இலக்கியப் பிரச்சினைகள் - தலித் எழுத்து

அமைதி ஊன்றிய இரவில்‌ விம்முதலாய்‌, புடைத்தலாய்‌, வீரியமாய்‌, கனிவாய்‌, காதலாய்‌, ரகசியம்‌ பேசுவதாய்‌ பல தினுசுகளில்‌ இறங்கும்‌ மழை போல்‌ இருக்குமா?

முன்னும்‌ பின்னும்‌, பக்கவாட்டிலும்‌ நமக்குள்‌ காற்றைக்‌ கொண்டு வந்து சேர்க்கிற ஊஞ்சல்‌ போல்‌ அசையுமா அது?

இனிப்பான பொழுதுகளை எதிர்நோக்கிப்‌ போகும்‌ உல்லாச யாத்திரை போல இருக்கக்‌ கூடுமா?

மழை இசையை ரசிப்பது போலவோ, ஊஞ்சல்‌ ஆட்டம்‌ ஆகவோ, உல்லாசப்‌ பயணக்‌ களிப்பு மாதிரியோ, இம்மாதரியான மனநிலையை தலித்‌ வாழ்வு பற்றிய வாசிப்பு தந்துவிடாது, உல்லாச மனப்போக்கு கொண்ட ஒ௫ பேனா அவர்கள்‌ வாழ்நிலைகளைப்‌ பேசாது, பொதுவான கலை, இலக்கிய வாசிப்பு மனநிலைக்கும்‌, ஒடுக்குப்பட்ட அந்த ஜீவன்களின்‌ இலக்கியத்துக்கும்‌ வெகு தூரம்‌.

அவர்கள் பொருளாரதாரத்தின் பாதாளத்தில்‌ கிடந்து முண்டுகிறார்கள்‌, யாருக்கோ நிலத்தைக் கீறிக்கொண்டு அலைகிறார்கள்‌. குடிக்கிற நீருக்கு பொது கிணற்றிலிருந்து, நீர் நிலையிலிருந்து தூர நிறுத்தப்படுகிறார்கள்‌. மீறினால்‌ உள்ளிருக்கும்‌ ஒருதுளி சுரணையையும்‌ எடுத்துவிடும்‌ சாதிச்‌ சவுக்கு விளாசுகிறது.

அவனுக்காகப்‌ பேசுவது, அவனுக்காகப்‌ படைப்பது, அவனுக்காக போராடுவது என்ற பல காரியங்கள் செய்வதே - அவனுக்கு நெருக்கமாக சேர்க்கும்.

தலித்தாக இருத்தல், தலித்துக்கு நெருக்கமாக உணர்தல்‌, தலித்தாக உணர்தல்‌ என்றிருக்கிற யாரும், அவனுக்காக பேச, படைக்க, போராட தலித் எழுத்தை தர முடித்தவனாகிறார்.

பிறவியிலேயே தலித் ஆக இருத்தல், பிறப்பால் வேறொருவர் ஆனவர் தலித்தாக ஆகுதல், இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. அந்த வாழ்வையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் உணர்தலுக்கும்‌, வேறொரு 

வாழ்வுத்தளத்திலிருந்து, வேறான ஒரு சாதியிலிருந்து புரிந்து கொள்ள முயலுகிறவர்களின்‌ உணர்தலுக்கும்‌ எல்லை வித்தியாசம்‌ உண்டு.

பெண்‌ எழுத்து, தலித்‌ எழுத்து, வட்டார எழுத்து, கீழ்வர்க்கத்தவர்‌ எழுத்து - அவை தனி வகையினமாக வைக்கப்படுவதற்குக்‌ காரணம்‌, அந்தந்த இனம்‌ வாழும்‌ நிலைகளிலிருந்து கிடைக்கிற, உணருகிற அனுபவத்‌ தனித்தன்மை காரணமாக அமைகிறது.

இது ஒரு வெளிப்படையான கேள்விக்கு கொண்டு போகிறது. அப்படியானால்‌, தலித்‌ இலக்கியத்தை தலித்‌ இன மக்கள்‌ மட்டுமே எழுத வேண்டுமா? மற்றவர்களும்‌ எழுதக்‌ கூடுமா?

