மளிகையிலிருந்து புத்தக மாளிகை!
தொடங்கிய இடம் மளிகைக் கடை. அவர் வேலைப் பங்குதாரர் (working partner). கடை உரிமையாளர் முதலீட்டுப் பங்குதாரர். பெயர் என்னவாக இருப்பினும் வேலைப்பங்காளியான வேலாயுதத்துக்கு - இடது பக்க அடுக்குகளில் புத்தகவரிசை. சாமான் வாங்க வருவோரிடம் சிநேக பாவம் - இந்தப் புத்தகம் வாசித்தீர்களா, அந்த நாவல் படித்தீர்களா என்று விசாரிப்பு; மளிகைச் சிட்டையுடன் புத்தகச் சிட்டையும் தொத்திக் கொள்ளும் - உரிமையாளரிடம் இவ்வாறான சில சலுகைகள்;
முன்னர்கடை இருந்த இடம் கோவை ரங்கே கவுடர் வீதி,
இப்போது, கோவையின் பிரதான மையமான டவுன்ஹாலில் இரண்டு மாடிக் கட்டிடத்தில் விஜயா பதிப்பகம்.
மளிகையிலிருந்து புத்தக மாளிகை! எங்கிருந்து தொடங்கி எந்தத் தடத்தில் நடந்து, எந்த எல்லையை அடைவது என்பதில் அசாத்தியத் தெளிவு.
2020 - செப்டம்பர் 16. கி.ரா 98; சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டிருந்தார் வேலாயுதம். அப்போது புதுவையில் வாசித்தேன். கி.ரா.வின் கதைகளில் 'வேட்டி' உச்சம் தொட்ட கதை. அற்புதக் கதையின் நினைவாக அழகான வேட்டி ஒன்று நெய்யச் சொல்லி கி.ரா.வுக்குப் பரிசளிக்க வேண்டுமென்று என்னிடம் பேசினார் வேலாயுதம்.
கி.ரா 98-ஐ வெகுவிமரிசையாய் புதுவையில் நடத்த, அரங்கம், பங்கேற்பாளர்கள், சாப்பாடு, விருது வழங்கல் எனப் பெரிய வட்டம் போட்டு - அனைத்தையும் பற்றி விரிவாகத் திட்டமிட, அவரும் நாஞ்சில் நாடனும் கி.ரா.வைக் கலந்து பேச புதுவை வருவதாக என்னிடம் சொல்லியிருந்தார் வேலாயுதம்.
'எப்போது வருவார்கள்?' கி.ரா கேட்டார்.
''சொல்லிவிட்டுத்தான் புறப்படுவார்கள்' என்றேன்.
'கல்லுளி மங்கன் போனவழி
காடு மேடெல்லாம் தவிடுபொடி'
- அத்தனையையும் தவிடுபொடியாக்கிவிட்டது கொரோனா.
செப்டெம்பர்16 - கி.ரா விருது வழங்கும் நிகழ்வுக்கும் ரூ.2 லட்சம் விருதுக்கும் முனைப்பாய் ஏற்பாடுகள் செய்து ஒருங்கிணைத்தார் வேலாயுதம்.
விஜயா பதிப்பகம் வேலாயுதம் என்று பெயர் நின்று கொண்டிருக்கிறது. இப்போது முன் அடைமொழியை மாற்ற வேண்டும் போல் தோன்றுகிறது. விருதுகள் வேலாயுதம் என்று முன்மொழிதல் சிறப்பு. அந்த அடைமொழியைச்சிறக்கச் செய்த மற்றொரு காரணமும் உண்டு.
"காலத் தீயில் வேகாத, பொசுங்காத தத்துவம் நாம் '' என்பார் கவிஞர் மீரா. மார்க்ஸிய சமூக அறிவியலைக் கைக்கொண்டோர் நாம்; கொரொனாவைக் கைப்படுத்தவும் கடக்கவும் அறிந்தோர் நாம்; கொரோனா வழியில் சனத்தின் தலையில் கால் வைத்தோரும் ஏமாந்து போகுமளவுக்கு, 2020 ஐந்து விருதுகள் வழங்கும் விழாவுக்கு காரியமாற்றினார் வேலாயுதம்.
வேலாயுதம் பணியாற்றிய ரங்கே கவுடர் வீதி மளிகைக் கடைக்கு 1970, 80-களில் பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள் வருகை தந்துள்ளனர். விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களைத் தனக்குள் கொண்டிருக்கும் புத்தக அடுக்கைக்கண்டு செல்ல, அவருடன் சிலாகித்து உரையாடித் திரும்ப அவர்கள் வருகை. ஜெயகாந்தன், தீபம் நா.பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், தி.க.சி, கோவை ஞானி, கவிஞர்கள் மீரா, புவியரசு, சிற்பி, மு.மேத்தா, நா.காமராசன், எழுத்தாளர் சாவி வந்து சென்றதை பெருமிதம் பொங்க நினைவு கூருகிறார்.
1978-ல் கி.ரா அணிந்துரையோடு எனது முதல் சிறுகதைத் தொகுதி “ஒரு செருசலம்'' வெளியாகியிருந்தது; மளிகைக் கடைக்குப் போய் மளிகைச் சாமான்கள் வாங்காமல், கையிலிருந்த பிரதிகளை விற்கப் போயிருந்தேன். புத்தக வரிசையையும் அவரையும் பார்த்துப் பேசிக் கொண்டிருந்து விட்டு, நூல் பிரதிகளை விற்பனைக்குக் கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.
எழுபதுகள் முதலாய் என் உறவில் இருக்கும் வேலாயுதம் அவர்களைப் பற்றிய முந்தைய கனமான நினைவுகளை விரித்து வைக்க மீண்டும் இயலும்; ஆனால் அந்த வாசக முன்னோடி - கவிஞர் மீரா வழியில் தடம்பதித்த பதிப்பக முன்னோடி- கி.ரா. மணிவிழாவை - கவிஞர் மீரா மணிவிழாவை சிறப்புற நடத்திய திறன்படைத்த ஒருங்கிணைப்பாளர் வேலாயுதத்தின் முன்னெடுப்பில் விளைந்த சமகால இரத்தினக் கற்கள் இரண்டை முன்வைத்துள்ளேன்.
அவர் பற்றிய மற்றமைகளை பிறர் சொல்லி முடிப்பார்கள்!
- எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், மார்ச் 2022
கருத்துகள்
கருத்துரையிடுக