நினைவில் நிற்கும் இதழ்கள் - பா.செயப்பிரகாசத்தின் “மனஓசை“


ஓர் இலக்கிய இதழ் தனது உச்சகட்டமாக 20,000 படிகள் விற்பனையாகிச் சாதனை புரிந்ததுண்டா. அப்படியொரு சாதனை சாத்தியமா என்றால் உண்டு, அது சாத்தியம்தான் என நிரூபித்தது ‘மனஓசை’. இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) முன்னணி அமைப்புகள் மக்கள் கலாசாரக் கழகமும், மக்கள் உரிமைக் கழகமும். முன்னையதன் சார்பில் கலை இலக்கிய இதழ் ‘மனஓசை’யும் பின்னையதன் சார்பில் அரசியல் இதழ் ‘கேடய’மும் வெளிவந்தன. மனஓசையின் உருவாக்கத்தை ஆசிரியர் குழு கவனித்துக்கொள்ள அதன் விநியோகத்தில் மக்கள் கலாசாரக் கழகத்தின் தோழர்கள் நேரடியாக ஆர்வமுனைப்புடன் ஈடுபட்டதால் 20,000 படிகள் விற்பனை சாத்தியமாயிற்று என்கிறார் பா.செயப்பிரகாசம். சென்னை மதுரை போன்ற பெரிய நகரங்களில் மட்டும் முகவர்கள் மூலம் விற்பனை, மற்ற ஊர்களில் நேரடியாகத் தோழர்கள் மூலம் விநியோகம் என்று மேலும் விளக்குகிறார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மார்க்சிஸ்ட் கட்சி பிரிந்து போனது. மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து எம்எல் எனப்படும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சிகள் கிளைத்தன. தாய்க் கட்சிகளின் மெத்தனத்தில் சலிப்புற்று புரட்சிகர நோக்கங்களுடன் இப்படிக் கிளைத்த அமைப்புகளில் ஓர் எம்எல் அமைப்பின் கலாச்சாரக் கழகம் தனது அதிகாரபூர்வ இலக்கிய இதழின் விற்பனையை சிகரத்துக்குக் கொண்டுபோகும் போது தாய்க் கட்சிகளால் தங்கள் இதழ்களின் விற்பனையை விரிவாக்கம் செய்ய ஏன் இயலவில்லை என்பது விவாதத்துக்குரிய கேள்வி.

1981 முதல் 1991 வரை 10 ஆண்டுகள் இலக்கியத் திங்களிதழாக இடைவிடாமல் வெளிவந்து தடம் பதித்த மனஓசையின் பிதாமகர் செயப்பிரகாசம். இத்தனைக்கும் செயப்பிரகாசம் இலக்கியச் சிந்தனை அமைப்பின் பரிசு தவிர வேறெந்தப் பரிசையும் விருதையும் இதுநாள் வரை அறியாத எளிய ஆனால் அரிய எழுத்தாளர். சாகித்திய அகாதமி முதல் எப்பரிசையும் கலைமாமணி முதல் எவ்விருதையும் விரும்பாத மதிக்காத இலக்கியப் பிரகிருதி. பரிசுகள் எனப்படுபவை தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கு ஓர் ஊக்க மருந்தாகலாமே தவிர அவற்றால் கர்த்தாக்களுக்கு எப்பயனும் இல்லை என்பதோடு அவற்றை வேட்டையாடும் அற்பகுணமே வந்து சேர்கிறது எனவும் சுயமரியாதையுள்ள செயப்பிரகாசம் கருதுகிறார்.

2.6.1942 அன்று நெல்லை மாவட்டம் விளாத்திகுளம் ராமசந்திரபுரத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பாலசுப்ரமணியம் வெள்ளையம்மாள் தம்பதியினருக்குப் பிறந்த செயப்பிரகாசத்தின் நினைவில் பசுமையாக நிற்கும் நிகழ்வுகள் - நிலத்துக்குரிய தீர்வையைக் கட்ட முடியாமல் அவரது தந்தையார் பஞ்சாயத்தில் கண்ணீர் விட்டு அழுத காட்சி. உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவுத்திட்டம் தொடங்கப்பட்டபோது அன்றைய முதல்வர் காமராஜ் வழங்கிய சோற்றுப் பொட்டணத்தை பள்ளியின் முதல் மாணவன் என்னும் தகுதியில் கையேந்தி வாங்கிய காட்சி.

