மக்கள் கவிதை
உலகம் ஒரு உலகமாக ஆகி இருக்கிற இந்தக் காலத்தில், அரசியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் மட்டுமின்றி, கலை, கலாச்சாரத்திலும், உலக நாடுகள் மிகவும் நெருக்கமாகப் பிணைந்துள்ளன. ஒரு மாறுதலுக்கான அம்சம், உலகின் ஒரு பகுதியில் இன்னும் முளை வெடிக்காமல் மூடுண்டு கிடக்கிறபோது வெளியிலிருந்து, உலக நாடுகளிலிருந்து வரும் தாக்கம் அதை உடைக்கிறது. பிற துறைகளுக்குப் போலவே, கலாச்சாரத்திலும் முகையவிழ்ப்பை வெளித்தாக்கம் செய்வது தவிர்க்க இயலாதது.
தமிழில் புதுக்கவிதைகளின் தோற்றத்திற்குரிய கலாச்சாரச் சூழல் இருந்தபோது வெளியிலிருந்து தாக்கம் அதனை உருவப்படுத்தியது. தமிழில் புதுக்கவிதைகளின் தோற்றம் மேலை நாடுகளின் இலக்கியத் தொடர்போடு தொடர்புடையது. ஆனால் எப்போதும் வெளித்தாக்கம், இங்குள்ள மரபை வளப்படுத்தி, வாசகத் தளத்தோடு இசைவு கொள்ள வேண்டும். "வெளியிலிருந்து எதையும் முற்றாகவும், நிரந்தரமாகவும் திணித்து விட முடியாது, ஒரு குறிப்பிட்ட பகுதியின் அகச்சூழலுக்குப் பொருந்திவரும் பொழுது மட்டுமே இத்தகு செல்வாக்கு வேர் கொள்ளமுடியும். இல்லையெனில் சில முன்னோடிகளின் முயற்கி என்ற அளவிலே அது முடிந்து போய்விடும்"1
தமிழில் புதுக்கவிதையின் தோற்றத்திற்கான சமூகச் சூழல், உருக்கொண்டிருந்தது. நூறு ஆண்டுகளுக்கு முன் தோற்றமெடுக்காத, ஒரு 50 ஆண்டுகளுக்கு முன் தளிர் விட்டு வளர்ந்து வந்த நடுத்தர வர்க்கம், திட்டவட்டமான தெளிவான தோற்றத்தை அறுபதுகளில் பெற்றது. சமுதாய அரங்கிற்கு புதிதாக வந்த இந்த பகுதியின் உணர்வு அலைகளை, வெளிப்படையாக மேலெழுந்த புதிய விஷயங்களை வெளியிட பழைய மரபு வடிவம் போதுமானதாக இல்லை. எனவே புதிய முயற்சிகள் வெளிப்பட்டன. "அறுபதுகளில் எழுத்து பத்திரிகை வாயிலாக சோதனை முயற்சிகள், அன்றைய அதற்கு முந்திய ஆங்கிலக் கவிதைகள் வாயிலாகப் பெறப்பட்ட உத்வேகத்தோடு தோன்றின. ' இதுதான் தமிழில் புதுக்கவிதையின் தோற்றம்"2
எழுத்து கவிதைகளின் தோற்றம், நோக்கம் சோதனை முயற்சிகளே. அதனால் சோதனை முயற்சி என்ற அளவிலேயே நின்றன. மிகக் குறுகிய விரல்விட்டு எண்ணத்தக்க மேல்மட்ட வாசகர் வட்டத்தை மீறவில்லை. மீறாததால் தாக்கமும் இல்லை. ஆனாலும் அந்த வடிவத்திற்கு, ஒரு சமுக அவசியம் நிலவுவதால் தொடர்ந்து நீடிக்க முடிந்தது.
ஆனால் வாசகர்களுக்கும் கவிதைக்கும் உள்ள சமுதாயத் தொடர்பை அறிந்து கொண்டவர்கள் இந்த வடிவத்தின் தேவையை உணர்ந்தார்கள். எழுபதில் வானம்பாடிக் கவிதைகளாக வெளிப்பட்டன. ஆனால் வடிவம் 'எழுத்தின்' வடிவங்களல்ல. முற்றாக வேறொரு உருவம் கொண்டது. அது மக்கள் பற்றிய கருத்திலிருந்து மக்களை நோக்கிய வடிவம் காணும் முயற்சி.
ஒரு பேச்சு, மேடை உத்தி கொண்டதாகவும், கவியரங்கப் பாணி கொண்டதாகவும் உருவம் பெற்றது. இவை பிரச்சினைகளைச் சொல்வதாக இருந்தன. ஆனால் பிரச்சினைகள் பற்றிய உணர்த்துதல் போய்ச் சேரவில்லை.
