கணையாழி மே 2020 இதழ் பற்றி ம.ரா.வுக்கு கடிதம்


அன்பு நண்பருக்கு, 

நேற்று தங்களுடன் உரையாடியதின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம். எனது ”வெளியேற்றம்” கதை இதனுடன் இணைத்துள்ளேன். செழுமைப்படுத்தப்பட்ட இதனையே தாங்கள் பயன்படுத்தலாம். சிறுகதை என்றோ, குறுநாவல் என்றோ பக்கங்களுக்கேற்ப அடையாளமிட்டுக் கொள்க.

மே இதழில் தலையங்க உரை வழக்கம் போல் சுயமான எடுத்துரைப்பு பாணியைக் கொண்டுள்ளது. ”வயிறு இழந்தவர்களையும் வாய்ப்பு இழந்தவர்களையும் கை கழுவச் சொல்கிறது” என எப்படியொரு சமூகப் பாசிசம் அரசியலால் கட்டமைக்கப்படுகிறது என்பதை விளகுகிறது. ’ஒவ்வொரு வர்க்கத் தட்டுக்கும் வேறுவேறானது சுமை’ என சுமையை மையமாக்கி, சாதாரணருக்கு வாழ்க்கையே ஒரு சுமை - என முடித்திருப்பது அர்த்தச் செறிவானது. இது போல சில தெறிப்புகள். இன்னும் உறைப்பாய் வந்திருக்கலாம் என்பது என் கருத்து.

பிலோமியின் கதை இயல்பாய் தன்னோட்டமாக வந்துள்ளது. தன் தந்தை தோழி ’மும்தாஜே’க்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதிர்ச்சியடைய வைக்கிறது. அதை வெளிப்படுத்தும் இறுதிப்பகுதி எத்தனையொ உள்ளார்த்தங்களைக் கொண்டுள்ளது. அவரவர் அவரவருக்குரிய பார்வைகளுடன்   அர்த்தங்கொள்ளும் பன்முகத் தளமாக ஆக்கியுள்ளார்- இது ஆகப்பெரிய வெற்றி.

அமரந்தாவின் ’கோழை’ கதை நேரடியாய் பெண் மனதைப் பேசுகிறது. அறிவுஜீவிகள் – என அடையாளப்படுத்தப் படும் பகுதியினரும் ’ஆண் கபடங்களுடன்’ இயங்குகின்றனர்; திரைப்பட அரங்கம், திரைப்படம், அதன் சுற்றாடல் – என வலுவான தளத்தை அமரந்தா முதலிலேயே உருவாக்கிவிடுகிறார். பெண் தனியாளாக வாழ்தல் என்பதை ஏற்றுக் கொள்கிறவர்களே மீறுகிற உரிமையும் கொள்கிறார்கள் என்பதினை  கோபமாகவே உணர்த்தியிருக்கிறார். நியாயமான கோபம்.

அகரமுதல்வனுக்கு எப்படி அரசியலைக் கதையாக்குவதென்பது கைவசப்பட்டுள்ளது. அது தெரிந்திருப்பதால் களக் காட்சிகளின் பின்னணியைக் கோர்த்துப் பண்ணுகிறார். எழுத்துத் திறத்தில் ஒவ்வொரு படியாக மேலேறிக்கொண்டு போகிறார் என்பதற்கு ”என்னை மன்னித்துவிடு தாவீது”ம் நிருபணமாகிறது. காரணம் வேறொன்றுமில்லை - வளமான சுயானுபவம். அதை வகைப்படுத்தும் நேர்த்தி. 

வ.ந.கிரிததரனின் பாரதியாரின் சுய சரிதை - பிள்ளைப் பருவக் காதலை, முதற்காதலை மிக நயம்பட எடுத்துத் தருகிறது. இது போன்ற ஆய்வுகளுக்கு நிறைய்ய கணையாழி இடம் செய்யவேண்டும் என விரும்புகிறேன்.

இந்திரா பார்த்தசாரதியின் ”சுதந்திரத்தால் யாருக்கு லாபம்” - அன்றைய மக்களின் போக்குக்கு மட்டுமல்ல, இன்றைக்கும் ஒவ்வொருவருக்கும் விழும் சாட்டையடியாக இருக்கிறது. இதயசுத்தி மிக்க காதுகளுக்கு இது கேட்கும்.   

இந்த இதழிலேயே கட்டாரி, கவிஜி, சதீஷ் குமார் ஆகியோரின்  கொரொனா –கவிதைகள் வெளிப்பட்டுள்ளன. கொரொனா – கவிதைகள் தொகுக்கும் முற்சியை இதிலிருந்தே நான் தொடங்குகிறேன். "அவசரநிலைக் கால இரவுகள்” என மனஓசை வெளியிட்ட கவிதைத் தொகுப்பு, 1984-ல் தான், அதன் வெளிப்பாட்டுக்கும் ஏறக்குறைய பத்தாண்டுகள் தேவைப்பட்டது. எனவே அவசரப்படத் தேவையில்லை. வெளியாக வெளியாகத் தொகுக்கலாம்.

நட்புடன்,

பா.செயப்பிரகாசம்

17 மே 2020

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்