, பந்தல்குடி காவல்நிலைய ஏட்டு சோலைராம், கலையில் சகல வலிமைகளும், சொந்தக்
காரியத்தில் சகல கேடுகளும் கொண்ட கலைஞனான சேது என்ற சேதுராஜப் 
பிள்ளை (சேதுவைப் பற்றி நூலாசிரியர் குறிப்பிடும் பொழுது, வங்க எழுத்தாளர் தாராசங்கர் பானர்ஜியின் "கவி" என்ற நாவலில் வரும் நித்தாயி என்ற கலைஞனை, இந்த சேதுராசனிடம் காண்கிறேன் என்று குறிப்பிடுகிறார்).

ரெட்டிப் பெண்ணை, வடக்கத்தி  வெறியர்களிடமிருந்து மீட்டிய களைக்கூத்தாடியை "ரெட்டியக் கூத்தாடி" என்று பெயரிட்டுக் கொண்டாடிய ரெட்டியார்கள், சதாகாலமும் தன்னை இம்சை பண்ணின களவு, குடி, சூது பொய், தெத்துவாளித்தனம் நிறைந்த, நீதிக்கருப்பன் என்ற தனது புருஷன், தண்ணியைப் போட்டுவிட்டு தன்னிடம் குள்ளமள்ளம் பண்ணிய போது, அவனோட இடுப்பு அரிவாளையே உருவி, கழுத்தில் கொத்தி கொன்ற ரங்கம்மா, காடைக் கண்ணியை எடுத்துக் கொண்டு ராத்திரி காடை பிடிக்க கிளம்பும் அழகர் செண்பகமும் அவரது கூட்டாளிகளும், காலில் சக்கரம் கட்டிக் கொண்டு வேகு வேகு என்று தேசாந்திரியாக சுற்றித் திரிந்த, பஞ்சாப்பைச் சேர்ந்த ராம் சாது என்ற மொட்டாந்தரை சாமியார், அவரது சிஷ்யர் யாழ்ப்பானம் சுவாமிகள், வில்லு வாத்தியார் ராமக்காளையுடன் வில்லுப்பாட்டு பாடி, பிறகு அவருக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட மூக்கம்மா போன்ற, தெக்கத்தி ஆத்மாக்களை, நூலாசிரியர் திரு பா.செயப்பிரகாசம் நம் கண்முன் கொண்டு நிறுத்துகிறார்.

- காந்திராஜன் மாரியப்பன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

படைப்பாளியும் படைப்பும்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

“மணல்” நாவல் - செங்கொடியேந்திய சூழலியல் காவியம்

பா.செயப்பிரகாசம் நூல்கள்