மக்கள் கவிதையின் மொழியை அவர்கள் வளர்த்தெடுத்துக் கையாளவில்லை. இன்குலாப் கவிதைகளில் 'வயல்வெளியின் கதாநாயகன்' என்ற கவிதை வந்தது. அது பற்றி இன்குலாப் தனது தொகுதியின் இரண்டாவது பதிப்பு முன்னுரையில் குறிப்பிடுகிறார் "இப்போது எழுதியிருந்தால் வயல்வெளியின் கதாநாயகனை ஓர் உழவன் மொழியிலேயே எழுதியிருப்பேன்". எழுதியிருந்தால்அது உழவனின் ஜீவனுள்ள மொழி, உரையாடல், கிராமியப் பாடல்களிலிருந்து பெற்ற வடிவம் என புதிய வடிவம் கொண்டிருக்கும் என்பதை அவர் இங்கு குறிக்கிறார்.
தலித்துகளின் கவிதையை, தலித்துகளின் மொழியிலேயே இன்குலாப் வெளிப்படுத்தியது தான் 'மனுசங்கடா' கவிதை. 'மனுசங்கடா' - பாடல் அல்ல. அந்தக் கவிதையை அரங்கேற்றும்போது அவர் பாடிக் காட்டினார் என்பது உண்மை. அந்தத் தேவை, அவர் அந்த மக்களின் முன் நின்று பேச வேண்டிய அவசியத்தால் எழுந்தது. ஒரு சிறந்த கவிதை பாடலாவதும், சிறந்த பாடல் கவிதையாவதும் ஒன்றுதான்
'எழுத்து' கால கவிதையிலிருந்து மாறுபட்ட உள்ளடக்கம். வித்தியாசப்பட்ட வடிவம் என ஊகித்தாலும், மக்களைச் சென்றடையும் மொழி வடிவம் என்பதில் 'வானம்பாடிகள்' ஒரு முறையான கருத்தாக்கத்தை வந்தடையவில்லை. மக்கள் கவிதையின் புதுமொழி, புதுவடிவம் மேலும் உருவானது. உணர்வுபூர்வமாக தொடர்ந்து வளர்க்கப்படவில்லை. அதனால் சமுதாயப் பிரச்சினைகளை வாழ்வின் உறவுகளாக, எண்ண ஓட்டங்கள், சிந்தனைகளாக உள்ளடக்கமாகாமை. அதற்கான மொழியைக் கையகப்படுத்தாமை ஆகிய இவை கலைஞனுக்கும் சமூகத்திற்குமான இடைவெளியாய், போதனைகளாய் வெளியாகின.
"புதுக்கவிதை நூல் என்றால் காதல் தோல்வி, காந்தி, வரதட்சினை, முதிர்கன்னி துயரம், வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை கண்டு இரங்கல் ஆகியவை பற்றிய பாடல்களின் தொகுப்பாக இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு கவிஞர்கள் ஆளாகி விட்டமையை இன்று வந்துள்ள பெரும்பாலான கவிதை நூல்கள் காட்டுகின்றன"3
'80-களில் இந்த நிலை மாறவில்லை. ஆனால் 70-களில் வானம்பாடிகள் உதித்த போது தொடக்கத்தில் இந்த வகைக் கவிதைகள் எரிச்சலூட்டவில்லை. அப்போதுதான் புதிய வருகை ஒரு காரணம்; மற்றொன்று, புரியாமையிலும் இருண்மையிலும் புதுக்கவிதை உட்கார்ந்திருந்தபோது மற்றொரு பக்கம் மரபுச் சத்தங்கள் இழுவை நோய் கொண்டு விழுந்தபோது, வாசகர் தளம் ஒரு புதிய வரவுக்காக மடி ஏந்திக் காத்திருந்தது.
ஜனநாயகப்படுத்தலின் தேவையால், கல்வி ஓரளவு கீழ்மட்டத்திற்குப் போய்ச் சேர்ந்தது. இந்தப் புதிய மக்கள் பரப்பில் வந்தவர்கள், ஏற்கனவே கல்வி அறிவுத்துறையில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பணர்கள், ஊருக்கு ஒரு உயர்சாதிப் படிப்பாளிகள் போல் வந்தவர்கள் அல்ல. இவர்களுடைய வாழ்வுத் தளம், மதிப்பீடு, சமுதாயம் பற்றிய சிந்தனை முறை, நாட்டுத்தன்மை ஆகியவை வித்தியாசம் வாய்ந்தது. எழுத்து, கசடதபற, தோற்றுவித்த சிந்தனைகளும், கருத்துக்களும் அவர்களால் தொட முடியாத தூரத்தில் இருந்தன. இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று மருகினார்கள். இது 70 வரை நீடித்தது.
சமுதாயத்தில் புதிய வர்க்கங்களின் வருகை, உறவுகளில் மாற்றம் தொடர் நிகழ்வாகும். சமூக வர்க்கங்களில் தோன்றுகிற பல்வேறு வகை புதிய பகுதிகள், பிரிவுகள், அதனால் உறவுகளில் ஏற்படுகிற மாற்றம் ஆகியவைகளை எப்போதும் சுவனத்தில் கொள்ள வேண்டும், அரசியல்வாதி, சமுதாய ஆய்வாளன் ஆகியோருக்கு மட்டுமே இது உரியது, அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்பதல்ல. தான் சார்ந்த துறையில் சாதனை படைப்பதற்கு எந்தக் கலைஞனுக்கும் இந்த விஞ்ஞானக் கண்ணோட்டம் அடிப்படை. இன்றளவும் மிகச் சிறந்த இலக்கியங்களாக நின்று வருகின்றவை அந்தந்தக் காலத்திய புதிய வர்க்கங்களின் வருசை, மதிப்பீடுகளை அதற்கான போராட்டங்களை வைத்தவையே என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.
