கிராமத்து நெருப்பு
பத்துநாள் பேய்மழை
கண்மாய் பிடுங்கி
கரை, தரை, தெரியாமல்
காடெல்லாம் வெள்ளம்
அத்தோடு மேகங்கள் எச்சம் காட்டி
மேல்மழை அத்தது
கண்மாய்க்குள் கிடைத்தால்
நெல்காயப் போடலாம்
கேடு காலத்திற்கு
கிரிக்கெட் ஆடலாம்
முந்தின விதைப்பு
வெள்ளத்தில் போனது
பிந்தின விதை
புழுதியில் மருளுது
மண்ணுக்குள்ளிருந்து
ஆகாயம் பார்த்து மயங்கும் முளை;
மண்ணுக்கு மேலிருந்து
ஆகாயம் பார்த்து
மயங்குவான் சம்சாரி.
“சேலை பிழியற அளவு சிந்தினாப் போதும்
ஜீவனை முடிஞ்சி வச்சிக்கிருவோம்”
என்பாள் செண்பகம் அத்தை.
உப்பங்காற்றுக்கு என்ன அவசரம்?
உரத்து வீசுது
உப்பங்காற்றின்
மழைக்கு அதிகாரம் இல்லை!
சொல்லிச்சொல்லி மாய்வார் அய்யா.
சூரியனிலிருந்தும்
சூழ்ந்த வானிலிருந்தும்
கோடி கோடி காலமாய்
வீசும் காற்றிலிருந்தும்
வழிகிறது இருள்
ஈரல்குலை கருகும்வரை
பாய்கிறது நெருப்பு.
ஆன்மாவின்
ஆழத்தைத் தொடுகிறது
வறட்சி.
- சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)
கருத்துகள்
கருத்துரையிடுக