ஒரு போராளி இதழின்‌ வாழ்வும்‌ வரலாறும்‌


(மனஓசை கட்டுரைகள்‌ நூல் முன்னுரை)

எதிர்க்‌ கருத்தியலை முன்வைத்துச்‌ செயல்பட்ட ஒரு கலை இலக்கிய இதழ்‌, இருபதாயிரம்‌ படிகள்‌ விற்பனையாகிச்‌ சாதனை புரிந்ததுண்டா? முடியும்‌ என்பது 'மனஓசை' கலை இலக்கியத்‌ திங்களிதழின்‌ வரலாறு.

வணிக இதழ்களுக்குரிய உற்பத்தி முறையும்‌, விநியோகமும்‌ சந்தைப்‌ படுத்துதல்‌ என்னும்‌ தளத்திலிருந்து ஆரம்பமாகின்றன. நிலவுகிற சமுதாய  அமைப்பின் கருத்தியலுக்கு ஆதரவாய்‌ நடைபோடுவது எளிது. லட்சங்களாய்‌ விற்பனையைப்‌ பெருக்கிக்கொண்டு போகையில்‌, எதிர்க்கருத்தியலை முன்வைத்து வாசக தளத்தை எட்டும்‌ முயற்சியின்‌ உச்சம்‌ 20,000 படிகள்‌. பிற இடதுசாரி அரசியல்‌ கட்சிகள்‌ எடுத்துக்கொள்ளாத, புறக்கணித்த விநியோகம்‌ எனும்‌ பணியை இந்தப்‌ புரட்சிகர மா.லெ அமைப்பு செய்து முடித்தது.

ஒரு பொருளின்‌ விநியோகம்‌ மட்டுமே மக்களுக்கான பயன்‌பாட்டை உறுதி செய்கிறது. உற்பத்தி பாதி எனில்‌, விநியோகம்‌ அதன்‌ இன்னொரு முக்கியமான பின் பாதி. வணிக நோக்கம்‌ கொண்ட விளக்கமன்று இது. உற்பத்திப்‌ பொருளின்‌ உண்மையான அர்த்தத்தை - 'மக்கள்‌ பயன்பாடு' என்கிற உயரிய அர்த்தத்தில்தான்‌ காணமுடியும்‌. 

தன் இயக்கம் பற்றி பரப்புரையைச்‌ செய்யவேண்டிய கால கட்டத்தில்‌, 'மனஓசை'யையும்‌ 'கேடயம்‌' எனும்‌ அரசியல்‌ இதழையும்‌ புரட்சிகர மா.லெ அமைப்பு முன்னின்று நடத்தியது. விநியோகப்‌ பணியினை நேரடியாகத்‌ தோள்மேல்‌ எடுத்துக்‌ கொண்டது. அதில்‌ தொண்டர்களும்‌ ஆதரவாளர்களும்‌ நேரடியாக ஈடுபட்டனர்‌. வீடு வீடாக விநியோகம்‌, பேருந்துகளில்‌, தொடர் வண்டிகளில்‌ விளக்கவுரையுடன்‌ விற்பனை எனப்‌ புதிய வழிமுறைகளைக்‌ கைக்கொண்டனர்‌.

என்னுடைய (பா.செயப்பிரகாசம்) 'புதியன' கதையில்‌ இத்தகைய முயற்சியில்‌ ஈடுபடும்‌ புதுமைப்‌ பெண்ணை - ஒரு குடும்பம்‌ எதிர்கொள்ளும்‌ விதம்‌ சித்தரிக்கப்பட்டுள்ளது.

“தாய்க்‌ கட்சிகளின்‌ மெத்தனத்தில்‌ சலிப்புற்று புரட்சிகர நோக்கங்‌களுடன்‌ கிளைத்த எம்‌.எல்‌ அமைப்பின்‌ கலாச்சாரக்‌ கழகம்‌ தனது அதிகாரபூர்வ இலக்கிய இதழின்‌ விற்பனையைச்‌ சிகரத்துக்குக்‌ கொண்டுபோகும்போது, தாய்க்‌ கட்சிகளால்‌ தங்கள்‌ இதழ்களின்‌ விற்பனையை விரிவாக்கம்‌ செய்ய ஏன்‌ இயலவில்லை” (சில திவிர இதழ்கள்‌ - கல்பனாதாசன்‌) என்ற கேள்வியை, இதழியல்‌ - இலக்கிய ஆய்வாளர்கள்‌ வியப்புடன்‌ கேட்பதற்குப்‌ பின்னணியில்‌ உள்ள ரகசியம்‌ இது.