இத்தகைய பின்னணியில் படித்து மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழில் முதுகலை தேறிய செயப்பிரகாசம் தொடக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழக அனுதாபி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி பாளையங்கோட்டைச் சிறைவாச அனுபவம். போகப்போக பொதுவுடைமை அரசியல், மார்க்சிஸட் லெனினிஸட் இயக்கம் என்று படிப்படியாகப் பரிணாமம். 1968 இல் மதுரை வக்ப் வாரியக் கல்லூரியில் விரிவுரையாளர். 1971 இல் மக்கள் தொடர்பு அலுவலர். இறுதியாக அத்துறையின் இணை இயக்குநராகப் பணியாற்றி ஔய்வு.

“செயப்பிரகாசத்தின் எழுத்தில் என்னை மிகவும் கவர்ந்தது அவருடைய கவித்துவ நடை. அதைப்பல இடங்களில் படிக்கும்போது அய்யோ நமக்கு இப்படி எழுத வரமாட்டேங்குதே என்று நினைப்பேன்“ என கி.ராஜநாராயணன் வியக்கும் அளவு மண்ணின் மணம் கமழும் அற்புதத் தமிழ்நடை வாய்க்கப்பெற்ற செயப்பிரகாசம் மனஓசைக்காகத் தமது படைப்பாக்க மனநிலையைத் தியாகம் செய்துவிட்டுப் பத்திரிகையாளராக வாழ்ந்தவர். இவரது முதல் கதை ‘குற்றம்‘ தாமரையில் 1971 இல் பிரசுரமானது. அரசுப் பணியில் இருந்த காரணத்தால் சூரியதீபன் என்னும் புனைபெயரில் கார்க்கி, கண்ணதாசன் போன்ற சிற்றிதழ்களில் தொடக்க காலத்தில் எழுதிவந்தார். மொழியும் கருத்தும் வெகு இயல்பாக பின்னிப்பிணைந்துபோகும் இவரது எழுத்துவன்மை கணையாழி, தினமணி, புதியபார்வை, தீராநதி, காலச்சுவடு, இந்தியாடுடே ஆகிய பல இதழ்களையும் கவர்ந்தது. இன்று இணையதளங்களிலும் சிறகு விரித்துள்ளது.

1971 தொடங்கி இன்றுவரை இவர் எழுதிய கதைகளின் முழுத்தொகுப்பை சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அதில் களந்தை பீர் முகம்மது இவரைப்பற்றி வர்ணிக்கும் அழகை இங்கே பதிவு செய்வது தகும் - “செய்தித்துறையில் உயர்ந்த பதவிகளுக்கு முன்னேறிச்சென்ற இவரை அதிகாரச் சுவடுகள் களங்கப்படுத்தவில்லை. அரசு அலுவலகத்தில் நுழையும் தென்றல் கூட அதிகாரச் சூடு பெற்று புயலாக வெளிவரும் என்னும் மயக்கத்தை முறியடித்துத் தாம் கொண்டுசென்ற படைப்பாளி மனத்தை அப்படியே திரும்பக்கொண்டுவந்தவர் இவர். எனவே தான் இவரது படைப்புகள் இன்றுவரை போகன்வில்லாச் செடிகளுக்கும் குரோட்டன்சுகளுக்கும் உள்ளே மூடுண்ட பங்களாக்களின் ரசமான வரிசையைப் படைக்காமல் சேரி, வயல், தொழிற்சாலை, ஏரி, குளம் எனச் சுற்றிச்சுற்றி வருகின்றன.“

