தனித்தன்மை கொண்ட சிறுகதைக் கலைஞருள் பா.செயப்பிரகாசமும் ஒருவர். இவர் படைத்துக் காட்டுகிற எதார்த்தச் சித்திரங்கள் கூட உணர்ச்சி நிறைந்த கவிதை நடையிலேயே அமைகின்றன. அவர் வளர்ந்த கரிசல் மண்ணின் மணமும் அங்கு சோக மூச்சு உயிர்க்கிற மனித வாழ்க்கையின் நிறமும் அவருடைய எழுத்தில் கலந்து காணப்படுகின்றன.
சாதாரணக் காட்சியில் கொலுவிருக்கிற அழகை செயப்பிரகாசம் சுட்டிக் காட்டுகிறபோது அது தனி மெருகுடன் ஒளிர்வதைக் காண முடிகிறது.
கொத்தமல்லி பூத்துக். காய்ப்பதையும், அதை நம்பி வாழ்கிறவர்கள் உழைப்பையும் அவர் வர்ணிப்பதை ஒரு உதாரணமாகக் கூறலாம்:
“நட்சத்திர தூசுகள் மண்ணில் உதிர்ந்துவிட்டது போல், காடெல்லாம் கொத்தமல்லி பூத்திருக்கிறது. வானத்திற்கும் பூமிக்கும் நடக்கிற போட்டியில், கொத்தமல்லி பூக்கிறபோதெல்லாம் கரிசல் மண் ஜெயித்தது.
காசைச் சுண்டி எறிந்தால், கீழே விழாமல் பூமெத்தை விரிப்பில் தங்கியது.
நிலத்திற்கு மேலே ஒரு முழ உயரத்தில், அவர்களின் வெள்ளி நாணயங்கள் மிதந்தன. காயாகி விளைகிறபோது, அவையெல்லாம் வெள்ளி நாணயங்களாய் பரிமாற்றம் கொண்டன.
களத்துமேட்டில் வட்டமாய் மல்லிச் செடி அடுக்கி, நிரை பிடித்து அடிக்கிறார்கள். சிலம்பு லாவகம்போல் கம்பு வீச்சு விழுகிறது. விஸ், விஸ் என்ற கம்பு வீச்சுச் சத்தம் பாட்டுக்குப் பின்னணியாக வர பாடிக் கொண்டே அடிக்கிறார்கள். அவர்களின் வியர்வைத் துளிகளைப் போலவே அவர்களின் உழைப்பைப் போலவே, அந்தப் பாடல்களும் நிரடில்லாமல் வந்தன,”
இன்னொரு வர்ணிப்பு-
“காலை மாலை என்ற பொழுதுகள் இல்லாமல் மலைக் காடுகளில் சண்முகமயில் ஏறி இறங்கியிருக்கிறாள். தனிக் கட்டையாய் மலைக்காட்டில் ஏறி இறங்க அவளுக்குத் தெரிந்திருந்தது. அந்த மலை அவர்களுக்குத் தாயாக இருந்தது. அடர்ந்த காடுகளே அதன் மடியாக இருந்தது. அமிர்தம் கொஞ்சும் அதன் காம்புகளை அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். அந்தக் காடுகள் இருள் நேரத்திலும், இருளடர்ந்த வழியிலும் அவள் தனியாகப் போய்வருகிற போதெல்லாம் இதுபோல் பயமுறுத்தியதில்லை...
வீட்டில் எல்லோரும் உழைத்தபோதுதான் சோற்று மணம் காண முடிந்தது. வீட்டிற்குள் இருந்தால் வாழ்க்கை இல்லாமல் போனது. வாழ்க்கையைத் தேடி நிலைப்படிக்கு வெளியே வந்தபோது மலை தெரிந்தது. ஊரில் இருக்கிற எல்லோருக்கும் எதிரே மலைதான் தெரிந்தது. தாயின் கர்ப்பத்தில் இருக்கிறபோதே, அவர்களுக்கு மலை ஏறுவது சொல்லித் தரப்பட்டது.”
பா. செயப்பிரகாசம் கதைகளில் அங்கங்கே கையாள்கிற உவமைகளிலும் புதுமையும் கற்பனையும் செறிந்து விளங்குகின்றன.
“அவள் ரவிக்கையில்லாமல் வெள்ளைச் சேலையில், தாள்கள் மூடிய ஒரு மக்காச் சோளக்கதிரைப்போல் இருந்தாள்."
"வறண்டு உலர்ந்த மண் தண்ணீரை வாரி விழுங்குவது போல, சிறுவன் ஆவலுடன் கஞ்சியை விழுங்குவான்."
"மடத்துச் சாமியார்களின் காதில் அடுகிற தங்கக் குண்டலங்களைப் போல் மஞ்சள் கருவம் பூக்கள் ஆடின."
"தீடிரென்று சிரிக்கும் பைத்தியக்காரியைப் போல், பெருமழைக் காலத்தில் மட்டும் பெருக்கெடுத்து ஒடும் ஒடை.”
- வல்லிக்கண்ணன் (பாரதித்குப் பின் தமிழ் உரைநடை)

கருத்துகள் / Comments