நூல் அறிமுகம்: உச்சி வெயில் – ஜனநேசன்


கரிசல் காட்டில் விளைந்த வைரங்களில் ஒருவர் பா.செயப்பிரகாசம். இவர் செய்தி மக்கள் தொடர்பு துறையில் உயரதிகாரியாக பணியாற்றி பணி நிறைவு செய்தவர். பணியில் இருந்தபோது பா.செயப்பிரகாசம் என்ற பெயரில் சிறுகதைகளையும், சூரியதீபன் என்ற புனைபெயரில் கவிதைகள், கட்டுரைகளும் எழுதினார் .

பா.செ.யின் எழுத்தாளுமை அவரது சிறுகதைகளால் அறியப்படுகிறது. ‘ஒரு ஜெருசலேம்‘, ‘காடு’, ‘இரவுகள் உடையும்’ போன்ற சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்கன. ’அம்பலகாரர் வீடு‘, ‘தாலியில் பூச்சூடியவர்கள்‘ போன்ற கதைகள் பா.செ.யின் கதையாளுமையின் உச்ச படைப்புகளாகும்.

கரிசல் இலக்கியத்தில் நவீன முகமாகக் கருதப்பட்டு பிதாமகர் கி.ராஜநாராயணன் உள்ளிட்ட பிற கரிசல் படைப்பாளிகளிலிருந்து தனித்து நிற்கிறார். வெயில் பூத்து, மழை அரிதாகிப் போன கரிசல் பூமியின் வெக்கை மனிதர்களை, பாடுகளை, மகிழ்வை, கொண்டாட்டங்களை, உண்ணும் உணவு வகைகளை வாசக மனங்கவரும் வகையில் படைப்புகளாக்கி உள்ளார். இவர்கள் படைப்புகள் பேசும் மக்கள் கரிசல் பகுதியினர் என்ற போதும், இந்த படைப்பாளிகளின் பார்வையும், எடுத்துரைப்பும் பிரபஞ்சம் தழுவியவை.

கரிசல் வட்டத்துக்குள் சுருக்கி அடக்குவதை பா.செ விரும்பவில்லை. பா.செ  ‘மணல்‘, ‘பள்ளிக்கூடம்‘ போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். இவ்வரிசையில் மூன்றாவதாகவும், இவரது கடைசி நாவலாகவும் அமைந்தது ‘உச்சி வெயில்‘. ஒரு வகையில் முன் கூறிய நாவல்களின் தொடர்ச்சியாகவும், மக்கள் மொழியில் சொல்வதென்றால் விட்டகுறை, தொட்டகுறை தொடர்ச்சி ‘உச்சி வெயில்‘ நாவலாகும்.

இந்நாவலின் களமாடல் அறுபதுகளின் கட்டை வண்டிக் காலம் தொட்டு இராண்டாயிரத்தின் தொடக்க கைப்பேசி காலம் வரை; கிராமாந்திரங்களின் விளையும் பொருட்களை பண்டமாற்று செய்த ஒத்த பலசரக்குக் கடை காலம் முதல், சிறுநகரத்தில் பல்பொருள் அங்காடியில் கணினியில் பில் போடும் காலம் வரை கதை விரிவடைகிறது + இதனூடாக கரிசல் மக்களின் புலம்பெயர்வு பண்பாட்டு அசைவுகளும் பகிரப்படுகிறது.

இரண்டு பகுதிகளாக அமைந்த இப்புதினத்தில் முதல் பகுதி சந்திரமதி எனும் தாழ்த்தப்பட்ட பெண் மீனாட்சிபுரம் கிராமத்தில இடைநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணி ஏற்பதில் தொடங்கி, ஆத்தூருக்கு இடப்பெயர்வு செய்யப்படுவது வரை விவரிக்கபடுகிறது. மீனாட்சிபுரம் கிராமத்து அடிதட்டு மக்களின் நேசபாவமும், வாஞ்சையும் மனதைத் தொடும் வகையாக பா.செ எடுத்துரைக்கிறார் .

இவ்வூரின் ஆதிக்க சாதியினரின் மனோபாவத்தையும், இழி செயல்களையும் நிரல்படுதுகிறார். சகல தரப்பு மக்களுடன் இயல்பாகப் பழகி பள்ளியையும், மாணவர்களின் தரம் உயர்த்தும் சந்திரமதி சாதீய மேலாதிக்கவாதிகளால் பழிவாங்கப்படும் சூழலையும் மண் மணம் மாறாமல் வாசகமனம் பதைக்க பரிமாறுகிறார்..

இந்தப் பகுதியில் பருத்திபால் காச்சுவது, சீம்பால் காச்சுவது தொடங்கி கரிசக்காட்டு பலகாரம் பண்டங்கள், அவை ஒவ்வொன்றும் கூறும் சமூக தரநிலைகள், அவற்றின் ருசிபாவங்களை பா.செ சுவையாக பந்தி விரிக்கிறார். மக்களில் நல்லவர்களும், மோசமானவர்களும் இருப்பது போல, பள்ளிக்கூடத்திலும் இருதரத்து ஆசிரியர்களும் இருப்பதை அம்பலப்படுத்துகிறார் .