மனஓசை முதல் இதழ் 1981 நவம்பரில் 1 ரூபாய் விலையில் வெளிவந்தது. பக்கம் 36. டெம்மி அளவு. ஆசிரியர் இரா பழனிச்சாமி. அலுவலகம் - 37 ஜெயந்தி வீதி, 19 மில்லர்ஸ சாலை, சென்னை 600010. அச்சிட்டவர் ஜீவா ஆறுமுகம், வீரபத்திரன் அச்சகம், 1/2 ஆறுமுக ஆச்சாரி சந்து, திருவல்லிக்கேணி, சென்னை 600005. வெளீட்டாளர்- முல்லை அம்பரீடன். 1982 முதல் இதழின் அளவு டபுள் கிரவுன். விலை ஒன்றரை ரூபாய். மனஓசையின் ஆயுட்காலத்தின் பிற்பகுதியில் கே நடராஜன் ஆசிரியர். வெளியீட்டாளர். அலுவலகம் 24 சாரங்கபாணி தெரு, மேத்தாநகர், சென்னை 600029 அச்சகம் மக்கள் கலை அச்சகம், பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை 600094.

மனஓசை தொடக்கத்தின் போது ஆசிரியர் பொறுப்பேற்ற இரா.பழனிச்சாமி அப்போது சட்டக்கல்லூரி மாணவர். இன்று கரூரில் வழக்குரைஞர். பிற்கால ஆசிரியர் கே.நடராசன் இப்போது தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர். ஆசிரியர் குழுவில் இருந்த ரவி - தி.இளங்கோவன், முகிலன், சித்தார்த்தன் என்னும் புனைபெயர்களில் சாதத் ஹசன் மன்ட்டோவின் கதைகளை முதன்முதலில் தமிழில் கொண்டுவந்தார். மற்ற உறுப்பினர்கள் முறையே பொன் சின்னதம்பி, சீனிவாசன் (சுரேஷ்) பெருமாள் முருகன் (முருகு), வசந்தன், வசந்தகுமார், கே.நடராசன், செங்கதிர் ஆகியோர்.

செயப்பிரகாசம் தலைமறைவு ஆசிரியராகவே இதழ்ப் பொறுப்புகளை இறுதிவரையில் கவனித்தார். தமது படைப்பாற்றலை இதழாளர் பணிக்காக 15 ஆண்டுகள் ஒதுக்கிவைத்தார். ‘ஒன்றை இழந்துதான் ஒன்றை அடையமுடியும் என்னும் இயற்கை நியதி என் இலக்கிய வாழ்வில் அப்படி விளையாடியது‘ என்கிறார். நானாவது படைப்பாற்றலை விட்டுக்கொடுத்தேன், மனஓசையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தத்தம் இளமையையே புரட்சிகரச் சமூகப் பண்பாட்டுச் சிந்தனையிலும் செயல்களிலும் செலவிட்டுத் தியாகம் புரிந்தார்கள் என நெகிழ்கிறார்.

மனஓசை செயப்பிரகாசத்தின் கைக்கு வருமுன் இரண்டாண்டுகள் அவ்விதழை நடத்தியது அம்பரீடன், மருதமுத்து, அண்ணாத்துரை, மருதம் இளந்தமிழன் ஆகியோர் கொண்ட குழு. அப்போதே அதில் பங்களிப்புச் செய்துவந்த செயப்பிரகாசம் அவர்களால் இதழை நடத்தமுடியாத கட்டம் வந்தபோது தாமே ஏற்று நடத்த முன்வந்தார் என்பது மனஓசையின் பூர்விகம்.

மனஓசையின் பூர்விகத்திற்கு இன்னொரு விளக்கமும் அவசியம். 1960களின் இறுதியில் மேற்குவங்க அரசியலில் தோன்றிய நக்சல் இயக்கத்தின் எதிரொலி ஆந்திராவில் தெலிங்கானாவில் ஒலித்து இலக்கியத்தில் திகம்பர கவிகள் தோன்றினார்கள். அப்படி உருவான புரட்சிகர இலக்கியப் பார்வையை சுவீகரித்துக் கொண்டு கோவையில் ஞானி ‘புதிய தலைமுறை’யைக் கொண்டுவந்தார்

(1967-68) அதில் எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை (மனோகரன்) புலவர் ஆதி பணியாற்றினார்கள். தொடர்ந்து கோவை ஈஸவரன் ‘மனித’னைக் கொண்டுவந்தார் (1971-72). மனிதன் மூலம் இன்குலாப் வந்தார். அவரது பரிணாமத்தில் அடுத்த கட்டமாக ’புதிய மனிதன்’ வந்தான். கல்யாணி, கேசவன், மார்க்ஸ, பழமலை ஆகியவர்கள் பங்களிப்பில் ‘செந்தாரகை‘ வந்தது (1983-84).