படைப்பு, சுய அனுபவத்திலிருந்து பிறப்பெடுக்கிறது, தனது சுயவாழ்வு அனுபவங்கள்‌ மட்டுமல்லாமல்‌ இலக்கியவாதிக்கு அப்பாலும்‌, அவனைச்‌ சுற்றியும்‌ அனுபவங்கள்‌ கிடைக்கின்றன.

அவனுடைய உள்‌ எல்லைகளுக்கு வெளியே கிடைக்கும்‌ சுற்றுப்புற அனுபவங்களை ஒரு கலைஞன்‌ தன்‌ எல்லைக்குள்‌ கொண்டுவந்து சுய அனுபவமாக மாற்ற முடியும்‌, மாற்றிக்‌ கொள்கிறான்‌. சக அனுபவங்களை, தன்‌ வலியாக உணர்ந்து, தனக்குள்‌ இறக்கி, மறு ஊற்றாக வெளிப்படுத்துதலை, சமுக நோக்கமும்‌, கலைத்துவமும்‌ உள்ள படைப்பாளி சாதித்துவிட முடியும்‌. இங்கு அனுபவத்தைக்‌ கலையாக மாற்றுதல்‌ என்ற சிறப்புக்‌ குணாம்சம்‌ செயல்படுகிறது.

பருவட்டான உதாரணம்‌ வழியாக அதை மெய்ப்பிக்க முடியும்‌,

“பட்டாம்‌ பூச்சிகளைத்‌ தொலைத்த பொழுதில்‌ “ - மாதவிடாய்‌ காரணமாக ஒரு பெண்‌ எதிர்கொள்ளும்‌ பிரச்னைகளை, பார்வைகளைப்‌ பேசுகிற - கவிஞர்‌ வெண்ணிலாவின்‌ சிறுகதை.

அது பெண் வலியின்‌ பல தளங்களுக்கும்‌ வாசகனைக்‌ கூட்டிப்‌ போகிறது. பெண்களுக்குள்‌ புறப்பட்டு, பெண்ணையே அலறியடித்துப்‌ புரட்டிப்‌ போடும்‌ மாதவிடாய்‌ அவஸ்தையை சொல்லும்‌ படைப்பு கண்மணி குணாசேகரனின்‌ 'குருதிச்சுவடு' கதை. இது ஒரு ஆணால்‌ சொல்லப்பட்டது என்பதைவிட மேலாய்‌ கலையாய்‌ மாற்றித்‌ தரப்பட்டது என்று கொள்ளலாம்‌.

பெண்ணாக உணர்தல்‌, பெண்‌ வலியாக வெளிப்‌படுத்தல்‌ கழனியூரனின்‌ 'கரு' கதையில் சாத்தியமாகியிருக்கிறது. இயல்பாகப்‌ படைப்‌பூக்கம்‌ கொண்ட இலக்கியவாதி ஸகிதாவுக்கு, ஒரே உடம்பிற்குள்‌ இரண்டு கருக்கள்‌, ஒன்று அவள் மனசு - அது கதைக்கரு, இன்னொன்று அவள்‌ கர்ப்பப்‌ பையில்‌ - அது ஆண்பிள்ளைதான்‌ என்று ஸ்கேன்‌ அடையாளம்‌ தெரிந்த ௧ரு.

நெஞ்சுக்குள் சுமந்து, படைப்பாக்கத்‌ துடிக்கும்‌ கருவைப்‌ பிரசவிக்க, விடியலிலிருந்து இரவு வரை நாள்‌ முழுதும்‌ முயலுகிறாள்‌. ஒவ்வொரு கணமும்‌ அவள் மீது வந்து உட்காரும்‌ குடும்ப வேலைகள்‌ அவளது பேனாவைப்‌ பொடிப்‌ பொடியாக்குகிறது. இரவின்‌ தொடக்கத்தில் காமம்‌ தெறிக்கும்‌ பார்வையுடன் கணவனின் கை படுக்கைக்கு அணைக்கும்‌ போது, கடைசியில்‌ வயிற்றில் உதைக்கும்‌ கருவையாவது காப்பாற்றிக்‌ கொள்வோம்‌ என முடிந்து போகிறாள்.

