கண்மணியின்‌ அஞ்சலை


நிகழ்காலத்‌ தமிழ்‌ இலக்கிய உலகின்‌ வாசகர்கள்‌, பெரும்பாலும்‌ நகர்சார்‌ வாசகர்கள்‌. தமிழ்‌ உரை என்ற பெயரில்‌ ஒரு பொதுமொழிக்கு தங்களை அடையாளப்படுத்திக்‌ கொண்டவர்கள்‌.

தெரியாதவற்றை தேடித்‌ தெரிந்து கொள்ளுதல்‌ புதியன தேடலில்‌ ஒருவகை. வாசிப்பு முயற்சியில்‌ பல புதிய, தனித்துவமான பிரதேசங்களுக்கு இது இட்டுச்‌ செல்லும்‌. புதியன தேடி நுழையாமல்‌, பொது மொழியிலேயே பழகிவிட்ட வாசகர்களை வட்டார வாழ்க்கையும்‌ வட்டார மொழியும்‌ மிரட்டுகிறது. மண்ணில்‌ ஓட்டி வாழும்‌ மக்களின்‌ வாழ்க்கை அமைப்பை, மொழி வடிவைக்‌ கண்டதும்‌ அயற்சி கொள்கிறார்கள்‌; ஒன்றை இவர்கள்‌ உணருவதில்லை - குறிப்பிட்ட வட்டார மக்களின்‌ வித்தியாசப்பட்ட வாழ்க்கையே, கலாச்சார வெளிப்பாடுகளே, வித்தியாசப்பட்ட, ஜீவனுள்ள வட்டார மொழியையும்‌ கொடுக்கிறது என்பதை உணர்வதில்லை.

இங்கேதான்‌ -

படித்த, நகர வாழ்க்கை சார்ந்த, பொது மொழி சார்ந்த வாசகர்கள்‌;

மண்ணின்‌ மக்கள்‌ மேல்‌, அவர்களின்‌ உயிர்ப்புள்ள மொழிமேல்‌ வாசிப்புப்‌ பிரியம்‌ கொண்ட வாசகர்கள்‌.

- என இருவகையாகப்‌ பிரிப்பது தவிர்க்க முடியாமல்‌ போகிறது.

வட்டார மக்களின்‌ வாழ்வு, மொழி என்று ஒதுக்கம்‌ கொள்வதோ, ஒதுக்கித்‌ தன்ளவோ, அயற்சி கொள்ளவோ செய்வது இலக்கியத்தில்‌ 'பெருத்த' வெள்ளாமையைத்‌ தடுத்துவிடும்‌.

வட்டார மக்களை, வாழ்வை வட்டார மொழியில்‌ வடித்துத்‌ தருகிற பாரம்பரியம்‌, ஒரு நீண்ட பட்டியல்‌ தமிழில்‌ உண்டு. புதுமைப்பித்தன்‌, கு.அழகிரிசாமி தொடங்கி, கி.ராஜநாராயணன், பூமணி, பொன்னீலன்‌, தனுஷ்கோடி ராமசாமி, கந்தர்வன்‌, மேலாண்மை பொன்னுசாமி, சோ.தர்மன்‌, அ.முத்தானந்தம்‌, அபிமானி என்று நீளும்‌ கரிசல்‌ நிலப்‌ பட்டியலோடு சேரும்‌ பழமலய்‌, தங்கர்‌பச்சன், விழி பா.இதயவேந்தன்‌ என்ற செம்புலப்‌ படைப்பாளிகளோடு கண்மணி குணசேகரன்‌ இணைகிறார்.

எந்தப்‌ பூமி தெரியுமோ, அந்தப்‌ பூமி பற்றி எல்லாவற்றையும்‌ கொடுத்திருக்கிறார். எதுவும் மிச்சம், மீதியாகவில்லை. அப்படித்தான், ஒரு படைப்பிலேயே எல்லாவற்றையும்‌ சேமித்து, செறிவாகத்‌ தந்துவிட்டது போல் தோன்றும்‌. ஆனால்‌ தொடர்கிற, தொடப்படாத மண்ணின்‌ இயல்புகள்‌ மலை போல்‌ குவிந்திருக்கிறது என்பது ஒவ்வொரு படைப்புக்களிலும்‌ புலனாகும்‌.

பூமிபுத்திரர்களான தாழ்த்தப்பட்ட மக்களின்‌ சித்திரத்தை விரித்திருக்கிறார்‌.

