தட்டாசாரி வீட்டுக் குப்பை வீணாகத்தான் போயிருக்குமோ - இரா.குமரகுருபரன்


தோல்வி கண்டு, எஸ்.எஸ்.எல்.சி மறு தேர்வுக்காக, நாட்டுப்புறவியல் ஆய்வாளரும், முன்னோடியுமான பேராசிரியர் நா.வானமாமலையின் தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து மாணாக்கரானவர் கரிசல் வட்டாரத்திலுள்ள விளாத்திகுளம் தாலுகா கே தங்கம்மாள்புரம் எஸ்.எஸ்.போத்தையா (1933 - 2012). வளமான எதிர்காலப் பணி உயர்வு, சம்பளம் அனைத்தையும் துறந்து, ‘பைத்தியக்கார மனுஷனாக’, ஊர் ஊராகச் சென்று “தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்”, “தமிழக நாட்டுப் பாடல்கள்” ஆகிய நூல்கள் வெளிவர நாட்டுப் புறப் பாடல் கள் திரட்டியதை சிட்டைகளில்,சிகரெட் அட்டைக ளில், திருமண அழைப்பிதழ்களில், நாடக நோட் டிசு முதுகுகளில், குப்பைக்கூடை யில் கிடக்கும் ஒருபக்கத் தாள்களில், ஏன், உள் ளங்கையில் கூட அவசரத்துக்கு எழுதிக் குறிப் பெடுத்து அவர் பதிந்து வைத்திருந்தார். இதை அர்ப்பணிப் புணர்வுடன் சமகாலத்துக்கு “எஸ்.எஸ்.போத் தையா -நாட்டார் இயலின் தெக்கத்தி ஆத்மா” என்று முதல் நூலாகத் தொகுத்துள்ளார் கரிசல் இலக்கியவாதி பா.செயப்பிரகாசம். அடுத்த தொகுதிகள் “கரிசல் சொலவடைகள், நம்பிக் கைகள், தொக்கலவார் வரலாறு”, “எஸ்.எஸ்.போத்தையா அவர்களுக்கு பேரா நா.வா, கி.ரா, பொன்னீலன், பா.செயப்பிரகாசம் ஆகியோர் எழுதிய கடிதங்கள்“ இந்நூலைத் தொடர்ந்து வெளியாகவிருக்கின்றன.

“வட்டார வழக்குச் சொல் அகராதி” தொகுப்பதில் தனக்கு உறுதுணையாக இருந்த விவரணையை கரிசல் இலக்கியப் பிதாமகர் கி.ரா கச்சிதமான தனது அணிந்துரையில் “தோழரும், நண்பருமான பா.செயப்பிரகாசத்தின் கண்களில் இவை தட்டுப்படாமல் போயிருந்தால், நட்டம் நாட்டுப்புற இலக்கியத் துக்குத்தான்... முத்துக்களும், பவளங்களும் விளைந்து கடலுக்கடியில் காணாமல் அப்படியே கிடந்தால் யாருக்குப் பயன்... இந்த ‘தட்டாசாரி வீட்டுக் குப்பை’ வீணாகத்தான் போயிருக்கும். நல்லகாலம் தமிழுக்கு!“ என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.பேரா நா.வா.வின் நெல்லை ஆய்வுக்குழு, ஆய்வு அடிப்படையில் நாட்டுப்புறப் பாடல்கள் பாடியோர், கேட்டு எழுதியோர், பாடல் ஆதாரங்கள், பாடலின் வாழ்க்கைப் பின்னணி சமூக அடித்தளம் ஆகிய அம்சங்களுடன் வித்தியாசமான, புதிய அணுகுமுறையில் தொகுத்த அனுபவத்தை தமிழக பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தோழரான இரா.நல்லகண்ணு இந்நூலின் முன்னுரையில் பெருமிதமாகச் சுட்டிக் காட்டுகிறார். ‘பல்கலைப் பீடங்கள்’ போத்தையா வாழ்ந்த காலத்தில் அவரை அடையாளம் கண்டு கொள்ளாத ஆதங்கம் நமக்கிருந்தாலும், அவருக்கு அது துளியும் கிடையாது என்றும், தாழ்த்தப்பட்ட சாதி குறித்த இழிசொற்களை சொலவடைகளிலிருந்து நீக்கிய அவரது பக்குவத்தையும் குறிப்பிடும் பா.செயப்பிரகாசத்தின் கனமான தொகுப்பாளர் உரையைக் கண்கள் பனிக்காமல் கடந்து செல்வது கடினம். நூல் அஞ்சலில் கையில் கிடைத்த திருமண அழைப்புகளும், ஜனநாயக வாலிபர் சங்க மாத இதழ் “இளைஞர் முழக்கம்“ உறைகளும் கூட அவரது கையெழுத்தில் பாடல்கள் குறித்துக் கொள்ளத் தோதுவானதாக இருந்தது.

முற்சேர்க்கையில் இணைக்கப்பட்ட `போட்டோஸ்டேட்’ பக்கங்களில் பளிச்சிடுகிறது. “அஞ்சு கிணறு தாரேன் / அரைக் கோட்டை நெல்லு தாரேன் /வண்டி மாடு ரெண்டு தாரேன் / வாரியாடி என்னோட?” என்று ஆண் சொல்ல “அஞ்சு கிணறு வேண்டாம் / அரைக் கோட்டை நெல்லும் வேண்டாம் / வண்டிமாடு ரெண்டும் வேண்டாம்; ஒன்னை / எண்ணி மோசம் போக வேண்டாம்“ என்று பெண் எதிர்ப்பாட்டு பாடுவதும் (பக்.63) “பருத்தி எடுக்கையில / பலநாளுங் கேட்ட மச்சான் / ஒத்தையிலே இருக்கையிலே / ஓடிவந்தால் ஆகாதோ!“ (பக்.66), "குச்சுக் குச்சு ராக்கம்மா  /பொண்ணுண்டோ /கூசாலி ராக்கம்மா / பொண்ணுண்டோ” (பக்.352) ஆகிய வரிகளும் தமிழ் சினிமா மீது நாட்டுப்புறப் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். “உருண்ட மலை, திரண்ட மலை / ஒய்யாரக் கழுகுமலை” பாடல் (பக்.82) நாடார், மறவர் சாதிப் பெரிய பணக்காரர்களால் தூண்டிவிடப்பட்ட சாதிக்கலகத்தையும், சமூகத்தின் மீதான அதன் பாதிப்புகளையும் குறிப்புகளுடன் கூறுகிறது.

1964-இல் வெளியான “தமிழர் நாட்டுப் பாடல்கள்” நூலில் பேரா நா.வா தமது மாணவர் போத்தையாவின் பெரிய பங்களிப்பை சிலாகித்துப் பாராட்டுகிறார். கோடாங்கிப்பாட்டு புழக்கத்தில் வந்த கதையை சமூக உளவியல் ரீதியாக ஆய்ந்து குறிப்பு எழுதியுள்ளார் போத்தையா. “ஒம்பொண்டாட்டி எட்டி எட் டிப் பாக்கா/ ஒம்புருஷன் எட்டி எட்டிப் பாக்கான்“, “ரானாமூனா தண்டட்டி”, “ஏந்தலைக்கு எண்ண ஊத்து... எரும மாட்டுக்குப் புல்லு போடு”, "குன்னாங்குன் னாங்குர்ர்ர்... கோழி முட்டை சர்ர்ர்” ஆகிய பாலப் பருவ இசைப்பாடல் - விளையாட்டுகள் பற்றி இந்நூலில் இடம்பெற்ற கி.ரா கட்டுரை நமது இளம் பிராயத்தை நினைவு கூர வைக்கின்றன. வட்டார வழக்குச் சொல் அகராதிக்கு போத்தையா எழுதிய முன்னுரை இந்நூலில் இடம் பெறுகிறது. “புதுமைப்பித்தன் அவருடைய காலத்தில் எப்படிப் பண்டிதத் தமிழைப் புறக்கணித்து பாமரத் தமிழில் எழுதினாரோ, அதேபோல் ராஜநாராயணன் இலக்கணத் தமிழைப் புறந்தள்ளி பேச்சுத் தமிழிலேயே தமது படைப்புகளைக் கொடுத்து வருகிறார். பேச்சுத் தமிழிலே எழுதுவது என்பதைப் பெரிய போராட்டமாகவே நடத்தி வருகிறார்.... அவருடைய காலத்திலேயே அவரது பாணியில் அவரைப் பின் பற்றி எழுதக்கூடிய - ஏறக்குறைய 50 எழுத்தாளப் பெரும்படையை உருவாக்கி விட்டிருக்கிறார் என்பதே அவருக்குக் கிடைத்த வெற்றி... ’கரிசல் கதைகள்’ தொகுப்பில் "20 கரிசல் எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் பூமணி, பா.செயப்பிரகாசம், வீர.வேலுசாமி, ஆ.முத்தானந்தம், சோ.தர்மன், தனுஷ்கோடி ராமசாமி, மேலாண்மை பொன்னுச்சாமி, மு.சுயம்புலிங்கம் ஆகியோர்“ என்று பட்டியலிடுகிறார் போத்தையா (1998-எட்டையபுரம் பாரதி விழாவில் பேசிய உரை). “தெக்கத்தி ஆத்மாக்களைப் படைக்க என் எழுதுகோலுக்கு சேனைப்பால் தொட்டு வைத்தவர் - நாட்டார் வழக்காற்றியல் கொடையாளி - தங்கம்மாள்புரம் எஸ்.எஸ்.போத்தையா அவர்கள்... ஒருவர் பின் ஒருவராய் அணிவகுத்து வந்த ஆத்மாக்களுக்கு அவர் உந்துசக்தி“ என்ற வாசகத்துடன் காணிக்கையாக்கப்பட்டதையும், முதல் தடவை போத்தையாவைப் பார்த்த தோழர் ஜீவா அவரைத் தன் அறையிலேயே தங்கவைத்ததையும் நெகிழ்வாகப் பதிவு செய்கிறார் பா.செ.

தகப்பனார் சித்தவ நாயக்கர் 1951ல் செல்வன் போத்தையாவுக்கு எழுதிய கடிதங்கள் கோர்ட் வாய்தாவுக்குள் சிக்கிய குடும்பச்சூழலை வாசகருக்கு உணர்த்தும். பல இலக்கியவாதிகளுக்கும், ஏணியாகி நின்றிருக்கிறார் இந்த இடைநிலைப்பள்ளி ‘ஏழாப்பு வாத்தியார்’!

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி