தொடரும் தோழமை


Date: 31 Oct 2015

To: siva gnanam, Gnanamoorthy Santhakumar 


அன்பு நண்பருக்கு,

நலம் தானே? நான் பா.செயப்பிரகாசம். நினைவிருக்கும். நோர்வேயிலிருந்து  புறப்படுகையில் ரூபன் சிவராஜா விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஏற்றி அனுப்பினார். லேசாய்ப் பொஸுபொஸு வென்று தூறல் வீசிய காலைப் பொழுதாக அது அமைந்தது. இனிய காலையும், அது போன்ற தங்களின் இனிய விருந்தோம்பலும் பழகுதலும் நெஞ்சை நனைத்திருந்தன. தமிழ் மண்ணில் இறங்கியதும் அதனை அஞ்சலில் அறிவிக்க எண்ணினேன். கி.பி.அரவிந்தன் நூல் அறிமுக நிகழ்வுகளினை இங்கு வந்ததும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டி வந்ததால் உடன் அஞ்சலிட சாத்தியமற்றுப் போயிற்று. அக்டோபர் 24- மதுரை,  25- தஞ்சை என சிறப்புடன் நடந்தன. நவம்பர் 7-ல் சென்னையில் நடத்த உள்ளோம். அழைப்பு பார்வைக்கு இணைத்துள்ளேன். 

இந்திய சமூகம் வேறொரு திசை நோக்கிச் செல்வதை தாங்கள் அறிவீர்கள். காலத்தின் தொடர்ச்சியை நூற்றாண்டு என்கிறார்கள். நூற்றாண்டுகளின் தொடச்சியினை யுகம் என்கிறோம்; இது இருண்ட காலம். இருண்டகாலத்தின் தொடச்சியான இன்றைய இது கறுப்பு யுகம். காவிகளின், மதவாத சக்திகளின், சகிப்புத் தன்மையின்மையின் கறுப்பு யுகம். 

இருண்ட காலத்தின் எதிர்ப்புக் குரல்கள் அறிவு ஜீவிகளிடமிருந்து எழுந்து வருகின்றன. மேலெழ விடாமல் எழுத்தாளர்களை அச்சுறுத்த கொலை வரை போகிறது. ஏறக்குறைய இந்தியா முழுதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாங்கள் பெற்ற விருதுகளைத் திருப்பி அளித்து எதிர்ப்பைத் தொடருகிறார்கள். ஆனால்  தமிழ்நாட்டில் மட்டும் எவரும் விருதுகளைத் திருப்பி அளிக்கவில்லை. இந்த சூழலில் 'இனிய உதயம்' என்னும் மாத இலக்கிய இதழில் வெளிப்பட்ட எனது கட்டுரையினையும் தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன்.

கே.ஏ.குணசேகரனை அடிக்கடி சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

தொடருவோம் உரையாடலை.

பா.செயப்பிரகாசம்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்