சூரியதீபனின் 'ஈழக்‌ கதவுகள்‌' - ஜெயந்தன்‌


இருபது லட்சம்‌ ஈழத் தமிழர்களும்‌ பதினெட்டு லட்சம்‌ தோட்டத் தொழிலாளத்‌ தமிழர்களும்‌ நித்தமும்‌ வயிற்றில்‌ நெருப்பைக்‌ கட்டிக்கொண்டு நாட்களை கழித்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. எந்த நேரத்தில்‌ எது நடக்கும்‌, எது நடக்காது என்று சொல்ல முடியாது. சிங்கள பேரினவாத வெறிபிடித்த காடையர்களும்‌ பேரினவாத அரசும்‌ அதன் படைகளும்‌ புத்த மதத்தைப்‌ பேரினவாதமாக ஆக்கிக்கொண்டுவிட்ட பிக்குகளும்‌ வெறியாட்டம்‌ போடுகிறார்கள்‌.

2004 வரை என்ற அளவில்‌ கூட 17,600க்கும்‌ மேற்பட்ட போராளிகளும்‌ 70,000 பொதுமக்களுமாக மொத்தம்‌ 87,600 உயிர்கள்‌ காவு கொள்ளப்பட்டிருக்கின்றன. அமைதி ஒப்பந்தங்களையெல்லாம்‌ சிங்கள அரசு கிழித்து காற்றில்‌ பறக்கவிட்டுக்‌ கொண்டிருக்கிறது. ஆனால்‌ பத்திரிகைகளும்‌ இதர ஊடகங்களும்‌ / தமிழகத்து ஊடகங்கள்‌ உள்ளிட்டு / ஈழத்திற்கு முதுகை திருப்பிக்கொண்டு நிற்கின்றன. ஏப்போதாவது “போராளிகளுக்குக்‌ கொஞ்சம்‌ சேதாரம்‌” என்பதாக சின்ன கட்டம்‌ கட்டிப்‌ போடுவதோடு சரி அநேகமாக இருட்டடிப்பு என்ற நிலை.

இந்த நிலையில்‌ பத்தே நாட்கள்‌ ஈழத்தில்‌ தங்க நேர்ந்த சூரியதீபன்‌ ஈழத்தின்‌ கதவுகளைத்‌ தானே ஓர்‌ ஊடகமாக நின்று திறந்து வைக்கிறார்‌, அதுதான்‌ 'ஈழத்தின்‌ கதவுகள்‌'. அவர்‌ திறந்த கதவின் வழித்‌ தெரியும்‌ காட்சிகள்‌ நம்மைக்‌ குலை பதற வைக்கின்றன. சிங்கள அரசுப்‌ படைகளும்‌ மனித நாகரீகத்தையே குழி தோண்டிப்‌ புதைத்துவிட கங்கணம்‌ கட்டி ஆடுவது காட்சிக்‌ காட்சியாக விரிகின்றன.

1948இல்‌ எங்கும்‌ வெளியேறியது போலவே வெள்ளைக்காரன்‌ இலங்கையை விட்டும்‌ வெளியேறுகிறான்‌. ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்‌ கட்டில்‌ ஏறுகிறது. ஆட்சிக் கட்டிலில்‌ ஏறியது ஒரு அரசியல்‌ கட்சி மட்டுமல்ல, சிங்கள பேரினவாதமும்தான்‌. உடன்‌ தயாராகிறது “தமிழர்களைப்‌ பூண்டோடு அழித்தொழிக்கும்‌" அஜெண்டா.

குடியேற்றத்‌ தமிழர்களின்‌ வாக்குரிமையும்‌ குடியுரிமையும்‌ பறிக்கப்படுகிறது.

ஆட்சி மொழியாக சிங்களம்‌ மட்டுமே என்றாக்கப்படுகிறது. புத்த மதமே அரசாங்க மதமாதிறது.