கலை, இலக்கியத் தளங்களில் நிகழ்கிற கருத்து மோதல்களும், மாற்றங்களும், வெளியில் ஏற்படுகிற மாற்றங்கள், பிரிவுகளோடு தொடர்புடையவை. நேரடியாக அல்லாமல் உணர்வு மட்டத்தில் இலக்கியமாக வெளிப்படுகிறது. அதனால் வெளிப்படையாக தோணாமல் போகலாம். நவகவிதையின் பண்புகளாக, கவிஞர் ஸ்ரீ.ஸ்ரீ சிலவற்றைக் குறிப்பிடுகிறார்.4
“செந்தூரம், குருதிச் சாந்து
சிவப்புச் செடி
சாயும் பொழுதின் அந்திப்பண்
புலியடித்த மானின் குருதி
செங்கொடி
உருத்திரைக் கண்களின்
நெருப்புச் சுடர்
கல்கத்தா காளியின் நாக்கு
இவையே வேண்டும்
நவ கவிதைக்கு
நெடியேற்றுகிற சந்தனப்புகை
நெருப்பாய்ப் பழுக்கும் நிலக்கரி
புகை கிளம்பும் உக்காக்கள்
மலர்ந்த மின்னொளி
எழுச்சி பெற்ற மக்கள் பேரணி
இவையே வேண்டும்
நவகவிதைக்கு
கழுகுகளின் இறக்கை எதிரொலி
புகைக்கூண்டுகளில் மண்டும் புகையோசை
காட்டில் கேட்கும் அரிமா முழக்கம்
முகில்களின் பேரிடி
காண்டாமிருகத்தின் அச்சுறுத்தும் கூக்குரல்
மாபெரும் ஒலிகள்
இவையே வேண்டும்
நவகவிதைக்கு
அசைப்பதும் அசைக்க வைப்பதும்
மாறுவதும் மாற்ற வைப்பதும்
பாடுவதும் பாட வைப்பதும்
உறக்கத்தைப் போக்குவதும்
உயர்வு தருவதும்
மிக மிக முன்னே
கொண்டு சேர்ப்பதும்
முழு நிறைவாக வாழ்வளிப்பதும்
இவையே வேண்டும்
நவகவிதைக்கு"
நவீன கவிதைக்கான உள்ளடக்கம், இத்தகைய புதிய கலைக்கோட்பாடுகள் முன்னுக்கு வருவது வரலாற்றுக் கட்டமைவு, வளர்ச்சிகளிலிருந்து தோன்றுகிறது. மக்களே வரலாற்றின் இயக்கு சக்தி; அவர்கள் வரலாற்றைப் படைக்கும் நாயகர்கள் மட்டுமல்ல; படைப்புக்களை நுகர்வதற்கும் உரிய நாயகர்கள் என்ற சமூக விஞ்ஞானத்திலிருந்து இது வரையறுக்கப்படுகிறது.
நவீன கவிதையின் சமூக உள்ளடக்கத்தை எழுபதுகளில் 'வானம்பாடிகள்' (வானம்பாடிகள் என்பது இங்கு ஒரு குறியீடே) உள்வாங்கிக்கொண்ட விதம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் நேர் காட்சியாக, பிரதிபலிப்புக் காட்சியாக அமைந்தன. புரட்சி பற்றியும், சமூகமாற்றம் பற்றியும், நிகழ்காலம் பற்றியும், எதிர்காலம் பற்றியும் அதீதக் கற்பனை கொண்ட நடுத்தர அறிவாளிகளின் பார்வையாக வெளிப்பட்டன. கால கட்டத்தின் சூழ்நிலைகளில் பொருந்திய அனுபவ சாரமாக இல்லாமல் சலசலத்தது.
ஒரு கலைப் படைப்பில், முதலில் கிடைக்க வேண்டியது, கலைஞன் வாழ்ந்து தீர்த்த அனுபவம். படைப்பின் மறுக்கவியலாத வீச்சாக இருப்பது இந்த அனுபவசாரம்தான். நம் கண்ணுக்குத் தெரிகிற பாராளுமன்றம், சட்டமன்றம், நீதி நிறுவனங்கள், அரசு, தொழிற்சாலைகள், பொருளாதாரம் இவைகளைத் தாண்டி இவைகளினால் விளைந்த மக்களின் வாழ்க்கை, அனுபவங்களில்தான் இலக்கியம் நிற்பது. பொருள்வயமான யதார்த்தத்தை அகவயமான மறுபடைப்புச் செய்தல், வாழ்க்கையாகப் பதிவு செய்தல் என்பதில்தான் கலை வாழ்கிறது.
