பா.செயப்பிரகாசத்தின் 'வனத்தின் குரல்' - ஜெயந்தன்
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஏகமாய் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கும் பா. செயப்பிரகாசத்தின் கணக்கில் இன்னொரு வரவு “வனத்தில் குரல்” இது 19 கட்டுரைகளின் தொகுப்பு. கட்டுரைகள் பல திசைகளிலும் விரிவன. இருப்பினும் நூலைப் படித்து முடித்து பின் நினைவின் முதல் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வது கடைசியாக உள்ள 2 பயணக் கட்டுரைகள்.
மலேசியா பற்றிய கட்டுரைக்குத்தான் வனத்தின் குரல் என்ற தலைப்பு கொடுத்துள்ளார். உண்மையில், அவரே கட்டுரையின் உள்ளே ஓரிடத்தில் சொல்லிருப்பது போல அது வனத்தின் அவலக்குரல். இந்த அவலக்குரல் தமிழர்கள் குரல் என்பதுதான் நம்மை விசேஷமாக துன்புறுத்துகிற ஒரு விஷயம். அதோ இந்த அவலம் தமிழர்கள் நூற்றாண்டுகளாய் தங்கள் தலையில் தாங்களே வைத்துக் கொண்ட கொள்ளி என்பதை அறியும்போது நமது மனக்கஷ்டம் எல்லை கடக்கிறது.
ஆரம்பத்தில் மலேசியா கன்னி நிலமாகத் தான் இருந்திருக்கிறது. பிறகுதான் ஜாவா, சுமித்ரா போன்ற தீவுகளிலிருந்து மக்கள் அங்கே குடியேறியிருக்கிறார்கள். பிறகு அதை வளப்படுத்த தமிழர்களும் படைபடையாகச் சென்று அங்கு இறங்கியிருக்கிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் இருசாரார் ஜனத்தொகையும் சம அளவில் இருந்திருக்கிறது. வாணிபம் தமிழர் கையில் இருந்திருக்கிறது. ஆனால் இன்று ஜாவா சுமித்ராவிலிருந்து வந்து குடியேறியவர்கள் அங்கு மண்ணின் மைந்தர்களாகி விட்டார்கள். தமிழர்கள் மைனாரிட்டியாகவும் இரண்டாந்தர குடி மக்களாகவும் அவதிப்படுகிறார்கள். காரணம் என்ன? பா.செ அலசிச் சொல்கிறார்.
ஜாவா, சுமித்ரா, போர்னியாவிலிருந்து வந்தவர்கள் அங்கேயே தங்கிக் கொண்டார்கள். தங்களது புதிய தாயகமாக அந்த மண்ணையே ஏற்றுக்கொண்டார்கள். இதன் காரணமாக பின்பு அதன் மண்ணின் மைந்தர்களாகவும் ஆகிப்போனார்கள். அவர்கள் மலாய் மொழியே அந்த மண்ணின் தாய் மொழியாகவும் அனது. ஆனால் தமிழர்கள்?
இவர்கள் போனார்கள், உழைத்தார்கள், வாணிகம் செய்தார்கள். ஆனால் அங்கு மண்ணோடு ஒட்டவில்லை. இவர்கள் எண்ணமெல்லாம் இங்கே திரும்பி வருவதிலேயே இருந்தது. ஆசிரியரே சொல்வது போல, அவர்கள் சென்ற வேகத்தை விட, திரும்பி வந்த வேகம் அதிகம். குறிப்பாக வணிக சமூகம் அங்கே சம்பாதித்ததை எல்லாம் இங்கே கொண்டு வந்து கொட்டுவதிலேயே இருந்தது. இங்கே பங்களாக்கள் கட்டி பெருமைப்பட்டுக் கொள்வதிலேயே இருந்தது. உத்திரங்களும். தூண்களும் அசல் பர்மா தேக்காக்கும் என்று சிலாகிக்கப்பட்டன பலர் இங்கொரு குடும்பம் அங்கொரு குடும்பம் என்று வைத்துக் கொண்டார்கள். அங்கிருந்து கிளம்பும்போது அந்த குடும்பத்தை. பைசல் செய்துவிட்டு வந்தார்கள். சொந்த மண், சுற்றம், சூழல் என்ற பாசம் இருக்க வேண்டியதுதான். ஆனால் சோறு போடும் பூமியின் மீதும் கொஞ்சமாவது பாசம் வரவேண்டாமா? குறைந்தது அதை ஒரு இரண்டாவது தாயகமாகவாவது கருத வேண்டாமா? அங்கே வேரூன்றிக் கொண்டு இங்கே வந்து போயிருக்கலாம். அல்லாமல் வெறும் இரை தேடும் காக்கைகளாய் நின்றுபோயிருக்கிறார்கள்.