இதே தடத்தில் எழுந்ததுதான் மனஓசை. அப்படி எழுந்த மனஓசையின் இரண்டாம் பிரசவத்திற்கு செயப்பிரகாசம் தாய்க்கோலம் பூண்டார். இதுதான் மனஓசையின் தோற்றத்திற்கான பூர்விக நியாயம். கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே என்னும் முழக்கத்துடன் தோன்றிய மனஓசை பாசிசக் கலாசாரம் ஒழியட்டும் மக்கள் கலாசாரம் மலரட்டும் என அறைகூவியது.

மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழாக மலர்ந்த மனஓசையின் முதல் (1981 நவம்பர்) தலையங்கம் இப்படிப் பிரகடனம் செய்கிறது - “மக்களைப் புதிய பாதையில் பயணப்படவிடாமல் வியாபாரப் பத்திரிகைகள் விஷ விருட்சங்களாக வெடித்துப் பரவிவருகின்றன. இன்னொரு பக்கம் முகமூடி தரித்த முற்போக்கு இலக்கியங்கள் பொய்க்கால் ஆட்டம் ஆடுகின்றன. விஷ விருட்சங்களின் விதைகளை வேரோடு கிள்ளி எறியவும் பொய் முற்போக்கு இதழ்களின் முகத்திரையைக் கிழிக்கவும் மனஓசை உறுதியேற்கிறது.”

மனஓசையின் 1987 மார்ச் இதழில் சிற்றிதழ்கள் சிலவற்றைப் பற்றிச் செய்யும் விமர்சனம் முதல் இதழில் வெளியான பிரகடன வாக்குமூலத்துடன் இணைத்துப் படிக்கத்தக்கது. நவசனாதனக் கருத்துகளை மத்தியதரவர்க்கக் கருத்தியலாக்க முயலும் சிற்றிதழ்கள் குறித்தும் உடனடியாகச் சிந்திக்கவேண்டும், ஜனரஞ்சகப் பத்திரிகைகள் ஒரு தளத்தில் செய்துவருகிற அதே வேலையை சிறுபத்திரிகைகள் இன்னொரு தளத்தில் செய்கின்றன. (ஒரு புள்ளியில் குவியும் சிறு இதழ்கள் - எரிதழல், அ.மர்க்ஸ)

கேள்வி பதில் பகுதியில் (களத்துமேடு) நாடாளுமன்ற உறுப்பினர்கள் படும் இன்னல்கள் பற்றி ஒரு கேள்வி. அதற்குப்பதில் இப்படி நெற்றியடியாக அமைகிறது - மாதச்சம்பளம் 1500, பயணப்படி 15000, அமர்வின்போது தினப்படி 50, அதில் வருமானம் 14000, இலவச விமானப்பயணம், ரயிலில் போக எப்போதும் இலவச முதல்வகுப்பு , வரவேற்பறை, உணவருந்தும் அறை, ஒரு குளியலறை இரு படுக்கையறை கொண்ட புதுதில்லி வீடு, வேலையாட்கள், அவர்கள் தங்குவதற்கும் வீடு, வெளியாட்களுக்கு இவ்வீடு வாடகைக்கு விடப்படுவதால் வரும் வருமானம் 3000. இதற்கு மேல் அவர்களுக்கு என்னென்ன இன்னல்கள் என்பதை அவர்களிடமே கேட்கலாமே - என அந்த நெற்றியடிக்கு ஒரு முத்தாய்ப்பு.