'வானம்பாடிக்' கவிதைகளுக்கான சமூகப் பின்புலத்தை கவிஞர்கள் கிரகித்துக் கொண்ட விதமும், அவர்களின் வர்க்க மனோநிலையும் இத்தகைய வடிவம் கொண்டதற்கு முக்கிய காரணம். 'வசந்தத்தின் இடிமுழக்கம்' இந்தியாவெங்கும் அலைகளை அதிரவிட்டிருதது. அந்த அதிர்வுகள் தெற்குக் கடலோரத்தில் ஒண்டிக்கிடக்கும் தமிழகத்திலும் எதிரொலித்தது. திரிபுவாதக் கட்சிகளின் முழக்கங்களும் செயல்களும் நீர்த்துப் போய் அம்பலப்பட்டு நின்றன. ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் கலாச்சாரம், தோலுரிந்து எரிச்சலூட்டியது.
நக்சல்பாரி எழுச்சியை, இங்கு நடுத்தர படிப்பாளி வர்க்கம், தனக்கேயுரிய இயல்பில் வீரசாகசமாக எடுத்துக் கொண்டது. நக்சல்பாரி எழுச்சியானது அதற்கான நடைமுறைகள், போராட்டங்கள், மக்கள் திரளின் பங்கு, அனுபவமாக உள்வாங்கப்படாமல், கருத்துத் தூதுவனாக, சமுதாய அரங்கிற்கு வந்து கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்தின் அரசியல் கலாச்சார நடைமுறையாக வெளிப்பட்டது. கவிதைகளில் வெளிப்பட்டதும் இந்தப் பண்புதான்.
புரட்சிகர நடைமுறையின்றி, ஒரு கற்பனா ரூபத்தில் படிப்பாளிகள் எதிர்கொண்ட இதே மாதிரியான சீன சூழல் பற்றி தோழர் லூசூன் குறிப்பிடுவார்: "கலை மட்டுமே புறநிலைகளை மாற்றிவிடும் என்ற கருத்தை வளர்த்தீர்களானால் நீங்கள் ஒரு கற்பனாவாதியைப் போல பேசுகிறீர்கள். இலக்கியவாதிகள் எதிர் பார்ப்பதுபோல் நிகழ்ச்சிகள் நடைபெறுதல் மிகவும் குறைவு. இதனால்தான் புரட்சியை நேசிக்கும் இத்தகைய எழுத்தாளர்கள் ஒரு பெரும் புரட்சிக்கு முன்னரே சீரழிந்து போகிறார்கள். பழைய சமுதாயம் அழிந்து தரைமட்டமாகப் போகிற வேளையில், புரட்சிகரத் தோற்றம் தரும் பல படைப்புகள் வெளிப்படும். ஆனால் உண்மையில் அவை புரட்சிகர இலக்கியமாக இருக்கா. உதாரணமாக ஒருவன் பழைய சமுதாயத்தை வெறுக்கிறான். ஆனால் அவனிடம் இருப்பதெல்லாம் பழைய சமுதாயத்தின் மீதான வெறுப்பு மட்டுமே. எதிர்காலம் பற்றிய முழுமையான கண்ணோட்டம் என்பதே இல்லை. சமூக மாறுதல்களுக்காக உரத்த குரல் எழுப்புவான். ஆனால் அவன் எத்தகைய சமுதாயத்தைக் காண விரும்புகிறான் என்று கேட்டீர்களானால் அது ஒரு யதார்த்தமற்ற கற்பனை உலகமாக இருக்கும் அல்லது உணவாலும், மதுவாலும் வயிறு உப்பியவன் மேலும் மேலும், உண்ணும் திறனை அதிகரிக்க, லேகியம் சாப்பிடுவது போல், ஏதாவது ஒரு பெரிய மாற்றம் வந்து உணர்வுகளைத் தூண்டிவிடும் என்று இத்தகையவர்கள் விரும்புகிறார்கள்"5
புரட்சியையும், சமூக மாற்றத்தையும் அதீதகற்பனையாகக் கொண்டதன் இன்னொரு பலவீனமான வெளிப்பாடு குறிப்பான பகுதிச் சூழல் இல்லாமல் வெளிப்பட்டது. தமிழ்க் கவிதைத் தளத்தில் இந்த அம்சம் முக்கியமானது. ஈழத் தமிழ்க் கவிதைகள் உயிரோட்டமுடன் வெளிவரக் காரணம், பிரச்சினைகளை வெளிப்படுத்துவது மட்டுமல்ல. அந்தப் பகுதியின் வாழ்க்கைச் சூழலாக, குறிப்பான பகுதிக்குரியதாக வெளிப்படுவதாகும். மாறாக, நமது கவிதைகளிலோ, இடம், சூழல், மனிதர் என்றில்லாமல் அரூபமாக வெளிப்பட்டன.
