நூற்றாண்டுகளினூடாக நடக்கும் குரல்
“மண்டை மயிரிறுதி மாவிடிச்சவளே
மயானம் போறவரை தோசை சுட்டவளே”
நாட்டுப்புறச் சொலவடை ஒன்றிருக்கிறது. வார்த்தைகளால் அடுக்கி அடுக்கிச் சொன்னாலும், பெண்ணின் பாதரவு தீரப் போவதில்லை. மெல்லியலாள், பூங்கொடி, அனிச்சமலர்ப்பாதம் போன்ற வர்ணிப்புகள் பெண் என்னும் உழைப்புக்குப் பொருத்தப்பாடுடையன அல்ல: யாவும் கலைமனதின் புனைவுகள் தாம்; பெண்ணில் மெல்லியலாளரும் உளர் என்று கருத்து எவருக்கு உண்டோ அவர்கள் பெண் பற்றிய கருத்து நிலையிலிருந்து மாறவேயில்லை என்பது அர்த்தம்.
மனித குலத்தில் சரிபாதி பெண்கள். அவர்களுக்கு இல்லாள், இல்லத் தலைவி, தாய் போன்ற விருதுளை அளித்துச் சமையலறைப் பண்டமாக ஆக்கி வைத்துள்ளோம். பெண்ணுக்குக் கடமை, பொறுமை, பணிவு, கற்பு என்று வரையறுத்துள்ளோம். அதையே வள்ளுவரும்,
"பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்"
என்று பேசுகிறார். பிறன்மனை நோக்காமை, பொருட்பெண்டிர் போன்ற அத்தியாயங்கள் ஆண்களை நோக்கியவைதாமே என்று கேள்வி எழுகிறது. ஆனால் திருக்குறளில் பெண்ணுக்கு முதன்மை இல்லை; ஆண் சார்ந்தவளாக பெண் நோக்கப்படுகிறாள் என்ற கவிஞர் இன்குலாபின் கருத்து நாம் எதிர்கொள்ள வேண்டிய கருத்து, இந்த அடிப்படையில் விருந்தோம்பல் பண்பில் ஆணுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று அவர் எடுத்துக் காட்டுவார். குறளில் பெண் சமமாக அல்ல; இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறாள் என்று எழுதியமையால், இன்குலாப்பின் எம்.பிஎல் ஆய்வு புறந்தள்ளப்பட்டது, சென்னை பல்கலைக் கழகத் தமிழ்த்துறை இக்கைங்கரியத்தைச் செய்தது என்ற உண்மை கசப்பானது.
வள்ளுவரின் ஒரு சார்புத் தன்மை என்று கணிக்க வேண்டியதில்லை. பெண் பற்றிய காலத்தின் போதாமை, அக்கால சமூதாயக் கருத்து நிலை எனக்கணிக்க வேண்டும். கருத்து நிலைகளில் மாறுபாடு அல்லது வளர்ச்சி கால ஒட்டப்பந்தயத்தின் தொடர்ச்சியேயன்றி காலம் ஒருபோதும் உறைநிலையில் இல்லை. சமுதாய விஞ்ஞானம் இன்றுள்ளது போல் ஈராயிரம் ஆண்டுகள் முன் இல்லை. அன்று இந்த சமூதாய விஞ்ஞானம் நோக்கு இருந்திருக்கவேண்டும் என்ற புனைவு நமக்கு வேண்டாம். தொலைநோக்குக்கும் எல்லை உண்டு. பொது அறம், பொது நீதி எனக்காலம் கடந்தவை இல்லை. குறித்த கால நீதி, குறித்த கால அறம் என்று காலக்கட்டுகளுக்குட்பட்டவை தாம் அவை.
ஒரு குறித்த காலச் சமூதாயத்தின் ஒரு மணித்துளியை அல்லது ஒருமணிப் பொழுதை, அல்லது ஒரு நாளை, அல்லது ஒரு வாழ்க்கைப் பகுதியை எந்த எழுத்து வழுவில்லாமல் சரியாகக் கைப்பிடிக்கிறதோ, அது நூற்றாண்டுகளினூடாக, நூற்றாண்டுகளுக்கும் மேலாக நடந்து செல்கிறது என்ற இலக்கிய விதி திருக்குறளுக்கு நூறு விழுக்காடு பொருந்துகிறது. ஒரு படைப்புக் கருத்தியல் அன்றைய காலச் சமூதாயத்தின் சரியான புள்ளியைக் கைவசப்படுத்துகிறபோது, காலம் கடந்து பயணிக்கிறது.
