மறையாத சூரிய தீபம் பா.செயப்பிரகாசம் - நல்லரசு இளங்கோ
அறிவு பெற்ற நாள் முதலாய் திராவிட இயக்க சிந்தனைகளோடு வளர்ந்த என்னை ஏனோ பாதித்த இரண்டு சிறுகதைகள் இடதுசாரிகளின் படைப்புகளே. ஒரு ஜெருசலேம் எனும் பா.செ அவர்களின் சிறுகதையும், வெயிலோடு போய் என்னும் தமிழ்ச்செல்வன் அவர்களின் சிறுகதையும் என்னை பெரிதும் பாதித்தன. இந்த இரண்டு நூல்களுமே என் சொந்த ஊரான திருநெல்வேலிக்குப் பயணப்பட்டு போயிருந்த போது சாரா டக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியராக இருந்த என்னுடைய உறவினர் வீட்டில் இருந்து நான் எடுத்து வந்தவை; ஓய்வு பெற்று விட்டார் அவர்; என்னுடைய நூல் தொகுப்பில் உனக்கு எது வேண்டுமோ எடுத்துப் போ என்று சொல்ல, அதில் நான் எடுத்து வந்து படித்தவை இந்த இரண்டு கதைகளும்.
பா.செ அவர்களை இப்படி ஒரு படைப்பாளியாக நான் உணர்வதற்கு முன்னரே செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிகாரியாக அறிந்திருந்தேன். என் தந்தையாரும் அதே துறையில் பணியாற்றி இருந்ததால் அடிக்கடி பா.செ அவர்கள் எங்களுடைய இல்லத்திற்கு வருவதுண்டு. பல அரசு நிகழ்ச்சிகளிலும் என் தந்தையாரும் அவரும் ஒருசேரக் கலந்து கொண்டு பிற எந்த அதிகாரிகளோடும் இல்லாத நெருக்கத்தோடு பழகியதைப் பார்த்தபோது அவரிடம் ஏதோ இனம் புரியாத ஓர் ஈர்ப்பு இருந்தது. ஆனால் பா.செ என்பவர் யார் என்பதை நான் ஓரளவு தெரிந்து கொண்டது புதுக்கல்லூரியில் பேராசிரியர் கவிஞர் இன்குலாப் அவர்களின் மாணவனாகப் பயணிக்கத் தொடங்கியபோது தான். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றி எங்களுக்குக் கதை கதையாகச் சொல்லுவார் இன்குலாப். எப்படி எல்லாம் அவர்கள். அடிபட்டார்கள்; காவல்துறையினரிடம் உதைபட்டார்கள் என்பவற்றையெல்லாம் சொல்லுவார். திராவிட இயக்கச் சிந்தனையாளர்ளாக திராவிட இயக்க ஈர்ப்பு கொண்ட இளைஞர்களாக இருந்த நா.காமராசன், பா.செ, இன்குலாப் என்று ஒரு பரம்பரையே மதுரை தியாகராசர் கல்லூரியிலிருந்து புறப்பட்டுப் பயணித்தது.
என் கல்லூரிக் காலத்தில் பா.செ.யின் அடுத்த கட்ட வளர்ச்சியை நான் உணர்ந்தேன். பின்னாளில் அதே காலகட்டத்தில் திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ஜான்சி கல்லூரியில் படித்து அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார் என் தந்தையார்.