மதம் மாறுவதால் தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலை சாத்தியமா? என்றொரு கேள்வி. அதற்குப்பதில் - “கொடுமைகள் என்பது வெற்றுடம்பில் விழும் சவுக்கடிகள். மதமாற்றம் என்ற சட்டையை அணிந்தாலும் சவுக்கடிகள் விழுந்துகொண்டுதான் இருக்கும்.”

சிவப்பு மல்லி என்னும் திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் - “நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் செங்கொடியையும் சிவப்புநிறத்தையும் காட்டியே ஏகப்பட்ட தலைமுறை ஏமாந்து கடந்துவிட்டது. இப்போது செங்கொடியும் சிவப்பு நிறமும் சினிமாவுக்கு வந்திருக்கிறது. எல்லா உறவுகளையும் கொச்சைப்படுத்தி காசாக்கிவிட்ட தமிழ்த்திரை இப்போது பாட்டாளிவர்க்கப் போராட்டங்களையும் ‘போணி’ பண்ண ஆரம்பித்திருக்கிறது.“

பெரியாரியத்தையும் மார்க்சியத்தையும் ஒப்பிட்டு முன்னையது கருத்தியல்வாதம், சீர்திருத்தவாதம், வர்க்க சமரசம் என்று விமர்சிக்கும் மனஓசை அதே சமயம் பெரியாருக்குப் பின்வந்த திராவிட இயக்கம் சார்ந்த கட்சிகளின் தலைமைகள் பெரியாரின் நாத்திகம், பகுத்தறிவு, பெண்ணியம் போன்ற நன்கொடைகளுக்கு எதிரான போக்கிலேயே நடைபோட்டு அவற்றை விழுங்கி வீணாக்கிவிட்டன என்றும் சுட்டிக்காட்டுகிறது. இக்கருத்து தொடர்பாக ஆய்வு அடிப்படையில் தெளிவான விவாதங்கள் நடைபெற மனஓசை பாதைபோட்டுத்தந்துள்ளது.

நவீன கவிஞர்கள் பற்றிய அன்பாதவனின் அங்கதக் கவிதை (நவம்பர் 1990) மனஓசையின் தொனிக்கு எடுத்துக்காட்டாக அமைவதால் அதனை இங்கே நினைவு கூரலாம்.

“முதலில் தமிழே அல்லாத தமிழில் வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்.

கவனம் - அர்த்தம் புரியக்கூடாது படிப்பவனுக்கு.

வாசகனை அழை. நெருங்கியவன்மேல் படிமப்பாறையை உருட்டிவிடு.

சிதைந்தவனின் கண்களில் நெஞ்சினில் குறிகளில் குறியிட்டு குத்தீட்டியைச் செருகு.

எழ முயல்பவனை எட்டி உதை. எதிர்க்கவிதையாய் இஷ்டப்படி தாக்கு

நான் லீனியர், ஸட்ரக்சுரலிசம், இம்ப்ரஷனிசம், எக்சிஸடென்ஷியலிசம்,

மயிரு மண்ணாங்கட்டி எல்லாவற்றையும் போட்டழுத்தி

குரல்வளையின் மீது நின்று குதி.

நல்லது இப்போது நவீன கவிஞன் கிரீடத்தை அணிந்துகொள்ளலாம்.”

மனஓசையின் சிறப்பான பகுதிகளில் ‘இன்றைய எழுத்தாளர் வரிசை’ என்னும் தொடர் குறிப்பிடத்தக்கது. சுரேஷ் (சீனிவாசன்), முருகு (பெருமாள் முருகன்) இருவரும் லா.ச.ராமாமிர்தம், வ.ராமசாமி, அஸ்வகோஷ், பாலகுமாரன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற பலரது படைப்புகளை விமர்சித்து எழுத 7, 8 இதழ்கள் வந்த அத்தொடர் பெரிதும் பேசப்பட்டது. வசந்தகுமார் எழுதிய ‘பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை’, ‘திராவிட இயக்கக் கலாச்சாரம்‘ என்னும் தொடர்கள் பல கசப்பான உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன.