இங்கு உணருதலும்‌, வெளிப்படுதலும்‌, ஒரு பெண்ணைப்‌ போலவே எடுத்துத்‌ தரப்பட்டுள்ளது. இவ்வாறே மற்ற இலக்கிய வகைளிலும்‌ கொண்டு செலுத்த முடியும்‌.

உணரப்படாதது என்பது, இரு பாலாருக்குமே உணரப்படாமல்‌ போகிற சாத்தியமும்‌ உண்டு. தலித்‌ கலை இலக்கியவாதிக்கும்‌ இதே மாதிரி சாத்தியமாவதும்‌ சாத்தியமாகாததும்‌ நிகழும்‌.

இங்கு உணர்தல்‌ என்ற ஒரு தளம்‌; வெளிப்படுத்துதல்‌ என்ற தொடர்புள்ள இன்னொரு தளம்‌.

பெண்ணாக, தலித்தாக இருப்பவர்களுக்கும்‌ உணருதல்‌ தன்மையில்‌ வேறுபாடு; அது மாதிரியான நிலை மற்றவர்களுக்கும்‌ உண்டு. உணருதல்‌, புரிதல்‌ ஆகியவை செழுமையாக நிகழுதலின்‌ போதே, வெளிப்பாட்டிலும்‌ செழுமை நிகழ்த்த முடியும்‌. உணருதல்‌, நிகழ்த்துதல்‌ இரண்டிற்கும்‌ உள்ள வேறுபாடு கவனத்திற்குரியது.

உணருகிற திறன்போலவே, வெளிப்படுத்தும்‌ திறன்‌ அமைய வேண்டும்‌ என, பெண்ணிய, தலித்திய, கீழ்வர்க்கத்தவ படைப்பாளிகளை நோக்கி முன்‌ வைக்கலாம்‌.

தலித்துக்குள்ளிலிருந்து வெளிப்படுகிற கலைஞன்‌, உணருதலின்‌ தனித்தன்மையோடு வெளிப்பட முடியும்‌. தலித்‌ அல்லாது தன்னை தலித்தாக உணருகிற இலக்கியக்காரனும்‌ அதே தனித்தன்மையோடு புரிதல்‌ கொள்ள முடியும்‌.

தீண்டாமைக் கொடுமையை உணர வேண்டுமானால், அவன் ஒரே ஒரு நாளாவது தலித்து ஆக வாழ்ந்து பார்த்திருக்க வேண்டும். தலித்தாக வேலை கேட்டு வேதனை கொண்டிருக்க வேண்டும். நகரத்தில் தலித் என்று சொல்லி வீடு கேட்டிருக்க வேண்டும். அந்த வலிகளுக்காக, ரண வேதனைகளுக்கு அவன் அவர்களோடு இணைந்து போராடியிருக்க வேண்டும். இயக்கம் நடத்தியவர்கள்‌, போரடியவர்கள்‌, வாழ்ந்தவர்கள்‌, குறைந்தபட்சம்‌ மனதளவில் அவர்களோடு அந்நியமாகாதவர்களாய் இருக்கிறார்கள். அப்போதுதான் தலித் மக்களுக்காக குரல்‌ கொடுக்‌கலாம், தலித் இலக்கியமும் படைக்கலாம்.

இவ்வாறெல்லாம், இந்த எல்லைகளுக்குள் வராமல் மானசீகமாய் படைப்பை பிரசவித்து விட முடியுமா? விடலாம் தான். ஆனால் அது தலித் நிறம் கொண்டதாக இருக்காது என்பதை இங்கு அவசியம் பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது. முழுதாக இல்லாவிட்டாலும்‌, ஏதோ ஒரு வகையில்‌ அவர்களுடைய அனுபவ எல்லைக்குள்‌ வராமல்‌, நிற்காமல்‌ , அதை சுய அனுபவமாக மாற்ற இயலாது. சுய அனுபவமாக ஆகி, மறு ஆக்கம்‌ செய்யப்‌ பெறாத எதுவும்‌, கலை வண்ணம்‌ கொண்டதாக இருக்காது.

