நதியோடு பேசுவேன் - சூரியதீபன் கவிதைகள் ஒரு பார்வை - பொன்.குமார்
"கவிதைத் தளத்துக்கு புதிதாக வந்திருக்கும் அதிகார பீடம் நொறுக்கப்படவேண்டும். இதற்கு எதிரான உரையாடல்களைத் தொடங்க வேண்டும் என்ற காலகட்டத்தில் இந்நூல் வருகிறது" என்னும் அறிவிப்புடன் வந்திருக்கும் தொகுப்பு 'நதியோடு பேசுவேன்' (செப்டம்பர் 2003). எழுதியவர் சூரியதீபன் - எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்தின் புனைப்பெயர். 'எதிர் காற்று' முதல் கவிதைத் தொகுப்பு. எதிர் காற்று தொகுப்பில் உள்ள கவிதைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஏறக்குறைய சூரியதீபன் கவிதைகள் என்றே குறிப்பிடலாம். கதைகள், கட்டுரைகள் எழுதினாலும் கவிதைகளில் ஒரு வேகம் இருக்கும். படைப்பு எதுவானாலும் மக்களுக்கானதாகவே சூரியதீபனின் குரல் இருக்கும்.
தொகுப்பின் முதல் கவிதையே தொகுப்பின் தலைப்பான ' நதியோடு பேசுவேன்' என்னும் கவிதை. 1999இல் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் நீதி கேட்டு போராடிய போது தாமிரபரணி ஆற்றில் பதினேழு பேர் இறந்தனர். மரணம் என்கிறது அரசு. கொலை என்கிறார் சூரியதீபன். கவிஞருடைய கேள்விகளாகவும், கொலை செய்யப்பட்டவர்களின் பதில்களாகவும் இக்கவிதையை எழுதியுள்ளார். கொலை செய்யப்பட்டவர்களின் வாக்கு மூலங்கள் என்கிறார். ' நதியில் விளைந்தது மரணமா?' என்னும் கேள்வியை எழுப்பி
மூச்சு தத்தளிக்கும் குழந்தையைமார்பில் அணைத்தபடிமல்லாந்து, நானொரு படகாய் மிதக்கும்தாயின் சடலம் சொல்லும்கொலை, கொலை, வங்கொலை.
என்கிறார். ஆற்றில் கொல்லப்பட்டவர்கள் தொழிலாளர்களுக்காக போராடிய தலித்துகள் என்கிறார். இக்கவிதை அரசுக்கு எதிரானது. இக்கவிதை மூலம் கொல்லப்பட்டவர்களுக்காக நீதி கோரியுள்ளார்.
ஒரு படைப்பாளி என்பவன் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். அமைதியாக இருப்பது ஆபத்தானது.
பாட்டுத் திறத்தாலே வையத்தைப்பாலித்திடப் பிறந்த பாரதியை,பாரதி வாழ்ந்த தெருவில்மனித நிணமும் ரத்தமும் தேடிமதவெறிக் கைகள்உடைத்த கதவுகளுக்குள் வெடித்த கதறலை,வெண்மணி நினைவை,விழுப்புரம் கறுப்பு நாளை,விரியன் பாம்புகள் கொத்தியவிஜயா, பத்மினியின் விம்மலைவாச்சாத்தி மகள்களின் வேதனையை,எங்கிருந்து சிறுகுரல் கேட்டாலும்இடிஇடிக்கும் இதய அதிர்வுகளைஇழந்தாய்.
என கவிஞர் சாடியுள்ளார். அநியாயங்களும் அக்கிரமங்களும் அநீதிகளும் நடந்தேறும் போது ஒரு படைப்பாளி குரல் கொடுக்காத போது, எதிர்ப்பு தெரிவிக்காத போது மீண்டும் ' கள்' தொடரவேச் செய்யும். கவிஞர் குறிப்பிட்டவாறு பட்டியல் நீளும். ' எத்தனை காலம்' என தலைப்பிலேயே கேள்வி எழுப்பியுள்ளார்.
இருப்பதிலெல்லாம் பெரிய சோகம்,இருக்கும் ஆற்றலைவிரும்பியே அழிப்பது.
என்றும் விமர்சித்துள்ளார்.
மலை மனிதர்க்குக் கிடைத்த ஒரு கொடை. கொடையை கோடை கால ஸ்தலமாக்கி மெல்ல மெல்ல மனிதர் குடியேறி வசிப்பிடமாகிவிட்டார்கள் மனிதர்கள். மரங்கள் இருந்த மலையில் மனிதர்கள். மனிதர்கள் வசிக்க மாளிகைகள். மலைகள் மாசுபடுவதை, மரங்கள் வெட்டப்படுவதைக் கண்டித்து கவிஞர் சூரிய தீபன் எழுதிய கவிதை ' விஷ்ணு திரும்புவாரா?'.
'ஓஸோன்' படலம்ஓட்டைகளால் கிழிந்துஉலகொரு சாம்பல் கிண்ணமாய்ஆகுமுன்,விஷ்ணு புரண்டு படுப்பாரா?
என கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்காலம் குறித்த எண்ணத்துடன் எழுதப்பட்டுள்ளது. விஷ்ணு புரண்டு படுக்க மாட்டார். மக்கள்தான் திருந்த வேண்டும்.
பேருந்து நாள் என்னும் பெயரில் மாணவர்கள் அட்டகாசப் பேரணி நடத்தியது குறித்து கவிஞர் ஒரு ' வாக்கு மூலம்' அளித்துள்ளார்.
பேருந்தை அலங்கரித்துஆட்டம், தப்பாட்டம்காட்டுக் கத்தல், கானாப் பாட்டுபேருந்தை அலங்கரித்துமனித குணத்தைஅனாதரவாய் விட்டதைச்சொல்லக் கேட்டுப் பயந்தேன்.நெஞ்சகப் பட்டறைக்குள்நீந்தும் இதயம் சுழன்றது.பேருந்து நிறுத்தத்தில்காத்து நிற்கும் பெண்கள் மேல்கண்ணடிப்பு, கையசைப்பு.
என மாணவர்கள் செய்யும் அட்டகாசங்களை, அட்டூழியங்களை படம் பிடித்துக் காட்டியுள்ளார். மாணவர்கள் நடத்தும் பேரணி மக்களுக்கானதாக இருக்க வேண்டும். சூரியதீபன் மாணவப் பருவத்தில் மொழிக்காக போராடியது நினைவுக்கூரத்தக்கது.
நாதியற்றுப் போனோம் என்பார்கள். நாம் நதியற்றும் போனோம். 'ஒரு நதியில்லை' என கவிஞர் வருந்தியுள்ளார்.
நதியைக் கொன்றாயிற்றுநதிக்கருகில் பாடஎதுவுமில்லை கவிதை
என்று ஒரு கவிதை எழுதியுள்ளார். கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
நாயைக் கொன்றவனுக்குதண்டனை உண்டுநதியைக் கொன்றவனுக்கு?
என கவிஞர் தமிழ்நாடன் எழுப்பிய கேள்வி நினைவிற்கு வருகிறது.
தர்மபுரியில் படுகொலை செய்யப்பட்டு - அரசு பயங்கரவாதத்துக்கு மற்றுமொரு களச்சாவாய் ஆன புரட்சியாளர் ரவீந்திரன் நினைவாக எழுதப்பட்ட கவிதை 'முதல் மொழி'.
உதயம் போல் தெரிந்தவனை,அஸ்தமனத்துக்குள்சொருகினார்கள்தங்கள் கட்டளைக்குஎதிரானவர்களுக்கெல்லாம்.ஒரு கட்டளையிட்டார்கள்."ஆண்டவனே வந்தாலும்உங்களைத் திருத்த முடியாது.எமன் வந்தால் தான்முடியும்"வந்தார்கள்.
என்னும் கவிதை மூலம் அரசே எமனாய் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். புரட்சியாளர்களைக் கண்டால் அரசுக்கு ஆவதில்லை என்கிறது கவிதை.
எல்லா கிராமங்கள் போலவே சமத்துவபுரமும் சாதி நாற்றம் மேலெழுகிற இடமாக ஆகிவிட்டது. சிவகங்கை மாவட்டம் அரசனூர் சமத்துவபுரத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் பிடித்த தலித் குடும்பத்தாரைத் தாக்கி பஞ்சாயத்து கூட்டி ஊரைவிட்டே தள்ளி வைத்தார்கள் உயர்சாதிக்காரர்கள்.
இன்றைய செய்தி - இன்றும் வரலாறு; நாளையும் வரலாறு
என்னும் குறிப்புடன் எழுதப்பட்ட கவிதை ' சமத்துவ தீர வாசம்'.
சமத்துவபுரங்கள் எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கம் முழுமையாகவில்லை. எல்லா சாதிக்காரர்களும் இருக்கிறார்கள். ஆனால் சாதிக்காரர்களாகவே இருக்கிறார்கள். சமூகப் பொதுவெளியைப் போலவே சமத்துவப்புரத்திலும் சாதி வேற்றுமை நிலவுகிறது. தீண்டாமை தொடர்கிறது. இது தொடர்பாக பொன்.குமார் எழுதிய ஒரு ஹைக்கூ
சமத்துவபுரத்தில்மலரத் தொடங்கியதுசாதி மல்லிகை
கவிஞர் 'சமத்துவ தீர வாசம்' என்னும் கவிதையில்
சதியால் சரிந்த சாதிகள்பல்லக்கு ஏறினதாய்சரித்திரத்தின்கிழிந்த பக்கமும் இல்லை.கிறுக்குப் பிடித்ததாநம் சரித்திரம்?
என கேள்வி எழுப்பியுள்ளார். சரித்திரங்கள் சாதியை வைத்தே தொடர்கிறது என்கிறார். பல்லக்கு தூக்கிகளை சரித்திரம் பல்லக்கில் ஏற விடாது என்பதே சரித்திரம்.
படைப்பாளி என்பவன் சமூகத்தைப் பிரதிபலிப்பவன். சமூகக் குற்றங்களைக் கண்டிப்பவன். சமூகத்திற்காகக் குரல் கொடுப்பவன். எந்த குற்றங்களுக்காகக் குரல் கொடுக்கிறானோ அந்த குற்றத்தைச் செய்வனாக இருக்கக் கூடாது. படைப்பு வேறு படைப்பாளன் வேறு என்று இருப்பது குற்றம். அவ்வாறான படைப்பாளிகளை 'நனையாத கவிதைகள்' மூலம் சாடியுள்ளார். சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதே சிறப்பு.
பாபர் மசூதி இடிப்பில் சிக்குண்டு மடிந்து போன சிறுவன் வரலாற்று மீட்பு நாயகனாக உத்தரப்பிரதேச அரசின் பாடத்திட்டத்தில் பதியப்பட்டுள்ளதை விமர்சித்து எழுதிய கவிதை 'பத்திரமாய் இருக்கிறது வரலாறு'. வரலாறு எப்படியெல்லாம் பதியப்படுகிறது, மாற்றி எழுதப்படுகிறது என புரியச் செய்கிறார்.
ரோஜா நிறம் சிவப்புஎன்றாலும்பல வண்ணங்களில் ரோஜாபயிராகும் மண்ணில்காவி நிறத்தில் மட்டும்பூக்க வைக்க ஆசை.
என காவிகளை அடையாளம் காட்டியுள்ளார். காவிமயமாக்கும் முயற்சியில் வரலாறு எழுதப்பட்டு வருவதைத் தெரிவித்துள்ளார்.
ஈழப்பிரச்சனை ஒரு முடிவிற்கு வராமல் வளர்ந்து கொண்டே வருகிறது. வளர்க்கப்பட்டு வருகிறது. ஈழ நெருப்பை பற்ற வைத்தவர் யார் என ஆராயாமல் தீர்வு காணாமல் நெருப்பை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே வருகிறார்கள். அணையாமல் பார்த்துக் கொண்டார்கள். இந்நிலையில் கவிஞர் சூரியதீபன் எழுதியது
இன்றுவரை புரியாததுஈழ நெருப்பைஎத்தனை தலைவர்கள்எத்தனை விதமாகஅணுக முடியுமென்பதுதலைவாசலில் நிற்கிறதுதேர்தல்.
ஈழ நெருப்பை எத்தனை தலைவர்கள் எப்படி அணுகினார்கள் என்பது புரியவில்லை என தெரிவித்து தேர்தல் வருகிறது என்று எச்சரித்துள்ளார். கவிதை தலைப்பு 'விழுந்த இடம்'.
வாழ்க்கை என்பது மாசு நிறைந்தது. மாசற்ற வாழ்க்கைக்கு மனிதர்க்கு வழியில்லை. மாநகரங்களில் மாசற்ற வாழ்விற்கு வழியே இல்லை.
வாழ்க்கைத் தூசிவாகனப் புகைஇல்லையெனச் சொல்லும்எங்களூர்க் குடை அத்தி.
என மாசற்றதாக இருக்கிறது எங்களூர் என்கிறார். இக்கவிதையின் தலைப்பு 'தூசி படரா...' தூசி படராமல் மாசு பரவாமல் இருக்க வேண்டும் என்கிறார்.
