மனிதத்தைச் சிதைக்கும் சா(தி)யம்
சூன் 2, 1942 இல் தூத்துக்குடியில் பிறந்து, கம்யூனிச கொள்கைகளை உள்வாங்கிய இந்நூலாசிரியர் பா. செயப்பிரகாசம், சுமார் நூற்றம்பைது சிறுகதைகளையும், பதினெட்டு கட்டுரைகளையும், மூன்று நாவல்களையும் படைத்துள்ளார். 1968ஆம் ஆண்டு மதுரையில் கல்லூரி பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், 1971ஆம் ஆண்டு அரசு விளம்பரம் மற்றும் தகவல் துறையில் இணை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அக்டோபர் 23, 2022 ஆம் ஆண்டில் மறைந்த அன்னாரது உடல், தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னரே, அவரது முதல் நினைவு நாளன்று, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பாக, ‘உச்சி வெயில்’ நாவல் வெளியிடப்பட்டது.
உலகம் முழுவதும் தன் ஆதிக்கத்தைக் கோலோச்சும், வணிக நிறுவனங்களின் மாயையிலிருந்து விடுபட; தற்காத்துக் கொள்ள; புறக்கணிக்க, மனிதத்தை மேம்படுத்தி சுயசிந்தனையை மீட்டெடுப்பதே ஆகச்சிறந்த வழியாகும். ஏனெனில், அடிப்படை தெளிவற்ற சிந்தனையால்தான், தந்திரங்களும், வக்கிரங்களும், ஆதிக்கச் செருக்கும் உட்புகுகின்றன. அடக்குமுறையால், ஒடுக்குமுறையால் ஏற்படும் சமூக முரண்கள் நிறைந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைச் சித்திரமாக தீட்டியிருக்கிறது ‘உச்சி வெயில்’ நாவல்.
நாவலின் முக்கிய பாத்திரமான, சந்திரமதி, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாற்பது வயதைக் கடந்த முதிர்கன்னி. மீனாட்சிபுரத்தில் தலைமையாசிரியராக பொறுப்பேற்று, சிறப்புற பணியாற்றியதால், ஆத்தூர் அரசு நடுநிலைப் பள்ளிக்குப் பணிமாற்றம் செய்யப்பட, கதையின் தளம் இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மைக் குடிகளை அடிமைப்படுத்தி, அடக்கியாளும் நோக்கில், அம்மக்கள், கல்வியிலும், அரசு பணியிலும் உயர்ந்த இடத்திற்கு வருவதைத் சகித்துக் கொள்ளாமல் செயல்படுவதோடு, அவர்களுக்குக் கீழ் தாங்கள் பணிபுரிவதைக் குல இழிவாகக் கருதும் மேட்டிமை சாதியினரின், சாதியின் பின்னால் ஒளிந்து கொள்ளும் பெரும்பான்மை பொதுப்புத்தி மனநிலையை முற்பகுதி பேசினால், கல்விச்சாலைகளில் மட்டுமல்ல; உயர்சாதி ஆக்கிரமிப்பும், அவ மரியாதையும், தனது ஆதிக்கத்தை அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து வெளியிலும் விரவிக்கொண்டேருப்பதைப் பிற்பகுதியும் நயமாக பதிவு செய்திருக்கிறது.
நம்பிக்கை ஊற்றாக, அன்பையும், அரவணைப்பும் சக மனிதனுக்கு வழங்கும் மனிதர்கள் அருகியிருக்கலாமே தவிர முற்றிலும் அழிந்து விடவில்லை என்று வாசகனுக்கு, குழந்தைகள் ஞானம், தேனுவின் குடும்ப உறுப்பினர்களையும், ஆண்டாள், வணிகத்தில் அறங்காக்கும் செக்கு மனிதர், தாள முத்து, ஆசிரியர் தருமர், பெரியவர் சச்சிதானந்தன் என சில கிராம மாந்தர்கள் வழி வெளிச்சம் பாய்ச்சுகிறார் நூலாசிரியர் பா.செயப்பிரகாசம்.