இ.பொ.க.மா.லெ அமைப்புக்‌ குழு எனும்‌ புரட்சிகர அமைப்பே, நேரடியாக ஆசிரியர்‌ குழுவை இயக்கிற்று. இப்போது அதன்‌ பெயர்‌ த.நா.மா.லெ.கட்சி. மா.லெ அமைப்பின்‌ புரட்சிகரக்‌ கோட்‌பாடுகளின்‌ அடிப்படையில்‌ ஆசிரியர்‌ குழுவை இயங்கச்‌ செய்வதும்‌, ஆசிரியர்‌ குழு சுயமான இயங்குதலைக்‌ கொண்டதாக வளர்ச்சியடைந்த பின்‌, அதன்‌ கால்களிலேயே நிற்கச் செய்வதுமான வழிகாட்டல்‌ தொடர்ந்தது.

இலக்கிய அரங்குகளில்‌ இதுவரை விவாதிக்கப்படாத - விவாதத்துக்கு வராத விசயங்களை - மனஓசை தன்‌ தலைமேற்‌ போட்டுக்கொண்டு செய்தது. தொடக்கத்தில்‌ வெளியானவற்றில்‌ இன்குலாப்‌ எழுதிய 'விடியல்‌ கற்றுக்கள்‌' என்ற தொடரும்‌, கோ.கேசவனின்‌ 'கலாச்சாரச்‌ சிதைவுகள்‌' தொடரும்‌ முக்கியமானவை. அ.மார்க்ஸ்‌, கோவை ஞானி, கோ.கேசவன்‌ ஆகிய மூவரும்‌ பங்கேற்ற “இலக்கியத்தில்‌ அவலம்‌” எனும்‌ தொடருக்கு மா.சர்வேஸ்வரன்‌ மொழியாக்கத்தில்‌ வந்த கட்டுரை அடிப்படையாக அமைந்தது.

பத்து ஆண்டுகளாகச்‌ (1981 - 1991) செயல்பட்ட மனஓசைக்கு நிரந்தரமாய்‌ ஒரு ஆசிரியர்‌ குழு தொடரவில்லை. ஆசிரியர்‌ குழுவின்‌ சேர்மானம்‌ குறைந்தும்‌ கூடியும்‌ தொடர்ந்தது. ஆரம்பம்‌ முதல்‌ பங்கேற்ற சூரியதீபன்‌ (பா.செயப்பிரகாசம்), நீண்ட காலமாய்‌ ஆசிரியர்‌ குழுவில்‌ அங்கம்‌ வகித்தவர்களாக சுரேஷ்‌ (பேரா. சினிவாசன்‌), வசந்தன்‌, இளமுருகு (பெருமாள்முருகன்‌) ஆகியோரைக்‌ குறிப்பிட வேண்டும்‌.

ஆசிரியர்‌ பெயர்‌ மட்டும்‌ வெளிப்படுத்தப்பட்டது; ஆசிரியர்‌ குழுவில்‌ இடம்பெற்றோரின்‌ பெயர்கள்‌ அச்சில்‌ வரவில்லை. அதற்கு முக்கியமான இரு காரணங்கள்‌ உண்டு.

1. ஆ.கு.வில்‌ பணியாற்றியவர்கள்‌ பெரும்பாலும்‌ அரசுப்‌ பணியிலிருந்தார்கள்‌. அதனால்‌ தலைமறைவு ஆசிரியர்‌ குழுவாகவும்‌ புனைப்பெயர்களிலும்‌ இயங்கினார்கள்‌.

2. அரசின்‌ அடக்குமுறைகளிலிருந்தும்‌ சுற்றிலும்‌ இயங்கும்‌ எதிர்ப்‌புரட்சி சக்திகளிடமிருந்தும்‌ தற்காத்துக்கொள்ள அது அவசியமாயிற்று. அ.இ.அ.தி.மு.க.வின்‌ சார்பில்‌ 'தாய்‌' என்னும்‌ இலக்கிய இதழ்‌ 1980களில்‌ வெளிவந்தது. அதன்‌ ஆசிரியர்‌ வலம்புரிஜான்‌. அவரையும்‌, 'தாய்‌' இதழையும்‌ விமரிசத்துக்‌ கட்டுரை ஒன்று மனஓசையில்‌ வெளியானது (தாய்‌ இதழில்‌ பணியாற்றிய ஒருவர்‌ ரகசியமாய்‌ அதற்குத்‌ துணை செய்தார்‌). கோபம்‌ கொண்ட வலம்புரிஜான்‌ அடியாட்களை அனுப்பி வைத்தார்‌. நல்ல வேளை அடியாட்கள்‌ வந்து சென்ற இரண்டு நாட்களிலும்‌ அறையில்‌ எவரும்‌ இல்லை.