வள்ளுவர் அவர் வாழ்ந்த காலத்தின் வாழ்வியலின் மனச்சாட்சியாகத் திகழ்ந்தார். காலத்தின் மனச்சாட்சி என்பது அதை முன்னகர்த்துவது தான். அவருடைய காலச் சமுதாயத்தின் மனச்சாட்சிகளாக பவுத்தமும், சமணமும் துவங்கின. அறிவியல் பூர்வ சமூதாய நிலைப்பாடடுகளின் கண்ணாடிகளாகப் பட்டொளி வீசிப் பறந்த அந்நிலைப்பாடுகளின் கருத்தியலுக்குள்ளிருந்து, திருவள்ளுவர் தன் கருதுகோள்களை உருவாக்கி கொள்கிறார். மூடநம்பிக்கை கொண்ட வைதீக சமயங்களின் படையெடுப்பு, அவைகளைப்பெயர்த்து எடுத்து விட்டு அறிவு பூர்வ நோக்கிலிருந்து வள்ளுவர் தன்கால சமூதாயத்தின் வாழ்வியலை வரையறுக்கிறார். இதன் காரணமாகவே இன்றளவும் உயிர்ப்பு தொடரோட்டமாக உள்ளது. இன்றும் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறதின் அடிப்படை, வள்ளுவர் ஒரு சுயசிந்தனையாளர் என்பதில் உள்ளது. தன் காலத்தின் சிந்திப்புகளை உள்வாங்கியவர் ஒருபோதும் சமயக்கட்டுப்பாட்டுக்குள் தன்னைத் தாளிட்டுக் கொள்ளவில்லை என்பது புலனாகிறது
சாதி, குழு, மதம், வர்க்கம், கட்சி என்று இன்று பல சிறைகள் உருவாகியுள்ளன. இவைகளில் ஒன்றிரண்டு தவிர மற்றவை அன்று நிலவின. எந்தச் சிறைக்குள்ளும் தன்னை அடைத்துக் கொள்ளாதவராக அவர் நின்றிருக்கிறார். சுயசிந்தனை கொண்டோர் வாழ்வியலை முன்னோக்கிச் செலுத்தமுடியும் என்பதான புள்ளியை வந்தடைந்தார்.
அதிகாரக்கூட்டம் அல்லது குழு என்பது சுயசிந்தனையற்ற ஒரு பிரிவினராவர். காரணம், மக்களின் வாழ்வியலை முன் பாய்ச்சலில் செலுத்த வேண்டுமென்ற பார்வையற்று, எதிரான சிந்திப்போடு இயக்குவதேயாகும். அதிகார முனைப்புள்ள மனக்கட்டமைப்பில் அறம், சுயசிந்தனை அற்றுப்போகிறது. அதிகாரவர்க்கம் அறிவார்த்தமாக இயங்க வேண்டும் என்ற பகுத்தறிவாளரான பெரியார்
“நீதிபதிகள், தாசில்தார்கள், காவல்துறையினர் இவர்களுக்கு எல்லாம் திருக்குறள் ஒன்று போதும். பி.ஏ, எம்.ஏ. பட்டங்கள் தேவையில்லை”
என்று சொன்னார். திருக்குறளைப் போர்வாளாக உயர்த்துங்கள் என்று அவர் வற்புறுத்தியதற்கு, காலத்துக்கு ஒவ்வாமை கொண்ட சனாதனத்தை எதிர்த்த முதல்குரல் வள்ளுவருடையது என்பது காரணம்.
