இந்திய ஆன்மாவும் ஏழுபேர் விடுதலையும்


மூன்று தமிழருக்கு வாய்ப்பான ஒரு தீர்ப்பை 18.02.2004 அன்று உச்சநீதிமன்றம் நல்கியிருக்கிறது. மூன்று தமிழர் மட்டுமல்ல, உலகத்தமிழினம் தமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளவேண்டிய தீர்ப்பு. உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பளித்துள்ளது. அப்போதும் மூவரும் குற்றவாளிகள் அல்ல என்று சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் தலையீடு செய்ய நினைத்தது அந்த விசயத்தில் அல்ல. கருணை மனுவைப் பரிசீலிப்பதில் அநாவசியமான காலதாமதம் செய்யப்பட்டதைக் காரணமாக்கி தண்டனையைக் குறைத்தது. ('நீண்ட காலதாமதம் ஏற்பட்டால் மரண தண்டனையைக் குறைக்கலாம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் கருத்து பிரச்சினையானது தான். அந்தக் கருத்து சரியானதா என்பதை நாம் ஆராய வேண்டும். தாமதம் காரணமாகவே தண்டனைக் குறைப்பு என்ற கருத்து என்னை வேதனைடையச் செய்கிறது'- எனத் தாவிக்குதித்து வீசியிருக்கிறார் இதுவரை ஆயிரக்கணக்கில் தமிழர் பிரச்சினைக்கு வெந்து வேதனைப்பட புண்ணியவாளன் ப.சிதம்பரம்).

'குற்றவிசாரணை முறை சட்டப்பிரிவு 432(1) மற்றும் 433-A யின்படி மாநில அரசுக்கு முடிவெடுக்கும் உரிமை உண்டு' என உச்சநீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல் அளித்தது. இதில் முடிவெடுக்கும் அதிகாரம் நடுவண் அரசுக்கு இல்லை என்பதையும் உணர்த்தியுள்ளது. மறுநாள் தனது அமைச்சரவையைக் கூட்டிய ஜெயலலிதா 'தூக்குத் தண்டனைக் கைதிகள் மட்டுமல்ல, மிச்சமுள்ள ஆயுள் தண்டனையாளர்களையும் விடுதலை செய்வதாய் முடிவெடுத்து' சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றினார்.

கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்து, தூக்குத் தண்டனையை உறுதி செய்தபின் பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினர். தூக்குத் தண்டனையை நிறைவேற்ற உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்தமை - நீதியின் வெற்றியில் முதல் சாளரத்தைத் திறந்து வைத்தது. உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகத் தளர்த்தியபோது வெற்றியின் இரண்டாவது பெரிய கதவு திறக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை உள்வாங்கி, தமிழக அரசின் இறையாண்மையை வெளிப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதா ஏழுபேரையும் விடுதலைசெய்த போது மூன்றாவதாய் நீதியின் சுதந்திர வீதி தரிசிக்கப்பட்டது.

தேர்தல் அரசியல் போட்டியின் விளைவு என்று காங்கிரசார் தலையில் குத்திக்கொண்டாலும், என்ன காரணமாக இருப்பினும் நீதியின் வரலாற்று வெற்றியை ஈட்டித்தந்திருக்கிற துணிச்சலான காரியத்தை செய்திருக்கிறார் ஜெயலலிதா என உலகத்தமிழர் பெருமைப்படுவதில் காரணம் இருக்கிறது.

தமிழக அமைச்சரவை எடுத்த முடிவை நடுவண் அரசுக்கு அனுப்பியது ஜெயலலிதாவின் பிழையன்று. சரியான செயல்பாடு. அனுப்பியதன் மூலம் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் 'பலநோக்கு இடையீடு மனு' (miscellaneous pettion) தாக்கல் செய்ய, 'விருதுபட்டிச் சனியனை வீடுவரைக்கும் வந்திட்டுப் போ' என்று சொன்ன கதையாகிவிட்டது.

'குற்றவியல் நடைமுறைச் சட்டம் 432(1) மற்றும் 433-A யின்படி மாநில அரசின் தண்டனைக் குறைப்பு அதிகாரம் தற்சார்பானது (சுயேச்சையானது). தங்கு தடையற்றது' என்கிறார் வழக்குரைஞரும், தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளருமான கி.வெங்கட்ராமன்.

