காலகட்டம் சார்ந்துதான் இலக்கிய வெளிப்பாடும் இலக்கியவாதியும் இருக்கிறார்கள் - பா.செயப்பிரகாசம் நேர்காணல்
(புதிய புத்தகம் பேசுது, ஜூலை 2004)
சமூக அக்கறையுடன் எழுதுகிற தமிழ் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் பா.செயப்பிரகாசம் தன் மண்ணையும் மக்களையும் முப்பது ஆண்டுகளாக படைப்புகளாக்கி வருபவர். ஒரு ஜெருசலேசம, காடு, கிராமத்து ராத்திரிகள், இரவுகள் உடையும், மூன்றாவது முகம், புதியன, இரவு மழை, புயலுள்ள நதி, பூத உலா ஆகியவை இவரது சிறுகதைத் தொதிகள். கட்டுரை தொகுதிகள்: தெக்கத்தி ஆத்மாக்கள் வனத்தின் குரல், கிராமங்களின் கதை, நதிக்கரை மயானம். கவிதைத் தொகுதிகள்: சோசலிசக் கவிதைகள், இரத்த சாட்சிகள், அவசரநிலை ஆகிய மூன்றும் இவர் தொகுத்த மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுதிகள். இத்தொகுதிகளில் இவரது மொழிபெயர்ப்பு கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. களப் பணியாளர், பத்திரிகையாளர், பேச்சாளர் என பல்வேறு தளங்களில் செயல்படும் இவர் 'சூரியதீபன்' என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.
நீங்கள் பிறந்த ஊர் குடும்பச் சூழல்... இவற்றினூடாக ஒரு கதைக்காரராக எவ்வாறு பரிணமித்தீர்கள்?
மதுரைக்குத் தென்புற வட்டாரம் எல்லாவற்றையும் கரிசல் சீமை என்பார்கள். கரிசல் சீமையிலே முன்பு திருநெல்வேலி மாவட்டம் (இப்போது தூத்துக்குடி மாவட்டம்) இராமச்சந்திராபுரம் தான் நான் பிறந்த ஊர். பாரதி பிறந்த எட்டயபுரத்திலிருந்து 30 கி.மீ தூரம்.
அப்பா சாதாரண விவசாயி. என்னோடு பிறந்தவர்கள் மூன்று பேர். ஓர் அண்ணன்; இரண்டு தங்கைகள். கடைசித் தங்கை பால்குடி குழந்தையாக இருக்கிறபோது தாயார் இறந்து விட்டார். அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது.
அம்மாவைப் பெற்ற பாட்டிதான் எங்களை வளர்த்தார். சிறு வயதிலேயே மாடு மேய்த்திருக்கறேன், சாணி பொறுக்கியிருக்கிறேன், கலப்பைப் பிடித்து உழுதிருக்கிறேன், களையெடுத்திருக்கிறேன், புல்கட்டு சுமந்திருக்கிறேன், கதிர் அறுத்திருக்கிறேன், கம்மங் காட்டுக் காவல் காத்திருக்கிறேன். பள்ளிக்கூடம் போய்க்கொண்டே இவையெல்லாம் கூலிக்காக நான் செய்த வேலைகள். களை முளை காலத்தில் பள்ளிக்கூடத்தில்; பிள்ளைகள் காணாமல் போய் விடுகிறார்கள். இதுதான் காரணம்.
மானாவாரி புஞ்சை நிலங்களில் மழை பெய்தால்தான் விவசாயம். ஒவ்வொரு பருவத்துக்கும் சொல்லி வைத்ததுபோல் மழை பெய்ய வேண்டும். காற்றடிக்க வேண்டும். ஆனால் மழையும் காற்றும் அந்த வட்டாரத்தில் யார் கையிலும் கிடையாது. புஞ்சைக் காடுகளில் விவசாயம் என்பது வானத்துக்குக் கீழே நடக்கிற சூதாட்டம்தான். எங்கள் வட்டாரத்து சம்சாரி அனுபவத்திலிருந்து சொன்னால், 'மழை பேஞ்சும் கெடுக்கும், காஞ்சும் கெடுக்கும்'. மகசூல் முடிந்த கோடைக் காலத்தில் கூட சாப்பாட்டுக்கு வழி இருக்காது. கொளுத்துகிற சித்திரை மாத வெயிலிலே, தீ மாதிரி பற்றி எரிகிற புழுதியிலே கால்கள் பதிய மஞ்சனத்தி மரங்களிலே (நுணா) காய்களைப் பறித்து, மண்ணிலோ சாம்பலிலோ புதைத்து பழுக்க வைத்து, மறுநாள் காலையில் எடுத்துப் பசி ஆறுவோம்.
