மக்கள் ஓசை
(மனஓசை முதல் இதழின் தலையங்கம்)
உந்திக் கொடியோடும் உதிரச் சேற்றோடும் மனஓசைக் குழந்தை உங்கள் கைகளிலே தவழ்கிறது.
“அகலம் குறைந்தாலும் உயரம் குறையாமல் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கிராமப்புறத்தில் தாய்ப்பாசப் பழமொழி சொல்வார்களே” அந்த அன்னைப் பாசத்தோடு அமிர்தப் பாலூட்டி வடிவத்திலும் வளர்ச்சியிலும் உயரம் குறையாமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு “மனஓசை”யை ஏந்தியிருக்கிற உங்கள் கைகளிலே இருக்கிறது.
மனஓசையின் சின்னக்குரல் உங்கள் செவிகளில் படரும் இவ்வேளையில் -
எத்தனையோ பத்திரிகைகள் இதற்கு முன் சதங்கை கட்டி சதிராடி மறைந்து போயிருக்கின்றன. எத்தனையோ கலை இலக்கிய அமைப்புகள் தோன்றி, நிகழ்த்தி, பிறகு 'சுருக்காய்' இல்லாமல் போயிருக்கின்றன.
என்ன காரணம்?
தத்துவார்த்தத் தெளிவு, அதனைச் செயல்படுத்தத் திட்டவட்டமான அமைப்பு இவையில்லாமல் போனது தான் காரணம். இந்த இரு பக்க அச்சாணிகளை மறந்து வைத்துவிட்டு கலை இலக்கியப் பயணத்தை மேற்கொண்ட பத்திரிகை வண்டிகள் பாதியிலேயே நின்றுபோயின. சில புறப்பட்ட இடத்திலேயே குடை சாய்ந்தன. தத்துவார்த்தப் பின்புலத்துடன் தெளிவாய் நடையிட்ட பத்திரிகைகள் கூட, செயல்படுத்தும் திட்டவட்டமான அமைப்பின்மையால் தொடர்ந்து நடை பதிக்க இயலாமல் போயின.
இந்த அனுபவ அலைகளிலே நீராடி, நீச்சலடித்து, படிப்பினைக் குளியல் பெற்று ஓரிரு ஆண்டுகளில் மக்கள் கலாச்சாரக் கழகம் எனப் பெயர் மாற்றம் பெற்ற மக்கள் கலை இலக்கய கழகம் “மனஓசை”யைக் கரைக்கு எடுத்து வந்துள்ளது.
“பிறந்த குழந்தை கூட அழுகைப் புரட்சி செய்துதான் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது” என்ற வாசகத்தை இந்நேரத்தில் நினைவு கொள்வோம்.
கடும் அரசியல் பொருளாதார நெருக்கடிச் சூறாவளிகளில் நாடு நிலை தடுமாறிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்கள் தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு சமுதாய மாறுதலுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் தம் விடுதலைக்காக கலை இலக்கிய தளத்திலே, கலை இலக்கியப் போர்க்கருவிகளை கூர்மையாகவும், உறுதியாகவும் படைத்துத் தர வேண்டிய பெரும் பணி நம்முன் நிற்கிறது.
பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கதைகள், காவியங்கள், பாடல்கள், கூத்துக்கள், திருவிழாக்கள், சடங்குகள், சாதிய முறைகள், மூடநம்பிக்கை, தலைவிதி நம்பிக்கை, மதம் ஆகியவை மக்களின் விழிப்புணர்வை இடுப்பொடித்து இற்றுப்போகச் செய்ய முயல்கின்றன. ஒடுக்கப்படும் மக்களின் சிந்தனையை புகை மூட்டமிட்டு அடக்குகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய்ப் பிற்போக்கு சிந்தனையில் மூழ்கடித்து வருகின்றன. இதை சுட்டெரிக்க சுடர்முகம் தூக்கிடும் சூரியப் பிறப்பாக வருகிறது “மனஓசை”.
மக்களை புதிய பாதையில் பயணப்பட விடாமல் வியாபாரப் பத்திரிகைகள் விஷ விருட்சங்களாக வெடித்துப் பரவியுள்ளன. வக்கரித்த பாலுணர்வு, தனிமனித சுயநலன், அன்னிய அடிமைத்தனம், ஆங்கில மோகம் கவர்ச்சிப் படங்களுடன் வெளிப்பட்டு நம்பிக்கையின்மை, விரக்தி, போலித்தனம், அடிமை மோகத்தை விதைக்கின்றன. இவற்றை வேரோடு கிள்ளி எறிய வந்திருக்கிறது “மனஓசை”.
இன்னொரு பக்கம், முகமூடி தரித்த முற்போக்கு இலக்கியங்கள் பொய்க்கால் ஆட்டம் ஆடுகின்றன; பார்ப்பவரைக் கொஞ்சம் பரவசப்படுத்தி மாயத்திரைகளிட்டு நிஜமான காட்சிகளை மறைக்கின்றன. இவைகளின் முற்போக்கு முகத்திரை கிழித்து அம்பலப்படுத்த, சரியான முற்போக்கு இலக்கியங்களை அடையாளம் காட்ட உறுதியேற்கிறது “மனஓசை”.
முற்போக்கு முகமூடி இலக்கியக்காரர்களைப் பற்றி ஒரு வார்த்தை; பொக்குகள் காற்றில் நீண்டதூரம் பயணம் போனாலும் அவை விதைப்பதுமில்லை, முளைப்பதுமில்லை.
எழுச்சியுற்றுப் போராடும் மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை, தேசப்பற்று, தேசிய மொழிப்பற்று, ஆண் பெண் உறவில் விஞ்ஞானபூர்வமான மனித நேசத்துடன் கூடிய அணுகுமுறை, ஆரோக்யமான பரஸ்பரம் புரிந்து கொண்ட மனித உறவு, கூட்டுச் சமுதாய நலன் ஆகியவற்றை ஊட்டி உளுத்துப் போன பழமையை முறித்து புதுமை பொங்கச் செய்வதுதான் மக்கள் கலை இலக்கியம்.
நீக்ரோ தோழர்களைப் பற்றி ஒரு கவிதை உண்டு,
“அவர்கள் கரங்களிலே இரும்பு இருக்கிறது
உடலிலே நிலக்கரி இருக்கிறது
உள்ளத்திலே வைரம் இருக்கிறது”
பாட்டாளி மக்களின் இந்தப் பண்புகளுடன் தான் மக்கள் கலை இலக்கியத்தை ஒரு போர்க் கருவியாகப் படைத்துத் தரும் பொறுப்புடன் முன் வந்திருக்கிறோம்.
இவ்வகையில் மக்கள் கலை இலக்கியம் படைப்போர் அனைவரும் ஒன்றிணைவது ஒரு பெரும் கடமை.
ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் உதித்ததே ஒரு கவிதை - தனது கரங்களால் உலகம் முழுவதையும் அணைத்துத் தமுவியதே ஒரு கவிதை -
நம்முடைய எல்லாப் படைப்புக்களும் பணிகளும் அந்த ஒரு கவிதையை உயர்த்திப் பிடிப்பதாகவே இருக்கும். அந்தக் கவிதை இதுதான்:
“இழக்கப் போவது விலங்குகளே
எதிரே இருப்பது பொன்னுலகம்”
- மனஓசை, நவம்பர் 1981
கருத்துகள்
கருத்துரையிடுக