தமிழ்நாடு அரசின் செயல்பாட்டுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்சநீதி மன்றமும் (20.02.14) இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. 'இந்த உத்தரவால், மாநில அரசின் அதிகாரத்தை மிகக்குறைவாக நீதிமன்றம் மதிப்பிடுவதாகக் கருதக்கூடாது' என்று நீதிபதிகள் விளக்கமளிக்கின்றனர்.

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் குற்றவியல் சட்டவிதி 435 செயலற்றதாய் போகிறது. எனினும், ஒரு கூடுதல் எச்சரிக்கை உணர்வோடு தமிழக அரசு 435(1)-ன் கீழ் நடுவணரசின் கருத்துக் கேட்டு கடிதம் அனுப்பியது. இதைச் சாக்காக வைத்து தம்பி சண்டப்பிரசண்டன் என்கிற மாதிரி இச்சிக்கலில் முடிவெடுக்கும் இறுதி அதிகாரம் இந்திய அரசுக்கே உண்டு என்ற கருத்து உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது வேறொன்றுமில்லை. யானை தன் தலையில் தானே மண்னை வாரி இறைத்துக் கொள்வது போல் தமிழகத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையையும், அதே சமயத்தில் காங்கிரஸ் தனக்கான சவப்பெட்டியையும் தயார்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான். என்ன நேரப்போகிறது என்பதை, 'காங்கிரஸ்காரர்களுக்கு தேர்தல் தோல்வி என்பது புதிதல்ல, எத்தனையோ முறை தோல்வியைச் சந்தித்துள்ளோம்' என்று ஞானதேசிகன் முன்கூட்டி உணர்ந்திருக்கிறார்.


இடைக்காலத்தடை விதித்த உச்சநீதிமன்றம் 'ஆயுள்சிறைத் தண்டனைக் கைதிகளை விடுதலைசெய்ய சட்டத்தின்படி வகுக்கப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்' என்று அறிவுறுத்தியிருக்கிறது. முன்னர் புதன்கிழமை வழங்கிய தீர்ப்பிலும் 'ஆயுள் சிறைக் கைதிகளை விடுதலை செய்யும் நடைமுறைகளைப் பின்பற்றி மூவரையும் விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. விடுதலை செய்வது குறித்து மாநில அரசே முடிவெடுக்கலாம்' என்று வழிகாட்டியிருக்கிறது.

மத்திய அரசு தாக்கல் செய்திருப்பது மறுஆய்வு மனு (Review Pettion)அல்ல. 'நீங்கள் மறு ஆய்வுமனு அளிக்கப் போகிறார்களா' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, இல்லை எனக் கூறிவிட்டது மத்திய அரசு. தாங்கள் 'பல்வகை இடையீட்டு மனு- ஒன்றை (Miscellaneous Pettion) தாக்கல் செய்வதாக கூறியுள்ளனர். குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 431-ன் படி அதிகார மீறல் என தமிழக அரசைக் குற்றம் சுமத்தி மத்திய அரசு வழக்குரைஞர் வாதிட்டபோது, இல்லை.. குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 432-யும் படித்துப் பாருங்கள் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின், குற்றவியல் சட்டவிதி 435 செயலற்றதாகிவிட்டது என்றும் விளக்கம் அளித்தனர். தங்களிடம் வாதிடுவது ஒரு காங்கிரஸ் அரசு - நீதியின் அச்சில் சுழல்கிற அரசு அல்ல என நீதிபதிகள் உணர்ந்து கொண்டார்கள் போல் தெரிகிறது. எனவே தமிழக அரசு அளிக்க வேண்டிய நியாயபூர்வ பதில்களையெல்லாம் அளித்து நீதிபதிகளே பொறுப்பை நிறைவேற்றியுள்ளார்கள்.

மாநில அரசுக்கு உரிய இறையாண்மைகள், மத்திய அரசுக்கு உரிய இறையாண்மைகள் என தனித்தனியாக பகுக்கப்பட்டுள்ளன. ஒன்றின் இறையாண்மையில் மற்றொன்று தலையிட முடியாது. அரசியல் சட்டப்பிரிவு 161-ன் கீழ் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால், அதை ஆளுநர் அங்கீகரிக்க வேண்டும் என்று உள்ளது. இந்த அடிப்படையில் தான் தி.மு.க ஆட்சியின் போது அமைச்சரவை கூடி 'தியாகு, லெனின், குருமூர்த்தி, கணேசன் ஆகிய நான்கு மரணதண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயள் தண்டனையாகக் குறைப்பது என முடிவு செய்கிறது. இது மாநில அரசின் இறையாண்மை' என்று விளக்குகிறார் தோழர் தியாகு.