இந்த முதல் பகுதியில் , உயர் சாதியினருக்கும், ஒடுக்கபட்ட சாதியினர் மீது கொண்ட ஆதிக்கமன பாவத்தையும், இவர்களுக்கு அடங்கிப் போகும் அப்பாவி மனபாவத்தையும் பதிவு செய்கிறார். எனினும் சாதிக்கு அப்பாற்பட்ட நிலையில் உழைப்பாளி மக்களிடம் சாதீய அகங்காரம் கடந்த வாஞ்சையும், நேசபாவமும் நிலவுவதை பா.செ பதிவிடத் தவறவில்லை.

இரண்டாம் பகுதியில் கதை, ஒடுக்கப்பட்டவர்களிடையே, பண பலமும் அதிகார பலமும் கொண்டவர்களுக்கும், பண பலமற்ற அப்பாவிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தினையும், காவல்துறையும் அதிகாரவர்க்கமும் பணம் படைதவருக்கே பாதுகாப்பரணாக விளங்குவதையும் உயிர்ப்போடு முன் வைக்கிறார் ஆசிரியர். இதிலும், ஒடுக்கபட்டோருக்கு ஆதரவாக பிற சாதியினர் உடனிருந்து உதவுவதையும் பா.செ கச்சிதமாக எடுத்துரைக்கிறார். சாதிய பண பலத்துக்கு எதிராக அனைத்து ஒடுக்கபட்டோரும் அணி திரளும் சூழல் எழுமென்பதை வாசக பரப்பிற்கு உணர்த்துகிறார்.

நாவலாசிரியர் ஒவ்வொரு பாத்திர மாந்தர்களை அறிமுகப்படுத்தும் விதமே சிறப்பானது. ஒரு சோற்றுப் பதமாக ஒன்று: “ ..உள்ளூர்க் கிராமுன்சு, தண்ணீர் வற்றிக் குண்டும் குளியுமாய்த் தெரியும் கண்மாய் போல் அம்மைப்பள்ளம் முகம் முழுசும். இத்தனையும் தாண்டி ’தான்’ என்ற செருக்கு கிராமுன்சு பதவியால் தொற்றிக்கொண்டு வந்தது".[பக்.39]

இப்புதினத்தின் முதல் பகுதியில் ஒடுக்கபட்டவருக்கு குரல் கொடுக்க சந்திரமதி பாத்திரம் அமைந்தது போல், இரண்டாம் பகுதியில், அதிகார மையங்களுக்கு எதிராகவும், ஒடுக்கபடுவோருக்கு ஆதராவாகவும் குரல் கொடுக்க, வெள்ளைச்சாமி, சச்சிதானந்தன், தாளமுத்து போன்ற மாந்தர்களை ஆசிரியர் உலவவிட்டிருக்கிறார்.

இந்நாவல் முழுக்க அங்கங்கே கவித்துவ வர்ணிப்புகளை பா.செ படரவிட்டிருக்கிறார்.

மழையை அரிதாகக் காணும், வெயில் பூமியில் உச்சி வெயில் நேரம் தாளமுடியா நேரம். உச்சி வெயில் நேரத்தில் உச்சம் தொட்ட போராட்டக் களத்தில் புழுங்கி மயங்கும் மக்களுக்கு, வங்கொடுமையற்ற, மனமும், உடலும் மகிழ்விக்கும் அந்தி வெயில் வரும். வெக்கைப்பாடுகள் தீரும் என்று நம்பிக்கையை உணர்த்து வகையில் பா.செ ‘உச்சி வெயில் ‘ என்று புதினத்திற்கு பெயரிட்டுருப்பது பொருத்தமானது.

தோழர். பா.செயப்பியாகாசம், மரணத்தின் வாசலில் போராடியபடி எழுதிய இந்நாவலுக்கு தக்க வகையில், எழுத்தாளுமை ச.தமிழ்ச் செல்வன் முன்னுரை வழங்கி இந்நூலை பதிப்பிக்கவும் ஆவன செய்துள்ளார்.

தோழர் தமிழ்ச்செல்வனுக்கும், துணை நின்ற தோழர் மருத்துவர் பி.வி.வெங்கட்ராமன், சிறப்பாக வெளியிட்ட பாரதி புத்தகாலய தோழர் நாகராஜ் உள்ளிட்ட தோழர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

அறுபதாண்டுகளுக்கு மேலாக தமிழ் மண்ணின் மொழி, சமூகம், கலை இலக்கிய வெளியில் களப்பணி ஆற்றிய பா.செயப்பிரகாசம் என்ற மாமனிதன் எழுதிய இறுதி நாவல் “உச்சி வெயில்“ஐ படித்தும் நினைவஞ்சலி செலுத்தலாம். இந்நாவலை வாசிக்கையில் பா.செ.யின் தொகுக்கபடாத கதைகளை, கட்டுரைகளை, மொழியாக்கங்களைத் தொகுக்க வேண்டிய கடமை தமிழ்கூறும் நல்லுலகிற்கு உண்டு என்று மனம் விழைகிறது.

நூலின் பெயர்: “ உச்சிவெயில் “ {நாவல்}

ஆசிரியரின் பெயர்: பா.செயப்பிரகாசம்.

வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை – 600018

பக்கம்: 184

விலை: ரூ 200

- Bookday

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார இலக்கியம்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

அறிவுசார் புலமைச் சமூகம்

பலியாடுகள்