மொழி என்பது மனிதனின் பிரக்ஞையாக வெளிப்படுகிறது. பார்த்தல், உணர்தல், அறிதல், நுகர்தல் ஆகியவை கட்புலன்கள் வாயிலாக, மனிதனின் பிரக்ஞையாக வெளிப்படுகின்றன. பொருட்களோடும், மனிதர்களோடும் செயல்படுவதற்கும் உறவு கொள்வதற்கும் இந்த உணர்வுப் புலன்கள் இருக்கிறபோதே, மொழி இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மனித உறவுகளுக்கானதாக செயல்படுகிறது. "பிரக்ஞையைப் போலவே, பிற மனிதர்களுடன் நிகழும் விவாதத்தின் தேவையிலிருந்து அது உருவாகிறது" என மார்க்ஸ் குறிப்பிடுவார்.
சமூக மாந்தர்களுடன் மனிதன் கொள்ளும் உறவாக மொழி செயல்படுகிற போது மொழியின் ஊடகமாக தரப்படும் இலக்கியம் சமூக மாந்தர்களுடனான உறவுக்கானதாக வெளிப்படுகிறது. மொழி எப்படி ஒரு மனிதனின் நடைமுறைப் பிரக்ஞையாக அவனுக்கானதாகவும், பிறமாந்தர்களுக்கானதாகவும் செயல்படுகிறதோ, இலக்கியமும், ஒரு கலைஞனின் படைப்புப் பிரக்ஞையாகவும் மற்ற மாந்தர்களுக்கானதாகவும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது.
இந்த மற்ற மாந்தர்கள் என்று சொல்லப்படுவது வாசகர் தளம் ஆக உள்ளது.
நுகர்வோர் தளம் பற்றிய கருத்தாக்கம் உருப்பெற்றது, சமூகவியல் ஆய்வுகள் தொடங்கிய பின்தான், அதற்கு முன்னும் அது பற்றிய புரிதல் இருந்தது. ஆனால் திட்டவட்டமாக, தெளிவான வரையறுப்புக்கள் உருவானது ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில்தான். நுகர்வோர் என்ற வார்த்தை முதலாளித்துவ சமூகத்துக்கு முன் இருந்ததில்லை. மொழி கூட, அந்தந்தப் பகுதி, சாதி, மக்கள் பிரிவுக்கு ஏற்றாற்போல் மாறி இருந்தது. ஒரே மாதிரித் தமிழ் எல்லா இடத்திலும் இருந்ததில்லை. நிலமானிய சமூகம் உடையாத காலம் வரை இருந்த படைப்பாளி கவிஞனே. கவிஞர்கள் அணுகும் வாசக எல்லை மிகச் சின்ன வட்டமாக இருந்தது. அவர்களின் படைப்புக்களுக்கு பரந்துபட்ட வாசகர் தளம் இல்லை. வாசகர்கள் எனப்படுவோர் அரசர், அரசவையினர், செல்வந்தர், கற்றறிந்த சிறுபான்மையினரே.
அப்போது எல்லாப் பகுதிக்கும், எல்லா மக்கள் திரளுக்கும் பொதுவான பொருட்கள் என்பதில்லை. பொதுவான பொருட்களும் ஒரே மாதிரி விற்பனையும் இல்லை. பண்டமாற்று மட்டுமே உண்டு. ஆனால் இப்போது ஒரே மாதிரியான பொருட்கள், உலகின் ஏதோ ஒரு மூலையில் உற்பத்தி செய்யப்பட்டு உலகெங்கிலும் அள்ளித் தெளிக்கப்படுகின்றன. எனவே ஒரே மாதிரியான சந்தைக்கான நுகர்வோர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவை பொருட்களின் வினியோகம் சம்பத்தப்பட்டதாக இருக்கிறபோது, முதலாளிய சமூகத்தின் வருகைகளினூடே கல்வி ஜனநாயகபடுத்தப்படுதல் அவசியமானது. பரந்துபட்ட மக்களைப் போய்க் கல்வி சேருவதும், கல்வி வளர்ச்சியினால் பெறும் பயன்கள் முதலாளியத்திற்கு சாதகமாய் ஆக்கப்படுவதும் உடன் நிகழ்வானது. உயர் வர்க்கத்தினருக்கே கல்வி என்ற நிலைமை ஜனநாயக மறுப்பாகும். கல்விப் பரவலும், அதனால் வளர்ச்சி பெற்ற விரிந்த வாசகர் தளமும், ஏகாதிபத்திய கலை இலக்கிய, கலாச்சாரத்திற்கு நுகர்வோர் தளங்களாக, சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் பார்க்கப்படுகிறது.
நாம் இங்கு குறிப்பிடும் இலக்கிய நுகர்வோர் தளம் என்பது செறிவான உள்ளடக்கம் உடையது. பரந்துபட்ட மக்கள் என்ற அர்த்தம் கொண்டது. வாசகர் தளம் என்ற சொல்லாலேயே, இனி நாம் குறிப்பிடுவோம்.
வாசகர் தளம் பற்றிய கருத்து ஒவ்வொரு படைப்பாளியிடமும் இயல்பாக உள்வாழ்கிறது.
எத்தகைய வாசகர் தளத்துக்காக வழங்குகிறோம் என்ற பிரக்ஞை இல்லாமல் எந்தப் படைப்பாளியும் இல்லை.
ஜெயகாந்தனிடம் ஒருமுறை, உங்கள் படைப்புக்களில் சில புரியவில்லையே என்று கேட்டபோது, "நீங்கள் படிப்பது உங்களுக்குப் புரியவில்லை என்றால், அது உங்களுக்காக எழுதப்பட்டது அல்ல. வேறு யாருக்கோ எழுதப்பட்டது என்பதுமா புரியவில்லை? புரியவில்லை என்றால் பேசாமல் விட்டுவிடுங்கள்" என்றார். யாருக்கோ எழுதப்பட்டது என்ற பதிலிலிருந்து ஒரு குறித்த வாசகர் தளம் நோக்கி, தன்னைக் கிரகித்துக் கொள்ளும் வாசகன் நோக்கி வழங்கப்பட்டது என்பது புரியவரும்.
இந்தச் சூழலில் தான், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட தமிழில் புதிய வாசகர்களின் வருகையின் முக்கியத்துவம் பற்றி நாம் விரிவாகத் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
50, 60-களில் பரவலாகக் கல்லி தரப்பட்டதின் காரணமாக உருவான விரிந்த வாசகர் பகுதியை எவரும் கணக்கில் கொள்ளவில்லை. 70-களிலும், 80-களிலும், சிறு கிராமம், சிறுசிறு நகரம் முதல் பெருநகரம் வரை எங்கும் படித்த வாசகர் நிறைந்து கிடந்தனர். அரசியல் தளத்தில் ஓட்டு வாங்குவதற்கான படையாக, பொருளாதார தளத்தில் வேலை இல்லாப் பட்டாளமாக இவர்களைக் கணக்கில் கொண்ட அளவுக்கு கலை, இலக்கிய வாசகர்களாக வைத்து எண்ணப்படவில்லை; அணுகப்படவில்லை. 'எழுத்து' கவிதைக்காரர்கள், புதுக்கவிதையாளர்கள் இந்தப் பெரும் வாசகர் பகுதியை அலட்சியப்படுத்திய போது, வணிகப் பத்திரிக்கையாளர்கள் இவர்களை அடையாளம் கண்டனர். தேர்ந்த சிறுவாசகர் பகுதியை மட்டும் முன்வைத்து சிற்றிலக்கிய இதழ்கள் எழுபதில் நிறைய வந்தது போலவே, பெரிய வாசகர் பகுதியை, இளைய வாசகர் பகுதியை வாரிச்சுருட்டிக்கொள்கிற மாதிரி லட்சக் கணக்கில் விற்பனையாகும் புதிய புதிய வார இதழ்கள் பெருக்கெடுத்தன.
எண்பதுகள் நமக்கு வரலாறாக இருக்கிறது. இதற்கு முன்னிருந்த பத்துகளை அது கனத்துடன் இழுத்து வருகிறது. வரலாற்று உலுக்கல்களும் சமுதாய மேல் கீழ்களும் நிறையவே நிகழ்ந்துள்ளன.
வாழ்க்கை முன்பு போல் இல்லை. போராடாதவர்களின் வாழ்க்கை வன்முறையால் சூறையாடப்படுகிறது. கருத்தியல் வன்முறையும், சமூக வன்முறையும் நியதியாக மாறிவிட்டது. மக்களுக்கான வன்முறை மட்டும் மறுக்கப்படுகிறது.
பரந்துபட்ட மக்களுக்கான வாழ்க்கையிலிருந்தும், கலாச்சாரத்திலிருந்தும் அந்நியப்படுகிற கலைஞன் அந்நியப்பட்டே ஆக வேண்டும். அந்நியப்படுதல், வாசகர் தளப் புறக்கணிப்பில் நிகழ்கிறது.
'நவீனத்துக்குப் பிந்திய கவிதை' மொழி, சூட்சும மொழி என்றும் இதைப் புரிந்து கொள்ள புதிய நவீன வாசகன் பிறப்பெடுக்க வேண்டுமென்றும் கூறப்படுகிறது.6
"கவிதைத் துறையில் பிறகலையின் பாதிப்புகளையும் ஊடுருவல்களையும் நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. இத்தகைய கவிதைகளை அணுகும் போது கவிதையின் சூட்சும மொழியைப் பற்றிய புதிய பிரக்ஞையுடன் அணுக வேண்டும். எனவே புரியாத தன்மை என்பது கவிஞனிடத்தில் இல்லை. மாறாக வாசகர்களாகிய நம்மிடமே உள்ளது"7 என்ற குற்றச்சாட்டுகள் வாசகர் மீது விசப்படுகின்றன.
