மார்கழி, தை மாதங்களில் ஒவ்வொரு வீடாக அவன் நிற்பான்.
வெம்பனி கொட்டும் விடிகாலையில், தலையில் ஒரு துணியை 'வண்டு' கட்டிய அவனிடமிருந்து சங்கு பேசும்.
அவனுடைய குலத்தில், அவனுக்கு முன்னிருந்தவர்களில் யார், முதல் சங்கை கைகளில் ஏந்தினார்கள் என்று தெரியாது, ஆனால் யாருக்காக ஊதுகிறோம் என்பது மட்டும் தெரியும்.
மேல்சாதி வீடுகளில், வாசல் முன் நின்று அவன் ஊதுகிறான். வாழ்த்துச் சொல்கிறான்.
கூலி வேலைக்குப் போகிற மக்கள் வசிக்கிற தெருவில் 'ரெண்டு இழுப்பு' இழுத்துட்டுப் போய்விடுகிறான்.
அந்த 'இல்லாததுகளும்' அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் இருக்கப்பட்ட பெரிய வீடுகளில் அவன் அப்படி செய்யமுடியாது.
இருக்கப்பட்ட வீடுகளின் முன் சங்கூதி, நிறையவே வாழ்த்துச் சொல்வான். அவனுடைய வாசிப்பின் நீளமும், நேரமும் வீடுகளின் நீள, அகல உயரத்திற்கு அளவெடுத்து வரும்.
அவன் ஒரு கலைஞனாக இருந்தான். ஒரு தொழிலாளியாகவும் இருந்தான்.
மாலை நேரங்கள் கூட புழுக்கக்தை கறைக்க முடியாத கோடையை அவன் தன் சங்கூதலால் குளிரச் செய்கிறபோது,
அவன் ஒரு கலைஞன்.
'ரக ரக ரங்கா, ரக ரக ரங்கா' என்று அவன் நாக்கைச் சுழற்றுகிறபோது, கதிரறுத்துத் திரும்பும் உடல்கள் கிறுகிறுத்துப் போகிறபோது,
அவன் நாக்கில் சுழல்வது புல்லாங்குழல் இல்லை. சங்கு.
அப்போது அவன் கலைஞன்.
அறுவடைக் காலத்தில், விவசாயிகள் வருசத்தில் மொத்தமாய் ஒருநாள் அளப்பார்கள், கோணிப்பையும், மனைவியும் குழந்தையுமாய்ப் போய் ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி வருவான்.
அப்போது அவன் தொழிலாளி.
கிராமத்தில் சில தொழிலாளிகள் உற்பத்தித் தேவையை நிறைவேற்றுகிறவர்களாக இருந்தார்கள்; இவனோ, ஊரின் கலாச்சாரத் தேவையை நிறைவேற்றுகிறவனாக இருந்தான். மற்ற தொழிலாளிகளைப் போல், இவ்வளவு உழைப்பு என்று காட்ட முடியாது. இவ்வளவு கூலி என்று கேட்க முடியாது.
ஒரு நாவிதன் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு போகிற சவரப் பெட்டி.
ஒரு வணணான், அழுக்குப் பொதியுடன் துறைக்குப் போகிற துவைகல்.
இவையெல்லாம் அடிமைச் சின்னங்கள் என்று அவர்களுக்கு எப்படித் தெரியாதோ, அதுபோல் அவன் கையில் கொடுக்கப்பட்டதும் அடிமைச் சின்னம் என்று அவன் அறியான்.
சிறு நகரங்கள், பெரு நகரங்களாயின. பெரு நகரங்கள் ராட்சச நகரங்களாயின.
வயல் வெளிகளில் ஆலைகள் நிறைந்தன. புஞ்சைக் காடுகளில் பேக்டரிகள் முளைத்தன.
அங்கே வீசிய ஆலைப் புகை கிராமத்திற்கும் தாவியது; பேக்டரி சத்தம், கிராம மக்களைக் கூப்பிட்டது.
கூலி விவசாயிகள் நகரங்களை நோக்கிப் பயணப்பட்டார்கள். பலர் ஆலைகளிலும் பேக்டரிகளிலும். முற்றாகவே மறைந்து போனார்கள்.
