ஈழப்போராட்டங்கள் நசுக்கப்பட்டு குருதி காயாத அந்த நாட்களில் தஞ்சையில் ஒரு கண்டனக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டு தமிழ்வெளி இலக்கிய அமைப்பு சார்...
ஈழப்போராட்டங்கள் நசுக்கப்பட்டு குருதி காயாத அந்த நாட்களில் தஞ்சையில் ஒரு கண்டனக்கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டு தமிழ்வெளி இலக்கிய அமைப்பு சார்பில் அதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டபோதிலிருந்து மறைந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எனக்கு அறிமுகம்.
அக்கூட்டத்திற்கு அவரைதான் அழைத்தோம். அதற்கு முன்பே அவருடைய கதைகளும், கட்டுரைகளும் எனக்கு அறிமுகம். கரிசல் மண்ணை அதன் சகதி வாசம் மாறாமல் இத்தலைமுறைக்கு தந்ததில் பா.செ முக்கியமானவர். மண்ணின் பிரச்னைகள் குறித்தே அவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. பாசாங்கில்லாத அவருடைய எழுத்துகள்தான் எனக்கு வழிகாட்டியாகவும் அமைந்திருந்தன. அவருடைய எழுத்துகளைப் பற்றிக் கொண்டே என்னுடைய எழுத்துலகப் பயணத்தை அமைத்துக்கொண்டேன் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஈழப்போராட்டங்கள் குறித்த காத்திரமான அவருடைய கட்டுரைகள் எனக்கு பல சந்தேகங்களைப் போக்கின. அவருடைய இடைவிடாத இயக்கம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. இந்திப் போராட்டக் காலங்களில் அவர் ஒரு மாணவர் தலைவர். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்றவர். போராட்டத்தோடு ஒட்டிப் பிறந்தவர்.
அவருடைய வாழ்க்கை என்பதும் ஆரம்பம் முதல் இறப்பு வரை கூட ஓயாத போராட்டங்களால் மட்டுமே இட்டு நிரப்பப்பட்டிருந்தது. அவருடைய அனுபவக்கீற்றுகள் இருளில் ஒளிபரப்பக்கூடியவை. அப்படித்தான் நான் பார்க்கிறேன்.
இலக்கியத் துறையிலும், களப்பணிகளிலும், தமிழர் உரிமைப் போராட்டங்களிலும் இடையறாது இயங்கிக் கொண்டிருந்த சூரியதீபனுக்கு, பாசெவுக்கு தமிழ் உலகம் என்ன கைமாற்றை செய்துவிட்டது? நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டிருந்த இந்தக் கேள்விக்கு வடிகாலாக அவர் உயிருடன் இருந்தபோது தஞ்சையில் ஏற்பாடு செய்த நிகழ்வுதான் பா.செயப்பிரகாசத்தின் படைப்புலகைக் கொண்டாடுவோம் என்ற தஞ்சை இலக்கிய வட்டத்தின் நிகழ்வு.
திரளான இலக்கிய ஆளுமைகள் அந்நிகழ்வில் கலந்துகொண்டு பா.செவுக்கு அன்பு செய்தனர். அந்நிகழ்வில் பா.செ.வின் படைப்புகள் குறித்த கருத்தரங்கம் ஒன்றும் ஏற்பாடு செய்திருந்தோம். அந்நிகழ்விற்குக் காத்திரமான கட்டுரைகள் வந்திருந்தன.
இக்கட்டுரைகளை மேலும் செறிவூட்டி ஒரு தொகுப்பாகக் கொண்டுவந்தால் என்ன? என்னும் வினாவிற்கு விடைதான் இந்தப் புத்தகம். தஞ்சை நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுமைகள் மட்டுமல்லாது வேறு பலரும் இத்தொகுப்பிற்கு தங்களது ஆக்கங்களை வழங்கியிருக்கிறார்கள்.
பா.செ.வின் படைப்புகள் குறித்த இத்தொகுப்பிற்கு ஆக்கங்கள் வழங்கியவர்களுக்கு என்னுடைய பணிவான நன்றியும், அன்பும். பா.செ.வின் மீது இவர்கள் கொண்டுள்ள அன்பினாலன்றி இது சாத்தியமாகி இருக்காது.
மேலும் பல தோழர்கள், நண்பர்கள் தங்களது ஆக்கங்களை வழங்கத் தயாராக இருந்தாலும் காலத்தின் போதாமை கருதி இத்தொகுப்பை உடனே வெளியிட முடிவு செய்தோம். தங்கள் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற முடியாமல் போனதற்காக அத்தோழர்கள் என்னை மன்னிப்பார்களாக!
பா.செ.வின் எழுத்துலகம் குறித்த ஏராளமான எழுத்துகள் இணையத்திலும், வேறு பல ஊடகங்களிலும் விரவிக்கிடக்கின்றன. இத்தொகுப்பு மேலும் செம்மைப்படுத்தப்படும்போது அதுவும் கவனத்தில் கொள்ளப்படும்.
பா.செ.வின் எழுத்துகளை தொடர்ந்து தொகுத்து வெளியிட்டு வருகின்ற வம்சி பதிப்பகம் இத்தொகுப்பு நூலையும் கொண்டு வருவது இயற்கையே. வம்சி பதிப்பகத்திற்கும், தோழர் வம்சி ஷைலஜா அவர்களுக்கும், தோழர் பவா செல்லதுரை அவர்களுக்கும் என்னுடைய நன்றி.
- செ.சண்முகசுந்தரம்

கருத்துகள் / Comments