வாடிய பயிருக்கு ஒரு மழை
சூரங்குடிக் கிராமம், கொஞ்சம் பெரிய ஊர். குக்கிராமம் ஒத்ததைத் தட்டு வேட்டி என்றால், இது இரட்டைத் தட்டு வேட்டி. எப்போதாவது அரிச்சலாய் சூரங்குடிப் பக்கம் போவதுண்டு. ஏதோ ஒரு புவிஈர்ப்பு விசை இருந்தாலொழிய, டவுன்வாசியான நான் சென்னையிலிருந்து போவதற்கு அது வெகுதூரம். எந்தப் பருவத்திலும் அந்த வீட்டில் தயாராய் இருக்கிற மோரில் ஊறப் போட்ட சுண்டைக்காய், தனிப்பக்குவமாய் செய்த ஆவாரம் வத்தல், சுண்ணாம்பு அளவாய்ச் சேர்த்து, தேரிக்காட்டு மணலும் பனஞ்செதிலும் சேராமல் பதமாய் இறக்கப்பட்ட கருப்பட்டி, ஒரு கிராமத்து மனுசனின் வாஞ்சை - இந்த நான்கும் கலந்து, போகிறபோதெல்லாம் கொடுத்து, கொண்டு போகச் சொல்வார்.
அவர் ஒரு சொல்லேருழவர். பள்ளிக்கூடத்து வாத்தியார். மருத்துவருக்கு மருத்துவர், வழக்குரைஞருக்கு வழக்குரைஞர், பொறியாளருக்குப் பொறியாளர், கணினிப் பொறியாளருக்கு கணினிப் பொறியாளர் என்று தொழில் ஜாதி பார்த்து கல்யாணம் கட்டிக் கொள்வது போல், அந்தக் காலத்தில் வாத்தியாருக்கு வாத்தியார் என்று துணைவியைத் தேடிக்கொண்டார். அளவான வாழ்க்கை, வாத்தியார் சம்பளம் தவிர வேறெதற்கும் ஆசைப்பட்டதில்லை. சிறு நகரங்கள், பெருநகரங்கள் போல் டியூசன், டியுட்டோரியல் (தனிப் பயிற்சிக் கல்லூரி) என்று படிப்புச் சுரண்டல் செய்ய துளிக் கூட எண்ணம் வரவில்லை.
அந்த வட்டாரத்தில் அமைதியான வாழ்க்கை என்று காட்சிப்படுத்தி விட முடியாது. குதர்க்கம் பேசுகிற திரைப்பட மொழிக்கு மட்டுமே அங்கே அமைதி தவழும்; நொள்ளையும் நொம்பலமும் உண்டு, வறுமை, விவசாயம் இரண்டு போதும், இந்த இரண்டாலும் இறுக்கிக் கட்டப்பட்ட மக்களுக்கு நடுவில் தான் அவர் அசைகிறார். அசைவு கொடுக்கிற அளவுக்கு ஏதாவதொரு உத்தியோகத்தில் தொத்திக் கொண்டிருக்கிறவர்களால் தான் எழுத முடிகிறது. அந்த வட்டாரத்தில் எந்த விவசாயியும் எழுத மாட்டான். கல்வி வசதியும், எழுத ஏத்தாப்பான சூழலும் அவனுக்கும் அந்த புஞ்சைக்காட்டு ஆட்களுக்கும் வாய்க்கவில்லை.
அவனைப்பற்றி எழுதுவதற்கு, எடுத்து வைப்பதற்கு ஒரு ஆள் வேணும். தற்சமயம் அந்த ஆள் சூரங்குடி அ.முத்தானந்தமாக இருக்கிறார்.
வட்டார வாழ்க்கையை கவனிப்பதற்கும் எழுதுவதற்கும் அதற்குள் வாழ்கிற தனி அக்கறை வேணும்; அது போலவே வட்டார எழுத்துக்களை வாசிப்பதற்கு தனி அக்கறை கொள்ளவேண்டும். தொண்ணுற்றைந்து சதவீதம் நடுத்தர வர்க்கத்துச் சித்திரம் பற்றிய எழுத்துக்களிலேயே முங்கிக்குளித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த வாசக மனம் வாய்க்காது. சமீபத்தில் புதிதாய்ப் பிறந்து முளை தெறித்து, ஓரிலை, ஈரிலை விட்டு புஷ்டியாய் கொளுக்கிற தலித் எழுத்து, பெண்ணெழுத்து, வட்டார எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்ள மேன்மக்கள் மனநிலை சொல்லுபடியாகாது. மேனத்தாய் அலைகிற இலக்கிய வடிவத்துக்குள் நுழைகிற மனப்பாங்கு தவிர்த்த தனித்த மனோ நிலையை அது வேண்டுகிறது. அது ஒடுக்கப்பட்ட மனநிலை; மூச்சுக் குழாய் அடைபட்டு, வாயைத் திறந்தாவது சுவாசிக்க முயல்வோரின் மனோவியல்.
இந்த வகை எழுத்துக்களிளெல்லாம் உட்கிடப்பது போலவே, இதுவரை தெரியாத ஒரு வாழ்க்கை இந்த சூரங்குடிக்காரரால் திறந்து வைக்கப்படுகிறது. திறந்ததும் வீட்டுக்குள் குவித்து வைக்கப்பட்ட துவரங்காய் பச்சை வாசனை, கம்மங் கருதின் சடைத்த வீச்சம், ஆடு எக்குப் போட்டுக் கடிக்கத் தோதான உயரத்தில் கட்டப்பட்ட பாலாட்டங் குலை, ஓடம்பழம், கருவநெத்துக் கவுச்சி குப்பென்று முகத்தில் பாய்கிறது.
ஆட்டுக்காரப் பாட்டையா, போன தலைமுறையின் கடைசி ஆள் சின்னச்சாமி, சூல் ஆடு வளர்க்கிற ராக்கம்மா, தாழ்த்தப்பட்ட சக்கையன் நாடகத்தை தீண்டாமையில் ஒதுக்கும் நாராயண பாகவதர், சோத்து அழகுமலை - இவர்களைப் பற்றியது தான் அவர் கவனம்.
கடன் வாங்கியவர்களிடமிருந்து பறித்த வாளிப்பான சொத்துக்களை ஆளுகிற காரவீட்டு முதலாளி, மைனர் முதலாளி, தினா பொனா முனா கானா முதலாளி, நடுவீட்டுப் பண்ணை - இவர்கள் பண்ணும் கிருத்தரியம் பற்றியது அவர் கவலை.
மேற்குப் பாகம் கரிசல், இழக்கு முகம் செவல் - இருமண் பூமி கொண்ட ஊர் சூரங்குடி. வறுத்த கானமும் முளைக்கும் இவர்கள் கைக்கு என்கிற சொல்லுக்குரிய கரிசல் பொம்பளைகள்; தேரிப் பனைகளின் சலசலப்புக்கும் பேயிரைச்சலுக்கும் மத்தியில் கடும் உழைப்புச் செய்கிற செம்மண்ணின் கறுப்பு உருவங்கள் - இங்கே அவர் ஜீவிக்கிறார்.
அவரது கதைக்குள் இத்தனை அபூர்வங்களும், அபூர்வ மனுசர்களும் வந்து நிற்கிறார்கள். அன்றாடம் அவர் காணுகிற, கலந்து பழகுகிற மனுசர்கள் தாம். அவரைச் சுற்றி நடக்கிற தினப்படியான நடப்புகள் தாம். சுற்றி நடப்பவர்களிடமிருந்தும், சுற்றி நிகழ்பவைகளிலிருந்தும் விசேசமானதை அவர் தேர்வு செய்கிறார். இது அவரது பலம். தேர்வு செய்யப்படுவதை, விசேடமாக சித்தரிப்புச் செய்து விடுகிறார் என்பது அவரது கூடுதல் பலம். ஒரு படைப்பாளிக்கு எது தேவையோ, அந்த வலிமை தனக்கிருக்கிறது என்பதில் நிறைவு கொள்கிறவர் அவர்.