வேலை இல்லாத பெரும்பாலான நாட்களில் கதை சொல்லிக் கொண்டே காலத்தைக் கடத்துவார்கள். அதனால் கதை கேட்பதென்பது இளம் வயது முதலே எனக்கு இயல்பான விசயமாகி விட்டது. பள்ளிப் படிப்பிலே முதன்மையானவனாக இருந்தேன். நிறைய பரிசுகள் வாங்கினேன். எங்கள் பள்ளியில் அப்போதுதான் நூலகம் உருவாகி இருந்தது. அங்கு இருந்த புத்தகங்களையும் வாசித்தேன்.
பிறகு எங்கள் கிராமத்தில் ஒருவர் கல்கியின் 'பொன்னியின் செல்வனை' எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் ஓர் உடல் நோயாளி. கொஞ்சம் மனநோயாளி. வசதிகளின் உச்சத்தில் அவர் குடும்பம் இருந்ததால் உடலையும் மனதையும் தேற்றுவதற்கு அவருக்கு கல்கி, ஆனந்த விகடன் ௭ல்லாம் வரவழைக்கப்பட்டன. அவற்றில் வந்த தொடர் கதைகளெல்லாம் பைண்ட் செய்யப்பட்டன. அவற்றை எல்லாம் அவ்வப்போது வாங்கி வந்து படித்தேன்.
தி.மு.க.வின் தீவிர தொண்டர் ஒருவர், பெயர் சீதாராமன். அவர் ஒரு படிப்பகம் மாதிரி. அவரிடமிருந்து பொன்னி, கலை மன்றம், திராவிட நாடு, முரசொலி இதழ்களையும், மலர்களையும் வாங்கி வாசித்தேன்.
கல்லூரிப் படிப்பில் நுழைவு வகுப்பில் (பியூசி) தடுமாறி தோல்வியுற்றபோது, இலக்கிய வாசிப்பு எனக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. அப்போது நாங்கள் மதுரைக்கு வந்திருந்தோம். மதுரை மேலமாசி வீதி மத்திய நூலகமே எனது வீடும் கூடுமானது.
வாசிப்பு எப்போதும் சலனமற்றிருப்பதில்லை. ஒரு தாவலில் அது படைப்பு உயரத்துக்குப் போகும். இந்த உயரம் தாண்டுதலை பிரக்ஞையோடு செய்பவர் எழுத்தாளர் ஆகிறார். அப்படித்தான் நானும் எழுத்தாளர் ஆனேன்.
1959இல் நான் எனது கிராமத்திலிருந்து மதுரைக்கு வந்திருந்த சமயம. அப்போதுதான் முதன் முதலாக தண்டவாளத்தையும் ரயிலையும் பார்க்கிறேன். காலில் செருப்பு இல்லாது இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் பொசுக்கும் தண்டவாளங்களில் கூட்டாளிகளோடு கைகோர்த்துக் கொண்டு காலையில் ஒரு முறையும், திரும்புகாலில் ஒரு முறையுமாக, சில நாள்களில் மதிய வெயிலில் பள்ளிக்கூடத்துக்கு ஒடுவேன். ரயில் நிலையத்தின் முன்னால் இடது பக்கம் உள்ள பள்ளியில்தான் படித்தேன். தண்டவாளங்களில் நடந்து பள்ளிக்கூடம் போகிறபோது தினந்தோறும் நான் சந்திக்கிற ரயில்வே கேட்கீப்பர் ராமசாமி தான் என் 'குற்றம்' கதையின் நாயகன். அவர் தண்டவாளத்தை ஓட்டியுள்ள பள்ளத்தில் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு பாகலும், புடலையும், பூசணியும் விளைவித்திருந்தார். எனது கதையில் அதை நெற்கதிராக மாற்றினேன். அங்கு நெற்கதிர்களைப் பயிரிட்டது குற்றமென்று மேலதிகாரியின் ஆட்கள், அறுவடை செய்து குவித்த நெல் மூட்டைகளை அள்ளிக்கொண்டு போவார்கள். ராமசாமி தனது மகளுக்கு மூக்குத்தியும் நகையும் வாங்கிப்போட வேண்டும் என்பதற்காகத்தான் ஆசை ஆசையாக அந்தப் பயிரை விளைவித்திருப்பார். ஆனால், அது குற்றம் என்று அதிகாரிகள் அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். "இந்த முறையும் உனக்கு நகை கிடையாது. அடுத்த பருவத்தில் செய்யலாம் மகளே என்று உடல் நடுங்கியபடி தந்தை சொன்ன மொழி மகளுக்குப் புரியவில்லை” என்று அந்தக் கதை முடியும்.