விளைவு என்ன? இன்று தமிழர்கள் அங்கே வெறுக்கப்படும், ஒடுக்கப்படும் இரண்டாந்தர குடிமக்கள். மலேசியாவில் அவர்கள் ஐந்தாம் வகுப்புவரை தான் தமிழ் படிக்க முடியும். மருத்துவப் படிப்புக்கு அந்த பூமி புத்திரர்களுக்கு 60 விழுக்காடு மதிப்பெண் வாங்கினால் போதும். தமிழ் மாணவன் 80 விழுக்காடு வாங்கவேண்டும். தமிழர்கள் வீடு வாங்குவதில் கூட பாரபட்சம். அதைப் பற்றி பேசக்கூடாது என்பதும் சட்டமாம், ஏனென்றால் அது sensitive பிரச்சினையாம்!
மலேசியாவின் எழுதப்படாத சட்டம் - ஒரே இனம் - ஒரே சமயம் - ஒரே நாடு. அதாவது - மலேசிய இனம் - இஸ்லாமிய மதம் - மலேசிய நாடு. தமிழர்கள், பாமாயில் ஈச்சமரக் காடுகளில் வெந்து அழியும் வெறும் தோட்டாக்காரர்கள்.
இதுவே செ.பி.யின் பயணக் கட்டுரைகளின் உயிர் கருவாக அமைந்து விடுகிறது. என்ன செய்வது. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடிவிடுகிறது.
பிற கட்டுரைகளிலும் பா.செ.வின் அனுபவமும் சிந்தனைகளும் பரக்கக் காண்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இரண்டொரு எடுத்துக் காட்டுகளைப் பார்க்கலாம்.
முதல் கட்டுரையில் (முன்னோடிய கிளி) ஓரிடத்தில் சொல்கிறார்.
1967-ல் ஆட்சி மாற்றம் (தி.மு.க கோட்டையைப் பிடித்தது) எல்லா ஆட்சி மாற்றங்களைப்போல, இதுவும் கனவுகளைச் சிதைத்தது. இலட்சியங்களைக் கைவிட்டு, பண்பாட்டைக் கைகழுவி நடந்த, “ஏற்கனவே தயாராகியிருக்கிற அரசு எந்திரத்தை எடுத்துக்கொண்டு மக்களுக்காக எதையும் செய்ய முடியாது என்ற உண்மை அறிய வந்தது”.
இது சர்வதேச, முக்காலத்திற்குமான வாய்ப்பாடாகவே இருக்கிறது. ஆனானப்பட்ட ருஷ்ய புரட்சியையே திசை திருப்பியது இந்த அரசு எந்திரம்தான் - அதிகார வர்க்கம் தான். ஜாரின் போலீஸ்தான் புரட்சி அரசாங்கத்தின் KGB-யாக மாறியது. விளைவு, மீண்டும் அதே “இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் கொடுமையெல்லாம் (சோஷலிச) அறமாகி தீர்ந்து போதல்.”
இந்த அதிகார வர்கத்தின் மனோபாவத்தை சுத்திகரிக்கும் முயற்சிதான் மாவோவின் கலாச்சாரப் புரட்சி. அனால் அதுவும் அட்டகாசமான பரிகாசத்தோடு விரைவில் ஜீரணம் கொள்ளப்பட்டது.
இங்கே 47-ல் மவுண்ட் பேட்டனுக்குப் பதில் நேரு வந்தார். ஆனால் அரசு எந்திரத்தை இயக்கியவர்கள் வெள்ளைக்காரனுக்கும் அவனது தத்துவார்த்தங்களுக்கும் லால் சலாம் போட்டுக்கொண்டிருந்த அதே ICS அதிகாரிகள். பின்னால் இவர்கள் IAS, IPS என்று பெயர் மாற்றம் கொண்டார்களே தவிர குணாம்சத்தில் அப்படியேதான் இருந்தார்கள். ஒருமுறை அண்ணாதுரை சொன்னது போல 'இவர்கள் நிரந்தரமானவர்கள்' மக்கள் பிரதிநிதிகளாய் ஆள வந்தவர்கள் தற்காலிகமானவர்கள்.
சமீபத்திய உதாரணம் தாமிரபரணி படுகொலைகள். அந்த போலீஸ் அராஜகத்தை அன்றைய முதலைச்சர் கருணாநிதியும் மூடி மறைத்தார். கருணாநிதி மீது ஏதேதோ குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் ஜெயலலிதாவும் இந்த விஷயத்தை மட்டும் கண்டு கொள்வதில்லை. ஏனென்றால் நள்ளிரவில் கருணாநிதியை அடித்து இழுத்துப்போக இந்த போலீஸ் உதவிதானே அவருக்கும் வேண்டும்.
இந்த தேர்தலின் போது ஒரு சம்பவம். இது தாமிரபரணி படுகொலை பற்றி ஜீவா இயக்கத்தில் ஒரு நாடகம் நெல்லையில் அரங்கேற்றப்பட்டது. மிகவும் எழுச்சியூட்டக்கூடிய சிறப்பான நாடகமாக அது இருந்திருக்கிறதை, பார்வையாளர்களே பொங்கி அராஜகத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த நாடகம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நிறுத்தியவர்கள் யார் தெரியுமா? அதே தாமிரபரணி சம்பவத்திற்கு மூலகாரணமான பேரணியை நடத்திய டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியினர். காரணம் என்ன? அவர்கள் சொன்னார்களாம், இப்போது நாங்கள் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். இப்படி நாங்கள் நாடகம் போட்டால், ஒரு நாடகத்திற்கு அய்யாயிரம் வோட்டுகள் அல்லவா பறிபோய்விடும் என்று. சரி தி.மு.க அணிக்கு வாக்கு நட்டத்தை ஏற்படுத்தும் இந்த நாடகத்தை அ.தி.மு.க. அணி ஏன் நடத்துங்கள் என்று கூற முன்வரவில்லை? அவர்களுக்குத் தெரியும் இந்தத் தாமிரபரணிக்களை நாமும் முன்பு எத்தனையோ முறை எங்கெங்கோ நடத்தியிருக்கிறோம். இனியும் நடத்த வேண்டி வந்தாலும் வரலாம். நாம் ஏன் 'நமது நண்பர்களோடு' பகைத்துக்கொள்ள வேண்டும்? இந்த 'நிரந்தரமானவர்கள்' காட்டில் நிரந்தர மழை. மக்கள் வயிற்றில் எப்போதும் நெருப்பு. ஒரு அரசியல், சமூக, பொருளியல் மாற்றம் என்று வருகிறபோது, அதை செயல்படுத்த அதற்கான அமைப்புகள் தேவை. எந்த மாற்றம் வந்தாலும் ஏற்கனவே இருக்கிற குதிரை மேல் தான் சவாரி என்றால், இந்த 'ஆள் கண்ட' குதிரைகள் கொண்டு சேர்க்கிற இடத்திற்குத்தான் மாற்றங்களும் போய்ச்சேரும். இந்தப் 'புதிய செயல்படுத்தும் அமைப்புகள்' பற்றிய சிந்தனையே இல்லாது இருப்பது இன்றைய தலையாய சோகங்களில் ஒன்று. இதைத்தான் பா.செ குறிப்பிடுகிறார்.
“இலக்கியவாதி என்ற அடையாளங்களுடன்” என்ற கட்டுரையில் தீர்க்கமாகச் சொல்கிறார்.
"இந்த சமுதாயத்திற்கு எந்த ஒரு நீதியும் சொல்ல வரவில்லை என்று சில எழுத்தாளர்கள் எச்சரிக்கையாக முன் தடுப்பு அணை கட்டிக்கொள்கிறார்கள். அது அவர்களின் எழுத்துக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவும் ஆகிவிடுகிறது. இந்தப் பாதுகாப்பு வளையங்களுக்குளேயே தங்கள் எண்ணங்கள், எழுத்துக்கள் அடக்கிக் கொள்கிறார்கள். இன்னொரு வகையில் சமூக நோக்கம் என்பதை துடைத்து வழித்தெறிந்து விடுகிற அறிவு ஜீவிப் பணிக்கு இது கவசமாகிறது.”
