மணிப்பூர் மலையரசி

(மணிப்பூர் மாநில அரசின் கலை இலக்கிய அமைப்பு [Manipur State Kala Akadami] நான்காம் இலக்கிய விழா [4th Festivel Of Literature] 2015 ஜுன் 6, 7 ஆகிய இரு நாட்களில் தலைநகர் இம்பாலாவில் நடந்தது. அந்நிகழ்வில் பங்கேற்ற பா.செயப்பிரகாசத்தின் பயண கட்டுரை இங்கே)
மணிப்பூர் மாநில அரசின் கலை இலக்கிய அமைப்பு (Manipur State Kala Akadami)  நான்காம் இலக்கியவிழா (4th Festivel Of Literature)  2015, ஜுன் 6, 7ஆகிய இரு நாட்களில் தலைநகர் இம்பாலாவில் ஏற்பாடு செய்திருந்தது.

“எங்கள் பூமியைப் பற்றியும் எம் மக்களைப் பற்றியும் நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?”

தேவதாஸ் மைரெம்பாம் (Devadas Mairembam)  என்ற மணிப்புரி கவிஞர் கேட்டார்.

ஏழு அரசிகளில் ஒரு அரசி அவள். சிறிய குன்றுகளும் பெரும் மலைகளும் அணிவகுத்து நிற்கின்ற மணிப்பூர்  மலையரசி. பாலியவயதுப்  பிள்ளைகள் பருவம் தொட்டதும் நிறமும் உருவக் கட்டும் மாறுத்லுக்குள்ளாவது போல், முதலில் பச்சை வண்ணம்,   பிறகு நீலம், போகப் போக   அடர் நீலவண்ணம் என அடுக்கடுக்காய் நிறம் கோர்த்துக்கொண்டது மலை. அழகுக் கழுத்துக்கு முத்து மாலை போல் மலைகளின்  நெருக்குதலில் நீர்த்தடமாய் ஆறுகள் ஆரமிட்டன.

மணிப்புரி மாநிலத் தலைநகரான இம்பால் மேல் விமானம் தாழப் பறந்த போது, கடலளவு   பெரிய ஏரிகளோடு கையளவு நீர்நிலைகளும் கீழேகிடந்தன.   காய் கறித் தோட்டங்களும்   கீரைகளும், கனிவகைகளும்,தோப்புகளும்   மேலே பறக்கிறவர்களின் பார்வையை தம்முகத்துக்கு இழுத்துக் கொண்டன.

விமானம் இறங்க வட்டமிட்ட வேளையில் ஒவ்வொரு கட்டிட உச்சியும்   கண்ணாடியில் ஒளியடிப்பது போல் பளிச்சிட்டது. கட்டிடங்களுக்கு மேலிருந்து யார் பட்டாசு கொளுத்தினார்கள் என்பது போல் அருகில் அமர்ந்திருந்த பயணியைக் கேட்டேன்.

 “எல்லா வீடுகள் மேலும்   தகரக் கூரை (Tin Sheets) வேய்வது இங்கத்திய பழக்கம்” என்று பதில் தந்தார். அடுக்குமாடிகள் எவ்வளவு உயரத்தில் போய் முடிந்தாலும் கொண்டை உச்சியில் சாய்ப்பு இறக்கி  ஓடு வேய்ந்து முடிப்பது கோவா கட்டிடடக் கலை. பாரம்பரியக் கட்டிடக்கலையைக் காப்பதில் கோவாவுக்கு கரிசனை அதிகம். இங்கும் பாரம்பரிய கலையைத் தக்கவைக்கும் முயற்சியாய் தகரம் (Tin Sheets) அடிக்கிறார்களோ எனக் கேட்டேன். என் கேள்வி அவருக்கு இதழின் கடைக்கோடியில் சிறுபுன்னகை சுழித்தது, “கட்டிடக்கலையை காப்பாற்ற அல்ல, இயற்கையின் தாக்கத்திலிருந்து காத்துக் கொள்ள” என்றார்.

மலைமாநிலமாகத் திகழ்ந்தாலும் மணிப்பூரில் பனிப்பொழிவு இல்லை. மழைப்பொழிவு உண்டு. எக்கச் சக்க மழையை இறக்கி வழித்து விட ஒவ்வொரு வீட்டின் உச்சியிலும் கூம்பு வடிவத் தகரக் கூரை.