அப்போது தி.க.சி இளம் எழுத்தாளர்களின் கதைகளையெல்லாம் தாமரையில் வெளியிட்டு வந்தார். அதானால் இந்தக் கதைகயை அவருக்கு அனுப்பினேன். உடனே 'தாமரை' இதழில் வெளியிட்டார்.
'குற்றம்' கதையிலே, கேட்கீப்பர் ராமசாமியிடம் ஆலைத் தொழிலாளி, “அண்ணே, இது பணக்கார இடத்தில் இருந்து ஓடி வருகிற நச்சுத் தண்ணி, பல பேருடைய உயிரைக் கருக்கி சாம்பல் மோடாக்கிய கதை உண்டு. நமக்கு அது வேண்டாம்" என்பார். முதல் கதையிலேயே ஏழை, பணக்காரன் என்கிற ஏற்றத்தாழ்வை உரத்துப் பேசியிருக்கிறீர்கள். அதிகார வர்க்கத்தின் அத்து மீறலையும் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். இப்படியான சமூக அக்கறை எவ்வாறு உங்களுக்குள் உருவானது?
நான் அடிப்படையில் ஒண்ணுக்கும் வக்கில்லாத ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். மேனத்தான வாழ்க்கை எனக்குத் தெரியாது. மதுரைக்கு வருகிறபோது ஓர் ஆலைத் தொழிலாளி குடும்பம். என் சின்னையா (சித்தப்பா) மதுரையில் ஆலையில் வேலை பார்த்தார். வறுமையின் கிடுக்கிப் பிடிக்குள் அகப்பட்டு மூச்சுத்திணறிய குடும்பம். அதற்குள்ளிருந்துதான் எனக்கும் சுவாசக்காற்றை எடுத்துக் கொண்டேன். இதன் காரணமாக சமூகத்தின் அநீதிகளை, மற்ற மற்ற கொடுமைகளை எதிர்க்கிற மனபோக்கு இயல்பாகவே விளைந்தது. ஆகவே, ஒரு சமூகப் போராளியாக உருவாகுவது என்பது மாணவப் பருவத்திலேயே எனக்கு நிகழ்ந்துவிட்டது. பிறகு, இலக்கியத்தில் இயங்கும் போதுகூட நான ஒரு சமூக மனிதன் என்ற அடிப்படையில்தான் இயங்க ஆரம்பித்தேன்.
உங்கள் இறுகதைகளில் 'அம்பலக்காரர் வீடு' கதையை மிக முக்கியமான கதையாகக் கூறுகிறார்கள். உங்களுக்கு முக்கியமாகப் படுகிற உங்கள் கதை?
சரஸ்வதி மரணம், கரிசலின் இருள்கள், கோயில் மாடு, ஆறு நரகங்கள், எதையும் செய்வீர், காற்றில்லா கூடுகள், பூத உலா என நிறையக் கதைகள், நிலமானிய கட்டுமானத்தின் உடைவு பண்பாட்டுச் சிதைவுகளாக வாழ்வியலில் வெளிப்படுகிறது. அந்தக் கதைதான் 'அம்பலக்காரர் வீடு' போன்ற பெரும்பாலான தொடக்க கால கதைகள்.
நவீன பார்வைகள் உள்ளிறங்குகிறபோது ஏற்படுற அதிர்வுகள் பற்பல நுகர்வு கலாச்சாரம் பற்றி கதை 'எதையும் செய்வீர்'.
