சொந்த ஊரை நோக்கிப் போகிறது இந்தப் பாதை...
“வாங்க, போவோம்"
“அவசரமா?”
"நம்ம ஊருக்கு"
“நகரம் கசந்துருக்குமே”
“வெயிலோட அருமை நிழல்லதானே தெரியும். நுங்குத்தண்ணி இனிப்பு, பிளாஸ்டிக் புட்டித் தண்ணியிலே தானே தெரியுது"
“ஆங் அங்ஙன இப்ப ஊரிலயும் அதான கெடக்கு?"
“ஆத்தங்கரை, கோரை, கோரைப் பாய், மூங்கில் புதர், புல்லாங்குழல், பறை முழக்கம், காக்கை.”
“இங்க இல்லாத காக்காயா?"
"இருக்கும். காக்கை வயிற்றில் தூங்கும் வேப்பமர விதை, தவுட்டுத் தொட்டியைப் பார்த்து விட்டு 'அம்மா' என்றைக்கும் மாடு இதெல்லாம் அங்க மட்டும்தான் இருக்கு."
"வேற என்ன இருக்கும்?”
“ஆல மர விழுதில் ஆடும் பசுவின் பனிக்குடம் துள்ளிக் குதித்தோடும் கன்றுக் குட்டியிடம் சொல்லும் 'உன்னைப் பெற்றறெடுத்த வலியின் அடையாளம்'.
நிலாச்சோறு சாப்பிட்டு விட்டுக் கை கழுவ வந்த போது, வீட்டுக்குப் பின்புறமாய் உள்ள தொட்டியில் கை கழுவ வந்து, மிதந்த 'பெளர்ணமி நிலா', பால் வடியும் பிஞ்சு நெல்மணி, தொண்டைக் கதிரைக் கூட்டம் கூட்டமாய்க் கொத்தித் தின்னும் குருவிகள்,
வாயில் வாரிப்போட்டுக் கொண்ட குருவிக் கூட்டத்தால், வயிற்றிலடிக்கப்பட்டு பட்டினி கிடக்கும் விவசாயி,
புகார் நகரத்துக் கண்ணகி போலப் பச்சைக் கூந்தலைக்காற்றில் உலர வைத்து, கருக்குப் பற்களோடு, கைகளை விரித்துக் கம்பீரமாய் ஆடும் பனை மரங்கள், 'நத்தாங்கூடு' "
“நத்தாங்கூடா? என்ன அது?”
“நத்தையின் உடம்பிலிருந்து ஊறிய ஊதா நிற ஊந்தண்ணி, மூணு மாதக் குழந்தை கண்ணுக்கு மருந்தாகுமாமே, அந்த நத்தைக் கூடு".
"கண்ணு நமைச்சலுக்கு அவரை இலைச் சாறு பிழிஞ்சி கண்டிருக்கோம்”
“எனக்கே இப்பத்தான் தெரியும். கிராமத்துச் சுவாசம் வாங்கி ரொம்பக் காலமாகுது. அங்கேயும் சாராய வாசம், ஓவ்வொரு மூச்சிலயும் அடிக்குது. கருக்கரிவாள் மூக்கால் நத்தையின் வயிற்றைக்குத்தி, ஒரு பாட்டில் சாராயத்துக்கு மண் சட்டியில் வதக்கிய மனிதர்கள் வந்து விட்டார்கள்”
“ஈவிரக்கமே இல்லாம!”
"ஈவிரக்கம் பாத்தா நடக்குமா? தென்னங்கீற்று உச்சியில் பலநூறு விளக்குகளாய்த் தொங்கும் தூக்கணாங் குருவிக்கூடும், ரொம்ப நாளைக்கு முன்னால் குருவிக்குத் தெரியாமல் திருடிய முட்டையை மரத்தில் ஏறிக் கூட்டில் வைத்த வெள்ளந்திப் பிஞ்சு மனசும் அங்கேதான் இருக்கிறது.
மண்சட்டியைத் தலையில் மாட்டிக் கண்களுக்கு நேராய் ஓட்டை போட்டுக் குளத்தில் நீந்தி நீர்க் கோழி பிடித்த பையன்,
அணிலுக்கு அரிசி தூவிக் கூடையால் கவிழ்த்தெடுத்துத் தந்திரமாய்ப் பிடித்த பையன்,
சோளக்கதிர் ஒடித்து வந்து, சேத்தாளிகளோடு பங்கு போட்டுத் தின்ற பயல்,
உடும்பு பிடிக்க வேல் கம்பு எடுத்து, உடும்பு கடித்துக் கதறிய பொடியன்,
பனை மர நொங்கு மட்டையால் சக்கரம் செய்து, ஊர் ஊராய் வண்டி ஓட்டி, ஓட்டி வண்டிப் பாதைப் புழுதி காலில் படிய ஓடிய சுளியன்"
"சரியான சித்திரைச் சுளியனா இருப்பாம் போலிருக்கே. இன்னிக்குத் தினத்திலே, இதெல்லாம் பாக்கத்தான் கிராமம் போகலாங்கிறீரா?”
இந்த உரையாடலின் முடிவு, கேள்வியின் பதில் என்னவாக இருக்க வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்.
கவிபாஸ்கரின் கவிதை நூலாக இருக்குமென்று நான் கருதுகிறேன்.
கிராமத்துத் தரிசனங்கள் பெறுவதற்காக, அனுபவங்களை உள்ளிறக்கிக் கொள்வதற்காக, மீண்டுமொருமுறை அங்கு செல்ல வேண்டியதில்லை, அவை எல்லாமும் கவிபாஸ்கரின் “பாதை தொலைத்த மாட்டு வண்டிகள் கவிதைகளில் கிடைக்கிறது”.
'தெக்கத்தி ஆத்மாக்கள்' என்ற எனது நூலில் இவ்வாறு எழுதியிருப்பேன். "சொந்த ஊரை நோக்கிச் செல்லும் அந்தப் பாதையைப் போல், இனிமையானது வேறெதுவும் இல்லை”.
ஒவ்வொருவருக்கும் சொந்த ஊரை நோக்கிப் போகும் பாதையை நினைக்க வைக்கிறது; சொந்த ஊருக்கே அழைத்துப்போகிறது இந்த நூல்.
ஊர் வேப்ப மரங்களுக்கு மேலாக எழுந்து நம்மோடு கதை பேசும் நிலாவை இழந்தோம், இளங்கருக்கலின் வெளியில் உடல் தொட்டு மனசுக்குள் இறங்குகிற குளுமையைத் தொலைத்து விட்டோம். ஒரு நாள் பம்பரம், இன்னொரு நாள் கிட்டிப்புள், அடுத்த நாள் கிளித்தட்டு, மற்றுமொரு நாள் தவிட்டுக்குஞ்சு என்று பருவநிலை மாற்றங்களின் வருகையை முன் அறிவித்த விளையாட்டுக்களைக் கை கழுவி விட்டோம்.
'எந்தலைக்கு எண்ணை ஊத்து
எருமைமாட்டுக்குப் புல் போடு'
ஒரு கையால் தூணைப் பற்றிக் கொண்டு, மறுகையை நீட்டி, நீட்டி பாடிக் கொண்டே தூணைச் சுற்றிப் பாவாடை குடையாய் உப்ப ஆடும் சிறுமிகளைக் காணோம்; தூண்கள் நின்ற திண்ணையையும் காணோம்; ஆட்டின் பின்னத்தங் கால்களை லாவிப் பிடித்து, முழங்கால்களுக் கிடையில் இறுக்கி 'கிண்'ணென்ற ஆட்டுமடிதட்டிப் பீய்ச்சிய பாலைக் காலம் கொட்டியழித்து விட்டது. ஒதப் பழம் என்று சொல்லப்படும் செங்காயான புளியம்பழத்தில், ஆட்டுப்பால் பிழிந்து சொட்டாங்கு போட்டுச் சாப்பிட்ட ஆசை இல்லாமல் போய் விட்டது.
நாம் கிராமத்தை இழந்து போனோம்; கிராமம் அதுவாக இல்லை, அது கையளித்த பழைய இதமான நினைவுகளை
“இவையாவும்
சொன்னேன்...
'கிராமத்தான்' என்றது
நகரமாய் மாறிப்போன
என் பழைய கிராமம்”
என்று ஏளனம் செய்கிற மாதிரித்தான் ஆகிப் போனது. பாதை தொலைத்த மாட்டு வண்டிகள் என்ற தலைப்பு, கிராமம் தொலைத்த நம்மைத்தான் சுட்டுகிறது.
பழைய சொந்த நினைவுகளை வருடுகிறபோதும்; தனது தொப்புள் கொடி உறவுகள் இருபத்தைந்து கி.மீ தொலைவில் படும் வேதனைகளை மறக்கவில்லை கவிபாஸ்கர்.
"மரமாய் உயிர்க்கும்
விதையெல்லாம் விவாதிக்கிறது
நாம் ஈரமண்ணில்
விழுந்தால்
ஈழ மண்ணில் தமிழர்களைக்
கொல்வது போல்
கொன்று விடுவார்கள்
மரம் வெட்டும் மனிதர்கள்”
இயற்கையை, சுற்றுச் சூழலையே இல்லாமல் அழிக்கும் மரவெட்டிகளோடு, தமிழினம் என்ற அடையாளத்தையே இல்லாது அழித்தொழிக்கும் மனித வெட்டிகளான சிங்களப் பேரினத்தை ஒப்பிடுவதற்கு ஒரு தயக்கமும் இல்லை.
இரண்டு தீர்மானங்களுக்கு இந்த நூல் என்னை இட்டுச் செல்கிறது. என் போலவே வாசிப்பாளர்களையும் அழைத்துச் செல்லும் என நினைக்கிறேன்.
ஒன்று,
கிராமம் இனிமையானது. அதிலும் பால்ய கால கிராமம் இன்னும் இனிமைக்குரியது. எங்கு இடம் பெயர்ந்தாலும், பால்ய கால வாழ்வின் நினைவுகளை மீட்டெடுத்தல், கவிபாஸ்கர் போலவே எழுத்தாளர்கள் பலருக்கும் பிரியமானது. பல எழுத்தாளர்களின் எழுத்துக்கள் சொல்கிற சேதி ஒன்றுதான்; இடப்பெயர்வில், புலப் பெயர்வில், வேறு வாழ்க்கைக்குள் சொருகி நின்றாலும் அவர்கள் இன்னும் பால்யத்திலேயே வாழுகிறார்கள்; அவர்கள் சிறு பிராயத்து அனுபவங்களையே இன்னும் சமகாலத்துக்கும் பெயர்த்துத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பது.
இரண்டாவது,
கிராமியம் சார்ந்த எழுத்துக்காரர்கள் கி.ராசநாராயணன், பூமணி, சோ.தர்மன், பெருமாள்முருகன் எனத் தொடர்கிறார்கள். கிராமத்து நினைவுகளில் காலூன்றிக் கவிதையில் தருகிற கவிஞர் பச்சியப்பன், வே.இராமசாமி என்ற வரிசையில் கவிபாஸ்கர் அழுத்தமான பதிவுகளுடன் தொடருகிறார்.
- எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்,டிசம்பர் 2008
கருத்துகள்
கருத்துரையிடுக