இங்கு தங்களையொத்த சிறிதான ஒரு வாசகர் பகுதிக்கே தருவது, அத்தகைய வாசகர்களை உருவாக்குவது, வாசகர் யார் என்பதில் தீர்மானமான கருத்துடன் இருப்பது என்ற அம்சங்களுடன் மிக முக்கியமான ஒரு குறிப்பும் உள்ளது. அது மக்கள் ஆட்டு மந்தைகள், சிந்திக்கும் ஆற்றலற்றவர்கள், ஞாபக மறதி உள்ளவர்கள் என்று அரசியல் உலகில் காணப்படும் உயர்வர்க்க அறிவு ஜீவி மனோபாவம் (சோ, அருண்செளரி), கலை, இலக்கியத்தில் மென்மையான பாங்கான குரலில் ஒலிக்கிறது இந்த வாசக எதிர்ப்புக் குரல். பிற மாநில வாசகர்கள் முன்னேறிய ரசனை உள்ளவர்கள், தமிழ் வாசகன் மந்தைப்புத்தி கொண்டவன், கலா ரசனையற்றவன் என க.நா.சு, வெங்கட்சாமிநாதன், சுந்தர ராமசாமி வரை தொடர்ச்சியாக ஒலிக்கிறது.
அந்நியப்படாத கலைஞன், மக்களுக்கான கவிதையை, கவிதை மொழியை இந்தக் கால கட்டத்தில் கண்டெடுத்தாக வேண்டியிருக்கிறது. இங்கே கவிதை மொழி என்பது மக்கள் கவிதையின் வடிவம், நடை, பாணி, வெளிப்பாட்டு முறை அனைத்தையும் உள்ளடக்கிய ஒன்றாகும்.
இத்தகைய கவிதை மொழியின் தேடல்கள் மக்களிடமிருந்தே கிடைக்கின்றன. பழைய கிராமியப் பாடல் வடிவங்களிலிருந்து புதிய உயிரோட்டமுள்ள வடிவம் உருவாதல், பொது மக்களின் வளமுள்ள ஜீவன் ததும்பும் மொழியை பரிச்சயப் படுத்திக் கொள்ளுதல் எனப்பல. சைலேசிய நெசவாளிகளின் கவிதையில் பழைய நாட்டுப் பாடல்களிலிருந்து புதிய பாட்டாளி வர்க்கக் கவிதை நோக்கிய மாற்றத்தின் முதல் ஒளிக்கீற்றுக்களை மார்க்ஸ் கண்டார்.
"இலக்கியப் படைப்புக்களில் மொழி சார்ந்த தேடல்கள் ஒரு குறிப்பிட்ட மனிதத் தேவைகளை நிறவேற்றல் போன்ற பிற நடவடிக்கைகளில் நிறைவு காணவேண்டிய புதிய தேவைகளை முன்வைப்பவை'' என்று மார்க்ஸ் கூறுவார்.
இந்தக்கருத்தினை விரித்து எடுத்துச் செல்லும் வகையில், சச்சிதானந்தன் கூறுபவை கவனத்தில் கொள்ள வேண்டியவை "ஒரு மார்க்சிய நடையியல் (stylistics) இந்தக் கோட்பாட்டிலிருந்து தான் தொடங்கப்படவேண்டியது. நடையை, தனிநபர் சார்ந்த அக்கரையாகச் சுருக்கிவிடும் பூர்ஷ்வா நடையலுக்கு எதிராக, நடைகளை ஒரு குறிப்பிட்ட சமூக, தேவைகளை உருவாக்குகிற பிரக்ஞையாக வெளிப்படுத்த இந்த நடையியல் முயல வேண்டும்."8
சமூக அக்கறை கொண்ட, சமூக, நடையியல் இன்று புதிய வடிவம் கொள்ள வேண்டியிருக்கிறது; இன்னும் நடுத்தர வர்க்கத்தின் பார்வையில் விசயங்களை சொல்வதாக, அதற்கேற்ற ஒரு மொழிப்பிரயோகம், நடையியலைக் கொண்டதாக இருப்பதிலிருந்து அது விடுபட்டாக வேண்டும்.
சமுதாய உறவுகளில் மாற்றம் காணும் நாட்டம், இவர்கள் அளவில் உணர்ச்சிவகைப்பட்டதாகவும் உண்மையாக அந்த உறவுகளின் ஆழம் நோக்கிப்போக முடியாமையும், அத்தகைய தேடலும் ஆய்வும் அனுபவசாரமும் இல்லாமையுமே காரணம். ஒரு புதிய நடையியலை, மொழி மரபை, வடிவத்தைக் காணவேண்டிய நிலையில் தமிழ்க் கவிதை இன்றிருக்கிறது.
இன்றைய புதுக்கவிதைகளை, உருவ வித்தியாசம், வடிவ மாற்றம் என்று மட்டுமே சிலர் அடையாளம் காணுகிறார்கள். சமூகத்தில் புதுவெள்ளம் தொடர் நிகழ்வாகி ஓடிக்கொண்டிருப்பது, இது சமூகத்தின் குண அளவில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவது, இந்த புதிய விசயங்களை வெளிப்படுத்த பழைய வடிவங்கள் போதாமலிருப்பது, இதனால் பழைய வடிவங்களில் மாற்றம் பெறுவது நிகழ்கிறது. உண்மையில் பழைய சிந்தனை மரபுகளை மீறுகிறபோது, சிந்தனை மரபுகளின் உடைபடுதலின் போது புதிய வடிவம் உதயமாகிறது.