லாபத்திற்காக மதுக்கடைகள் நடத்துகிற அரசு, ஆண் வர்க்கத்தின் கொளுப்புக்காக விபச்சாரத்தை சட்டபூர்வமாக ஆக்குகிற அரசு, லாப நோக்கத்தில் பாலியல் வன்முறைப் பக்கம் சாய்கிற நீதிமன்றம், லாபத்திற்காக விவசாய நிலத்தில் வேலிக்கருவேல்முள் பயிரிடுகற தினா பொனா கானா முதலாளி - எல்லோரும் ஒரு தட்டில் சமச்சீராய் நிற்கிறார்கள்.
நேரேதிரில் வந்து நிற்குற இறால் பண்ணைகளை, பதறிப்போய் பார்க்கிறார். இயற்கையை வருடி, முட்டி முட்டிப் பால் குடிப்பதற்குப் பதில், பசுமடி அறுத்துப் பால் குடிக்கும் மாபாவிகள் கண்டு, அந்த கிராமத்து மனுசர்களுக்கும் ஆங்காரம் எக்கிக் கொண்டு வருகிறது. இறால் பண்ணை எதிர்ப்பை முன்வைக்கிற போது, அறிவாளிக் கூட்டத்தின் உச்சாடனம் இல்லை. சப்பிச் சப்பி சத்தற்றுப் போன சொற்கள் இல்லை. கிராமத்துப் பிறப்புக்குரிய 'மாடு பிடிபட்டுப் போச்சு' என்ற தலைப்பே வருகிறது.
அரிச்சந்திரா நாடகம், முன்னைக் காலம் போல் எட்டு நாள் நடப்பதில்லை. சுருக்கி, ஒரு நாள் மயான காண்டம் மட்டும் நடக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மு நாடகமும் மூன்று நாள் வரிசையுடன் நடந்தேறுவதில்லை. பாதர் வெள்ளை, போருக்குப் போகும் கடைசிநாள் ஆட்டம் மட்டுமே நடக்கிறது. விவசாய வேலைகளிலிருந்து ஒய்வு, காலச்சூழல் எல்லா நிதர்சனங்களும் எல்லாக் கூத்துக்களையும் ஒரு நாள் ஆட்டமாய்ச் சுருக்கிவிட்டன.
அரிச்சந்திரனாக மேல்சாதி நாராயண பாகவதர்; ஆடு மாடு மேய்த்தபடி, தன்னிஷ்டத்துக்குப் பாடிக் கொண்டு திரிந்த ஒரு தலித் லோகிதாசன்.
“ஊர்க் கஞ்சி எடுத்துக் குடிச்சிட்டு, ஊர் மாடு மேய்கிற இந்தப் பயலுக்கு நான் தகப்பனாக்கும் நாடகத்தில்! ஈனத்தொழில் செய்து பிழைக்கிற ஒரு புலையன் மகன் எனக்கு மகனாக்கும் மேடையில்! என் குலப் பெருமை என்ன, குடிப்பிறப்பென்ன” - எல்லா மேல்சாதி நாராயண பாகவதர் போலவே, இவரும் குமுறி, ஒதுக்கம் கொள்கிறார். நாடகக் கலையிலிருந்தே ஒதுக்கம். பிறகொருபொழுதில், அந்தப் புலையன் மகனே அரிச்சந்திர நடிகனாய் வளர்ந்து, சங்கத சாகரமாகப் பரிணாமம் பெற்று முத்திரை பதிப்பானென்று அவர் எதிர்பார்க்கவில்லை. கனவிலும் கருதாமைக்காக வருந்தி, ஒரு சால்வையுடன் மேடையில் தாவி, அணிவித்து தழுவிக் கொள்கிறார். மேல்சாதி திமிர் கலையாற்றலுக்கு முன் கரைந்து காணாமல் போனது என படைப்பாளி மகிழ்ச்சி கொள்கிறார்.
படைப்பாளியின் சந்தோசம் கண்டு, படைப்பாளி வகுத்துத் தருகிற நியாயம் கண்டு, இப்போது நாம் கவலை கொள்ள வேண்டியதாகிறது. கவலை, படைப்பாளியிடமிருந்து நமக்குக் கைமாறி விடுகிறது.
சாதிய மனமாற்றம், கதையில் வருவது போல் நாடக பாணியில் நிகழ்ந்து விடுவதில்லை. தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல், தலையைப் புதைத்துக் கொண்டே சாதி ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத வருசங்களின் ஆழத்தில் வேர் ஓடி, சல்லி வேர் பரப்பி செட்டியார் செட்டியாராக இருக்கிறான். ரெட்டியார் ரெட்டியாராக இருக்கிறான். பிள்ளைவாள் பிள்ளைமாராக, தேவமார் தேவமாராக, பிராமணன் பிராமணனாக இருக்கிறார்கள். இவர்கள் இவர்களாகவே தொடர்வதால், பள்ளர் பள்ளராக, பறையர் பறையராக, சக்கிலியர் சக்கிலியராக இருப்பதும் தொடர்ந்து கொண்டே போகிறது. சாதி அறுப்பு சாதாரணமில்லை. நாடக நடிப்பில் கூட இழிந்த சாதியை ஏற்கும் மனநிலை உயர்சாதிக்கு வரவில்லை.
பள்ளக்குடியை, பறைக்குடியை மனசளவில் தொட்டுப் பார்க்கிறவர்களாகவே நாமிருக்கிறோம். நம் காலடிகள் அந்த தெருக்களுக்குள் இறங்கியதில்லை. உடலளவில் சேரிகளைத் தீண்டியதில்லை. கற்பனாரீதியாக, மனலயத்திலேயே அங்கே நீந்திப் போய்க் கொண்டிருக்கிறோம். வாழ்ந்து பார் என்று எவரும் போனதில்லை.
போகாத திசைக்குள் போவதாக எண்ணுவது சுலபம். சாதியின் குரூரத்தைக் கற்பனையில் கடப்பது எளிது,
கதையில் வருவது போல் அவ்வளவு லகுவாக எதுவும் நடந்தேறுவதில்லை. ரணமும் சதையும் ரத்தச் சிதறுலுமாகவே நடக்கிறது. “ஒன்னைய செருப்பால அடிக்கணும்டா. சாமிமார்களும் ஐயா மார்களும் ஒன் கடையைத் தேடிவந்து காத்துக் கெடந்தாடா வேலை செஞ்சிருவாக? நாம தாண்டா குடியத் தேடிப் போகணும்” என்று சவரத் தொழிலாளியான சின்னச்சாமி பெத்த தகப்பனிடமிருந்தே வார்த்தைகள் வருகிற குரூரம்தான் இருக்கிறது. மேல்குடியின் குரூரம் அதற்கு மூலம். அடங்க மறுக்கும் மகன் சுடலை மணி, முக்குரோட்டில் திறந்த முடிதிருத்தும் கடையை மூடிவிட்டு நகரத்துக்குள் காணாமல் போகிறான். அவன் சுதந்திரம் முறிக்கப்படுகையில், அப்பனைப் போல் “போனதலைமுறையின் கடைசி ஆளாய்” இருக்கச் சம்மதிக்காமல், இந்தத் தலைமுறையின் முதல் ஆளாய் வெளியேறுகிறான். சாதிய யதார்த்தம் குரூரம் கொண்டது.
சமுதாய எண்ணிக்கையில், 25 விழுக்காடேயுள்ள மத்தியதர வர்க்கத்து மக்களின் வாழ்க்கை போதுமான அளவு சொல்லப்பட்டு விட்டது. எழுத்தெண்ணிப் பார்த்தால், இந்த வகை இலக்கிய எண்ணிக்கை குவிந்து போயிருப்பது தெரியவரும். படைப்பிலக்கியம் இன்னும் சேதாரம் அடையாமல் காக்கப்பட, நடுத்தர வர்க்கத்து சங்கிலிகளிலிருந்து கொஞ்ச காலத்துக்கு கழற்றி விடுதல் நலம். அலுவலகம், பேருந்து, ரயில் நெரிசல், அலுவலர் - பணியாளர் உரசல், காதல், கல்லூரி சேஷ்டை, புடவை, பொருத்தமாய் ரவிக்கை, பைக், கார், பரிதவிப்பு, அங்கலாய்ப்பு என அதன் அசைவும் அசைவல்லாதவைகளும் ஊதி ஊதிப் பெருக்க வைக்கப்பட்டு விட்டன. ஞாயிற்றுக்கிழமை வருகைக்கான காத்திருப்பு மன ஏக்கம் சொல்லப்பட்டு விட்டது.