தனக்கு அப்பாற்பட்ட எதையும்‌ ஒரு கலைஞன்‌ தொட்டுத்‌ துலக்கிவிட முடியாது; அப்படித்‌ தொட்டாலும்‌ தொட்டது துலங்காது. தன்‌ எல்லைக்குள்‌ வராத எதையும்‌ தர முயல்வது தூரத்துத்‌ தண்ணியாக (கானல்‌ நீர்‌) விலகி விலகிப்‌ போகும்‌. படைப்பாளிக்கு மட்டுமல்ல; வாசகனுக்கும்‌.

கலையின்‌ இந்த அடிப்படை விதியை சரியாகக்‌ கணித்து, பீடம்‌ தெரிந்து சாமியாடியிருக்கிறார்‌ கண்மணி. மண்ணுக்கே உரிய வாகான சொலவடைகளும்‌ அங்கங்கே பொருத்தமாக பதிந்து அர்த்த மடிப்புகளை விரிக்கின்றன.

காடு விடுதல்‌, கொட்டை பொறுக்குதல்‌, கொட்டை கூட்டுவது, ஒடப்புப்‌பதம்‌, காரக்காய்‌ திருவுவது, சருவு சீய்ப்பது என்று முந்திரிக்காட்டு வார்த்தைகளுடே - அந்த செம்மண்‌ மக்களின்‌ முந்திரிக்கவுல்‌ (வாசனை) முண்டியடித்துக்‌ கொண்டு வருகிறது.

வேலை அசமங்குதல்‌, வாசாங்கு விடுவது (வசவு), மாளாவெட்டி (கர்ப்பிணி), அருகிளுப்பு (அறுவெறுப்பு), கன்னக்கடந்து என்று தமிழுக்கு உரம்‌ தரும்‌ வார்த்தைகள்‌, இப்போதுதான்‌ செம்புல ஊற்றிலிருந்து தோண்டி எடுக்கப்படுகிறது.

காட்டில்‌ முந்திரிக்கொட்டை பொறுக்குகிறபோது, சனங்களைப்‌ பூச்சி பொட்டு கடிக்காமல்‌, காபந்து பண்ணியதற்காக, குடிமுந்திரியின்‌ கீழே கோழி அறுத்து, காவு குடுத்துப்‌ படைத்துச்‌ சோறாக்கி கொட்டை பொறுக்கினவர்களுக்குப்‌ போடுகிறார்கள்‌. துணி, மணி எடுத்துச்‌ கொடுக்கிறார்கள்‌. வேளாண்‌ முறையில்‌ ஏதோ ஒரு உள்காரணம்‌ கொண்டு புறப்பட்ட நம்பிக்கைகள்‌, இன்னும்‌ தொடர்கின்றன. பழைய வேளாண்முறை மாறினாலும்‌ கூட, ஒரு அளவில்‌ இந்த நம்பிக்கைகள்‌ தொடரும்‌.

கெட்டியான இருள்‌ பாய்ந்த குடும்ப நிறுவனம்‌, இருளின்‌ வார்களால் இறுக்கமாகக்‌ கட்டப்பட்ட பெண்கள்‌, நிலமானிய சமூக உருவாக்கத்தின்போது உருவான குடும்ப அமைப்பில்‌, கூடுதலாக சாதி, மத உறவுகள்‌.

மேல்சாதிப்‌ பெண்‌களுக்கு, அந்தப் பளபளப்பு எந்த ஒளியையும்‌ பாய்‌ச்சி இருள்‌ உடைக்கவில்லை. திருமணமும்‌, கணவனும்‌ வாழ்வின்‌ பாதுகாப்பு என்று எண்ணுகிறார்கள். இதுவே தீர்வு என்று எண்ணுகிறது இந்து மரபு. இந்துக் கருத்தியல்‌ ஒடுக்குமுறையே, வாழ்நாள்‌ முழுதுக்கும்‌ பெண்கள்‌ மீதான நிரந்திர ஒடுக்குமுறையாக மாறியிருக்கிறது.