மலையகத்‌ தோட்டத்‌ தமிழர்கள்‌ விரட்டியடிக்கப்பட்டு அந்த இடங்களில்‌ சிங்களர்கள்‌ வேலைக்கு வைக்கப்படுகிறார்கள்‌. அவர்கள்‌ நாட்டின்‌ பல்வேறு பகுதிகளுக்குச்‌ சென்று பிச்சை எடுத்து பிழைக்க நேர்கிறது.

தமிழர்கள்‌ என்றால்‌ கிள்ளுக்கீரைகள்‌ என்றாகிறது. சிங்களக்‌ காடையர்கள்‌ நினைத்தால்‌ வீதிக்கு வந்துவிடுகிறார்கள்‌. தமிழர்‌களையும்‌ அவர்கள்‌ சொத்து சுதந்திரங்களையும்‌ தீ வைத்துக்‌ கொளுத்துகிறார்கள்‌. தமிழச்சிகள்‌ அவர்களது காமப்பசிக்கு அளாகிறார்கள்‌. இது 1956 / 58 / 74 / 76 / 77 / 81 என்று நீள்கிறது.

சிங்கள போலீஸின்‌ துணையோடு அரசின்‌ மறைமுக ஆதரவோடு யாழ்‌ பல்கலைக்‌கழக நூலகம்‌ எரிக்கப்படுகிறது.

1974 யாழ்‌ வீரசிங்கம்‌ மண்டபத்தில்‌ உலகத்‌ தமிழ்‌ மாநாடு ஏற்றத்துடன்‌ நடந்து கொண்டிருப்பதைப்‌ பொறுக்காத சிங்கள காவல்துறை சுட்டதில்‌ விலைமதிப்பில்லா ஒன்பது உயிர்கள்‌ பலியாகின்றன. ஆட்சித்‌ தலைமையிடமிருந்து ஒரு வரி அனுதாபச்‌ செய்தியில்லை. மாறாக 'சுடச்‌ சொன்ன ஏ.எஸ்‌.பி சந்திர சில்வாவுக்கு' பதவி உயர்வு.

ஜெயவர்த்தனேயின்‌ கட்சிப்‌ பத்திரிகையான 'சியாட்ட' ஒரு கட்டத்தில்‌ எழுதுகிறது...

'சிங்கள இளைஞர்களே கிளர்ந்தெழுங்கள்‌. நாட்டின்‌ நலனுக்காக உயிரை துச்சமென எண்ணி முடிந்த அளவு தமிழர்களை கொல்லுங்கள். நாட்டின் பெயரால் விரைவோம். கொல்வோம்."

கடைசியில் தமிழ் இளைஞர்கள்‌ ஆயுதங்களைக்‌ கையிலெடுக்கிறார்கள்‌. போராளிக் குழுக்கள் பிறக்கின்றன. "கிளம்பிற்றுக் காண் தமிழ் சிங்கக்  மென்று” என்று பாரதிதாசன்‌ சொன்னது நிஜமாகிறது. மரண பயத்தை வென்றவர்கள்‌ வருகிறார்கள்‌. அதன்‌ அடையாளமாக கழுத்தில்‌ சயனைட்‌ குப்பிகளைத்‌ தாயத்தாகத்‌ தொங்க விட்டவர்கள்‌ வருகிறார்கள்‌. புறநானூற்று வீரம்‌ கற்பனையல்ல என்பதின்‌ இருபதாம்‌ நூற்றாண்டின்‌ ஒரே சாட்சியாக வருகிறார்கள்‌. புறநானூற்று தாய்களும்‌ வருகிறார்கள்‌. அந்தத்‌ தாய்களும் கூட பிள்ளைகளைத்தான்‌ போர்முகத்திற்கு அனுப்பினார்கள்‌. இந்த அன்னைகளோ தாங்களே களத்தில்‌ நிற்கிறார்கள்‌.

1983 ஜூலை 23 பலாலி சாலையில்‌ தபால் பெட்டி சந்திப்பில்‌ விடுதலைப்‌ புலிகளின்‌ முதல்‌ கண்ணிவெடி வெடித்து போர்‌ துவங்கிவிட்டதை அறிவிக்கிறது. ராணுவ லாரியில்‌ வந்த 13 சிங்கள சிப்பாய்களின்‌ உடல்கள்‌ சிதறுகின்றன.

