பொன்னீலன் கடிதம்

அன்புத் தோழர் பா.செ அவர்களுக்கு,

வணக்கம். தங்கள் இரண்டு கடிதங்களையும் வாசித்தேன். வகுப்புவாத ஆபத்துக்கு எதிராக நீங்கள் எடுத்துவரும் முயற்சிகள் மகிழ்ச்சியளிக்கின்றன. நான் நம் நாட்டின் தெற்கு ஓரத்தில் வாழ்பவன். உடல் பலவீனத்தால் ரயில் பயணத்தைத் தவிர வேறு பயணங்கள் மேற்கொள்ள இயலாதவன். உங்கள் இன்றைய கருத்தரங்கில் நான் கலந்துகொள்ள இயலாததன் காரணம் இதுதான். 

இம்மாதம் 15, 16, இரு நாட்களும் சென்னையில் இருந்தேன். இரு நாட்களும் இரு கூட்டங்களில் வகுப்புவாத அபாயம் பற்றித்தான் உரையாற்றினேன். ஒவ்வொரு கூட்டத்திலும் கிட்டத்தட்ட 80 பேர் கலந்து கொண்டார்கள். 

தோழரே, நீங்களும் நானும் வகுப்புவாத்துக்கு எதிரான பிறவி எதிரிகள்.  நம் இருவரின் பாதைகளும் சற்று வேறுபட்டிருக்கலாம். ஆனாலும் நோக்கம் ஒன்றுதான். என்னைப் பொறுத்தவரையில் மிக நீண்ட காலமாக வகுப்புவாதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுத்திலும் பேச்சிலும் பதிவு செய்து வருகிறேன். ‘அயோத்தி’ பிரச்சினை உச்சத்துக்கு வந்தபோது, ‘வகுப்புவாதமும் ராமரின் அயோத்தியும்’ என்னும் ஆர்.எஸ்.சர்மாவின் வீரியமான நூலை மொழிபெயர்த்து என்.சி.பி.எச் மூலமாக வெளியிட்டேன். ஆர்.எஸ்.பட் எழுதிய ‘இந்து முஸ்லீம் மோதல் என்னும் பிரச்சினை’ என்ற நூலையும் மொழிபெயர்த்து என்.சி.பி.எச் மூலம் வெளியிட்டேன். 1980 -களில் நான் ஒரு தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய ‘இந்துத்துவத்தின் பண்பாட்டு ஊடுருவல்’ என்னும் உரையைக் குறுநூலாக நானே அச்சிட்டு ஆயிரக் கணக்கில் விநியோகம் செய்தேன். அதைப் பின்னர் களரி வெளியீட்டகம் மறுபதிப்புச் செய்தது. 

1991-ல் வெளிவந்த ‘புதிய தரிசனங்கள்’ என்னும் நாவலில் ஆர்.எஸ்.எஸ் அவசரகால சூழலில் தன்னை தந்திரமாக வலுப்படுத்திக் கொண்டு எப்படி சமூகத்தில் வேர்விட்டது என்று கூர்மையாகப் பதிவு செய்தேன். நாவலின் கடைசி அத்தியாயத்தில் சிறையிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த தோழர்கள் முதலில் எதிர்கொண்டது ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமே. ஆர்.எஸ்.எஸ் கிராமங்களிலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று அந்த காட்சி முற்போக்கு இலக்கியவாதிகளையும் அரசியல்வாதிகளையும் எச்சரிக்கிறது. ஆனால் பரிதாபம், நாவலை விமரிசித்த எந்தத் தமிழ்நாட்டு விமரிசகரும், அல்லது அரசியல்வாதியும் இந்த அபாய சக்தியின் வளர்ச்சியை நாவல் கூர்மையாகச் சுட்டிக்காட்டுகிறது என ஒரு வார்த்தைக்கூடச் சொல்லவில்லை. எந்த விவாதமும் இதுபற்றி எழவில்லை. தமிழ்நாட்டின் நிலை இது.

2010-ல் வெளியிட்ட ‘மறுபக்கம்’ நாவல் இந்துத்துவத்தின் வகுப்புவாத அபாயத்துக்கு எதிரான ஒரு வலுவான ஆவணம். தமிழ்நாட்டில் திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் மட்டுமே நாவலினுள் இருக்கும் இந்த எச்சரிக்கையை முழுமையாக உணர்ந்து, அதை மிக விரிவாகத் தன் விடுதலை இதழில் வெளிப்படுத்தினார;. அதற்காகப் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் என்னை அழைத்துப் பாராட்டவும் செய்தார். ஆனால் பரிதாபம், வகுப்பவாதத்துக்கு எதிராக முனைந்து நிற்கும் முற்போக்கு அரசியல் சக்திகளோ, இலக்கிய சக்திகளோ, இந்த அம்சத்தைக் கண்டுக்கொள்ளவே இல்லையே.     இப்பொழுது அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இரண்டாவது பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். மிகமிகக் கடுமையான பணி. நவம்பர் இறுதிக்குள் இந்தப் பணியை நிறைவு செய்து என்.சி.பி.எச்-சுக்கு அனுப்ப வேண்டும். 

நான் சும்மா இருக்கவில்லை. தொடர்ந்து என் போக்கில் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். கலை இலக்கியப் பெருமன்ற அமைப்பும் போராடிக் கொண்டிருக்கிறது. இலக்கியவாதிகளும், கலைஞர்களும் அணி திரண்டு, தங்கள் கலை இலக்கிய ஆயுதங்களைக் கூர்தீட்டி, மக்களிடையே சென்று வகுப்புவாத ஆபத்துக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் நமக்கான இன்றைய வழி. அதை மிகவும் பலவீனமான நிலையிலும் கலை இலக்கியப் பெருமன்றம் தென் தமிழகத்திலாவது செய்து கொண்டே இருக்கின்றது. வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதற்கு இந்தச் சரியான பாதை விரிவுபடுத்தப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். உங்கள் முயற்சிகளை மனமாரப் பாராட்டுகிறேன். உங்கள் கருத்தரங்கு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும். நான் வராவிட்டாலும் என் உணர்வு உங்களோடேயே இருக்கின்றது. வாழ்த்துகிறேன். அணி திரள்வோம் முன்னேறுவோம்.

அன்புடன்,

பொன்னீலன்

29-09-2015  

நாகர்கோவில்

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்