முன் ஏரைப் பற்றி பின் ஏரின் பார்வைஎழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்
ஆசிரியர்: பா.செயப்பிரகாசம்
வெளியீடு: நூல்வனம்
எம்.22, 6வது அவென்யூ, அழகாபுரிநகர்,
ராமாபுரம், சென்னை - 6000 089
பக்:80, விலை ரூ.60
----மயிலைபாலு
செல்பேசி: 91765 49991, 94440 90186

“முன் ஏரு போற வழியில்தான் பின் ஏருபோகும்” என்பது கிராமத்துச் சொலவடை. குடும்பத்திற்குப் பொறுப்பானவர் சரியான பாதையில் சென்றால் மற்றவர்களும் அதனைப் பின்பற்றுவார்கள் என்பது இதன்பொருள். பொதுவாகவும் வயல்களில் ஏர்பூட்டும்போது நன்றாகவசப்பட்ட, வாளிப்பான, ஆழமானாலும் அகலமானாலும் அசராது நடைபோடுகிற; சண்டித்தனம் செய்யாத காளைகளைத்தான் முன் ஏரில் பூட்டுவார்கள். ஏர் ஓட்டுபவரும் நேரத்தை மட்டுமே நினைவில் கொண்டிருப்பவராக அல்லாமல் கடமைக்கு முன்னுரிமை அளிப்பவராகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள்.

இப்படித்தான் கலை இலக்கிய உலகிலும் அடுத்தத் தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவோரை முன்னத்தி ஏர் என்கிறோம். மக்கள்மனங்களை உழுதுப்பண்படுத்தி நற்கருத்துக்களான வித்துக்களை விதைத்து அறிவுப் பயிர்வளர அவர்கள் காரணமாக இருக்கிறார்கள்.
அந்த வகைமையில் 95 வயதை நிறைவு செய்து காத்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கி.ராஜநாராயணன் அவர்கள் பற்றி பா.செயப்பிரகாசம் அரிய தகவல்களைக் கொண்ட நூலினைத் தமிழ் உலகிற்குத்தந்துள்ளார். 
அட்டையிலேயே வெள்ளந்தியாகச் சிரிக்கும் - விசாலமான அனுபவஞானத்தை வெளிப்படுத்தும் - அந்தக் காலத்து மனிதத்தின் வாழும் உதாரண மனிதர் என்பதைச் சொல்லாமல் சொல்லும் உருவப்படத்துடன் இந்தக் காலத்தை இணைக்கும் வண்ணக்கலவையில் கி.ரா 95 எனச் சுட்டும் நூலினை அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

‘எழுத்தில் மட்டுமல்ல முன்னத்தி ஏர்’ என்கிற இந்நூலின் 9 பகுதிகளும் கி.ரா.வைப் பற்றி ஒவ்வொரு கோணத்தில் படம் பிடிக்கின்றன. 
கி.ரா நூல்களை வாசித்த அனுபவமும் அவருடனான ஆசிரியரின் நெருக்கமும் நூல் முழுமைக்கும் பரந்து கிடக்கின்றன. ‘இன்னும் எத்தனை நாள் அடைப்பீர் இச்சிறு கூட்டுக்குள்’ என்பது தொடங்கி ‘நெம்புகோல் 95’ என்பது வரையான கட்டுரைகள் கி.ரா.வைப் பற்றிய கட்டுடைப்புகளாக இருக்கின்றன. கரிசல் எழுத்தாளர் என்ற சிறு கூட்டுக்குள் அவரை அடைக்காதீர்கள் என்ற வேண்டுகோளினை முதற்கட்டுரையில் முன்வைக்கும் பா.செ அவர்கள் கி.ரா.வின் தமிழ், மக்கள் தமிழ் என்பதை எடுத்துரைத்து ‘வெடித்துக் கிடக்கும்பருத்திக்காடு’ என்ற ஏழாவது கட்டுரையில்முழுப்பொருண்மையைக் கொண்டுவந்திருக்கிறார். “கி.ரா. கரிசல் எழுத்துக்களுக்குக் முன்னோடி என்கிறார்கள் பலர். அது முழுஉண்மையல்ல. நடப்புத் தமிழுக்கு முன்னத்தி ஏர் பிடித்தவர். நடப்புத்தமிழுக்கு வட்டார வழக்கிலிருந்து வாய்மொழியிலிருந்து எவ்வளவு எடுக்க வேண்டுமென்னும் அளவு அவர் கண்டடைந்தது” என இலக்கணம் வகுக்கிறார்.

இலக்கியத்தில் மட்டும் முன்னத்தி ஏர் அல்ல; வாழ்க்கை முறையிலும் அவர் அப்படித்தான் என்பதை இன்னொரு நிகழ்வின் வழி நிரூபிக்கிறார். 
சற்றும், தடுமாற்றமில்லாமல் 2017 செப்டம்பர் 16 மாலை வாழ்த்தரங்கத்தில்; தன் பேத்தியின் திருமண வரவேற்பை நடத்திக்காட்டினார். மணமகள் - அம்ஸா; மணமகன்- முகமது ஆசிப். “இதைத் தியாகம் என்று சொல்லமாட்டேன். பிள்ளைகளின் வாழ்க்கை, மகிழ்ச்சிதான் முக்கியம்”. இந்த எண்ணம் பெரும்பாலோருக்கு வந்துவிட்டால் ஆணவக்கொலை என்பதே கொல்லப்பட்டுவிடும் அல்லவா?