1981இல்‌ தொடங்கியது மனஓசை. 1981, 82 ஆண்டுகளில்‌ ஆசிரியர்‌ குழுவில்‌ முகிலன்‌, சித்தார்த்தன்‌ எனும்‌ புனைப்பெயர்களில்‌ மொழியாக்கத்தையும்‌ படைப்புகளையும்‌ தந்தார்‌ ரவி.தி.இளங்கோவன்‌.

1986, 1987களில்‌ வசந்தகுமாரும்‌ நிழல்வண்ணனும்‌ ஆசிரியர்‌ குழுவை இயக்கியபோது - கலை, இலக்கியம்‌ என்னும்‌ தளங்களைக்‌ காட்டிலும்‌ சமூக, அரசியல்‌ பிரச்சினைகளுக்கு அழுத்தம்‌ கூட்டிச்‌ செய்த சீரிய பணிகள்‌ குறிப்பிடப்பட வேண்டியவை.

1984-85களில்‌ தோழர்‌ செங்கதிர்‌ முழுநேர ஊழியராக மனஓசையில்‌ பணியாற்றினார்‌. கே.நடராசன்‌, மா.லெ அமைப்பின்‌ முழுநேர ஊழியர்‌. கலை, இலக்கியத்‌ துறையில்‌ தேர்ந்த பார்வையும்‌ படைப்புத்‌ திறனும்‌ கொண்டவர்‌. அவர்‌ ஒரு கட்டத்தில்‌ மனஓசையின்‌ முழுப்‌ பொறுப்பையும்‌ ஏற்றார்‌.

மனஓசையின்‌ ஒளிமிகுந்த பக்கங்கள்‌ என்பவை சுரேஷ்‌ (பேராசிரியர்‌ சீனிவாசன்‌), இளமுருகு (பெருமாள்‌ முருகன்‌) ஆகியோர்‌ பிரதான பங்களிப்புச்‌ செய்த காலத்தில்‌ உருவானவை.

ஒரு விசயத்தை அல்லது பிரச்சினையை எடுத்துக்கொண்டு, இருவர்‌ விவாதித்து கருத்துக்களைத்‌ தொகுத்துக்கொண்டு படைக்கும்‌ இரட்டையர்‌ முறை தமிழுக்குப்‌ புதிது. ரமேஷ்‌ - பிரேம்‌ என்ற எழுத்தாளர்கள்‌ இதனைச்‌ சாதித்துள்ளனர்‌. இதில்‌ எனக்குச்‌ சில ஆச்சரியங்கள்‌ விளைந்தன. விமர்சனக்‌ கட்டுரைக்கு வேண்டுமானால்‌ இது சாத்தியப்படலாம்‌. ஒரு படைப்பாளியை முன்‌ வைத்து, இரு திறனாய்வாளர்கள்‌ தனித்தனியாய்‌ வரைந்த ஆய்வுகள்‌ - பஞ்சாபி இலக்கிய வரலாற்று நூலில்‌ வெளிப்பட்டுள்ளதைக்‌ கண்டிருக்கிறேன்‌. அவையும்‌ தனித்தனியேதான்‌ கொடுக்கப்பட்டிருந்தன. விமர்சன வெளிப்பாட்டில்‌ இரு சிந்தனைகளின்‌ இணைப்பு என்பது சாத்தியம்‌. கவிதை, கதை, குறுநாவல்‌ போன்ற படைப்புக்களின்போது, இருவரின்‌ சிந்தனை இணைப்பு எவ்வாறு சாத்தியப்படும்‌ என்ற வியப்பு என்னுள்‌ இன்னும்‌ தொடர்கிறது.