அக்காலத்தில், தென் மாவட்டங்களில் ஆண்கள் கையில் பீடி, பெண்கள் வாயில் புகையிலை உருண்டை வழக்கத்தை சொக்கலால் ராம்சேட் பீடி, அங்கு விலாஸ் நிறுவனங்கள் மக்களைக் கபளீகரம் செய்ததோடல்லாமல், பெரிய இசை விற்பன்னர்களான விளாத்திகுளம் சாமிகள் என்றழைக்கப்படும் நல்லப்பர், எம்.கே.தியாகராஜ பாகவதர், கே.பி.சுந்தராம்பாள் போன்ற பிரபலங்களும் போதையின் கைப்பிடிக்குள் அகப்பட்டுள்ளதை அறியும்போது, தீமைகளின் கரங்கள் மாயாஜால படங்களில் வருவதைப்போல நீண்டுகொண்டேதானிருக்கும் என்பது விளங்குகிறது.
வெள்ளைச்சாமி, சின்னச்சாமி என அவரவர் தன்மைக்கேற்ப இரண்டு ஆசிரியர்களுக்குப் பெயர் புனைந்திருப்பது சாலப் பொருந்துகிறது. சிறந்த போராளியான வெள்ளைச்சாமி, யாராகயிருந்தாலும், எவ்விடமாகயிருந்தாலும் தயக்கமின்றி எதிர்த்து போராடுவதால், சந்தேகத்துக்குரிய நபர்களின் பட்டியலில் அவர் பெயர் இருப்பதோடு, காரணமின்றி பணிமாற்றம் செய்யப்படுபவர். சின்னச்சாமியோ, “கையிலும், நாக்கிலும் பிரம்பெடுப்பவர்” என ஒற்றை வரியில் நமக்கு அறிமுகமாகி, வெளிநாட்டிலிருந்துத் தன் அண்ணன் வாங்கித் தந்ததால் கைக்கடிகாரம் கட்டி வந்த பிற்படுத்தப்பட்ட மாணவனான அய்யப்பனை அடிப்பது போன்ற சின்னத்தனமானச் செயல்களிலே முதற்பகுதி முழுவதிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
சாதிப் பெயரால் திணிக்கப்பட்ட வேற்றுமையானது, உடையில், மொழியில், ஒப்பனைகளில், அனுபவங்களில் மட்டுமல்லாது பொது இடங்களைப் பயன்படுத்துதல், விளை நிலத்திற்கான உரிமைகளை உறுதி செய்தல், கல்வி கற்பது மற்றும் பயணம் செய்வதற்கான உரிமைகள் என அனைத்துத் தளங்களிலும் புரையோடிருப்பதைச் சிறுசிறு சம்பவமாக புனைந்திருப்பதால், வேற்றுமையை வேரறுத்தாக வேண்டிய அவசியத்தை ஆழமாக்குகிறார், நாவலாசிரியர். அனைத்திலும் வித்தியாசப்பட்ட கரிசல் நில மக்களின் உணவு, தொழில், விளையாட்டு, பழக்கவழக்கங்களையும் இடைச்செருகலாக கோடிட்டிருப்பது சமூக பண்பாட்டைப் புரிய வழிகோலுகிறது.
அதிகாரத்தால், களையப்பட வேண்டிய முரண்களும், அவலங்களும், அசிங்கங்களும், அவர்களாலேயே ஊக்குவிக்கப் படுகின்றன என்பதுதான் பெருங்கேடு. இவற்றை எதிர்த்து கேள்விகள் எழுந்தாலும், தயக்கமெனும் தடையால் கேடுகளுக்கு ஒத்து போகிற பொதுப்புத்தியை தகர்த்தெறிய வேண்டும். நம் மனம் சார்ந்த ஆணவம், நம்மில் இருந்து கொண்டேயிருக்கும் வரை பிறர் உணர்வில் பொருந்திப் பார்க்கவியலாது. ஆக, சமூக வெளியின் பொது அறத்தையும், வாழ்க்கையில் தனிமனித அறத்தையும் வளர்த்தெடுக்க; மனிதன் என்னும் ஒற்றைச் சிந்தனையை மட்டுமே அறிவில் நிலைநிறுத்த; வாசிப்பை மீட்டெடுப்போம். நன்றி!
நூலின் விவரங்கள்:
நூல்: உச்சி வெயில்
நூலாசிரியர்: பா. செயப்பிரகாசம் (P. Jeyaprakasham)
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 184
விலை: ரூ.200
புத்தகம் வாங்க: உச்சி வெயில்
எழுதியவர்: பா. கெஜலட்சுமி, சென்னை – 19
- நன்றி: Book Day

கருத்துகள் / Comments