மரணத்திற்குப் பின் எது நடந்தாலும் மரணித்தவருக்கும் அது அனுபவமாக இருக்கப் போவதில்லை. ஆனால் வாழ்பவர்கள் தங்களைத் தேற்றிக்கொள்ளவும் மற்றவர்களுக்குத் தங்கள் உணர்வுகளின் அளவைக் காட்டிக் கொள்ளவும் என்னென்னவோ செய்கிறார்கள். ஆனால் கி.ரா.வின் வார்த்தைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றன. “... இந்தக் கண்ணாடிப் பெட்டியில் வச்சி அழுவது, மாலை போடறது எதுவும் பண்ணாதீங்க... அதுபோல அஞ்சலிக் கூட்டம் அனுதாபக் கூட்டம் எதுவும் நடத்தாதீங்க.... மரணத்தில் முக்கியமா படம் எடுக்காதீங்க... பொணத்துக்குப் பக்கத்தில் இருந்து போட்டோ எடுத்து என்ன பண்ணப் போறீங்க. நம்ம செய்கைக்கு ஒரு நல்ல காரணம் இருக்கணும்”. இப்படி எண்ணிப் பார்க்கவும் துணிவரோ மற்றவர்கள் என்று கேட்கத்தோன்றுகிறது.

95 வயதில் வாழுகிற எழுத்தாளர் தமிழில் இப்போது இல்லை என்று பா.செ அவர்கள் எழுதியிருக்கிறார். ஆனால் கி.ரா.வின் சிந்தனையும் செயலும் இளமையாக இருப்பதால் அவருக்கு வயது ஒரு பொருட்டே அல்ல. “மழைக்குப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியவன் மழையையே பார்த்துக்கொண்டு நின்றுவிட்டேன்” என்று பள்ளிக்குச் சென்று பயிலாமையை எத்தனை எளிதாகக் கடந்து சொல்கிறார்!

பள்ளியில் மழைக்கு ஒதுங்கியவரைப் பின்னாளில் பல்கலைக்கழகம் ஆய்வுக்காக வரவேற்றது. அப்போது ஓய்வுகாலப் பணிபோல நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து ஊதியம் பெற்று ஓய்ந்துவிடவில்லை. மாறாக இளம் பருவ மாணவர்களோடு ஊர் சுற்றிக் கள ஆய்வு செய்தார் கி.ரா. அவரது துணைவியார் கணவதி அம்மாவின் உணவோடு மற்றவர்களுடையதும் பகிர்ந்து கொள்ளப்பட்டு கூட்டாஞ்சோறு உண்டு ஆய்வு செய்த பாங்கு நூலில் அற்புதமாக சொல்லப்பட்டுள்ளது. “கி.ரா ஒரு நான்குகால் மனிதர். தனக்குச் சொந்தமான இரண்டு கால்களையும் கொண்டு அவரால் நடக்க இயலாது. கணவதியின் கால்களையும் சேர்த்துத் தான் அவரால் நடக்க முடியும்”
பேராசிரியர் பஞ்சாங்கத்தின் கணிப்பு பொருத்தமான இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

விருதுகளுக்கு ஏங்கும் விருதுகளை ‘வாங்கும்’ காலகட்டத்தில் கி.ரா.வுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது சிற்றிதழ்கள் சங்க மாநாட்டில் வழங்கப்படுகிறது. அதனை ஏற்றுக்கொண்டு கி.ரா பேசியதில் முத்தாய்ப்பான சில வரிகள்:
“சிறுமை இல்லாம வாழ்நாள் பூரா சாதனை செய்தவர்னா எனக்குத் தெரிய பெரியார் ஒருத்தர்தான்... சில விசயங்களை தலைகீழா மாற்றியில்லே போட்டாரு... பெரியார் ஒரு பயங்கரவாதியில்லே. அவருடைய ஆயுதங்கள் மைக், (மேடைப் பேச்சு) ஒரு பேனா மட்டுமே... அதனால சாதனையாளர் விருதை அவருக்குத்தான் கொடுத்திருக்கனும்” வாழ்நாள் முழுக்க சாதனை படைத்திருந்தாலும் பெரியாரே அதற்குப் பொருத்தமானவர் எனச் சுட்டும் பெருந்தன்மைகொண்டவர் கி.ரா.

இன்னும் பல தகவல்களை விதவிதமாகத் தொகுத்து தொடுத்து தந்திருக்கிறார் பா.செயப்பிரகாசம் அவர்கள். தரவுகளோடு அவை இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. கி.ரா.வை ஆழமாக அறிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய நூல்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்