கரிசல் நிலத்தின் கதைசொல்லி பா.செ - கே.எம்.வேணுகோபால்

பா.செயப்பிரகாசம் என்றென்றைக்குமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார் என்ற செய்தி கடந்த 23ஆம் நாள் மாலை தெரியவந்ததும் அதிர்ந்துதான் போனேன். அன்றைக்குக் காலையில் தான் ‘நன்றி’ என்று ஒற்றைச்சொல் குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார். இனி அவரிடமிருந்து அழைப்புகளும் செய்திகளும் வராது, அவரது வாஞ்சை நிறைந்த குரலைக் கேட்க முடியாது, அவரிடம்  பேசத் தோன்றும்போது நானாகப் பேசவும் முடியாது என்கிற நிதர்சனம் உறைக்க நேரம் பிடித்தது.

செயப்பிரகாசத்தை ஒரு விசித்திரமான சூழலில்தான் நான் அறிமுகம் கொண்டேன். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் அங்கம் வகித்த ராஜா முகம்மது,  அமைச்சர் ஆவதற்கு முன்பே இன்குலாப் வாயிலாக எனக்குப் பழக்கம். அ.தி.மு.கழகத்தில் இருந்தாலும் இடதுசாரியினருடன் மிகுந்த தோழமை பாராட்டிவந்தவர் அவர். நான் நடத்திய விடியல் இதழின் வாசகர் அவர். ஒரு கட்டத்தில் விடியல் தொய்வின்றி வருவதற்குப் பல வகையிலும் உதவி புரிந்தவர். அமைச்சரான பின்னரும் அவரைப் பல்வேறு அலுவல்கள் நிமித்தம் அடிக்கடிச் சந்தித்து வந்தேன். 

அப்படியான ஒரு நாளில் அமைச்சரைப் பார்க்கப்போனபோது அவருடைய அறையில் அவருக்கு முன்பாகப் பலர் அமர்ந்திருந்தனர். கவிஞர்கள் மு.மேத்தா, கங்கைகொண்டான், இ.முத்துராமலிங்கம் ஆகியோர் எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர்கள். அவர்களுக்கு அருகில் ஒருவர். அவரது பக்கத்து இருக்கையில் போய் உட்கார்ந்துகொண்டேன். யாரும் யாரோடும் பேசிக்கொள்ளவில்லை. சற்றுநேரத்தில் அமைச்சர் மவுனம் கலைத்தார்: “ஏன் வேணு, உங்களுக்கு செயப்பிரகாசத்தைத் தெரியாதா? “ என்று கேட்டார். “தெரியுமே! அரிதாகக் கடிதங்கள் எழுதிக் கொள்வோம். இதுவரை நேரில் பார்த்ததில்லை.” என்றேன். “அதுதானே பார்த்தேன். நீங்கள் ஒருகூட்டுப் பறவைகளாயிற்றே, சரி, இப்போது பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருப்பவர்தான் ஜே.பி“ என்றார் ராஜாமுகம்மது. நானும் ஜேபியும் சிரித்துக்கொண்டே கைகொடுத்துக்கொண்டோம். 

அதற்குப் பிறகு அவரை வீட்டிலும் அலுவலகத்திலுமாகப் பல முறை சந்தித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையிலும் எனது இடுக்கண்களைக் களைந்திருக்கிறார். அவற்றை விரிக்கின் பெருகும்,

பிறிதொரு வாய்ப்பில் தனிக் கட்டுரையாக அவற்றையும் அவரது படைப்பாளுமை குறித்தும் எழுதுகிறேன். 

இரண்டு மாதங்களுக்கு முன் ஒருநாள் (25 ஆகஸ்ட் ’22) அவர் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவைத்தார். அதில் எங்கள் திருமணத்தின்போது எடுத்த புகைப்படத்தைக் குறிப்புடன் இணைத்திருந்தார். ”இது ஒரு அபூர்வமான படம். தோழர் கே. எம். வேணுகோபால் விடியல் என்ற புரட்சிகர இதழின் ஆசிரியராக இருந்தவர். அதனால் அடக்குமுறைக்கு ஆளானவர்.  அவருடைய திருமண நிகழ்வில் (18-5-1988) நானும் எழுத்தாளர்களும்.


நிற்பவர்கள்: தோழர்கள் அறிவுறுவோன், பாவைச்சந்திரன், பழநிபாரதி, ப.திருநாவுக்கரசு, ஓவியர் சந்தானம், து.மூர்த்தி, அரணமுறுவல், சாந்தாராமன், இராமநாதன், செல்வபாண்டியன்.

அமர்ந்திருப்பவர்கள்: தோழர் விடியல் கே.எம்.வேணுகோபால் & அவர் துணைவியார், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், என்.ஆர்.தாசன்.