சுரேஷ்‌ - இளமுருகு இணை, ஆய்வில்‌ புதிய சாதனைகள்‌ படைத்தது. லா.ச.ரா, வ.ரா, பாலகுமாரன்‌, அஸ்வகோஷ்‌ - ஆகிய எழுத்தாளர்கள்‌ பற்றி சுரேஷ்‌ - இளமுருகு இணை தந்த விமர்சனக்‌ கட்டுரைகள்‌, தமிழ்‌ விமர்சனத்தில்‌ குறிப்பிடப்பட வேண்டியவை என உரத்துச்‌ சொல்லமுடியும்‌.

சுரேஷ்‌ தனது விமர்சன முறையை மார்க்சிய - லெனினிய அரசியல்‌ சமுதாய ஆய்வின்‌ அடிப்படையில்‌, கூர்மைப்படுத்தி அலசினார்‌. படைப்புக்களின்‌ வெளிப்பாட்டுக்குள்‌ இருக்கிற படைப்‌பாளியின்‌ வாழ்நிலை, வாழ்க்கை, சமுதாயப்‌ பாத்திரம்‌, சமுதாயப்‌ பார்வை என்னும்‌ கோணங்களை முன்னிறுத்திய அவருடைய ஆய்வுகள்‌ படைப்புகளுக்குள்‌ இயங்கும் புதிர்களை விலக்கிக்‌ காட்டின. பாலன்‌ என்னும்‌ பெயரில்‌ அவர்‌ எழுதிய 'உன்னால்‌ முடியாது உதயமூர்த்தி', 'பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்‌ பாடல்கள்‌' போன்ற ஆய்வுக்‌ கட்டுரைகள்‌ - மனஓசையைச்‌ செழுமைப்படுத்தியது ஒரு பக்கம்‌ என்றால்‌, வசந்தகுமார்‌ தனது சீரிய ஆய்வு முறையால்‌, வெளிப்படுத்திய 'திராவிட இயக்கக்‌ கலாச்சாரம்‌ - அன்றும்‌ இன்றும்‌', 'பாரதிதாசன்‌ ஒரு வரலாற்றுத்‌ தேவை' போன்ற ஆய்வுத்‌ தொடர்கள்‌ மனஓசையை மற்றொரு பக்கம்‌ வளப்படுத்தின என முக்கியமாகக்‌ குறிப்பிடவேண்டும்‌.

ஒரு தன்வரலாறு, சமூக வரலாறாகவும்‌ ஒரே நேரத்தில்‌ வெளிப்படும்‌ என்பதை நிரூபித்த கட்டுரை - கவிஞர்‌, இதழாசிரியர்‌ துரை.அறிவழகன்‌ எழுதிய 'மேட்டாங்காட்டு ஓசைகள்‌'. மா.லெ அமைப்புத்‌ தோழர்கள்‌ வட்டாரங்களில்‌ ஆற்றும்‌ பணி, எடுக்கும்‌ போராட்டங்கள்‌, மக்களின்‌ எதிர்வினைகள்‌ பற்றிச்‌ சுயானுபவமாக வெளிப்பட்ட கட்டுரைத்‌ தொடரிது.

நாட்டார்‌ கலை இலக்கியத்தை 'நட்டுக்க நிறுத்தும்‌' முயற்சியாக இல்லாமல்‌, சமூகப்‌ பொறுப்போடு முன்வைக்கும்‌ பங்கினை மனஓசை செய்தது. கி.ராஜநாராயணன்‌ மனஓசை இதழுக்கென்றே எழுதிய 'தமிழில்‌ செலவடைகள்‌' தொடர்‌, மு.சுயம்புலிங்கம்‌ எழுதி வைத்திருந்த கையெழுத்துப்‌ பிரதியிலிருந்து எடுத்துக்கொண்ட 'நாட்டுப்பூக்கள்‌' போன்றவை மனஓசைக்கு வழி திறந்து விட்டன. சூரியதீபன்‌ எழுதிய 'கிராமிய கலைஞர்கள்‌' தொடர்‌, உ.அமரன்‌ எழுதிவந்த 'கிராமியச்‌ சடங்குகள்‌', வெ.சேஷாசலத்தின்‌ 'மண் மணம்‌ கொழுக்கும்‌ வெண்பாக்கள்‌' - எல்லாமும்‌ நாட்டார்‌ கலை இயலை மனஓசை தனக்குள்‌ சுவீகரித்துக் கொண்ட வெளிப்பாடுகள்‌.