கன்னட தலித்‌ எழுத்தாளார்‌ சித்தலிங்கயைாவின்‌ சுயசரிதையான ஊரும்சேரியில்‌ ஒரு பகுதி:

ஒரு காட்டுக்குள்‌ இருக்கிற கடவுளைப்‌ பார்ப்பதற்காக ஒருவன்‌ என்னை அழைத்துச்‌ செல்கிறான்‌. அங்கு போனால்‌ ஒரு சின்னக்‌ கல்‌. சுற்றிலும்‌ மரம்‌, செடி, கொடி அவ்வளவுதான்‌. இதுதான்‌ கடவுள்‌ என்றான்‌. கோயில்‌ எதுவும்‌ கட்டவில்லையா என்று கேட்டேன்‌. கோயில்‌ கட்ட தனக்கும்‌ ஆசைதான்‌ என்றும்‌, கட்டுவதற்கு ஏதேனும்‌ முயற்சி எடுக்கும்‌ போதெல்லாம்‌, யார்‌ மேலாவது சாமி வந்து கோவில்‌ கட்டக்‌ கூடாது என்று கடவுளே சொல்லிவிடுவதாகவும்‌ சொன்னான்‌. சாமி ஆடுபவனிடம்‌, ஏன்‌ கோயில்‌ வேண்டாம்‌ என்று கேட்கும்‌ போது, உங்கள்‌ எல்லோருக்கும்‌ வீடு இருக்கிறதா? என்று கேட்டதாம்‌.

அப்போது யாரோ ஒருவன்‌ எனக்கு இல்லை என்றானாம்‌. அப்படியென்றால்‌ எனக்கும்‌ வேண்டாம்‌. உங்ளுக்கு இருக்க இடமில்லாத போது, எனக்கு எதற்கு? என்று சொன்னதாம்‌. அது புராணம்தான்‌. ஆனால்‌ அவர்களின்‌ அடி மன ஆசையை தெளிவாகக்‌ காட்டுகிறது. எல்லோருக்கும்‌ வீடு இருக்க வேண்டுமென்ற மனிதாபிமானம்‌ இதற்கு உந்துகோல்‌.

கீழ்வர்க்கத்தவரின்‌ தெய்வங்கள்‌ அவர்களேயல்லாமல்‌ வேறல்ல. அவர்களுடைய ஆசைகள்‌, விருப்பங்களை நிறைவேற்றும்‌ குறியீடு அவர்களுடைய தெய்வங்கள்‌. அபிமானியின்‌ "பனை முனி" கதை இதை வெளிக்‌காட்டுகிறது.

ஒய்ங்ங்‌ என்ற ஊளையுடன்‌, ஒரு பனை உயரத்துக்குப்‌ புழுதி மண்ணைக்‌ கிளப்பிக்‌ கொண்டு வரும்‌ சூறைக்‌ காற்று சுழலும்‌ வித்தியசாமான பூமி பற்றியது பனைமுனி கதை. சூறைக்காற்றில்‌ செம்மண்ணில்‌ பயிரிடப்படும்‌ வாழைகளுடன்‌ சேர்ந்தே மொட்டோடும்‌, குலைகளோடும்‌, சரிந்து விழுந்து விடுகிறார்கள்‌ மக்கள்‌. இருப்பவனுக்கும்‌ மண்ணு, இல்லாதவனுக்கும்‌ மண்ணு என்ற புதுமொழி உருவாகிறது.

ஆடிக்காற்றில்‌ அம்மியும்‌ பறக்கும்‌ என்பது பழமொழி. ஆடிமாதம்‌ வந்தாலே அங்குள்ள செம்மண்‌ பூமி சனங்கள்‌ ஆடி அடங்கிப்‌ போவார்கள்‌. அவர்கள்‌ வாழ்க்கை அடங்கிப்‌ போதலுக்கு தகுதியான குடியேற்றப்‌ பகுதியை தேர்வு செய்யாமல்‌ போனது ஒரு அடிப்படைச்‌ காரணம்‌. நிலத்தைப்‌ பண்படுத்தி, அதனடிப்படையில்‌ எழுப்பிய வாழ்க்கையை ஒழுங்குப்படுத்தி இயற்கையின்‌ சீற்றத்தை மட்டுப்‌ படத்த முடியாமல்‌ போகிற, சுற்றுச்சூழல்‌ கேடு எதிர்ப்புணர்வு இல்லாமல்‌, அதற்கான எத்தனங்கள்‌ இல்லாமல்‌ போவது இன்னொரு காரணம்‌.

ஒத்தைக்கு ஒத்தையாய், துணைக்கு துணையாய் நிற்கும்‌ தன்னுடைய ஒரே பனை மரத்தை வெட்ட நினைக்கிறாள்‌ ஆவுடையம்மாள் கிழவி. முனுசாமி கோயில் கொடைக்கு வரிக்கட்டத்தான்‌ பனையை வெட்ட ஏற்பாடு.

பனை உச்சியில்‌ முனி குடி இருக்கிறதாம்‌, அது பொல்லாததாம். வெட்டக் கூடாது என்று சாமியாடிக்கு அருள் வந்து மறிக்கிறான். தெய்வம் ஆவுடையம்மா கிழவிக்காக ஏத்துக்கொண்டு வராமல்‌ போனதற்கு சாமியாடியின்‌ சூழ்ச்சி காரணம்‌. அந்தப்‌ பகுதியில்‌ மண்ணறைக்கும் சூறைக்காற்று பனையை அலக்காகத்‌ தூக்கி போடுவதோடு அவனுடைய சூழ்ச்சியையும்‌ சேர்த்துப்‌ பறித்து எறிந்து விடுகிறது.

உன்மையில்‌ மேல்‌ வர்க்கத்தினரின்‌ கடவுள்கள்‌ தான்‌ எங்கேயோ இருக்கிறார்கள்‌. அவர்களுக்கும்‌ கடவுளுக்கும்‌ எதிரான தூரம்‌ பெருகிக்கொண்டே போகிறது. ஆனால கீழ்வர்க்கத்தினரின்‌ கடவுள்கள்‌, அவர்களுக்குப்‌ பக்கத்திலேயே இருக்கிறார்கள்‌. நல்லதை நிறைவேற்றும்‌ என கிழவி நம்புவது இயற்கை சீற்றத்தால்‌ நிறைவேறுகிறது.

பனைமுனி - தொகுப்பு முழுதும்‌ அபிமானியின்‌ அல்லது அபிமானி போன்ற ஒரு தலித்தின்‌ சுயசரிதையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட நிகழ்‌ச்சி. இதுபோல்‌ கதையாக வழங்க்கபட்டிருக்கின்றன,

அறுந்துபோன தோல்‌ செருப்புக்கு மாற்றாக, பனையிலிருந்து வெட்டிச்‌ செய்யப்பட்ட சில்லாட்டஞ்‌ செருப்புகள்‌ பற்றியது வெப்பம்‌ கதை. அது சொக்கலிங்க முதலாளியின்‌ பனைவிடலி. அதிலிருந்து செய்யப்பட்ட செருப்பைக்‌ கண்டு கொண்ட முதலாளி திருட்டுத்தனமா பண்ணுறே என்று தாழ்த்தப்பட்டவன்‌ மீது சளம்புகிறான்‌. மதிய வெயிலில்‌ ஏர்வாடியான்‌ முதலாளியின்‌ முகத்தில்‌ அடிப்பதுபோல்‌ வீசிவிட்டு வந்த சில்லாட்டஞ்‌ செருப்புகள்‌, பிறகு பார்த்தால்‌ முதலாளியின்‌ கால்களில்‌ பூட்டப்பட்டிருக்கின்றன. அபிமானிக்கு உள்‌ சப்பணமிட்டிருக்கும்‌ சாதிய எதிர்ப்பின்‌ வெப்பம்‌ இந்தக்‌ கதை.

ஆவேசமாகப்‌ பாய்ந்து, ஓங்கி ரங்கனின் முகத்தில் ஒரு குத்து விட்டான் மாசிலாமணி.

"நீயெல்லாம்‌ பறையனுக்குப்‌ பொறந்தியா?, இல்ல அவனுகளுக்கு பொறந்தியா?” ஆளாளுக்கு ரங்கனைப்‌ புரட்டி எடுக்கத்‌ தயாரானார்கள்‌.

உயர் சாதிக்காரர்‌, சாதிப்‌ பெருமையை நிற்க வைப்பதற்காக, நீயெல்லாம் சாதியில பிறந்தவனா என்று கேட்பது, சபதமேற்பது வழக்கம்‌. இங்கு இதற்கு நேரெதிரான ஒரு அறைகூவல்‌ எழுப்பப்படுகிறது. சாதி இழிவாய்‌ கருதப்பட்ட பறையன் என்ற இடத்தில்‌ தன்மானம்‌ துக்கி நிறுத்தப்படுகிற செல்லாக அது மாற்றப்படுகிறது.

இத்தகைய புதிய ஒழுங்குகளை, புதிய சொல்லாடல்களை நிறுவியாக வேண்டியிருக்கிறது. புதிய ஒழுங்கு என்பது எதிர் ஒழுங்காகவும், புதிய சொல்லாடல் எதிர் இலக்கியமாகவும் இருக்கிறது. தமக்கென தனி அடையாளப்படுத்துதாலாய் இந்த எதிர் ஆகிறது.

எதுவும்‌ செய்ய இயலும்‌...
ரீசஸ்‌ பெல்‌ அடிக்கையில்‌
குப்பை மேட்டில்‌ நின்று
கையில்‌ பிடித்து,
பெரிய தேவர்‌ மகனை விட நீளமாய்‌
சர்‌ரென்று
கன்றுக்குட்டி அவிழ்த்துவிட முடியும்‌
(ப்ரதிபா செயச்சந்திரன்‌)

- என்று பொது ஒழுங்குக்கு எதிராய்‌ எதுவும்‌ செய்ய இயலுகிற தெம்புதான்‌, எதிர்‌ ஒழுங்காக, எதிர்க்‌ கவிதையாக மாறுகிறது.

எதுவெல்லாம்‌, சொல்லுவதற்கு கூச்சப்பட்டு ஒதுக்கப்பட்டதுவோ, அதெல்லாம்‌ கூச்சப்படாமல்‌, கூச்ச நாச்சமில்லாமல்‌ வாசிக்கப்படுவதும்‌, எதிர்ச்‌ சொல்லாடல்‌ மூலம்‌ தருகிற இலக்கியமாகிறது.

சாதி இழிவு இருந்த இடத்தில்‌, தன்மானம்‌ தூக்கி நிறுத்தப்படுகிற வார்ப்பு கதை. புதிய வார்ப்பு என்று தலைப்பிட்டிருந்தால்‌, கொஞ்சம்‌ வேறு முகம்‌ காட்டுமோ என்று சூட்டாமலிருந்திருக்கலாம்‌.

இரவில்‌, குடிமப்பில்‌ கொப்பையாவின்‌ உச்சந்தலை இடித்து தலைவர்‌ சிலையின்‌ வலதுகை ஒடிந்து விடுகிறது. பீடத்தில்‌ விழுந்து கிடந்த சிமெண்டுக் கை, பகலில்‌ அநியாயமாய்‌ ஒரு சாதிக்‌ கலவரத்துக்கு காரணமாகி விடுகிறது.

உடைப்பு என்று இந்தக்‌ கதை வெளியானபோது, அபிமானிக்கு எழுதிய கடிதத்திலும்‌ குறிப்பிட்டிருந்ததேன்‌. தலைவரின்‌ சிலையின்‌ கை ஒடிவு ஒரு தற்செயல்‌ நிகழ்வு. தற்செயல்‌ நிகழ்வு கதைக்கான ஆதார பூமியாகிவிடக்‌ கூடாது. இப்போது சில உடைப்புகள்‌ தெரிந்து, திட்டமிட்டு, பிரக்ஞை பூர்வமாகத்தான்‌ நடக்கிறது. யதார்த்தமாக வெளியே நடக்கும்‌ சம்பவங்களே, அப்படி இருக்கையில்‌ கதைக்குள்‌ தற்செயல்‌ நிகழ்வு வீரியத்தைக்‌ குறைத்துக்‌ காட்டுகிற ஒன்றாக வெளிப்படுகிறதே எனக்‌ கேட்டிருந்தேன்‌. அப்படியே கொடுக்கிறபோது, ஒரு புகைப்பட யதார்த்தம்‌ கிடைக்கும்‌, அதனுடன நமக்குள்‌ கிடக்கும்‌ படைப்பாற்றலைக்‌ கலக்கிறபோது, கலைத்தன்மை கொண்டதாக மின்னிடும்‌. ஒருவேலை தற்செயலாக நிகழ்ந்து விட்டிருப்பினும்‌ பிரச்சனையின்‌ அக்னி உணரப்பட, அதை மாற்றி, கதைக்கு வலு ஏறப்படுத்தியிருக்க வேண்டும்‌.