அந்தப் படத்தை நான் கூடப் பாதுகாத்துவைக்கவில்லை; ஜேபிக்கு என்ன தோன்றிற்றோ தெரியவில்லை 34 ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருந்து முகநூலில் பதிவேற்றி அதன் நகலைக் குறுஞ்செய்தியில் இணைத்து எனக்கும் அனுப்பிவைத்ததை என்னவென்று சொல்ல? அந்தப் படத்தில் இருப்பவர்களில் பலர் இன்றில்லை. இப்போது பா.செயப்பிரகாசமும் இல்லை. 

அதைத் தொடர்ந்து அழைத்தார். “அழைத்ததில் மகிழ்ச்சி. படப்பகிர்வுக்கு நன்றி” என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.   

அடுத்த மாதம் இன்குலாப் நினைவுநாள் வருவதையொட்டி இன்குலாப் அறக்கட்டளை உறுப்பினர்கள் என்கிற முறையில் அது குறித்து விவாதிக்க சென்ற வாரம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். “நிகழ்ச்சியை நீங்களே கலந்துரையாடி முடிவு செய்யுங்கள். உடல்நிலை காரணமாக நேரிலும் உரையாடல் அளவிலும் பங்கேற்க இயலாது. தொடர்ந்து எடுத்துச் செல்லுங்கள்” என்பதே அவர் கடைசியாக அனுப்பிய செய்தி.

’தொடர்ந்து எடுத்துசெல்லுங்கள்!’ என்னும் வாசகம் எத்தனை பொருள் செறிந்தது! 

கரிசல்காட்டின் வாழ்வியலைச் சிறுகதைகளாக, புதினங்களாக, கட்டுரைகளாக இறுதிமூச்சு வரை எழுதிக்குவித்த அந்தக் களப்போராளியின் நினைவை நம் நெஞ்சோடு வைத்துக் காப்போம்.

- கே.எம்.வேணுகோபால், காக்கைச் சிறகினிலே, நவம்பர் 2022


தூவானம்

கீழ்க்காணும் செய்தி பா.செயப்பிரகாசம் நினைவுச் சிறப்பிதழுக்காக நான் எழுதி, இடம் பெறாமல் போனது. பத்தியின் நீளம் கருதி, வடிவமைப்பாளர் கேட்டுக்கொண்டதன் பேரில், என் தன்னனுபவமாக இருந்ததால்,  நான் கத்தரித்த பகுதி இது. ஆயினும், ”தாமரை மலரில் மனதினை எடுத்துத் தனியே வைத்திருந்தேன்” என்று கண்ணதாசன் சொன்னதைப்போல நான் அந்தப் பகுதியைத் தனியே வைத்திருந்தேன். ஆனால், ஜெ.பி.யின்  உதார குணத்தைச் சொல்லாமல் அவர் குறித்த பண்போவியம் முழுமை பெறாது என்பதால் இப்போது உங்களுடன் பகிர்வதில் மனநிறைவு காண்கிறேன்:

”பா.செ. தோழர்களுக்கு உதவுவதில் மனநிறைவு கண்டவர். தன்னையும் உள்ளடக்கிய அதிகார வர்க்க  வட்டத்தைத் தன்னைச் சார்ந்தோருக்கு உதவுவதற்காகப் பயன்படுத்துவதைத் தமக்குக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி உவந்தவர்.

இதைச் சொல்லும்போது இலக்கியம், அரசியல் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பால் தனிப்பட்ட முறையில் எனக்கு ஜெபி செய்த உதவி ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. தங்கசாலை, ஏழு கிணறு பகுதியில் என் தந்தையார்  நடத்திவந்த உணவகத்தில்  மாநகராட்சியிலிருந்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் வந்து ஏதேதோ குறை கண்டுபிடித்துக் கையூட்டு எதிர்பார்த்துத் தண்ணீர் வினியோகத்தைத் துண்டித்துவிட்டார். குடிநீர் இல்லாமல் வியாபாரம் முடங்கும் நிலை. அப்போது  குடிநீர் வடிகால் (மெட்ரோ வாட்டர்) அலுவகத்தில் ஜே.பி தலைமைப் பொறுப்பில்  இருப்பது என் நினைவுக்கு வர, சிந்தாதரிப்பேட்டையில் இருந்த அலுவலகத்திற்கு விரைந்து சென்று அவரைச் சந்தித்து விவரத்தைச் சொன்னேன். அதனைக் கேட்டறிந்து உடனே அந்தச் சுகாதாரத்துறை அதிகாரியைத் தொலைபேசியில் விளித்து இன்னல் களைய உத்தரவிட்டார். நான் வீடு வந்து சேர்வதற்குள் தண்ணீர் வந்துவிட்டது. காலத்தினால் அவர் செய்த உதவி தினைத்துணையெனினும் பயன் தெரிந்த நான் பனைத்துணையாகக் கொண்டேன். அதை மறக்க முடியுமா?

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஒரு நதியின் மரணம்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நூற்றாண்டுகளினூடாக நடக்கும்‌ குரல்