சூரியன் உதிக்கும் கிராமம், நெருப்பு வெள்ளமும் சைதான்களும், வளரும் நிறங்கள் போன்ற கதைகள் புரட்சிகர உள்ளடக்கம் கொண்டவை.
பெண்களின், பிரச்சினைகளை மையமாகக் கொண்டவை 'இரவுகள் உடையும்', 'கோயில் மாடு' போன்ற சில கதைகள்.
ஒரு ஜெருசலேம், பறவைகள், கரிசலின் இருள்கள், காடு போன்றவை என்னுடைய தொடக்க கால கதைகள். அவை எனது பால்ய கால அல்லது சிறு வயது அனுபவம். உளவியல் சம்பந்தளன வெளிப்பாடு தலித்திய சிந்தனையுடன் தாலியில் பூச்சூடியவர்கள், சாதி, புதியன தொகுதியில் உள்ள பல கதைகள் இப்படி தனித்தனியாக பிரித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
கரிசல் எழுத்தாளர்களில் உங்களின் தனித்துவம் பற்றிய உங்களின் அபிப்ராயம்?
முதலாவதாக, சமூக அக்கறை கொண்ட விசயத் தேர்வு. இரண்டாவதாக எனது சொல்முறை நான் கைக்கொண்டது கவித்தத்துவத்துடன் கதை சொல்லும் முறை. பாத்திரங்களின் உரையாடல், ஒருவர் மற்றவரைப் பற்றிக் கொள்ளும் எண்ண ஒட்டம் இவை வாய்மொழி மரபில், என் ஜனங்களின் இயல்பான பேச்சு மொழியில் இருக்கும். பிற பகுதிகள், ஆசிரிய மொழியில் இருக்கும். இந்த இடங்களில்தான் கவித்துவம் கொண்ட கலைநயம் கொழுத்த சொல்லாடல் எடுத்துரைப்பு கையாளப்படுகிறது. இது அதிகப்படியாக வெளிப்பட்டுள்ளது என்ற விமர்சனமும் உண்டு.
கி.ராஜநாராயணன் எழுத்துகள் அப்படியானதல்ல. அவரது கைச்சமையலில் காரம், உப்பு, புளிப்பு, உவர்ப்பு சமமாக இருக்கும். ஒரு துளிகூட குறையாமல் வட்டார மொழி அமையும்.
பூமணி வட்டார மொழிப்பாங்கு எவ்வளவு உண்டோ அவ்வளவையும் காட்ட முயலுகிற மாயாஜாலக்காரர். அவர் 'வலதுல கொடுத்து இடதுல வாங்கிடுவான்' என்று பேச்சு சாதுரியம் கைவந்த பெண்டுகளைப் பற்றி கிராமங்களில் சொல்வார்கள். பூமணியும் வட்டார மொழிக்கு உள்ளே புகுந்து வெளியே வந்து வெளுத்து வாங்குவார்.
சோ.தர்மன் கரிசல் காடு தந்த நல்ல விளைச்சல். அவருடைய படைப்புகளில் வட்டார மொழி வலியப் பிசைந்து தரப்படுகிறது போல தோற்றம் தென்படும். ஆனால், அளவாக ஆட்கொள்வார்.
எனக்கு ரொம்ப பிரியமான படைப்பாளி ச.தமிழ்ச்செல்வன். இவரது எடுத்துரைப்பு முறை வட்டாரச் சாயலா, தனதா என்று வித்தியாசம் தெரியாமல் இயல்பாக இருக்கும்.
கவித்துவமான, கலைநயம் கொழுத்த நடையை எவ்விதமாக தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள்?