மறுநாளிலிருந்து மூன்று நாட்கள்‌ அயுதங்களை ஆயுதங்களால்‌ சந்திப்பது என்ற போர்‌ நெறி அறியாத மரபணு கோழை சிங்களக்‌ கும்பல்‌ வெறும்‌ நிராயுதபாணிகளான கொழும்பு வாழ்‌ தமிழர்கள்‌ ஐந்தாயிரம்‌ பேரைக்‌ கொன்று குவிக்கிறது. வீடுகளுக்கும்‌ நீறுவனங்களுக்கும்‌ நெருப்பு வைக்கிறது. இதைப்பற்றி சூரியதீபன்‌ சொல்கிறார்‌ “இந்த விதமாகத்தான்‌ கொழும்பு உலகிற்குத்‌ தன்னை அறிமுகப்படுத்திக்‌ கொண்டது”. இதற்காக, பின்னாட்களில்‌ அவர்கள்‌ கொடுக்கப்‌ போகும்‌ விலை என்னவென்பதை அவர்கள்‌ அறிந்திருக்கவில்லை,

சீக்கிரமே அவர்கள்‌ முகத்தில்‌ கேவலம்‌ வழிந்தது. உள்நாட்டுப் போரை சமாளிக்கத்‌ திராணியற்றுப்போய்‌ வெளிநாட்டுப்‌ படையொன்றை தன்‌ நாட்டு மண்ணில்‌ கால் பதிக்கக்‌ கூப்பிட வேண்டிய அவலம்‌ வந்தது. இந்தியப்‌ படை 'அமைதிப்படை' என்ற பெயரில்‌ அங்கே போனது. அது ஆடிய ஆட்டம்‌ சிங்களப்‌ படைகளுக்குக்‌ குறைந்ததாக இல்லை. இதைப்பற்றி இந்திய அமைதிப்படையினர்‌ வட்டார கமாண்டர்‌ காலோன்‌ என்பவன்‌ சொன்னான்‌,

"ராணுவம்‌ என்றால்‌ அது இலங்கை ராணுவம்‌, இந்திய ராணுவம்‌, பாகிஸ்தான்‌ ராணுவம்‌ ஏன்‌ அமெரிக்க, பிரிட்டிஷ்‌ ராணுவம்‌ என்றெல்லாம்‌ வேறுபடுத்த முடியாது. எல்லா ராணுவமும்‌ ஒன்றதான்‌. அவிழ்த்துவிடப்படுகிற எல்லா ராணுவச்‌ சிப்பாய்களும்‌ ஒரே மாதிரிதான்‌ இருப்பார்கள்‌. இது தவிர்க்க முடியாதது.”

எப்படியிருக்கிறது காந்தி நாட்டுப்படைகளின்‌ / அமைதி காக்கச்‌ சென்ற படைகளின்‌ லட்சணம்‌?

இவர்களது அத்துமீறலை எடுத்து எழுதியது என்பதற்காக 'ஈழமுரசு' பத்திரிகை அலுவலகத்தையே காலை 2 மணிக்கு குண்டு வைத்துத்‌ தகர்த்ததும்‌ இவர்கள்தான்‌. எப்படியிருக்கிறது கருத்துச்‌ சுதந்திரத்தின்‌ மேல்‌ இவர்கள்‌ கருத்து.

இவர்கள்‌ இந்தியப்‌ பெருங்கடலில்‌ கைது செய்த லெப்கேணல்‌ குமரப்பா, லெப்‌ கேண்‌ புலேந்திரன்‌ போன்ற 12 போராளிகளை சிங்கள ராணுவத்திடம்‌ ஒப்படைத்தனர்‌. இது அமைதிப்படை உடன்படிக்கைக்கு எதிரானது. ஆனாலும்‌ இந்த 'அமைதிப்படை' அதைச்‌ செய்தது. ஒருவேளை இதே சூழ்நிலையில்‌ சிங்கள ராணுவத்தினர்‌ யாராவது சிக்கியிருந்தால்‌ அவர்களை விடுதலைப்‌ புலிகளிடம்‌ ஒப்படைத்திருப்பார்களா?