ஆட்டம்‌ கதை - தென்மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ தலித்துகளின்‌ நிகழ்த்து கலையாக இருக்கும்‌ குறவன்‌ - குறத்‌தி ஆட்டத்தில் பார்வையாளார்கள் அக்குறும்பு செய்தார்கள்‌. திடீர் திடிரென்று ஒவ்வொருவராய்‌ எழுந்து வந்து, குறத்தி ஆட்டக்காரியின் மாராப்புத் துணியில் ஐந்தோ, பத்தோ ருபாய்‌ நோட்டுத்‌ தாள்களை ஊக்கால் சொருகி விட்டுப்‌ போயினர். இந்த அசிங்கம்‌, அவர்கள்‌ தலித் பெண்களாக அல்லது கீழ்சாதிப் பெண்களாக இருப்பதால்‌ ஏற்படுகிறது. பார்வையாளர்கள்‌ பண்ணுகிற அக்குறும்புகளை எதிர்த்து, ஆட்டத்தின் போது அத்தகைய இடையீடுகள்‌ கூடாது எனவும்‌, அதேபோல் குறிப்பிட்ட தலைவரைப் பற்றி பாடு, அவரைப்‌ பற்றிப்‌ பாடு, இவரைப்‌ பற்றிப்‌ பாடு என்று வற்புறுத்தக்கூடாது எனவும்‌, அவைகள் தடுக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ கிராமியக்‌ கலைஞர்‌கள்‌ சங்கம்‌ அண்மையில்‌ தீர்மானம்‌ நிறைவேற்றி கோவில்பட்டியைத்‌ தலைமையிடமாகக்‌ கொண்டு இயங்கும்‌ கிராமியக்‌ கலைஞர்‌கள்‌ நல்வாழ்வுச்‌ சங்கத்திற்கும்‌, சென்னையைத்‌ தலைமையிடமாகக்‌ கொண்டு இயங்கும்‌ இயல்‌, இசை, நாடக மன்றத்திற்கும்‌ அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அவளுக்கு மனசில்லாமல்‌ இருந்தது. ஆனால்‌ ஆடியே தீரவேண்டிய அவசியமும்‌ இருந்தது என்ற குறத்தி ஆட்டக்காரிக்கும்‌ இந்த தலித்‌ விழிப்புணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

'நெருப்பின்‌ தாகம்‌' நடந்து கொண்டிருக்கும்‌ சாதிய மோதல்களில்‌ சாதி மேற்கட்டில்‌ உட்கார்ந்திருக்கும்‌ திமிரைப்‌ பேசுகிறது. கடைசியில்‌ சாதி மனசில்தான்‌ உட்கார்ந்திருக்கிறது. கதை முடிவில்‌ உரையாடல்‌ இப்படி முடிகிறது,

"அதுல என்னங்க தப்பு... ஒரே கெணத்துல ரெண்டு தெருக்காரங்களும்‌ தண்ணி எடுத்துக்கிட்டா என்ன கெட்டுப்‌ போயிரப்‌ போவுது. மனசு தான்‌ காரணம்‌".

முப்பது வயசுக்காரனின்‌ சொற்களில்‌ ஊசிகள்‌ சொருகியிருந்தன. குத்தலாய்க்‌ கேட்டு வைத்தான்‌ அவன்‌, "அதெப்படி? எச்சிக்கஞ்சி குடிக்கிற பயலுவளுக்குக்‌ கொஞ்சம்‌ எடங்‌ கொடுத்தாலும் நம்ம மேல் குருத ஏறிரமாட்டானுவ? அசிங்கம்‌ புடிச்சவனுவ"

முத்துப்பாண்டியன்‌ சாதிப்பெருமை வார்த்தைகளில்‌ பரிணமித்தது.

முப்பது சற்று முறைப்பாகவே பேசியது,

"நாங்களும்‌ அந்த சாதிதான்... எங்க தண்ணி மட்டும்‌ தனியா இனிகோ? அசிங்கமாயில்லையா இது, சொல்லுதாரு பாரும்".