நான் புதுமுக வகுப்பு தோல்வியுற்று ஓராண்டு நூலகமே கதி என கிடந்தேன் என்று சொன்னேனல்லவா, அப்போது தமிழில் வந்த படைப்புகளைக் காட்டிலும், மொழியாக்ககங்களையே அதிகம் வாசித்தேன். உரைநடையாக இருந்தாலும், நாவலாக இருந்தாலும், சிறுகதையாக இருந்தாலும் எல்லாவற்றிற்கும் கவித்துவமான வரிகளை அதிகம் நேசிப்பேன். உதாரணமாக, நேரு மகளுக்கு எழுதிய கடிதத்தில், “அந்தச் சிறைச்சாலைக்கு வெளியே இருக்கிற பொட்டல் வெளியில் ஒரே ஒரு புல் மட்டும் அதிசயத்தோடு இந்த இடத்திலா நாம் முளைத்திருக்கிறோம் என்று வியப்போடு பார்ப்பதாக” எழுதியிருப்பார். ஒரு புல் காற்றில் ஆடுவதை அவர் அவ்வாறு குறிப்பிடுவார். பொற்றைகாட் ஒரு கதையில், "மூன்று எழுத்தில் ஒரு கவிதை உண்டு. அது காதல்" என்று எழுதியிருப்பார். இப்படியான கவித்துவ வரிகள் என்னை ஈர்த்தன. ஒரு கட்டத்தில், கலில் ஜிப்ரான் தத்துவார்த்தமாக கவித்துவத்தோடு எழுதியதுபோல, நானும் கல்லூரி நாட்களில் எழுதிப் பார்த்ததுண்டு. இவையெல்லாம் உருக்கொண்ட பிறகு தான் என் முதல் கதையை எழுதினேன். அந்தக் கதையின் கவித்துவ நடையை தி.க.சி, சேலம் தமிழ்நாடன், என் மதுரை நண்பர் பாண்டியன் போன்றோர் பாராட்டி எழுதினார்கள்.
'மூன்றாம் பிறையின் மரணம்' கதையின் கடைசிக் காட்சியில் அரிசிச் சோறு கிடைக்காததால், அந்த சிறுவன் இறந்துபோன பிறகு கையிலே அரிசிச் சோற்றை வைத்து இடுகாட்டிலே புதைப்பார்கள். அதுபற்றி எழுதுகிறபோது 'ஒரு நிலா, கைக்குள்ளே ஒரு நிலாவை வைத்துகொண்டு தூங்குவது போல் இருந்தது' என்று எழுதியிருப்பேன். அதனை புவியரசு மிகவும் சிலாகித்து 'அற்புதமான வரிகள்' என்று கூறினார். எனது முதல் கதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய கி.ராஜநாராயணன், 'இவ்வளவு கவித்துவமாக எனக்கு எழுத வரமாட்டேங்கறதே' என்று குறிப்பிட்டிருந்தார். இத்தகைய ஊக்கப்படுத்தல்கள் எல்லாமே எனக்கு அதிலே மேலும் மேலும் நடைபோடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்து வந்தது. அதனாலேயே அந்த மொழிநடையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறேன்.
என் படைப்புகளை மனசனளவில் மறுவாசிப்பு செய்து பார்க்கறேன். அது உண்மை. இயற்கையோடு கலந்த எனது வாழ்க்கை அங்குள்ள மக்கள் விதைப்பு முதல் வெள்ளாமை, இயற்கையை நேசித்து கட்டுப்பட்டு பெருந்தி வாழ்தல் இவையெல்லாம் நானறியாமலே தன்னியல்பாகவே வெளிப்பட்டுள்ளன. இப்படி பார்க்கிறபோது, எனக்கே அது அதிசயமாகத்தான் இருக்கிறது.
அந்தப் புஞ்சைப் பறவைகளின் வாழ்க்கையும் இயற்கையோடு பிணைப்புண்ட அசைவுகளுமாக தன் உஷாரோடும் தன் உஷார் இல்லாமலும் என் படைப்புகளில் வெளிப்பட்டுள்ளன. தன் உஷார் இல்லாமல் என்பதற்கு என்னுடைய வாசிப்பும் வாழ்வும் அதன் இயல்பாக ஆகிவிட்டதால், எனக்குத் தெரியாமலே வெளிவந்தன என்பதாகப் பொருள்படும்.
'எதையும் செய்வீர்', 'பூத உலா' போன்ற சில கதைகளை வித்தியாசமான முறையில் எழுதியிருக்கிறீர்கள். சோதனை முயற்சியா?