பேரறிவாளன், சாந்தன், முருகன், ஆகியோர் இன்றுபோலவே ஜெயலலிதா பதவியேற்ற 2011-லும் தூக்குக் கயிற்றின் முன் நின்று கொண்டிருந்தார்கள். இந்த இறையாண்மையைப் பயன்படுத்தி மூவரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழகம் கொந்தளித்தது. ஆர்ப்பாட்டம், உண்ணாநோன்பு என மோட்டிப்பாய் போராட்டங்கள் எழுந்தன. மூன்று பெண்கள் - சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தோழர் செங்கொடி, மூவர் விடுதலை முழக்கத்தினை எழுப்பியபடி தீக்குளித்து ஈகியாகினார்.

'மரணதண்டனைக்கு எதிரான படைப்பாளிகள் இயக்கம்' - என்னும் அமைப்பின் மூலம் நாங்கள் குரல் கொடுத்தோம். பா.செயப்பிரகாசம், கவிஞர் தாமரை, ஓவியர் மருது, கவிஞர் மாலதி மைத்திரி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்திய அவ்வியக்கம் தமிழின் படைப்புத்துறை சார்ந்த எழுத்தாளர், கவிஞர், ஓவியர், பாடலாசிரியர்கள், திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், திரைத்துறைத் தொழில் நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரைக் கலைஞர்கள் என ஏறக்குறைய 500 பேரின் ஒப்புதல் பெற்று தமிழக முதல்வருக்கு அவருடைய துணைச் செயலாளரிடம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தோம். அதில் 'கருணை மனு விசயத்தில் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு நிகரான அதிகாரத்தை மாநில ஆளுநருக்கும் வழங்கியுள்ளது இந்திய அரசியல் சாசனம். அந்த அரிதினும் அரிதான அதிகாரத்தை உயிர்களைக் காக்கப் பயன்படுத்துங்கள். பயன்படுத்துவதன் மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் உங்கள் தலைமையிலான மாநில அரசு வழிகாட்டும் என்று உறுதியாக நம்புகிறோம்' என முடித்திருந்தோம்.

முதலமைச்சராய் இருந்த ஜெயலலிதா, அப்போது இந்தக் கூக்குரல்களை செவிமடுக்கும் நிலையில் இருந்ததாகத் தெரியவில்லை. தந்திரோபயமான ஒரு காரியம் செய்தார்.

'தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை மறுபரிசீலனை செய்து, அவர்களின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியரசுத் தலைவரை தமிழ்நாடு சட்டமன்றம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது' என தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பந்தைத் திருப்பி உதைத்தார். கருணை மனு தொடர்பில் மாநில அரசுக்குள்ள இறையாண்மையை செயலாக்கத்துக்குக் அவர் கொண்டு செல்லவில்லை.

தமிழகத்தில் நடைபெறும் போட்டி அரசியலின் தொடர்செயலாக மட்டுமே இது சுருங்கிப் போனது. ஈழமக்களின் அவலம், ஈழவிடுதலைப் போராட்டம் என்பது வாக்கு அறுவடைக்கான நிலம். ஈழப்பிரச்சினையில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இருகட்சிகளும் மாற்றி மாற்றி விவசாயம் செய்து கொழுத்த மகசூல் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கூட்டணிக்குள் போன பிற்பாடும் 2007-வரை கருணாநிதி ஒற்றை ஆளாக ஆதாயம் பார்த்துக் கொண்டிருந்தார்.

'யுத்தம் என்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது எங்கும் நடப்பதுதான்' என, ஈழத்தில் இராணுவத் தாக்குதலால் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்ட போது அறிக்கை விட்டவர் ஜெயலலிதா. அதுவரை விடுதலைப் போராளிகளுக்கும் விடுதலைப் போருக்கும் எதிராக நின்ற ஜெயலலிதாவின் சுருதி மாறியது. ஏனெனில் 2009 மே-நடுவில் நடைபெறவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் அறுவடை இலக்காகியது. அன்று தொடங்கி அவருடைய ஈழ ஆதரவுப் பாவனை இன்றுவரை தொடர்கிறது. கருணாநிதி என்ற எதிரி அரசியலில் இல்லையென்றால் இந்தப் பாவனையும் அற்றுப் போகும்.