ஆலடி அருணா, பெ.சினிவாசன் ஆகியோருடைய செயல்பாடுகளையும் நான் அறிந்திருந்தேன். பிற கல்லூரிகளில் படித்தவர்களுள் பெரும்பலோர் திராவிட இயக்கத்தோடு இயைந்து பயணிக்க, தியாகராயர் கல்லூரியில் படித்தவர்கள் அதற்கு அடுத்த கட்டமாக மார்க்சியச் சிந்தனையாளர்களாக மாறி இருந்தனர். குறிப்பாக, கிழ் வெண்மணி போராட்டத்திற்குப் பிறகு நிகழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் எரியூட்டப்பட்ட மரணத்திற்குப் பிறகு இவர்கள் எல்லாம் மாற்றம் பெற்றனர். அதன் விளைவாக அவர்கள் திராவிட இயக்கத்தை விட்டு வேகமாக வெளியேறினர். ஆனாலும் அண்ணா மீது கொண்டிருந்த மரியாதை அவர்களிடம் குறையவில்லை. இதை ஒரு முறை பேராசிரியர் இன்குலாப் என்னிடம் வெளிப்படுத்தினார். அண்ணாவின் மறைவின் போது சிம்சன் பூங்காவில் படுத்துக்கொண்டிருந்த தான் தன்னை அறியாமல் அண்ணாவின் மரண ஊர்வலத்தில் எழுந்து பின் சென்றதை அவர் எனக்கு ஓர் கதையாக விவரித்து இருந்தார்.
அதே போலத்தான் பா.செ அவர்களும்; அவர்களுக்கெல்லாம் அடுத்த கட்ட நகர்வு தேவைப்பட்டதே தவிர திராவிட இயக்கத்தை முற்றிலும் அவர்கள் வெறுத்து ஒதுக்கியவர்களாக இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்கள் மீது கோபம் இருந்தது என்பதும் உண்மை. செய்தி மக்கள் தொடர்பு துறை அரசியல் புயலில் எப்போதுமே அசைவாடிக் கொண்டிருக்கக் கூடிய ஒரு அரசுத்துறை. அந்தத் துறையில் உயர் பதவிகளுக்குப் போக நேரிட்ட போதும் தன் அடிப்படைக் கொள்கைகளில் மாற்றமில்லாத அப்படி ஒரு விவரிக்க முடியாத துணிச்சலோடு செயல்பட்டு மனஓசை என்கிற இதழை நடத்திக் கொண்டு, அதன் வழியாக நிறைய இளம் சிந்தனையாளர்களை, படைப்பாளிகளை ஊக்குவித்து உருவாக்கி வந்தார் சூரியதீபன் என்று புனை பெயரில் எழுதிய பா.செ. பெருமாள் முருகன் கூட தன் உருவாக்கத்தில் பா.செ.யின் பங்கு எப்படி இருந்தது என்பதைப் பலமுறை, பல்கலைக்கழகத்தில் நாங்கள் முனைவர் பட்ட ஆய்வாளர்களாக இருந்த காலத்தில் எனக்குச் சொல்லி இருக்கிறார். கிறித்தவக் கல்லூரிக்கு வந்த பிறகு பாரதி புத்திரன் அதைத் தொடர்ந்து இருக்கிறார்; எப்படி இடதுசாரிச் சிந்தனையாளர்கள் எல்லாம் அவர்கள் வீட்டிலே வளர்ந்தார்கள் என்பதைக் கதை கதையாகச் சொல்லியிருக்கிறார்.
எமர்ஜென்சி காலத்தில் பா.செ அவர்கள் வேலை இழந்த போது அவர் அடைந்த துன்பங்களையும் அத்தனை துன்பங்களுக்கு இடையிலும் தன் கொள்கையில் நிலை குலையாமல் நின்ற அவருடைய அந்த உறுதியான மன உணர்வுகளையும் நான் அறிந்திருக்கிறேன். அவற்றை என் தந்தையார் எனக்கு அடிக்கடி சொல்லியதுண்டு. எனக்குள் பா.செ என்பவர் ஓர் இறுகிப்போன அதிகாரியாகவும், அதேநேரம் இடதுசாரிகளுக்கே உரிய இயல்பான. உள்ளத்தில் மென்மையோடு இருந்தாலும் போராடுவதில் உறுதியாக இருந்த ஒருவராகவே நான் அவரை உணர்ந் இருந்தேன். ஆனால் அவரை வேறொருவராக நான் முதன்முறையாக பார்த்தது என் தந்தையார் மறைவின் போது தான்; என் தந்தையார் சடலமாக படுக்க வைக்கப்பட்டிருந்தபோது என் அருகில் வந்து என் தோளைக் கட்டிப்பிடித்துக் கொண்டு "என்ன இளங்கோ எல்லாமே ஆறடி பெட்டியில முடிஞ்சு போச்சே" என்று சொல்லி குழந்தை போல அவர் குலுங்கிக் குலுங்கி அழுததைப் பார்த்தபோது எனக்கு வியப்பாக இருந்தது. அன்று வரை இடதுசாரிகள் எல்லாம் அவ்வளவு எளிதாக அழமாட்டார்கள் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன்.