மிக நீளமானது மனஓசைக்குப்‌ பங்களிப்புச்‌ செய்தோரின்‌ பட்டியல்‌. எஸ்‌.வி.ராசதுரை, இன்குலாப்‌, கோ.கேசவன்‌, அ.மார்க்ஸ்‌, கோவை ஞானி, ரவிக்குமார், சீனிவாசன் (சுரேஷ்), பெருமாள்முருகன், பாரதிபுத்திரன்‌, அறிவுமதி, மனுஷ்யபுத்திரன்‌, தேவிபாரதி, ஜெயந்தன்‌, பரீக்-ஷா ஞாநி, வசந்தகுமார்‌, சுப்ரபாரதிமணியன்‌, பூமணி, சூரங்குடி அ.முத்தானந்தம்‌, விழி.பா.இதயவேந்தன்‌, இந்திரன்‌, பாவண்ணன்‌, செ.யோகநாதன்‌, சேர.சந்திரன்‌, பொன்‌.சின்னத்தம்பி, வசந்தன்‌, க.பஞ்சாங்கம்‌, பவுல்‌ என்ற எம்மார்லி, சமயவேல்‌, நா.சுப்புலட்சுமி, ஜான்சிராணி, பொ.முருகேசன்‌, துரை சண்முகம்‌, துரை.அறிவழகன்‌, சுகுமாரன்‌, அன்பாதவன்‌, ஸ்ரீதர கணேசன்‌, சா.தேவதாஸ்‌, செ.கோச்சடை, நிர்மால்யா, அபிமானி, குழந்தை சீனிவாசன்‌, பேரா.ப.சிவகுமார்‌, த.ஆபிரஹாம்‌, புதிய ஜீவா, கோவிந்தராஜ்‌ என இப்பட்டியல்‌ தொடரும்‌. கோவிந்தராஜ்‌ திருப்பூர்‌ பனியன்‌ கம்பெனித்‌ தொழிலாளி. 'மனஓசை'யின்‌ ஆஸ்தான ஓவியர்கள்‌ ஞானவேல்‌, தியோ போன்றோர்‌. தோழர்‌ திருஞானம்‌ வடிவமைப்பைக்‌ கவனித்துக்கொண்டு ஆசிரியர்‌ குழுவிலும்‌ பங்களிப்பை நிறைவாகச் செய்தார். மருது, சந்தானம்‌, சந்ரு, விஸ்வம்‌ போன்றோரின்‌ ஓவியங்கள்‌ 'மனஓசை'க்கு அழகூட்டின.

மனஓசை மக்கள்‌ கலாச்சாரக்‌ கழகத்தின்‌ கைக்கு வருமுன்‌ 1970களின்‌ பிற்பாதியில்‌, அவ்விதழை நடத்தியவர்‌ முல்லை அம்பரீடன்‌. அவர்‌ ஆசிரியராக இருந்தபோதும்‌, அதனை முழுமையாக இயக்கியவர்‌ பேராசிரியர்‌ மருதமுத்து. அவர்‌ இயக்கத்தில்‌ பேரா.அண்ணாதுரை, மருதம்‌ இளந்தமிழன்‌ ஆகயோர்‌ கொண்ட ஆசிரியர்‌ குழு இயங்கியபோது, படைப்புக்கள்‌ வழியாக எனது பங்களிப்பு நடந்தது.

பேரா.மருதமுத்துவின்‌ வளர்நிலை ஆளுமை மனஓசையில்‌ முழுமையாய்‌ வெளிப்பட்டபோது, அவரது புதிய புதிய இதழியல்‌ அணுகுமுறையால்‌ பெரிதும்‌ ஈர்க்கப்பட்டேன்‌. பின்னாளில்‌ மனஓசையைப்‌ பொறுப்பேற்றுச்‌ செய்ய இந்த வழிகாட்டுதல்‌ முழுமையாய்ப்‌ பயன்பட்டது.

முன்னர்‌ வந்த மனஓசையின்‌ சில தெறிப்பான அம்சங்கள்‌, பின்னர்‌ வெளியான மனஓசையில்‌ உள்வாங்கப்பட்டன. கேள்வி பதில்‌ பகுதியைச்‌ சுட்டும்‌ களத்துமேடு, சிவந்த கண்கள்‌ கவனிக்கின்றன போன்றவை அதே தலைப்புகளில்‌, அதே பாணியில்‌ தொடரப்‌பட்டன.