தடுத்தர வர்க்கத்து மக்கள் கூட்டத்தின் வாழ்க்கையை வாசித்து வாசித்து ருசி கண்டுவிட்டது நமது நாக்கு. வேத்து ருசி தெரிவதில்லை. சிறுபிராயத்தில் நாக்கல் தங்கிய ருசி, கூடு அடையும் வரை போவதில்லை என்பது போல், எந்த வாழ்க்கைக்குள் தொடங்கி பழக்கப்படுத்தப்பட்டோமோ, அந்த வாசிப்பு ருசி இன்னும் நம் நாக்கில் தங்கியுள்ளது. நடுத்தர, மேல்தட்டு வாழ்க்கை ருசியை மட்டுமே கண்ட நாக்கு, வேத்து ருசிக்கு முத்தானந்தம் போன்றவர்களிடம் தான் போக வேண்டும். இதுவரையான எழுத்தில் விடப்பட்ட வாழ்க்கையை சொல்லுவதும் வாசிப்பதும் தான் வேத்து ருசி.
செழுப்பமான சொல்லாடல்களுக்கும் அந்த மக்கள் தேக்கி அணை கட்டி வைத்திருக்கும் வெளிப்பாட்டு முறைகளுக்கும் இவரைப் போன்றவர்களிடம் தான் சென்றடைய வேண்டும். இவரைப் போன்றவர்கள் என்று சொல்வதில், புதிய முளைகள் தெறிக்கும் பெரிய பட்டியல் உண்டு. இது வரை அறியப்படாத பட்டியல் அது. அறிந்தே ஆக வேண்டிய கட்டாயம் தமிழ்ப் படைப்பிலக்கயத்துக்கு நேர்ந்திருக்கிறது.
முத்தானந்தத்தின் எழுத்து, யதார்த்த எழுத்து; நேரடிக்காட்சி ரூபப்படுத்துதல் இவரது எழுத்து முறை. ஏதொன்றையும் காட்சி ரூபமாய் தருகிறார். காட்சி ரூபத்திலிருந்து கருத்து நிலைக்கு நகர்த்துகிறார். காட்சிகளை பரப்பி விரித்து வைத்து, தேவைப்பட்ட சிந்தனையை உருவாக்கக் கொள்ள வசதி செய்து தருகிறார். கருத்துலகத்தை பின்னிப் பிறாண்டி, அதிலே தொடக்கம் கொண்டு, அதிலிருந்து கதை வெளிவர முடியாமல் அதற்குள்ளேயே முடிச்சு கண்டு விடுவது இன்றைய பின் நவீனத்துவப் போக்கு. இந்தப் பின் நவீனத்துவத்துக்கும் அவருக்கும் முன்பின் தொடர்பும் எந்தப் பந்தமும் இல்லை. உத்தி, குயுக்தி, நுட்பம், சர்ரியலிசம், இருத்தலியம், மாயா யதார்த்தவாதம், க்யூபிசம் என்று வேப்பிலை இல்லாமலே சாமியாடுகிற கூட்டத்துக்கும் இவருக்கும் சம்பந்தமில்லை.
வட்டார எடுத்துரைப்பு முறைகளிலே பல வகை உண்டு. நாட்டுப்புறக் கதை சொல்லல் முறையில் தொடங்கி, கதைக்குள் கதை, அதற்குள் ஒரு கதை என்ற உத்திகளை, நவீன இலக்கியப் பரப்புக்கு உயர்த்தி, நவீன காலனியத்தையும், உலகமயமாதலையும் அம்பலப்படுத்திய கென்ய எழுத்தாளர் கூகியின் சிலுவையில் தொங்கும் சாத்தான் ஒரு முன்னணி உதாரணம். தன்னுடையது என தனித்துவத்துடன் பதியம் செய்யும் முத்தானந்தம், வட்டாரத்தின் பலப்பல கதை சொல்லல் முறைகளில் பதியம் போட்டு புதிது புதிதாய் உருக்கொடுத்து தன் திறனை உறுதிபட ஊன்ற வேண்டும் என்ற அலோசனை மட்டும் உண்டு.
பா.செயப்பிரகாசம்
சென்னை
20.12.2003
கருத்துகள்
கருத்துரையிடுக