பொதுவாகவே, பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட எனக்கு விருப்பமில்லை. சக எதார்த்த எழுத்தாளர்களைப் போல் இயல்பாக தன் போக்கிலே எழுதிக் கொண்டு போகவே விரும்புகிறேன். பரிசோதனை என்ற பெயரிலே அழகியல் அத்துமீறல்கள் இங்கே நடந்து கொண்டிருக்கின்றன. அழகியல் என்பது ஒரு கருத்தியலை வெளிப்படுத்துவதற்காக உண்டாவது. அந்தக் கருத்தியல்களுக்குள்ளேயே அழகியல் உள்ளடங்கி இருக்கவேண்டும். ஆனால், சோதனை முயற்சி என்ற பெயரிலே ஆதீத அழகியல் அவர்கள் கைக்கொள்கிறார்கள். அது அழகான பரு மாதிரியோ, மச்சம் மாதிரியோ இல்லாமல் சிலந்திக்கட்டி மாதிரி இருக்கிறது.
பஞ்சாபிக் கவிதை ஒன்று, மிண்டர் என்பவர் எழுதியது. வன்முறை எங்கிருந்து விதை போடப்படுகிறது, எப்படி விளைச்சலாகிறது, எல்லா வன்முறைக்கும் மூலம் அரச பயங்கரவாதம்தான் என அந்தக் கவிதை பேசும்.
“என் தோள்களில்
ஒரு போர்வை இருந்தது
என் கைகளில்
ஒரு புல்லாங்குழல் இருந்தது;
நான் எங்கும் செல்லவில்லை
ஏதொன்றும் செய்யவில்லை
என் தோள்களிலே
துப்பாக்கி வந்தது எப்படி?
கரங்களிலே பிணங்களைத் தந்தது யார்?”
ஆதிக்க சக்திகள்தான் வன்முறையை விதைக்கிறார்கள் என்பதுதான் அந்தக் கவிதையின் அடிப்படை.
ஈழத்து சிதைந்து போன வாழ்வு பற்றிய அன்றன் அன்பழகனின் ஒரு கவிதை:
“முற்றத்தில் படர்ந்திருந்த,நெருஞ்சியின் சாம்பலைஅள்ளிச் சென்றது காற்று;அச்சம் துறந்த ஆட்காட்டிகளின்பாடலில் நிரம்பி வழிந்தன வெளிகள்"
ஆனாலும், குமுறிக்கொண்டிருக்கற வெப்பம் தகிக்கிற காலகட்டம்தான் இது. நொறுக்கப்பட்ட மக்களான தலித்துகளின் விடுதலை, அடிமைச் சமூகமாகவே வைக்கப்பட்டிருக்கிற பெண்களின் விடுதலை, அடித்தளத்து மக்களின் விடுதலை இவையெல்லாம் காலத்தின் பிரச்சினைகளாக படைப்புகளாக முன்வந்து கொண்டுதான் இருக்கின்றன. இதுவரை பேசப்படாதவை பேசப்படுகின்றன.
எந்தக் கருத்தியலையும் சாராமல், எல்லா கருத்தியலையும் தேடிப்போவது... சாத்தியமா?
ஒரு படைப்பாளியின் ஆரம்ப கட்டத்தில் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து இயங்குவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அது, கட்சி அரசியலின் கருத்தியலாக இருக்கணும் என்கிற அவசியம் இல்லை. மனிதம் சார்ந்த சமூக அக்கறை சார்ந்த கருத்தியலில் இருந்தாலே ஒரு படைப்பாளி தனது படைப்புகளை வளம் கொண்டதாக ஆக்க முடியும். ஆனால், எந்தக் கருத்தியலும் சாராத ஒரு தேடல் என்று சொல்லிக் கொள்வது சரியல்ல.
கிராமத்துக் கலைஞர்கள் பற்றி "தெக்கத்தி ஆத்மாக்கள்' எழுத நேர்ந்த சூழல்...?
அவர்கள் வித்தியாசமான மனிதர்கள். சிலர் தமது வித்தையில் வித்தகர்களாகவும் சிலர் நல்லவர்களாகவும் வட்டார வாழ்வுக்குள் கிடந்தவர்கள்
என்னுடைய பால்ய காலம் முதல் எனக்குள் அனுபவமாக இறங்கி இருந்தார்கள். பால்ய காலம், இளவட்ட பருவம், அதற்குப் பின்னான வாழ்க்கையோடும் தற்போதுவரை அவர்களை பற்றிக் கேள்விப்பட்டுக் கொண்டிருந்தேன். அற்புதமான குணங்களோடும், குணக்கேடுகளோடும் எனக்குள் சேகாரமானார்கள்.
அந்தப் பிம்பங்களை இன்னும் தெளிவாக துலங்கிக் கொள்வதற்காக மறுபடியும் கிராமங்களுக்குப் பயணம் செய்தேன். முதலில் கலைஞர்களை மட்டுமே எடுத்துச் செய்ய வேண்டுமென்று நினைத்து, பிறகு வித்தியாசப்பட்ட குணச் சித்திரக்காரர்கள்வரை விரிவுபட்டுப் போனது.
நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். கலைஞர்களின் கலைச் சேவையை விட, அவர்களின் வாழ்க்கை சுவாரசியமானது. சிறப்பாக ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நாட்டுப்புறவியல் ஆய்வாளர், வட்டார பண்பாட்டு, மொழி, பாடல் சேகரிப்பாளர், தானறிந்த விசய ஞானத்தை மறைப்பில்லாமல் திறப்புச் செய்த தங்கம்மாள்புரம் 'அண்ணாச்சி எஸ்.எஸ்.போத்கையா' கொடுத்த போஷாக்கு இல்லாமல், 'தெக்கத்தி ஆத்மாக்கள்' கொழுகொழு வென்று வந்திருக்கமாட்டார்கள்.
கரிசல் மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கிராமமும் மக்களின் வாழ்க்கையும் இன்னமும் அப்படியேதான் இருக்கிறதா?
நான் பழகிய, எனக்குள் இறங்கிய கரிசல் சீமை ரொம்ப மாறிக்கிடக்கிறது. புஞ்சைத் தானியங்களுக்குப் (நவதானியம்) பதில் வணிகப் பயிர் பருத்தி, கொத்தமல்லி என்று ஐம்பது வருசத்துக்கு முன் பயிரிட ஆரம்பித்தார்கள். இப்போது மிளகாய் படுபோடு போகிறது. சட்டி மிளகாய், குண்டு மிளகாய் பயறு வகைகளில் உளுந்து பூவாணி (பாசிப்பு பயறு) முன்னெல்லாம் நிறைய. இப்போது பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு ஒரு சில இடங்களில் பயிறாகி நல்லபிடி பிடிக்கிறது.
விவசாயி வணிகப்பயிர் என்ற சூதாட்டத்தில் போய் மாட்டிக் கொண்டான். சரிவர வெள்ளாமை இல்லாத போது சவளுகிறான்.
ஊரில் மாதச் சம்பளக்காரர்கள் என்ற புதிய வரத்து வந்துள்ளது. மனிதர்கள் நவநாகரிகமாக ஆகிப் போனார்கள். முன்பு பண்டமாற்று முறை இருந்தது. இப்போது, முன்காலம் போல உள்ளுரிலேயே விலையாக்கி தன்னுடைய தேவைக்கு வைத்துக்கொள்ள விவசாயி சம்மதிக்கவில்லை. எந்த வெளைச்சல் என்றாலும் எடுத்துக்கொண்டு பக்கத்து நகரத்துக்கு ஓடுகிறான். கடந்த காலத்தில் நிலமானிய உடைமை முறைக்குள் அவனுக்குள் செயல்பட்ட கொஞ்ச நஞ்ச மனித குணங்களையும் எடுத்து வெளியே போட்டுவிட்ட வணிக வெக்கை, அருங்குணங்களையெல்லாம் உணத்திப் (உலர்த்தி) போட்டுவிட்டது. அந்தக் குணக்கேடுகளும், குணநலன்களும் தெக்கத்தி ஆத்மாக்களில் அதிக வடிவு கொண்டுள்ளன.
நாவல் எழுதும் எண்ணம் இருக்கறதா?
இரண்டு நாவல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்று, அன்றைய கிராமம் எப்படி இருந்தது. இன்றைய கிராமம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியது. இரண்டாவது, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றியது. இது கிட்டத்தட்ட எனது தன் வரலாறாக இருக்கும்.
கருத்துகள்
கருத்துரையிடுக