1960களின்‌ இறுதியில்‌ மேற்குவங்க அரசியலில்‌ தோன்றிய நக்சல்‌ இயக்கத்தின்‌ எதிரொலி, ஆந்திராவில்‌ தெலுங்கானாவில்‌ ஒலித்து இலக்கியத்தில்‌ திகம்பரக்‌ கவிகள்‌ தோன்றினார்கள்‌. அப்படி உருவான புரட்சிகர இலக்கியப்‌ பார்வையைச்‌ உள்வாங்கிக்‌ கொண்டு, கோவை ஞானி 'புதிய தலைமுறை'யைக்‌ கொண்டு வந்தார்‌. (1967-68) எஸ்‌.என்‌.நாகராஜன்‌, எஸ்‌.வி.இராசதுரை (மனோகரன்‌), புலவர்‌ ஆதி போன்றோர்‌ படைப்புப்‌ பங்காற்றினார்கள்‌. தொடர்ந்து கோவை ஈஸ்வரன்‌ 'மனிதனைக்‌ கொண்டு வந்தார்‌. (1971-72) 'மனிதன்‌' மூலம்‌ இன்குலாப்‌ வந்தார்‌. அவரது பரிமாணத்தின்‌ அடுத்தகட்டமாக 'புதிய மனிதன்‌' வந்தான்‌. கல்யாணி, கோ.கேசவன்‌, மார்க்ஸ்‌, பழமலை, கோச்சடை ஆகியோரின்‌ பங்களிப்பில்‌ 'செந்தாரகை' வந்தது. (1983-84).

இதே தடத்தில்‌ எழுந்த 'மனஓசை' வாசகர்களை ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டத்துக்கு அழைத்துப்போனது. வணிக இதழ்க்‌ குளத்தில்‌ மூழ்கிக்‌ கிடந்தனர்‌ பெரும்பான்மை வாசகர்கள்‌. இன்னொரு பக்கம்‌ புரட்‌சிகரச்‌ சிந்தனை குதிரைக்குப்‌ பட்டையணிவித்தது மாதிரி. சூத்திரங்களால்‌ கட்டப்‌பட்டு இலக்‌கியமாய்த்‌ தரப்பட்டன. அன்றாட நிகழ்வு, செய்தி, கோப தாபம்‌, போராட்டம்‌ என மக்களின்‌ வாழ்வியலை மக்களிடமிருந்து எடுத்து, மக்களுக்கே தரும்‌ புதிய கோணத்தை மனஓசை கொண்டுவந்தது.

கடந்த கால இதழ்களின்‌ தொகுப்புக்களைத்‌ திருப்பிப்‌ பார்க்கையில்‌ மனந்திறந்த விவாதங்களும்‌ மனக்கதவை மூடிய சில விசயங்களும்‌ தெரிய வருகின்றன.

கோமல்‌ சுவாமிநாதன்‌ இயக்கி வெளியிட்ட யுத்தகாண்டம்‌ திரைப்பட விமர்சனத்துக்கு - அவர்‌ எழுதிய பதிலை வெளியிட்டமை, அவலச்‌ சுவை பற்றி ஞானி, கோ.கேசவன்‌, அ.மார்க்ஸின்‌ விவாதங்களைத்‌ தொடராக வெளிவரச்‌ செய்தமை. போன்றவை மனந்திறந்த வினைகளுக்குச்‌ சான்றுகள்‌.

அதே பொழுதில்‌ - மே நாள்‌ பற்றிய இன்குலாபின்‌ கவிதையை நம்பிக்கை வறட்சி என வெளியிட மறுத்தது, கந்தர்வனின்‌ 'கிழிசல்கள்‌' நூலுக்கு விமர்சனத்தை நண்பர்‌ நச்சினார்க்கினியனிடம்‌ கேட்டு எழுதிப்பெற்று வெளியிடாமல்‌ போனது (கந்தர்வன்‌ - சூரியதீபனுக்கு நெருங்கிய நண்பர்‌ என்பது அந்தத்‌ தோழரின்‌ தலையீட்டுக்குக்‌ காரணம்‌). ரவிக்குமாரின்‌ கட்டுரையில்‌ நாம்‌ என்ற தன்மை நிலை நம்மை விமர்சனப்படுத்தும்‌ என்பதால்‌ அவர்கள்‌ எனப்‌ படர்க்கையாக அவர்‌ ஒப்புதலில்லாமல்‌ மாற்றி வெளியிட்டது. இவையெல்லாம்‌ மனஓசையின்‌ இறுக்கமான அதேசமயம்‌ சனநாயகத்தினை கெளரவப்படுத்தாத செயல்பாடுகள்‌. அமைப்புரீதியான சந்திப்பும்‌, செயல்பாடும்‌ கொண்டவனாய்‌ அவற்றுக்கு முதலிடம்‌ தந்து, எக்காலத்திலும்‌ காக்கப்பட வேண்டிய சனநாயக மதிப்பீட்டைப்‌ புறந்தள்ளியதை - இதழுக்கு முக்கியப்‌ பொறுப்பாளன்‌ என்னும்‌ முறையில்‌ ஒரு அவலம்‌ எனக்‌ கருதுகிறேன்‌.