அரண்டு போனான்‌ முத்துப்பாண்டி

சாதிப்பெருமை பீத்திக் கொண்டு, திமிர் கொண்டு அலையும் ஒட்டுமொத்த சமுதாயமுமே. இந்தக் கேள்வியால் அரண்டு போகத்தான் செய்கிறது.

பல கதைகளும்‌ சாதியக்‌ கட்டுமானத்‌தை தாக்கி குறி வைப்பதாக இருக்கிறன்றன. பொதுவாக சாதிய கூடாதென்ற தாக்கு, அதன் அடிப்படையிலேயே தலித்தின்‌ விடுதலை சாத்தியம்‌ என்ற அறைகூவல், எல்லா சாதிகளும்‌. சாதிகளை உதறிவிடுகிறபோது, தலித்தும்‌, தலித்‌ என்ற அழிவிலிருந்து மீண்டு விடுகிறான்‌. அவனுடைய விடுதலையை அவனே மீட்டெடுப்பான்‌. சாதிய அடையாளங்களைத்‌ தகர்ப்பதன்‌ முலம்‌ அவர்களுக்குமான விடுதலையை அவன்‌ உள்‌ அடக்கியவனாக இருக்கிறான்‌.

தமிழரசு இலக்கிய மலரில்‌ வெளியான 'சூடு' கதை எல்லா அம்மன்களும்‌ கொதிக்கும்‌ மஞ்சள்‌ நீருக்கும்‌ வேப்பங்‌ குழைகளும்‌ தென்னம்‌ பூக்களும்‌ சேர்ந்த கொத்தை முக்கியும்‌, முக்காமலும்‌ ஆடும்போது, வெள்ளையப்பன்‌ மட்டும்‌ அதை பனைக்குள்‌ ஆழமாய்‌ அமுக்கி, முக்கி எடுத்து, ஆவி பறக்கும்‌ சூட்டில்‌ தலையில்‌ தப்பித்‌ தப்பி ஆவேசம்‌ எடுத்து ஆடுவதைப்‌ பார்க்க காத்தமுததுவுக்கு அலாதி ஆசை. வெள்ளைய்பபன்‌, ஆடிக்கொண்டே பனையின்‌ மேல்‌ விழுந்து, மஞ்சள்‌ கொதி நீரில்‌ அபிசேகம்‌ ஆகி, அலறித்‌ துடித்து, கொப்புளங்கள்‌ புடைக்க, மருத்துவமனைக்கு கொண்டு போனார்கள்‌. தன்னுடைய நம்பிக்கையில்‌ சூடுபட்டதும்‌, காத்தமுத்துவுக்கு எல்லாம்‌ புரிகிறது.

தீ மிதிப்பு, அக்னிச்சட்டி ஏந்துதல்‌, மஞ்சள்‌ கொதிநீர்‌ ஆட்டம்‌ எல்லாமே பொய்யின்‌ வெளிப்பாடுகள்தான்‌ என்ற கருத்தை விளக்க சூடு கதை கையாளப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கதைகள்‌, ஒரு கருத்தை மையப்படுத்தி சுற்றிலும்‌ கதைச்‌ சம்பவங்களாகக்‌ கோர்க்கிற கருத்தியல்‌ விளக்கக்‌ கதைகள்‌ என்று கூறலாம்‌. கதை நுனியில்‌, முத்தாய்ப்பாய்‌ சொல்ல நினைக்கும்‌ கருத்து பொருத்தப்படுகிறது. பொதுவாக கருத்தியல்‌ விளக்கக்‌ கதைகளில்‌, சிறுகதையின்‌ சூசகத்தன்மை விலக்கப்பட்டு நேரடியாகச்‌ சொல்லப்படுகிற குறைபாடு, அதற்குள்ளேயே உறையும்‌ ஆபத்தாக இருக்கிறது. கதைக்கு உள்ளேயே மூட்டமாகி வெப்பம்‌ கட்டாமல்‌ வெளியே விட்டு விடுகிற ஓட்டைகள்‌ , இநத்‌ நேரடித்‌ தன்மையில்‌ நிலவுகின்றன.

(அபிமானியின்‌ 'பனைமுனி' சிறுகதைத்‌ தொகுப்பை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்