பங்குப்பெற்ற நிகழ்வுகள் 2011 - இந்தியா

ம.இலெ.தங்கப்பாவுக்கு விருது வழங்கும் விழா, வேலூர், 17.09.11


வேலூர் இலக்கியப் பேரவையும் ஆழி பதிப்பகமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக வேலூர் கோட்டை மைதானத்தில் 8.9.11 முதல் 18.9.11 வரை புத்தகக் கண்காட்சியை நடத்தின. அதையொட்டி இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் வேலூர் இலக்கியப் பேரவை விருது ஒன்றை வழங்குகிறது. தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் படைப்பாளர், அறிஞர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் வழங்குவது இவ்விருதாகும்.

முதல் ஆண்டாகிய இவ்வாண்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா ஆவார். அழகியபெரியவன், செ.ச.செந்தில்நாதன், ச.சிவகுமார், அருள் ஜோதி அரசன் ஆகியோர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். நெல்லை மாவட்டத்தில் பிறந்த ம.இலெ.தங்கப்பா புதுச்சேரி அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது புதுச்சேரியில் வசித்துவருகிறார். மரபுப் பாக்கள், குழந்தைப் பாடல்கள், வாழ்வியல் கட்டுரைகள் எனப் பலவற்றை எழுதியுள்ளார். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். இவ்வாண்டு குழந்தை இலக்கியத்திற்கான சாகித்திய அகாதெமி விருது அவருக்கு வழங்கப்படவுள்ளது.

தங்கப்பாவுக்கு விருது வழங்கும் விழா வேலூரில் 17.09.11 அன்று நடைபெற்றது. அம்மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் செ.இராஜேந்திரன் விருதை வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். பா.செயப்பிரகாசம், பெருமாள்முருகன், அழகிய பெரியவன், பர்வீன் சுல்தானா, யாழன் ஆதி, செ.ச.செந்தில்நாதன், கி.பார்த்திபராஜா ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்றுப் பாராட்டிப் பேசினர். ம.இலெ.தங்கப்பா ஏற்புரை ஆற்றினார். புத்தகக் கண்காட்சியின் வெளியரங்கில் நடைபெற்ற விழாவிற்குத் திரளான பார்வையாளர்கள் வந்திருந்தனர்.


மூன்று தமிழர் உயிர் காக்க நடக்கும் தொடர் பட்டினி போராட்டத்தின் 18 ஆம் நாளான 9-10-2011 அன்று மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் உண்ணாப் போராட்டம்.

மனித உயிர் பறிப்பது மனித நேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது. மனித உயிர் பறிக்க தனி மனிதருக்கோ, சமூகத்துக்கோ. அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரணதண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிறபோது அது அறமான செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்? நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்து செய்துள்ளன. காந்திதேசம் என்ற கிரீடத்தை பெருமையாகச் சூடிக் கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரணதண்டனையை ரத்து செய்யவில்லை.

இப்போது ராஜிவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவர் தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறையிலிருந்த காலம் இருபது ஆண்டுகள். வாழ்நாள் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தால் கூட இவர்களின் சிறைக்காலம் முடிந்து போயிருக்கும். எந்த ஒரு மனித உயிருக்கும் மரணதண்டனை வழங்க எவருக்கும் உரிமையில்லை எனும் உன்னதமான கருத்து உலகின் மனச் சாட்சியாக மேலெழுந்து வருகையில்...
இந்திய அரசே, மரண தண்டனையை ரத்து செய் !
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனையை நீக்க தமிழக அரசே,
அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேறுக!
என்ற கோரிக்கையை முன்வைத்து 09-10-2011 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒரு நாள் உண்ணாப் போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா அரசமைப்புச் சட்டப் பிரிவு 161-இல் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி தமிழக அமைச்சரவை கூடித தீர்மானம் நிறை வேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பினாலேயே இத்தூக்குத் தண்டனையை நீக்க முடியும் என்று சட்ட வல்லுனர்கள் கருதுகிறார்கள். இக்கோரிக்கையை வலியுறுத்தி சென்னை கோயம்பேடு பேருந்துநிலையம் அருகிலுள்ள ஆட்டோ கேரேஜ்ஜில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் நடைபெறவுள்ள உண்ணாப் போராட்டத்தில் பங்கேற்குமாறு படைப்பாளிகள் அனைவரையும் அழைக்கிறோம்.

பா.செயப்பிரகாசம்
அமைப்பாளர்களுக்காக, மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம்

நிகழ்ச்சியில் பா.செயப்பிரகாசம் ஆற்றிய உரையை இங்கு காணலாம் - பகுதி 1,  பகுதி 2,  பகுதி 3 பகுதி 4



ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது - 30 ஏப்ரல் 2011

செந்தமிழ் அறக்கட்டளை (மணப்பாறை) வழங்கும் இந்த ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது வழங்கும் விழா 30-04-2011 மாலை 6 மணிக்கு, ஆளுனர் மாளிகையில் நடைபெறுகிறது. தமிழக ஆளுனர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்கிறார்.

விழாவில் த.உதயச்சந்திரன் இ.ஆ.ப, ம.இராஜேந்திரன் (துணைவேந்தர் தமிழ்பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

எழுத்தாளர் பிரபஞ்சன், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், கவிஞர் இளம்பிறை ஆகியோர் விருதுக்கான நூல்களைத்தேர்வு செய்தனர்.





கூடங்குளம் பேரெழுச்சி - 15 செப்டம்பர் 2011, இடிந்தகரை
எழுத்தாளர்கள் பா.ஜெயபிரகாசம், அபிமானி, கிருஷி, ராமகிருஷ்ணன், கோணங்கி, பிரபாகரன், பொன்னீலன், சரவணக்குமார், பிரிட்டோ, லேனாகுமார், பேராசிரியர் அறிவரசன் ஆகியோர் பங்கேற்றார்கள். 

அணு உலைக்கு எதிரான இயக்கத்தினர் உதயகுமார், போஸ், தமிழ்ச்செல்வன், வின்ஸ் ஆன்றோ, ஹென்றிடிபேன், பீட்டர் முதலியோர் போராட்டத்தை வழிநடத்தினார்கள். 
 


2010-ம் ஆண்டுக்கான இயல் விருது நிகழ்ச்சி
இடம்: கன்னிமாரா நூலக அரங்கு, எழும்பூர், சென்னை-8
தேதி: 23 ஏப்ரல் 2011 மாலை 5.30




தமிழகத்தில் மனித உரிமைகள் : கருத்தரங்கம்

அருள் எழிலன்,பா.செயப்பிரகாசம், அ.மார்க்ஸ்,செல்வராஜ்

15.10.2011 அன்று காலை சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் "தமிழகத்தில் மனித உரிமைகள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் தமிழக மீனவர் பிரச்சனைகள் குறித்து பத்திரிகையாளர் அருள் எழிலன், மரண தண்டனை எதிர்ப்பு குறித்து மூத்த எழுத்தாளரும், மரண தண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பா.செயப்பிரகாசம், அணுமின் நிலைய எதிர்ப்பு குறித்து கூடங்குளம் அணுமின் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் எக்ஸ்.டி.செல்வராஜ், பரமக்குடி தலித் படுகொலைகள் குறித்து எழுத்தாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ் ஆகியோர் பேசினர்.

கவிஞர் கவின்மலர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவிஞர் தி.பரமேசுவரி, "தடாகம்" அமுதரசன் ஆகியோர் செய்திருந்தனர்.

செயப்பிரகாசம் உரை ஒலிப்பதிவை இங்கு கேட்கலாம்.



"இலங்கையில் தமிழீழம்" (Tamil nation in srilanka) எனும் நூலாசிரியர் - ரான் ரைட்னவருடன்  ஒரு கலந்துரையாடல் 13-11-2011 புதுச்சேரி

ஈழத்தமிழர்களுக்காக உலக முழுதும் குரல் கொடுத்து வரும் அமெரிக்க எழுத்தாளர் , இடதுசாரி விமரிசகர்,மொழிபெயர்ப்பாளர், கியூபா போன்ற இலத்தின் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தபோது கடுமையாக விமரிசித்த மார்க்சிய அரசியல் ஆய்வாளர் ரான் ரைட்னவருடன்  ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் கலந்து கொண்டு உரையாடினார்.

நிகழ்ச்சி காணொளியை இங்கு காணலாம்.



ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு 

ஞாயிறு 09.01.2011 அன்று "என்ன செய்யலாம் இதற்காக?" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகர் தியாகராஜாக் கல்லூரியில் பிற்பகல் 5 மணியளவில் தமிழ்ப் படைப்பாளிகள் கூட்டமைப்பைச் சேர்ந்த எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், தமிழருவி மணியன், இயக்குனர் மணிவண்ணன், நடிகர் நாசர் மற்றும் ஈழ ஆதரவுக் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் வரவேற்புரையை நூல் வெளியீட்டுக் குழுவின் சார்பில் காளிங்கனும், அறிமுக உரையை நூலாசிரியர் ஜெ.பிரபாகரனும் நிகழ்த்தினர். இந் நூலின் அணிந்துரையை நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் எலன் சாண்டர், ஜெர்மனி மனிதவுரிமை செயற்பாட்டாளர் விராஜ் மென்டிஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சிறிதுங்க ஜெயசூர்யா ஆகியோர் நிகழ்த்தினர்.

நூல் மதிப்புரையை இங்கு படிக்கலாம்.


ஓசூரில் தமிழினத் தற்காப்பு மாநாடு - 25 செப்டம்பர் 2011

ஓசூரில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் ஆறாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து (25.09.2011) காலை 9 மணியளவில் தமிழினத் தற்காப்பு மாநாடு நடக்கிறது. ஓசூர் வசந்த் நகர் தாயப்பா திருமண மண்டபத்தில் நடக்கும் மாநாட்டிற்கு தமிழகமெங்குமிருந்து இன உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்து கொள்கிறார்கள்.

மாநாட்டின் தொடக்க நிகழ்வாக காலை 9 மணியளவில் முள்ளிவாய்க்கால் ஈகியர் நினைவரங்கத்தில், தழல் ஈகி செங்கொடியின் படத்திறப்பு நடக்கிறது. த.தே.பொ.க. ஓசூர் தோழர் முருகப்பெருமாள் வரவேற்புரை நிகழ்த்துகிறார். பேராசிரியர் அறிவரசன் செங்கொடியின் படத்தைத் திறந்து வைக்கிறார்.

மதியம், எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தலைமையில், வாழ்நாள் சாதனையாளர் பாராட்டுக் களம் நடக்கிறது. அதில், இலக்கியத்திற்காக தோழர் தி.க.சி, தமிழர் மெய்யியல் ஆய்வுக்காக முனைவர் க.நெடுஞ்செழியன், ஓவியத்துறை சாதனைக்காக ஓவியர் மருது ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் சிறப்பு செய்கிறார்.

மாநாட்டின் நிறைவுக் களத்திற்கு, த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்துகின்றனர். த.தே.பொ.க ஓசூர் கிளைச் செயலாளர் தோழர் பி.சுப்பிரமணியன் நன்றியுரை நிகழ்த்துகிறார்.







சமச்சீர்க்கல்வியை ஒத்திவைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு எதிராக கண்டனக்கூட்டம் - 5 ஜூலை 2011

ஒரு குடிமைச் சமூகத்திற்கான கல்விக் கண்ணை குத்தி ஊனமாக்க முனைந்துள்ள அ.தி.மு.க. அரசு, ஒரு மாபெரும் அநீதியை மாணவர் சமூகத்திற்கு இழைத்துள்ளது. முடக்கி வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை திரும்பப் பெற முடியாமல், நீதிமன்றத்தை நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்கள். இச்சூழலில் 'சமச்சீர் கல்விக்கான கல்வியாளர்கள் குழு' எழும்பூர் இக்சா அரங்கத்தில் 5.7.2011 அன்று, சமச்சீர் கல்வி குறித்த கருத்தரங்கை ஒருங்கிணைத்தது.


கவிஞர் இன்குலாப் : “ஆட்சியாளர்கள் அதிகாரத்தை நேசிக்கும் அளவிற்கு மக்களை நேசிப்பதில்லை. ஒரு குலத்திற்கு ஒரு நீதி என குலக் கல்வித் திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தபோது அதை எதிர்த்தவர் பெரியார். அப்போது அந்த திட்டத்திற்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்த காமராஜர் கடுமையாக எதிர்த்தார். வெளியே பெரியார் நடத்திய போராட்டம் ராஜாஜியை பதவியில் இருந்து இறக்கச் செய்தது. ஆனால், இன்று ஜெயலலிதா கொண்டு வரும் திட்டத்திற்கு ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்ப்பில்லை. மாறாக இதன் பின்னணியில் சோ, ராமகோபாலன் போன்றோர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியினரும் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்; கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற தீர்மானங்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, தமிழ் உணர்வாளர்களின் வாயை அடைத்துவிட்டு, உடனடி வேலையாக சமச்சீர் கல்வியை தள்ளி வைக்கும் முயற்சியில் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளார். அவர் இவ்வாறு செய்வது, ஈழப்படுகொலைக்கு நிகரான கல்விப் படுகொலையாகும்.''


இந்நிகழ்ச்சியில் மக்கள் சக்தி இயக்கத்தைச் சேர்ந்த கன். மோகன் வரவேற்புரை ஆற்றினார். பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமை வகித்து தொகுத்து வழங்கினார். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் சார்பில் தமிழ் நேயன், வழக்குரைஞர் ரஜினி, பேராசிரியர் திருமாவளவன், இனியன் சம்பத், மக்கள் சக்தி இயக்கத்தை சேர்ந்த சிவசங்கரன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், பேராசிரியர் அரணமுறுவல், கீ.த. பச்சையப்பன் ஆகியோர் பங்கேற்று, தங்களுடைய கருத்துகளையும் கண்டனங்களையும் தெரிவித்தனர்.

நன்றி: கீற்று



இலத்தீன் அமெரிக்க அரசியல் விமர்சகர் ரான் ரைடனவர் எழுதிய மூன்று நூல்கள் வெளியீடு, 2011 நவம்பர் 12









பேரறிவாளவன் மீட்பு - 2011இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இலக்கியக் களம் கூட்டம்

இடமிருந்து டாக்டர் விமுனா மூர்த்தி, எழுத்தாளர் செயப்பிரகாசம், அற்புதம்மாள், கவிஞர் அமுதகீதன், ஈழம் தேவதாசு - கல்வியாளர்
இடமிருந்து டாக்டர் விமுனா மூர்த்தி, எழுத்தாளர் செயப்பிரகாசம், அற்புதம்மாள், கவிஞர் அமுதகீதன், ஈழம் தேவதாசு - கல்வியாளர்











புரட்சி கவிஞர்  கலை இலக்கிய மன்றம், வேலூர் கருத்தரங்கம், 18 செப்டம்பர் 2011





கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பா.செயப்பிரகாசம் நூல்கள்