'சுதந்திரம்' என்றொரு கவிதை,
நாடெங்கும் ஊர்கள்,ஊர்களிலெல்லாம் வீதிகள்விதிகளில் இல்லை சேரி."மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசும்"பழமைக்கும் பழமையாம்பஞ்சாங்க நம்பிக்கைக்குவிஞ்ஞானக் கலவை பூசம்வேதவித்து சொல்வார்.“நாற் புறமும் காற்று வீச -ஊர்ப் புறத்தே சேரி வைத்தார்சுத்தக்காற்று இதுபோல் எங்கேணும்சுற்றி வருமோ? சுகம் தருமோ?"நல்லது.சுதந்திரக் காற்று உங்களுக்குசுத்தக் காற்று எங்களுக்கு
எனத் தொடங்குகிறது. சேரி ஊரிலிருந்து தனித்தே இருக்கிறது என்கிறார். தனித்தே இருந்தாலும் சுத்தக் காற்று சுற்றிலும் வருகிறது என்கிறார். ஆனால் சுதந்திர காற்று சேரிக்குள் வீசவில்லை என்று குற்றம்சாட்டுகிறார். சேரி மக்களுக்கு இன்னும் விடுதலை இல்லாமலே உள்ளனர் என்கிறார்.
மழையை நம்பியே மக்கள் வாழ்வு உள்ளது என்பதைக் கூறுகிறது 'கிராமத்து நெருப்பு' கவிதை. ஒரு சமயம் மழை வெள்ளமாக உருவெடுக்கிறது. மற்றொரு சமயம் பெய்யாமலே வறட்சியை உண்டாக்குகிறது.
ஆன்மாவின்ஆழத்தைத் தொடுகிறதுவறட்சி.
என்று வருத்தப்பட்டுள்ளார். மேலும்
"சேலை பிழியற அளவு சிந்தினாப் போதும்ஜீவனை முடிஞ்சி வச்சிக்கிருவோம்"
என அத்தை சொல்வதாக மக்களின் நிலையைக் காட்டியுள்ளார்.
புரட்சிகரப் பெண்கள் தமிழக சட்டமன்றத்தில், ஆபாச எதிர்ப்பு
முழக்கமிட்டு துண்டுப் பிரசுரங்கள் வீசினார்கள், சட்டமன்றம் விதித்த
தண்டனைக்கும் அப்பால், காவல் நிலையங்களில் அவர்கள்
சித்திரவதைப்படுத்தப்பட்டார்கள் என்பதை வைத்து கவிஞர் எழுதிய கவிதை 'எதிர்க்காற்று'. சட்டமன்றம் கேள்வி எழுப்புகிறது "அவர்கள் யார்?". அரசு கேள்வி எழுப்புகிறது "அவர்கள் யார்?". இதற்கு கவிஞரின் பதில்
அவர்......காலத்தை வழி நடத்தும்எதிர்க்காற்றின் சரித்திரம்.
என்பதாகும். சரித்திரம் என்பது எப்போதுமே கடந்த காலமாகவே இருக்கும். கவிஞர் எதிர்க்கால சரித்திரம் என புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
பா.செயப்பிரகாசம் என்னும் சூரியதீபன் மக்கள் பிரச்சனைகளையே பேசுபவர். மக்கள் பக்கமே நிற்பவர். அவர் சார்ந்த வானம்பாடி இயக்கமும் அவருடைய மார்க்சிய சிந்தனையும் சூரியதீபனை ஒரு மக்கள் கவிஞரென்றே அடையாளப்படுத்தியது. நாட்டில் மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சனைகளையே பேசியுள்ளார். மக்கள் மீதான வன்முறைக்கு எதிராகவே குரல் கொடுத்துள்ளார். அரசு என்பது மக்களுக்கு ஆதரவாகவே இருக்க வேண்டும் என்பது சூரியதீபனின் சூளுரையாக உள்ளது. பாபர் மசூதி பிரச்சனை, மாஞ்சோலை பிரச்சனை, ஈழப் பிரச்சனை என எந்தப் பிரச்சனையானாலும் எந்நிலையிலும் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதின் வெளிப்படையாகவே கவிதைகள் உள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்துள்ளார். பா.செயப்பிரகாசம் என்னும் பெயரில் ஏராளமான கதைகளை எழுதி மக்கள் வாழ்வை பதிவு செய்தவர், சூரியதீபன் என்னும் பெயரில் எழுதிய கவிதைகள் குறைவே என்றாலும் அவரை ஒரு கவிஞராகவும் ஒரு கலகக்காரராகவும் ஒரு போராளியாகவும் அடையாளப்படுத்துகின்றன. மக்களின் பிரதிநிதி என நிரூபித்துள்ளார் சூரியதீபன்.
கருத்துகள்
கருத்துரையிடுக