அரசியலை ஆணையில்‌ வைத்தல்‌ என்பது அப்போது எங்கள்‌ முழக்கமாக இருந்தது. அரசியல்‌, கலை, இலக்கியத்துள்‌ இயங்கும்‌ விதம்‌, முறைமையை நாங்கள்‌ புறக்கணித்தோம்‌. எல்லாமும்‌ அரசியலுக்காக மாறிப்‌ பின்‌ அமைப்புக்காக எனச்‌ சுருங்கியது. அமைப்பை ஆணையில்‌ வைத்தல்‌ வேறொரு ரூபம்‌ எடுத்தது.

விழிப்புணர்வை உருவாக்கிடும்‌ கலை, இலக்கிய ஆக்கங்களுக்கு முதலிடம்‌ என அதன்‌ தொடக்க காலம்‌ இருந்தது (மனஓசை முதல்‌ இதழின்‌ தலையங்கம்‌). அடுத்து, கலை, இலக்கியம்‌ பற்றிய விமர்சனப்‌ பார்வை பெருகி, படைப்பாக்கம்‌ தளர்த்தப்பட்டது நிகழ்ந்தது. கலை, இலக்கிய விமர்சனம்‌ என்பதிலிருந்தும்‌ விலக, சமூக, அரசியல்‌ பிரச்சினைகளையே மையம்‌ கொண்டு பேசியது வளர்நிலையிலிருந்த காலம்‌.

1988க்குப்‌ பின்னர்‌, கலை, இலக்கியப்‌ பயணிப்பை - சமூக அக்கறையுடன்‌ மீண்டும்‌ கண்டடைந்தது.

“அறைகூவல்‌ விடுக்கும்‌

அரசியல்‌ இதழ்‌ - கேடயம்‌

மாதமிருமுறை"

என்ற அறிவிப்புடன்‌ அரசியல்‌ இதழ்‌ தனியாக வந்தபோது - 

“அவல வாழ்வின்‌ விடிவைப்‌ பேசும்‌ 

கலாச்சார இதழ்‌ - மனஓசை 

மாதந்‌தோறும்‌” 

எனத்‌ தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு மறுபடி நடைபோட்டது.

என்‌ சமகால எழுத்தாளர்கள்‌ பலர்‌ படைப்புக்களால்‌ கவனிக்கப்‌படுகறவர்களாக எழுத்துலகில்‌ மேலேறிக்கொண்டிருந்த வேளையில்‌, இதழியலில்‌ ஆற்றல்‌ கொள்வதற்காக, இதழியல்‌ சாதனை புரிவதற்‌காகப்‌ படைப்பாற்றல்‌ என்னிடமிருந்து கை நழுவிக்‌ கொண்டிருந்தது. அர்ப்பணிப்பின்‌ பயன்கள்‌ மக்களுக்குப்‌ போய்ச்‌ சேருகிறது என்னும்‌ உற்சாகத்திலிருந்தோம்‌. ஒன்றை இழந்து தான்‌ ஒன்றைப்‌ பெற முடியும்‌ என்ற அடிப்படை விதிக்குச்‌ சான்றாய்‌ நான்‌ இழந்த ஒன்று, மற்றொன்றாக உருவெடுத்ததில்‌ நிறைவு நிலவுகிறது.

- சூரியதீபன்‌, டிசம்பர்‌ 2009

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஒரு நதியின் மரணம்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நூற்றாண்டுகளினூடாக நடக்கும்‌ குரல்