கடைசியில்‌ இவர்கள்‌ இலங்கை விட்டு தொங்கிய முகத்தோடுதான் கப்பலேறினார்கள்‌ என்பது வேறு விஷயம்‌.

தொடர்ந்து சூரியதீபன்‌ காட்சிகளை அடுக்கிக்கொண்டே போகிறார்‌.

21 வயதேயான இளைஞன்‌, “மோவா அரும்பு, முகரா மொட்டு” காப்டன்‌ மில்லர்‌. லாரி நிறைய வெடி மருந்துகளை நிரப்பிக்‌ கொண்டு தோழர்களிடம்‌ 'பிரியும்‌' விடைபெற்றுக்கொண்டு ராணுவம்‌ தங்கியிருந்த கட்டடத்தின்‌ மீது மோதி 200 சிங்களச்‌ சிப்பாய்களை சில நொடிகளில்‌ சாம்பலாக்குகிறான்‌. உலகத்தின்‌ முதல்‌ தற்கொலைத்‌ தாக்குதல்‌ யுத்தம்‌ சரித்திரத்தில்‌ பதிவாகிறது.

நானூறு உயிர்கள்‌ கொன்று புதைக்கப்பட்ட செம்மணி மயான வரலாறு ஒரு சோக காவியமாகவே தேதி வாரியிட்ட ஆதாரங்‌களுடன்‌ பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

பயந்து அடங்கி ஒடுங்கிக்‌ கிடப்பதுதான்‌ தங்கள்‌ விதி என்ற எண்ணத்தில்‌ இருந்த பெண்களுக்கு அவர்களது விஸ்வரூப தரிசனத்தை அவர்களே கண்டுகொள்ளுமாறு காட்டிக்‌ கொடுத்தவர்‌கள்‌ புலிகள்தான்‌.

லெப்டினன்ட்‌ மாலதி, விஜி, தீபா கஸ்தூரி, லெப்கேணல்‌ பாமா, கயல்விழி என்று பெரும்படையான பெண் புலிகளும்‌ கடற்புலிகளும்‌ ஆயுதம்‌ தாங்கி நடத்திய தாக்குதல்களும்‌ வீர சாகசங்களும்‌ தியாகங்களும்‌ சூரியதீபனால்‌ காவியமாக வடிக்கப்படுகின்றன.

இந்த மங்கையர்களின்‌ போராட்ட பங்களிப்பு குறித்து / தங்கள்‌ பெண்கள்‌ அரைக்கால்‌ சட்டையணிந்து இருட்கடலில்‌ நீந்தி, பகைவன்‌ கப்பலை நோக்கிச்‌ சென்றதைக்‌ குறித்து அவர்களின்‌ ஊர்‌ மக்களே பேசிக்கொள்கிறார்கள்‌.

“பெரிய இந்தியாக்காரன்‌ நடுச்சாமத்தில்‌ முன்னாலை வந்து நிக்கேக்கை உந்தப்‌ பொடுச்சிகள்‌ அவங்களைச்‌ சுட்டிருக்‌காங்களோ?”

கரும்புலி கேப்டன்‌ அங்கயர் கண்ணியின்‌ அம்மா அழுது ஓய்ந்தபின்‌ ஆச்சரியப்படத்‌ தொடங்குகிறார்‌.

“நாப்பத்தைஞ்ச ஆழக்கடலிடை தனியப் போனவளோ? அவ்வளவு ஆழத்தில்‌ நிலம்‌ இருட்டா இருக்குமே? என்னெண்டு போனவள்‌? என்னோடை இருக்கு மட்டும்‌ இரவில்‌ வீட்டுக்கு வெளியாலை போறதுக்கு நான்‌ வேணும்‌ அவளுக்கு. அவள்‌ என்னெண்டு...? (பக்கம்‌ 61)

பெண்களை அவர்களது சக்தியோடு பார்த்தது புலித்‌ தலைமை இதற்காக பெண்ணினம்‌ என்றென்றும்‌ அதற்கு நன்றி சொல்லும்‌.