"தனது சொந்த எழுத்துக்கு நேர்மையாக இருக்கக் கடமைப்பட்டவன் எழுத்தாளன். நெஞ்சுக்கு நேர்மை இல்லாத எழுத்துக்களைத் தருவது அங்கீகாரமாகி விடக்கூடாது."
“கவிதை இன்னொரு வகை” கட்டுரையில்
"அந்தக் காலத்தில் கல்விப் பயிற்சி உடையவர்கள் கைவிரல் எண்ணிக்கையில்தான் இருந்தார்கள். அதற்கு அப்பால் விரிந்து பரந்து இருந்தது கூட்டம். தேர்ந்த கல்வியாளர்களுக்குக் கவிதை போல பெருந்திரள் மக்கள் கூட்டத்திற்கு விடுகதை, சொலவடை கதைப்பாடல், தாலாட்டு, ஒப்பாரி, சடங்குப் பாடல், காதுகுத்துப் பாடல் போன்ற வாய்மொழி மரபிலக்கியம் இருந்தது. மக்கள் போலவே இவையும் நிலமெங்கும் கொட்டிக்கிடந்தன."
கவிதை மொழி புதிய சொற்களை, சொல்லாடல்களை, சொற் சேர்க்கைகளைத் தேடுகிறது. ஏனெனில். அது புதிய வாழ்க்கையை அந்த வாழ்க்கை எழுப்பும் கேள்விகளை சொல்லுக்குள் கொண்டு வர எத்தனிக்கிறது.
ஆனால் இவ்வளவு எழுதும் பா.செ.வுக்கு சட்டென்று ஒரு மனக்குறை உண்டாகிவிட்டது போல் தோன்றுகிறது. அதாவது நகைச்சுவைக் கட்டுரை ஒன்றுமே இல்லையே என்று. ஆகவே வந்தது வரட்டுமென்ற அசாத்திய துணிச்சலோடு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையின் தலைப்பு "ரூபாய்க்கு 90 பைசா" என்றிருக்க வேண்டும். ஆனால் அதையும் தமாஸாக 'தி.க.சி திறனாய்வுகள் - பேசும் கால்க்காசு கடுதாசி' என்று வைத்திருக்கிறார்.
தி.க.சி நம்மவர்தான், நல்லவர்தான். நமது மரியாதைக்கு உரியவர்தான். ஒருவகையில் சொன்னால் நல்ல டிரில் மாஸ்டர். நம்மில் சிலரை அல்லது பலரை தட்டிக் கொடுத்து ஓடச் சொன்னவர். பாயச் சொன்னவர். தாண்டச் சொன்னவர். நமது பள்ளியை விளையாட்டுத் துறையில் மாவட்டத்தின் முதல் இடத்திற்குக் கொண்டு வந்தவர். ஆனால் யாராவது ஒருவர் தங்களது டிரில் மாஸ்டர் என்பதற்காக, முதியோர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் ஏழாவது வந்தவரை முதலிடத்தில் வந்ததற்குச் சமம் என்று சாதிப்பார்களா? சாதித்துவிட முடியுமென்று 32 பக்கம் எழுதித் தள்ளியிருக்கிறார் பா.செ.
அனால், உலகத்தில் உள்ள சட்ட நிபுணர்கள், அறிவாளிகள் எல்லாம் கூடி, அறு மாதம் - உட்கார்ந்து தலையைப் பிய்த்துக் கொண்டாலும் சரி, ரூபாய்க்கு 90 பைசா என்று நிலை நாட்டிவிட முடியாதே என்பதுதான் நம்மை உறுத்துகிறது. அதுசரி, நகைச்சுவை என்பதற்கு இலக்கணம் சொல்லும் போது எங்கே இயல்புக்கு மாறானது நடக்கிறதோ அங்கே ஹாஸ்யம் உண்டாகிறது என்று| தானே சொல்கிறார்கள்.
- எண்ணம், ஜெயந்தன் கட்டுரைகள்
கருத்துகள்
கருத்துரையிடுக