ஓரேக்கர், ஈரேக்கர் விவசாயிகள் கையிலிருந்து நிலம் நழுவியது. கடனை அடைக்க காலி செய்து விட்டு, நகரத்திற்கு கூலிகளாய்ப் போனார்கள். நடுத்தர விவசாயிகளில் சிலர் நிலத்திலும் பேக்டரியிலுமாக, பாதிக் கால் இங்கேயும், பாதிக் கால் அங்கேயுமாக இருந்தது. ஒரு சைக்கிள் அவர்களை நிலத்திற்கும் பேக்டரிக்குமிடையே இணைத்தது.
விவசாயம் படுத்து, ஊரே காலியாகி, அளப்பவர்கள் குறைந்து போனதால், சங்கூதிக்கும் அளப்பது குறைந்து போனது. வருசா வருசம், அவனுக்கு வரும் தானியம் மட்டுப்பட்டுக் கொண்டே வந்து பள்ளத்தில் தள்ளியது,
ஒரு நாள் அவனும் மற்றவர்களோடு பேக்டரிக்கு போனான:
சங்கூதி பேக்டரிக்குப் போகலாம்; அதற்காக மார்கழியும், தையும் வராமல் போகுமா?
மார்கழி மாத மாலைப் பொழுது, நாள் முழுவதும் சூரியனின் மெல்லிய கிரணங்களால் பக்குவப் படுத்தப்பட்டிருந்தது:
உழைத்த உழைப்பைக் கூட அந்த மாலை நேரம் துடைத்து விட்டிருந்தது.
சங்கூதிக்கும் மார்கழி மாதத்தை ரசிக்கத் தெரியும் தான்.
மூக்கடைப்பு நோய் கண்டவனுக்கு குளிர்காத்து குத்தல் தருவதுபோல், ஊர்க் கட்டுப்பாடு என்ற குளிரில் சங்கூதி, குக்கித்து போய் உட்கார்ந்திருக்கிறான்.
ஊர்ச் சபை கூடியிருக்கிறது. ஊர் வழமையை மீறி, எப்படி வேலைக்கு போகலாம்?
“பேக்டரி வேலைக்குப் போக உனக்கு யார் அனுமதி தந்தார்கள்”
"வருசம் முழுக்க ஊதாவிட்டாலும் போயிட்டுப் போகுது. மார்கழி, தை ரெண்டு மாசமாவது சங்குக் சத்தம் கேட்காத ஊர் வெளங்குமா?”'
போன வருசம் அவன் ஊத வராத போது ஏதோ தற்செயலாய் நின்று போனது போல் விட்டுவிட்டார்கள். இப்போது பதில் சொல்லிவிட்டுப் போக வேண்டுமாம்.
சன்னமாய் ஒரு குரல் வந்தது “இங்கேயும் நாம என்ன முன்னைப் போலவா அளக்கிறோம்? அவனும் எத்தனை நாளைக்குத்தான் 'தன்னக் கட்டி'க்கிட்டு இருப்பான்?”
அவனுக்கு ஆதரவாய் வந்த குரலும் சன்னமாய் மறைந்து போனது.
இப்போது அவனுக்கு முன்னால் இரண்டு தீர்ப்புகள்;
ஊர்க் கட்டுப்பாட்டை மீறி அவன் வேலைக்குப் போனது. “அப்படியே போனாலும் போ. ஒம் மகனை முழுசா இந்த வேலைக்கு ஒப்படைச்சுட்டுப்போ. அவன் அஞ்சாம் வகுப்புக்குமேலே படித்து என்ன செய்யப்போகிறான்.”
“இல்லையென்றால், மாற்று ஆள் ஏற்பாடு செய்”
ஊர்க்கூட்டம் கலைகிறது. குத்துக் காலிட்டு, முழங்காலைக் கட்டியபடி சங்கூதி உட்கார்ந்திருக்கிறான்.
இந்த இரண்டு மாசத்திற்காக அவன் வேலையை விட்டு வர முடியாது; ஊர்ச் சேவகம் செய்ய சங்கை கையில் எடுத்தால், பிறகு பேக்டரியின் கதவுகள் அவனுக்கு மூடி விடும்.
கருத்துகள் / Comments