சமவெளிகளில்‌ தீப்பிடிக்கும்‌...


(மக்கள்‌ கவிஞர்‌ மாயாண்டி பாடல்கள்‌ - முன்னுரை)


"எறும்புப்‌ புற்றில்‌ இருக்கிற அரிசியைத்‌ தேடி பசியெடுத்த மக்கள்‌ அலைந்தார்கள்‌. பரத்தையர்‌ வீடுகளில்‌, பணம்‌ படைத்த தலைவர்கள்‌ இன்னிசை கேட்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்‌. சேர, சோழ, பாண்டியர்‌ என்பவர்கள்‌ தங்களுக்குள்ளேயே, சொத்துக்களுக்‌காக போரிட்டுக்‌ கொண்டார்கள்‌. தோற்றவன்‌ நாட்டையும்‌ ஊரையும்‌, அவனுடைய விளைந்த பயிர்களையும்‌ தீயிட்டுக்‌ கொளுத்தி மகிழ்ந்தார்கள்‌. தாங்க முடியாத வரிப்‌ பளுவால்‌ மக்களை கொடுமைப்படுத்தினார்கள்‌. ஓயாது போர்‌ செய்தல்‌, குடித்தல்‌, பரத்தையரோடு கழித்தல்‌ என்று வாழ்ந்தார்கள்‌.”

'வீதியிலே பாலோடியது, வீடுகளிலே தேனோடியது' என்று அளந்து விடப்படுகிற சங்க காலத்தின்‌ சித்திரம்‌ தான்‌ இது. இதுவரை --

பேரரசர்கள்‌, சிற்றரசர்கள்‌, மேட்டுக்‌ குடியினர்‌ -- இவர்களின்‌ வாழ்க்கையே, மக்களின்‌ வாழ்க்கையாகச்‌ சொல்லப்பட்டது. இவர்களின்‌ அரசியலே, மக்களின்‌ அரசியலாக நமக்குப்‌ படம்‌ போடப்பட்டது.

சங்க காலம்‌, சங்க இலக்கியம்‌ பற்றி இன்னும்‌ ஒரு முழுமையான ஆய்வு தரப்படவில்லை. விஞ்ஞானப்பூர்வமாக இன்னும்‌ அவை விளக்கப்படவில்லை.

இவை மார்க்சீயவாதியால்‌ தொட முடியாத உயரங்களும்‌ அல்ல; மூழ்கி மேலே வரமுடியாத ஆழங்களும்‌ அல்ல. இப்படி மார்க்சீய வெளிச்சம்‌ பாய்ச்சி, மக்களுக்கு விளக்கப்படாத விஷயஙகள் நிறைய இருக்கின்றன. இதுதான்‌ எதிரிக்கும்‌, எதிரியின்‌ ஆதிக்கம்‌ நீடிப்பதற்கும்‌ மிகப்‌ பெரிய பாதுகாப்பு. நாம்‌ இவைகளைத்‌ தொட்டு விளக்காத வரை, எதிரியின்‌ கருத்துக்களையே மக்கள்‌ தங்கள்‌ கருத்துக்களாக ஏற்றுக்‌ கொண்டிருப்பார்கள்‌. நம்மால்‌ தொடப்படாத துறைகள்‌ எல்லாம்‌, எதிரியின்‌ கைவசத்தில்‌ மக்களை ஏய்க்க இயங்கிக்‌ கொண்டிருக்கும்‌.

மக்களின்‌ விரலைச்‌ சுற்றியிருப்பது மோதிரங்கள்‌ அல்ல. சொறி சிரங்குகள்‌ என்பதை நாம்‌ சொல்லியாக வேண்டும்‌.

***

இப்படித்தான்‌ இசையும்‌ கையாளப்பட்டது. இசை தெய்வீகமானது; எளிய மக்களால்‌ தொட முடியாதது என்றார்கள்‌. இறைவன்‌ இசைமயமாக இருக்கிறான்‌ என்றார்கள்‌. சாதாரண காரியங்களுக்கு இசையை இறக்கக்‌ கூடாது என்றார்கள்‌. சொல்லிக்‌ கொண்டே மன்னர்களின்‌ சல்லாப சங்கதிகளுக்குப்‌ பயன்படுத்தினார்கள்‌. இதை மறைக்க, ஏற்கனவே ஒரு இரும்புத்‌ திரையை தொங்கவிட்டார்கள்‌- 'அரசனும்‌ இறைவனும்‌ ஒன்றே!' இன்றைக்கும்‌ இப்படிச்‌ சொல்கிறவர்கள்‌ இருக்கிறார்கள்‌. "இவர்களின்‌ சிந்தனை பழமையின்‌ எச்சங்களால்‌ நிரம்பியுள்ளது'.

இன்னொரு பக்கம்‌, 'முத்தாயி பெற்ற பிள்ளை, அத்தனையும்‌ சொள்ளை' என்பது போல்‌, முதலாளித்துவ நாடுகளின்‌ சீரழிவு இசை இறக்குமதி செய்யப்படுகிறது. புரியாத இசை வடிவங்களில்‌, அசிங்கமான விசயங்களை ஏந்தி, இவை வலம்‌ வருகின்றன. லாப நோக்கு ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து, இளைய தலைமுறையினருக்கு மூளை நோயை உருவாக்கும்‌ பன்றிகளாக சுற்றிச்‌ சூழல்கின்றன.

நம்‌ கைவளைவுக்குள்‌ கொண்டுவரப்படாதவரை, இசை, இலக்கியம்‌, ஓவியம்‌, ஆடல்‌, பாடல்‌ எல்லாத்‌ துறைகளுமே மக்களுக்கு எதிராக நிறுத்தப்படும்‌.

***

தமிழக மக்களைப்‌ போலவே, உலகம் முழுவதிலுமுள்ள மக்கள்‌ தங்கள் மேல்‌ வீசப்பட்ட அடிமைத்தளைகளை அறுத்தெறிந்துவிடப்‌ போராடுகிறார்கள்‌. உலக முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களின்‌ லட்சியம்‌ ஒன்றே. ஒரு புதிய சமுதாய கட்டமைவை நோக்கி, அனைவரும்‌ பயணப்படுவதால்‌, 'உள்ளடக்கம்‌' சர்வ தேசியமானது.

அதே நேரத்தில்‌, இந்த உள்ளடக்கத்தை மக்களுக்குக்‌ கொண்டு செல்வதில்‌, நாட்டுக்கு நாடு, மக்களுக்கு மக்கள்‌ முறைகளும்‌ வடிவங்களும்‌ வேறுபடும்‌. அந்த மக்களுக்குப்‌ புரிகிற இணைந்த வடிவங்களில்‌ எடுத்துச்‌ செல்லப்பட வேண்டும்‌.

எனவே -- நம்முடையது உள்ளடக்கத்தில்‌ சர்வ தேசியம்‌, வடிவத்தில்‌ தேசியம்‌.

சொல்கிற விசயம்‌ மக்களுடையதாக இருந்தாலும் எடுத்துக்‌ கொடுக்கிற பாத்திரம்‌ அவர்களுடையதாக இல்லையென்றால்‌, அவர்களுடைய கைகளுக்கும்‌, வாய்க்கும்‌ போய்ச்‌ சேராமலே விசயம்‌ ஒழுகி விடுகிறது. எனவே நாம்‌ கொண்டு செல்கிற. கலை மக்களுக்குச்‌ சேவை செய்கிறதா, இல்லையா என்பதை, வடிவங்களின்‌ வெற்றியில்தான்‌ தீர்மானிக்க வேண்டும்‌.

உள்ளடக்கத்தில்‌ சர்வ தேசியம்‌, வடிவத்தில்‌ தேசியம்‌ என மாயாண்டியின்‌ பாடல்கள்‌ வெளிப்படுகின்றன. உள்ளடக்கத்தில்‌ அரசியலையும்‌, வடிவத்தில்‌ மக்களையும்‌ மனதில்‌ வைத்து வார்க்கப்‌பட்டிருப்பதால்‌, தமிழகமெங்கும்‌ மக்களால்‌ பாடப்படுகின்றன. மக்களுடைய ஆடல்‌, பாடலை அணிந்துகொண்டு, அவரது இசை வருகிறது.

இதுவரை மக்களுக்கு எதிராக நிறுத்தப்பட்டதை, அவர்‌களுக்கான உள்ளடக்கத்துடன்‌, அவர்களுக்காக நிறுத்துகிறார்‌.

அவருடைய பாடல்கள்‌, பழைய சாஸ்திரீய சங்கீதம்‌ போலவோ, மேல்நாட்டு இசை போலவோ இல்லை. அவை சமகாலத்திய தமிழ்‌ இசையாக இருக்கின்றன. அதனால்‌ மக்கள்‌ கலாச்சாரக்‌ கழகங்கள்‌ வேர்பதிக்காத இடங்களில்கூட மக்களால்‌ பாடப்படுகிற பாடல்களாகிவிட்டன.

உள்ளடக்கத்தில்‌ சர்வ தேசியத்தைக்‌ கொண்டிருப்பதால்‌, சிலியில்‌, ஸ்பெயினில்‌, தென்‌ ஆப்பிரிக்காவில்‌, ஈழத்தில்‌ எங்கெல்‌லாம்‌ சனநாயகத்தின்‌ 'மென்னி' திருகப்படுகிறதோ, அப்போதெல்‌லாம்‌ மக்கள்‌ கலைஞர்கள்‌ சிலிர்த்தெழுகிறார்கள்‌. நக்சல்பாரியில்‌, சிரிகாகுளத்தில்‌, தெலுங்கானாவில்‌, தென்‌ ஆற்காடு, தருமபுரி மாவட்டங்களில்‌ புரட்சித்‌ தீ பற்றிப்‌ படரும்‌ இடங்களில்‌ எல்லாம்‌ தங்களுக்கான பங்களிப்பு இருப்பதாக உணர்கிறார்கள்‌,

டார்ஜிலிங்‌ மலைகளில்‌ (நக்சல்பாரி) உருவாகிய சூரிய உதயம்‌, சிரிகாகுள அலைகளாகி, கோதாவரிக்‌ காடுகளைக்‌ கடந்து, சமவெளிகளில்‌ தீப்பிடிக்க வைத்தது. அடிமை கப்பிய சமவெளிகளில்‌, நாடெங்கும்‌ வரலாற்றின்‌ அழைப்புக்காகக்‌ காத்திருக்கும்‌ இளைஞர்‌கள்‌, எழுத்தாளர்கள்‌, கவிஞர்கள்‌ எழுந்தார்கள்‌. இதுவரை திசையற்று, எல்லாத் திசைகளிலும்‌ வடித்து விடப்பட்ட எதிர்ப்பு, கோபம்‌, கிளர்ச்சி இப்போது ஒரு திசை நோக்கிச்‌ செலுத்தப்பட்டது. இந்தப்‌ புயலை எந்தத்‌ திசை நோக்கிச்‌ செலுத்தினால்‌ நச்சு மரங்கள்‌ வேரோடு பறித்தெறியப்படும்‌ என்பதை அவர்கள்‌ உணர்ந்து நடந்தார்கள்‌.

புயலை ஒரு திசை நோக்கிச்‌ செலுத்துகிற பாடல்கள்‌ தான்‌ மாயாண்டியினுடையவை. அடிமை கப்பிய சமவெளிகளில்‌ தீப்‌பிடிக்க வைக்கிற முழக்கங்கள்தான்‌ அவருடையவை.

முன்னுரையில்‌ அவர்‌ குறிப்பிட்டிருப்பதுபோல, அவரது சுவாசமே பாடல்களாக இருக்கின்றன.

மக்கள்‌ கலாச்சார தீ நாக்குப்‌ பாடகனை மக்கள்‌ கலைஞனின்‌ பாடல்களை புத்தக வடிவில்‌ தருவதில்‌ நாங்கள்‌ பெருமையடைகிறோம்‌.

- எழுத்தாளர்‌ பா. செயப்பிரகாசம்‌ (அக்டோபர் 2005)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்