புத்தகம்‌ சிறியதுதான்‌. 160 பக்கங்கள்‌ தான்‌ அனால்‌ சூரியதீபன்‌ 1600 பக்கங்களில்‌ உண்டாக்கக்‌ கூடிய உணர்வை இந்த 160 பக்கங்களிலேயே நமக்கு ஊட்டி விடுகிறார்‌. வெறும்‌ சரித்திரம்‌ மட்டுமில்லாமல்‌ அந்தச்‌ சரித்திர காரணிகளின்‌ ஆணிவேர் வரை சென்று பிரச்சனைகைளின்‌ அணுக்கருவை (nucleus) கண்டடையும்‌ முயற்சியாகவும்‌ இருக்கிறது.

தான்‌ ஈழம்‌ செல்ல வேண்டியதின்‌ காரணமாக இருந்த "மானுடத்தின்‌ தமிழ்க்‌ கூடல்‌" அரங்கில்‌ தான்‌ உரையாற்ற வேண்டிய நேரம் வந்தபோது இவர்‌ அங்கே கூடியிருந்தவர்களை எப்படி விளிப்பது என்ற கேள்வியோடு துவங்குகிறார்‌, “இன்றைய தமிழ்ச்‌ சூழலில்‌ புரட்சியாளர்கள்‌, புரட்சித்‌ தலைவன்‌ / புரட்சித்‌ தமிழன்‌ / புரட்சிக்‌ கவிஞன்‌ எல்லாம்‌ கெட்ட வார்த்தைகளாதிவிட்ட நிலையில்‌, நான்‌ உங்களை எப்படி விளிப்பது? நீங்கள்‌ மனிதத்தின்‌ மாண்பு தொலையாமல்‌ காப்பாற்றி வருகிறீர்கள்‌. எனவே உங்களை மனிதர்களே என்றழைக்கிறேன்‌.”

சூரியதீபன்‌ இன்னொரு இடத்தில்‌ சொல்கிறார்‌, “சிங்களப்‌ பேரினமும்‌ சிங்கள அரசும்‌ வேறல்ல. இதிலிருந்து புத்த மதமும்‌ வேறல்ல. மதப்‌ பேரினவாதம்‌ என்ற புதிய வடிவத்திற்கு சிங்களப்‌ பேரினம்‌ தன்னை உருமாற்றம்‌ செய்துகொண்டது. (பக்கம்‌ 45)

இப்படியான அவரது சிந்தனைச் செழுமையை நூலின்‌ பல இடங்களில்‌ நம்மால்‌ பார்க்க முடிகிறது.

கடைசியாக, சூரியதீபன்‌ முதல்‌ அத்தியாயத்தின்‌ முதல்‌ பக்கத்திலேயே சொல்கிறார்‌. “நாம்‌ வியட்நாமிற்குக்‌ குரல்‌ கொடுக்க ஓடினோம்‌. க்யூபாவிற்கு ஓடினோம்‌. பாலஸ்தீனத்திற்கு ஓடினோம்‌. ஆனால்‌ கூப்பிடு தூரத்தில்‌ தான்‌ இருக்கிறது ஈழம்‌. ஆனால்‌ அது அழுது அழுது கூப்பிட்டபோதும்‌ நம்‌ காதுகள்‌ கேட்கவில்லை. இரக்கமில்லா இதயத்தோடு நின்றோம்‌.”

இதைத்‌ தொடர்ந்து அவர்‌ கேட்காமல்‌ கேட்கும்‌ கேள்வி ஒன்று இருக்கிறது. இனியும்‌ தொடர்ந்து இப்படியேதான்‌ இருக்கப்‌ போகிறோமோ என்ற கேள்விதான்‌ அது. இருக்கக்‌ கூடாது என்பதுதான்‌ பதில்‌. அந்தப்‌ பதிலுக்கான எல்லா நியாயங்களையும்‌ எடுத்து வைக்கிறது இந்த நூல்‌.

- எண்ணம்‌, ஜெயந்தன்‌ கட்டுரைகள்‌

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்