மூவர் தூக்குக் கயிறை அறுக்கிற சந்தர்ப்பம், முன்னர் தி.மு.க. ஆட்சிக்காலத்திலும் கருணாநிதிக்கு இருந்தது.

27.10.1999 அன்று நால்வரின் கருணை மனுக்களை தமிழக ஆளுநர் நிராகரித்தார். ஆளுநரின் ஆணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனைக் கைதிகள் வழக்குத் தொடர்ந்தனர். ஆளுநரின் ஆணையைத் தள்ளுபடி செய்ததோடு அமைச்சரவையின் ஆலோசனையைப் பெற்று, புதிய ஆணை பிறப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் 25.11.1999 அன்று ஆளுநருக்கு உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி அன்றைய முதலமைச்சர் கருணாநிதி 19.04.2000-ல் அமைச்சரவையைக் கூட்டி முடிவு எடுக்கிறார். அதுவும் தந்திரோபாயம் மிக்க முடிவு.

'தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நான்கு கைதிகளில் ஒருவரான நளினியின் பெண்குழந்தை அனாதையாகிவிடும் என்பதால், நளினி ஒருவருக்கு மட்டும் கருணைகாட்டி மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைக்கலாம் என்றும், மற்றவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என்றும்' ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவை முடிவெடுத்தது.

தமிழக அரசின் இறையாண்மையைத் தவிர்ப்பதற்கு எடுக்கப்பட்டதொரு முடிவு இது. தமிழக அரசின் இறையாண்மையை நிரூபித்தால் கூட்டணியில் இருக்கும் தன் தலையில் ஒரு குட்டு விழுந்து, ரணம்கட்டி புழுத்துப் போய்விடுமோ என்ற நடுக்கம் அப்போது ஓடிக்கொண்டிருந்தது. சற்றேறத்தாழ அதே காலத்தில் சோனியாகாந்தியின் மகளான பிரியங்கா, தூக்குக் கொட்டடியில் வாடிக்கொண்டிருந்த நளினியைச் சந்தித்துத் திரும்பியிருந்தார்- சோனியாவின் தூதுவராக! கையிலிருந்த வெண்ணெயைக் கொட்டிவிட்டு, நெய்க்கு அலைந்து கொண்டிருக்கும் தெம்மாடியா கருணாநிதி? வெண்ணெயும் கொட்டாமல் நெய்யும் சிந்தாமல் ஈழத்தமிழர் பிரச்சினையில் தமிழர்கள் தலைமேல் சர்க்கஸ் செய்துகொண்டிருந்தார்.

'தமிழகத்தில் நடைபெறும் போட்டி அரசியலின் விளைவு இந்த ஏழுபேரின் விடுதலை. தமிழகத்தில் நடைபெறும் அரசியல் சதுரங்கப் போட்டியால் நாடு பெரிய பல ஆபத்துகளைச் சந்திக்க நேரிடும்' என்று காங்கிரஸ் (தேச) பக்தர்கள் பேசுகிறார்கள்.  எள்ளளவும் அரசியல் தொடர்பற்ற இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சொல்கிறார்.

'இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கைதிகளை விடுதலை செய்யும் முடிவு சட்டப்படி சரியல்ல என்று தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளோம். முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை நிகழ்வு, இந்தியாவின் ஆன்மாமீது தொடுக்கப்பட்ட தாக்குதல். இந்தியாவின் போற்றுதற்குரிய தலைவரையும், அப்பாவி மக்களையும் கொன்றவர்களை விடுவிப்பது நீதிக் கோட்பாட்டுக்கு எதிராக அமையும். இந்த விசயத்தில் எந்த அரசும் கட்சியும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் மென்மையாக நடந்துகொள்வது ஏற்புடையதாகாது'.