பிறப்பு அனைவருக்கும் ஒன்று. பிறப்பில் எல்லோரும் சமம். குழந்தை பிறக்கும் வேளையில் தலைகீழாக, கால் மேலாக வெளிப்படுமே தவிர, பிறப்புக்குப்பின் சமூதாயத்தில் நடமாடுகையில் தலை கீழ் அப்போது இல்லை. வளர, வளர குழந்தை சாதி, மதம், குழு, வர்க்க முற்றுகைளில் நட்டமாக நிற்க முடியாமல் ஒரு அசிங்கமான சமூகத்தை எதிர் கொள்கிறது.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
அருவறுப்பான, தொழுநோய் அசிங்கமுள்ள சமூதாயத்தின் மூஞ்சியில் அடிக்கிறார் வள்ளுவர். ஆனால் நெஞ்சின் அடியில் மேல்கீழ் சாதிப் பிரிவினையை பத்திரப்படுத்திக் கொண்டிருப்பவர்கள், நாக்கின் நுனியில் இந்தக் குறளையும் பத்திரப்படுத்திக் கொள்கிற வல்லமையுடன் வாழுகிறார்கள் என்பது தான் சாமர்த்தியம்.
அரசு அலுவலராயிருந்தபோது இடையில் நான்கு ஆண்டுகள், சென்னைப் பெரு நகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அயல்பணியில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினேன். கழிவுநீர் அகற்றும் பணியையும் சேர்த்துச் செய்கிற துறை அது. குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல் பணி முன்னர் மாநகராட்சியின் பணிகளில் ஒன்றாக இருந்தது. முப்பதாண்டுகள் முன்பு அதன் முக்கியத்துவம் காரணமாகத் தனியாகப் பிரிக்கப்பட்டது.
மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றும் வேளையில் நகரின் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக ஆள் எடுப்பு நடந்தது. எந்த அரசுப்பணியானாலும் கல்வி, உடல்நலத் தகுதி மட்டும் குறிப்பிடப்படும். இந்த வேலைக்கு இந்த சாதி என்று குறிப்பு இருக்காது. ஆனால் இடஒதுக்கீடு முறை இந்த வேலைக்கு, அசிங்கமாக தன் கோரப்பற்களைக் காட்டியபடி நின்றது. சாக்கடைக்குள் இறங்குவது, தடையை அகற்றுவது, சுத்தம் செய்து மேலே கொட்டுவது என்று அமையும் பணிக்கு கடைநிலை ஊழியனை விடக்குறைவான மாத ஊதியம். வந்திருந்த ஆட்கள் அதனை பேரும் தாழ்த்தப்பட்ட மக்கள். சாக்கடைக் குழாய்களுக்குள் கயிற்றைப்பிடித்துக் காண்டு உள்ளிறங்குதல், மூச்சடக்கி துழாவுதல், மண், மட்டைகளை வாரி வெளியே கொட்டுதல், முறங்களில் அள்ளி லாரியில் கொட்டுதல் என அவர்கள் பரீட்சித்துப் பார்க்கப்பட்டார்கள். ஆதிதிராவிடர்கள் என அழைக்கப்படும் அருந்ததியர் மட்டுமே மாநகராட்சியில் துப்புரவுப் பணிகளுக்காக எடுக்கப்படுகிறார்கள்; இங்குத் தாழ்த்தப்பட்ட மக்கள் தவிர்த்து ஒரு பிராமணனோ, வெள்ளானோ, முதலியோ, ரெட்டியோ, கொங்குக் கவுண்டனோ, வன்னியனோ நேர்காணலுக்கு வரவில்லை. விண்ணப்பித்திருந்தால் அல்லவா வருவதற்கு. காவல், வருவாய்த்துறை, வருமானவரி, பொதுப்பணித்துறை, கல்வி, மருத்துவம் போன்ற உயர்நிலைப்பணிகளை மற்ற சாதியினரான இவர்கள் கைப்பற்றுகிறார்கள். இங்கே பிறப்பும் பேசுகிறது செய்தொழிலும் வேற்றுமை பேசுகிறது.
குறட்பார்வை அனைவருக்குமான சமூக நீதியை முன்வைக்கிறது. சுயசிந்தனை வழிப்பட்ட மேலாண்மையைச் சமூக சமத்துவத்துக்குக்குரல் தரும் உழைக்கும் மேன்மையை “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் குறள் வாசகம் வலியுறுத்துகிறது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்நூல் பயணிக்க மானுட இனத்துக்கான, மானுட குலம் இன்னும் கடக்க வேண்டிய தொலைவுக்கான அறச் சிந்தனைகள் தாம் அடிப்படை.
கருத்துகள்
கருத்துரையிடுக