வடிவம், கலைஞனுக்கும் வாசகனுக்கும் இடையேயான ஊடகம். கலைஞன் தன் அனுபவசாரத்தை உள்ளடக்கமாக வெளிப்படுத்துவதின் விளைவே, உருவமாக ஆகிறது. இந்த உருவத்தைப் பற்றிய பிரக்ஞை தங்கம், பொன் நிலுவைபோல் துல்லியமாக இருப்பது, ஒரு கண் பார்வை எடைகூட மேலே, கீழே இல்லாமல் இருப்பது அவசியம். ஒரு கலைஞன், உருவத்தை அக்கறையின்றிப் புறக்கணிப்பது, படைப்பின் உள்ளடக்கத்தை அலட்சியப்படுத்துவதும், வாசகன் உருவத்தை புறக்கணிப்பதாய் ஆகிறது. உருவத்தைப் பற்றி மட்டுமே கவலை கொள்ளும் இவ்வகை வடிவவியல் வாதமாகிறது. இரண்டு முனைப்புகளும் வாசகன் மீது அக்கறையற்ற வாசகத் தீர்மானமற்ற அலட்சிய தன்மையையே காட்டுகின்றன.
வாசகர் தளம் பற்றிய கவனிப்புடன் உள்ளடக்கத்தை, உருவத்தைக் கொண்டு பிரகாசப்படுத்துவது தமிழில் புதிய எடுப்புடன் தொடங்கப்படவேண்டும். அது ஒரு கவிதை மரபாகவோ, ஒரு தனிக் கவிஞனாகவோ இன்னும் முன்னுக்கு வரவில்லை. அதன் முளைகள், தனிப் பொறிகளாக, சில கவிதைகளில், ஒரு கவிஞனின் ஏதாவது ஒரு படைப்பில் என்ற நிலையில் காணப்படுகின்றன. அது,
"ஞாலம் தொழுதிடும்
நாள்வரும் நாள்வரும்
கைவளைக் சங்கிலிபோகும் - உம்
கால்கள் சுதந்திரமாகும்"
என்று வைகறையின் இனிய சந்தத்தில் வரும் எளிய பதங்களின் பிரயோகமாக இருக்கலாம். அதே மொழியில்,
"கண்ணீரில் தீப்பிடிக்கும்
காலமிதோ வருகிறது
கனவுநன வாகுமொரு
காலமிதோ வருகிறது"
என்று, கை.திருநாவுக்கரசின் 'இங்குமொரு பூமலரும்' கவிதையாக இருக்கலாம்.
"சோத்துக்கும் குழம்புக்கும்
சொல்லி சொல்லி... சொல்லிச் சொல்லி
வேற்றுமனை ஏறி
வீதி சிரிக்க வைத்தான்"
- பழமலையின் நவீன கதைப்பாடலாக இருக்கலாம்.
இதுவரை, நகர்ப்புற 'வெள்ளைக் காலர்' வாசகரிடம் அடைபட்ட கவிதை; இந்தக் கவிதைக்குப் புதுப்பிரதேசங்களாய் நாட்டுப்புறக் கதைகளும் சொலவடைகளும், ஜீவனுள்ள பேச்சுக்களும்.
"கிழவி கிழவி என்று
கேவலமா பேசாதே
மருதையில ஒருகிழவி
மறுசடங்கு ஆகியிருக்கா"
- இவைகளை மீட்டுருவாக்கம் செய்து, அகண்ட வாசகப் பகுதியை அடையமுடியும் பஞ்சுவின் இந்தக் கவிதையாக இருக்கலாம். அல்லது இன்குலாபின், "திருவிழா" கவிதையாக, பரிணாமனின்
"நிஜம் விளையாத பூமியும்
நெஞ்சிலாடும் கதிரும்"
கவிதையாக இருக்கலாம்.
['தளம்' நடத்திய 80 - களில் இலக்கியம் கருதரங்கில், வாசிக்கப்பட்ட கட்டுரையின் சுருக்கம்]
- சூரியதீபன்
(மனஓசை, ஜனவரி – பிப்ரவரி 1991)
- கோ.கேசவன், தமிழ் சிறுகதைகளில் உருவம் - பக்கம் 11
- க.பூரணசந்திரன், மேலும் இதழ் - ஆகஸ்ட் 90
- புதுக்கவிதைகளின் நோக்கம்: பக்கம் 60, இ.மறைமலை
- மொழியாக்கம்: இ.மறைமலை
- லூசுன் – புதிய இலக்கியம் குறித்த சில சிந்தனைகள்
- கோ.கேசவன், தமிழ்ச் சிறுகதைகளில் உருவம் - பக்கம் 11
- க.பூரணசந்திரன், மேலும் இதழ் - ஆகஸ்டு 90
- மார்க்சிய அழகியல் (தமிழ்) - சச்சிதானந்தன் - பக்கம் 28
கருத்துகள்
கருத்துரையிடுக