ஆனால் உழைக்கும்‌ மக்களாய்‌ இருப்பதாலும்‌, சாதியப்‌ படிநிலைகளின் அடிநிலையில் இருப்பதாலும்‌ சுழுத்து நெறிக்கும்‌ பெண்‌ ஒடுக்கும்‌முறை இந்துக்‌ கூட்டுக் குடும்ப மரபு உருவாக்கிய அடிமை நிலை, தாழ்த்தப்பட்ட பெண்களிடம்‌ குறைவாகவே இருக்கிறது. இவர்களுக்கு விவாகரத்து உரிமை, எதார்த்தத்தில்‌ இருந்து வருகிறது. சனாதன இந்துக்‌ கூட்டுக் குடும்ப மரபு அல்ல; பிரிந்து போகும்‌ உரிமையுடன்‌ கூடிய குடும்ப மரபு.

ஆணாதிக்கத்தின்‌ எல்லை மீறல்கள்‌ தாங்கமாட்டாத பெண்கள்‌, போகிற போக்கில்‌ தாலியை அத்து எறிவதும்‌, அதே நேரத்தில்‌ புதிய வாழ்வுப்‌ பிணைப்பை ஏற்படுத்திக்‌ கொள்வதும்‌ நடக்கிற காட்சிகள்‌. மேல்‌ சாதிய தாலிச் சட்டத்தில்‌ இந்த உரிமைகள்‌ இல்லை.

கார்குடல்‌ - மணக்கொல்லை - தொளார்‌, மறுபடி மணக்கொல்லை என்‌று அஞ்சலை மாறி மாறி அலைகிறாள்‌; அலைக்கழிக்கப்படுகிறாள்‌. விவாகரத்து உரிமை இருந்தும்‌ விருப்பம்‌ காரணமாக விவாகத்தை முறித்தும்‌ கூட, மனித குணங்களால்‌ இழிவுபடுத்தப்படுகிறாள்‌.

உழைப்புக்கும்‌ நீதிக்கும்‌ முதலிடம்‌ தரும்‌ இவர்களிடம்‌ கூட, பெண்களை ஒதுக்குவது பொதுவாகவே இருந்து வருகிறது என்பதுதான்‌ நாவல்‌. ஒரு குழந்தை பெற்ற பிறகும்‌, மறுபடி மனைவியாக ஏற்றுக்கொள்கிற மண்ணாங்கட்டி கூட, ஒரு கட்டத்தில்‌ ஆணாக மாறிப்‌ போகிறான்‌.

நல்லது மட்டுமே நினைக்கும்‌ வள்ளி, கருப்பாயி, அம்மாக்காரி, நடுவுள்ள அக்கா, தங்கமணி என்று குணங்களின்‌ வார்ப்புகள்‌ ஒருபுறம்‌; மூத்த அக்கா கல்யாணி, ஓர்ப்படியாள்‌, வயலூராள்‌ என்று குணங்கெட்டதுகள்‌ மறுபுறம்‌; நாவல்‌ முழுதும்‌ பெண்களாகவே நிறைந்து கிடக்கிறார்கள்‌.

அடிபைப்பு சண்டை நிகழ்கிறபோது மேல்சாதி ஒடுக்குமுறை காட்டப்படுகிறது. மற்றெல்லாம்‌, தமக்குள்ளே ஆசைப்பட்டு, ஏமாந்து, கருகித்‌ தீய்ந்து வாழும்‌ வாழ்க்கையே மையம்‌ கொண்டுள்ளது.

நாவல்‌ முடிவுகூட, எந்த இடத்தில்‌ நிறுத்துவது என்பது கண்மணிக்குக்‌ கைவந்துள்ளது. உச்சத்தை நோக்கி நகர்த்துவது, முடிவை தீர்வாக வைப்பது என்ற பழைய முறையை அடித்துத்‌ தகர்க்கிறது நாவலின்‌ இறுதி.

தலித்‌ மக்களின்‌ நிஜமான மொழி படைப்பாளிக்கு வெகு லாவகமாகவே  வருகிறது.

வறண்ட கோடையில்‌, புன்னை மரம்‌ மாதிரி துளிர்த்திருக்கிறது நாவல்.

- பா.செயப்பிரகாசம்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

கரிசலின் வெக்கை உமிழும் கதைகள்..! - இரா.மோகன்ராஜன

பா.செயப்பிரகாசம் பொங்கல் வாழ்த்துரை - நியூஸிலாந்து ரேடியோ

பா.செயப்பிரகாசம் நேர்காணல் - ஆல் இந்தியா ரேடியோ, புதுச்சேரி

அமுக்குப் பேய்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி