அன்புள்ள ரவி
5 ஆகஸ்ட் 2012
அன்புள்ள ரவி,
தங்களிடமிருந்து செய்தி எதுவும் வாராமையால் ஒரு நீண்ட, செறிவான படைப்புக்கு அமர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கால இடைவெளி அதற்கானதாகத் தெரிகிறது. நடைமுறை ரீதியில் அந்த இடத்திற்கு என்னால் சென்றடைய முடியாமலிருப்பதுதான் எனது அவலம். அது ஒரு சுகக்கேடு.
பாலைகள் நூறு வாசித்த பின் புதுவை ஞானம் - இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளர்; மார்க்சியர்.(தனக்கு தெரிந்த ஆரம்பகால மார்க்சிய நிலையில் நின்று இன்றும் தன்னையும் தன் செயல்பாடுகளையும் உலகையும் காண்பவர்.) ஆனால் மிகச்சீரிய நுண்ணிய கிரகிப்பும் எடுத்துரைப்பும் கொண்ட விமர்சகர். பாலைகள் நூறு படித்தபின் "இலக்கியம் என்பது வாழ்க்கையைக் கண்டு கொள்வது. வாழ்க்கையை முன்னுக்குக் கொண்டு செல்வது" என்ற கார்க்கியின் வாசகத்திற்கு நிரூபணமாக இருப்பதாகச் சிலாகித்தார். ரொம்பவும் ஈர்க்கபட்டதாக தெரிவிக்கச் சொல்கிறார். பலருடைய எழுத்துக்கள் ஈழத்தமிழரின் நிலம் பெயர்தல் பற்றிக் கூறிக்கொண்டு போகையில் இவருடைய கதைகளே அதற்கான நிர்ப்பந்தங்கள் பற்றிப் பேசுகின்றன என்றார். நீங்கள் முடிந்தால் அவருடன் பேசலாம். இங்கு புதுச்சேரியில் தான் வாழ்கிறார்.
வீடு நெடுந்தூரம் வாசித்தவர் மிகவும் பாதித்தது என்றார். அவரைப் போலவே நான் வாசிக்கக் கொடுத்த இன்னும் இருவரும் இங்குள்ள தமிழ்த் தலைமைகள் சொல்வதற்கும் யதார்த்தத்துக்குமான இடைவெளியை உணரமுடிகிறது என்றும் நயமான எடுத்துரைப்பு என்றும் தெரிவித்தார்கள்.
பா.செ
கருத்துகள்
கருத்துரையிடுக