கோவை ஞானி, கோ.கேசவன், அ.மார்க்ஸ மூவரும் நடத்திய ‘இலக்கியத்தில் அவலச்சுவை’ விவாதம், மார்க்ஸ வரைந்த ‘பிரக்டின் இன்னொரு பரிமாணம்’ என்னும் ஆய்வு, எஸ்.வி.ராஜதுரை, இந்திரன் இருவரும் மொழியாக்கம் செய்த கதை கவிதைகள், செயப்பிரகாசத்தின் ‘கிராமியக் கலைஞர்கள்’ (கிராமங்களின் கதைகள் - அகரம் வெளியீடு), துரை அறிவழகனின் ‘மேட்டாங்காட்டு ஔசைகள்‘ (தோழர்களின் வட்டாரப்பணி, அதன் எதிர்வினை குறித்து அவர்களோடு வாழ்ந்துபெற்ற அனுபவங்கள்), எழுத்தின் ஊற்றுக்கண் சுயானுபவங்களே என விவரிக்கும் ‘வாழ்விலிருந்து இலக்கியம்’ தொடர் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

முதல் கட்ட மனஓசையின் சில அம்சங்களை தமது மனஓசையில் அப்படியே உள்வாங்கிக் கொண்டதாகவும் சில பகுதிகளை நன்றியுடன் மறுபிரசுரம் செய்ததாகவும் செயப்பிரகாசம் நினைவுகூர்கிறார். ‘களத்துமேடு’ என்னும் கேள்வி பதில் பகுதி, ‘சிவந்த கண்கள் கவனிக்கின்றன’ என்னும் அரசியல் சமூக விமர்சனம் இரண்டாம் மனஓசையிலும் தொடர்ந்தன. ‘மலம் அள்ளும் தொழிலாளி’ என்னும் மருதமுத்து கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்டது..

மனஓசையில் பங்களிப்புச் செய்த பெரும்பான்மைப் படைப்பாளிகள் பலவிதங்களிலும் பிரபலங்கள் - கி.ராஜநாராயணன், இன்குலாப், கோ கேசவன், அ.மார்க்ஸ, ரவிக்குமார், சீனிவாசன், பெருமாள்முருகன், பாரதிபுத்திரன், அறிவுமதி, மனுஷ்யபுத்திரன், தேவிபாரதி, ஜெயந்தன், கோவை ஞானி, பரீக்ஷா ஞாநி, வசந்தகுமார், சுப்ரபாரதி மணியன், பூமணி, விழி.பா.இதயவேந்தன், பாவண்ணன், செ.யோகநாதன், சுகுமாரன், அன்பாதவன், ஷ்ரீதர கணேசன், சா.தேவதாஸ, செ.கோச்சடை, நிர்மால்யா, அபிமானி, குழந்தை சீனிவாசன், ப.சிவகுமார், த.ஆபிரஹாம் (புதிய ஜீவா) கோவிந்தராஜ் என இப்பட்டியல் இன்னும் நீளும். கோவிந்தராஜ் திருப்பூர் பனியன் கம்பனித் தொழிலாளி. மனஓசையின் ஆஸ்தான ஓவியர்கள் ஞானவேல், தியோ. திருஞானம் வடிவமைப்பைக் கவனித்துக்கொண்டு ஆசிரியர் குழுவிலும் பங்காற்றினார்.

கலை இலக்கியம் குறித்தும் தலைவர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், கலைஞர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினர் குறித்தும் புரட்சிகரப் பண்பாட்டுப் பார்வையின் அடிப்படையில் சுள்ளென்று தைக்கும் விமர்சனங்களைச் சுதந்திரமாக வெளியிட்ட மனஓசையின் முழுத்தொகுப்பு காலத்தின் தேவை. குறைந்த பட்சம் அதன் கட்டுரைகள், விவாதங்கள் போன்றவற்றையாவது தொகுத்துவிட வேண்டும். பத்தாண்டுகள் இடைவிடாமல் வந்துள்ள மனஓசையின் தெறிப்புகள் தமிழ்நாட்டின் தீவிர இடதுசாரி அரசியல் கலை இலக்கிய ஆவணமாக விளங்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

- கல்பனாதாசன்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஒரு நதியின் மரணம்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நூற்றாண்டுகளினூடாக நடக்கும்‌ குரல்