ஏழுபேரையும் விடுதலை செய்யும் முதல்வர் ஜெயலலிதாவின் நடவடிக்கையை, பயங்காரவாதத்துக்கு ஆதரவான ஒன்றாக, உலகமய மகாமுனி மன்மோகனும், காங்கிரஸ்காரர்களும் மட்டுமல்ல, இந்திய மனநிலையின் அப்பட்டமான பிரதிநிதிகளான பா.ஜ.க.வும் கருதுகிறது. 'தமிழக அரசு எடுத்த முடிவு அறிவுபூர்வமற்றது.' என்று அறிக்கை விட்டிருக்கிறார் பா.ஜ.க.வின் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் அருண் ஜேட்லி.

இந்த இந்திய மனோபாவம் என்பது என்ன? அது வடஇந்திய மனோபாவம் தான். வட இந்திய ஏகாதிபத்தியத்தின் குணவாகாக உருவெடுத்துள்ள இந்திய மனோபாவம் தமிழர்களுக்கு எதிரான மனக் கட்டமைப்பை எப்போதும் கொண்டுள்ளது என்பதை இந்திய ஊடகங்கள் தொடர்ந்து மெய்ப்பித்து வருகின்றன.

'ராஜீவ்காந்தி கொலை, இந்தியாவின் ஆன்மா மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்' என்கிறார் மன்மோகன். இந்திய ஆன்மா மகாத்மா காந்தியோடு மரணமடைந்து போனது. இந்திய ஆன்மாவைப் புதைகுழிக்கு அனுப்பி 65 ஆண்டுகள் நிறைவுபெறுகிறது. இந்தியாவுக்கு ஆன்மா என்பது இந்திய ஆளும்வர்க்கக் குழுக்களிடமும், கைப்பாவைகளான அதிகார வர்க்கங்களிடமும் பளபளக்கிறது. பாவப்பட்ட மனித உயிர்களது ரத்தம் உண்டு, கொளுத்து மகி(ழ்)ந்து கிடக்கின்றன கொசுக்கள். இந்தக் கொசுக்களின் ஆன்மா மன்மோகன் என்ற உலகமய ஆன்மாவாக உருவெடுத்து ஓடி ஓடி உரையாடுகிறது.

ஓர் உயிரினை அழிப்பதில் இல்லை. ஒரு மனிதனை உருவாக்குவதில் ஆன்மா இருக்கிறது. தூக்குக் கயிறைச் சுமந்து திரிகிறவன் வாழ்நாள் முழுதும், ஒருநிமிட இடைவெளியுமில்லாது தூக்குத் தண்டனையை எதிர்கொண்டிருக்கும் வலியை நினைத்துப் பாருங்கள். உள்ளே அவர்கள் இருக்க, நாளும் நாளும் இறுக்கிடும் தூக்குக் கயிறைச் சுமந்து திரியும் கோடிக்கணக்கானவர்கள் வெளியே இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் நினைத்து பார்க்கும் ஒரு கணத்தில் ஆன்மா உயிர்க்கிறது.

மனிதனை உருவாக்குவதான் முக்கியமே தவிர 'சடா'ரென அழிப்பது அல்ல. அல்லது அதை சிறுகச் சிறுகச் சிதைக்கும் வாழ்நாள் தண்டனையாக்குவதும் அல்ல. 'மரண தண்டனை இயக்கத்தைக் கட்டி மக்களின் விழிப்பைத் தொட்டுத் துலக்கலாமா என்று அற்புதம் அம்மாக்கள் இந்தியாவெங்கும் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அற்புதம் அம்மாளின் நெஞ்சுக் கூட்டுக்குள் பொத்தி வைத்துக் காப்பது ஒரு பேரறிவாளன் மட்டுமல்ல, இனி எந்தப் பேரறிவாளனும், சாந்தனும், முருகனும் மரணக்கயிற்றில் ஆடக்கூடாது என்கிற குறிக்கோள் தான். அதுவே அவரது ஆன்மா. தேசபக்தி என்னும் பெயரில் தூக்குக் கயிறு உயர்த்தப்படுகிற இடங்களிலெல்லாம், உயர்த்த நினைக்கிற மனங்களுக்கு எதிராகவெல்லாம் அற்புதத் தாய்கள் எழுந்து வருவார்கள்.

மரணதண்டனை நீக்கம் - என்னும் ஒற்றைச் சொல்லை உச்சரிக்கிறபோது மட்டுமே - இந்திய ஆன்மா லேசாய் கண்திறக்கிறது என்று பொருள்.

நன்றி: பொங்குதமிழ் - 4 மார்ச் 2014

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்