பா.செ அடிப்படையில் மிக மென்மையான ஒரு மனிதர் என்பதை அண்மையில் அவருடைய மறைவு நாளில் காலை நேரத்தில் தன் மகனுக்கு அவர் அனுப்பி இருந்த அந்த வினா விடை பகுதி மிக அற்புதமாகக் காட்டுகிறது. அவர் ஊர் கொண்டாடும்படி எழுதி இருந்த ஒவ்வொரு கதையும் அவருடைய குடும்ப நிகழ்வுகள்; வாழ்க்கையில் அவர் அனுபவித்த துன்ப துயரங்களின் பதிவுகள்; தன் ஊர் மக்கள் பட்ட துன்பங்களின் பதிவுகள் என்பதை அந்தக் கதைகளைப் படிக்கும்போது தெரிந்து கொள்ள முடிந்தது. அதற்கு மேல் தன் சொந்த வாழ்க்கையைத் திறந்த புத்தகமாக அவர் வெளிப்படுத்தி இருந்த முறையும் அதை வெளியிட தன் மகனை அவர் தயார் செய்து வைத்திருந்த பாங்கும் எனக்கு வியப்பூட்டியது. இடதுசாரிகள் எவ்வளவு வெளிப்படையான படைப்பாளிகளாக வாழக்கூடியவர்கள் என்பதை அவருடைய அந்தப் பதிவு மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருந்தது.
இவற்றுக்கும் மேலாக எங்கள் அன்புப் பேராசிரியர் கவிஞர் இன்குலாப் மறைந்த நாளிலிருந்து பா.செ உடல் உறுதியோடு இருந்த அந்த இறுதிக்காலம் வரை அத்தனை ஆண்டுகளிலும் இன்குலாப் அவர்களின் நூல்களை வெளியிடுவதும் அவருடைய நினைவு நாளில் கருத்தரங்குகள் நடத்துவதும் அவருடைய பெயரில் அறக்கட்டளை நிறுவுவதும் என்று மேற்கொண்ட முயற்சிகளும், கவிஞரின் மகள் ஆமினாவுடன் அவர் இணைந்து பணியாற்றி அடுத்தடுத்த கட்டத்திற்கு இன்குலாப் படைப்புகளைக் கொண்டு சேர்த்த முறையும் உள்ளபடியே அவருக்குள் இருந்த தொண்டு உணர்வையும் தூய உள்ளத்தையும் நட்பின் மீதான மரியாதையையும் வெளிப்படுத்தின.
தன்னுடைய நண்பர்களுக்கு பா.செ செய்த பணியை அதன் வழியாகத் தான் ஏற்றுக்கொண்டிருந்த கொள்கையை நிலை நிறுத்த மேற்கொண்ட முயற்சிகளை அவரது நண்பர்களும் சுற்றத்தாரும் தொடர வேண்டும். அது பா.செ எனும் தனி மனிதனுக்கான தொண்டல்ல, இன்றைய சூழலில் மனித மனங்களை பிளவுபடாமல் வெறுப்புணர்ச்சியற்றவர்களாக உருவாக்கி மானுட மேன்மையைப் போற்றும் தவிர்க்க முடியாத பணியாக அமைந்திடும். தொடரட்டும் பா.செ.யின் பாதை.
கருத்துகள்
கருத்துரையிடுக