தேவதாஸ் மெய்ரெம்பா கேட்ட கேள்வி அப்படியே இருந்தது. நான் தெரிவித்தேன், “இங்கே கட்டிட உச்சிகள் மட்டுமே வித்தியாசமாக இல்லை. ஆண்களும் பெண்களும் வித்தியாசமாய் அழகானவர்கள்” என்றேன். எங்கும் நிறைந்திருந்த மஞ்சள் பீர்க்கம் பூக்கள் போலும்  பெண்கள் எனக்குள் இறங்கியிருந்தார்கள். இடுப்பில் ஒரு முண்டு. கைலி மூட்டுவது போல முக்கால் வாசி மூட்டி, மீதிக் கால்ப்பாகத்தை இறுக்கி முடித்து கச்சை   கட்டியிருந்தார்கள். மேலில் ரவிக்கை, அதன் மேல் துப்பட்டா. மூன்று துண்டுத் துணிகளில் அவர்கள் உடை.  புடவையும்   சுடிதாரும்  அவர்களை ஆக்கிரமிக்கவில்லை. ஜீன்ஸ் பேண்டில் ஓரிருவர் காணக்கிடைத்தனர்.   பாரம்பரிய ஆடை வடிவத்தில் பள்ளிச் சீருடையும் அணிந்திருந்தனர். பாரம்பரியத்தை   வேறு அந்நியப் பண்பாடு அப்புறப் படுத்துவதில்  அவர்களுக்கு ஒவ்வாமை.


மணிப்பூர் மாநில அரசின் கலை இலக்கிய அமைப்பு (Manipur State Kala Akadami) நான்காம் இலக்கியவிழாவில் (4th Festivel Of Literature)  முதல் நாள்  சிறுகதை அரங்கம், இரண்டாம் நாள் கவிதை அரங்கம். சிறுகதை அரங்குக்கு தலைமை ஏற்குமாறு என்னை அழைத்திருந்தார்கள்.   “கிளியின் சுதந்திரம்” (freedom of Parrots)  என்று எனது சிறுகதையை ஆங்கிலத்தில் வாசித்தேன். ஒடிசாவிலிருந்து சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞர் பகவான் ஜெயசிங் தலைமையில் இரண்டாம் நாள் கவியரங்க நிகழ்வு. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கொண்டு போன இரு கவிதைகளை வாசித்தேன். எங்களிருவர் தவிர, பங்கேற்ற மற்றெல்லோரும் மணிப்புரிமொழி  இலக்கியவாதிகள். அவர்கள் தங்கள் தாய்மொழியில் வாசித்தார்கள். அவர்கள் வாசித்த சிறுகதைகள், கவிதைகள் முன்கூட்டிப் பெறப்பட்டு ஆங்கில ஆக்கத்தில் மலரில் இடம்பெற்றிருந்தன. சிறுகதைகளின் வரிசை என்னிலிருந்தும், கவிதைகளின் ஆரம்பம் பேராசிரியரான ஒடிசாக் கவிஞர் பகவான் ஜெயசிங்கிடமிருந்தும் தொடங்கியிருந்தது மலரில் காணப்பெற்ற அதிசயம் - விருந்தினருக்கு முதலிடம் தந்திருந்தனர். மணிப்பூர் மக்களின் விருந்தோம்பல் பண்பினை அது உயர்த்தித் தூக்கிப்பிடித்தது.

இம்பாலிலிருந்து 30 கி.மீ தொலைவில் ’மொராங்’ என்ற சிறுநகரில் நடந்தது இரண்டாம் நாள்  கவிஅமர்வு; ‘இந்திய தேசிய ராணுவ’ மண்டபம் (I.N.A Haal)தான் கவியரங்கம் நடைபெற்ற அரங்கு. இந்திய விடுதலையை அடைய நேதாஜி, பர்மாவைத் தலைமையிடமாகக் கொண்டு இந்திய தேசிய ராணுவத்தைத் கட்டியமைத்தார். இந்தியாவில் மணிப்பூரின் ‘மொராங்’ என்ற நகரில்  முதன் முதலில் இந்திய தேசிய விடுதலைப் படையின் கொடியேற்றப்பட்டது. அவ்விடத்தில் இந்திய தேசிய ராணுவ மண்டபத்தை (INA Hall) நிறுவி, முற்றத்தில் நேதாஜி சிலையையும் நிறுவியுள்ளனர். முதல் விடுதலைக் கொடி ஏற்றப்பட்ட இடத்தில், அந்த வாசகம் பொறிக்கப்பட்ட கல்லின் அருகே, புகைப்படம் எடுத்துக் கொண்டதில் எனக்குப் பெருமிதம்.
          
‘மொராங்’ பகுதியில் ’லேக்டாக்’ என்னும் மிகப்பெரிய ஏரி. ஏரியின் முன்னுள்ள சிறுகுன்றில் ஏறினால், கழுத்தில் புரளும் வெள்ளைமுத்துச் சரமாக  பிரமாண்ட நீர்நிலை தெரியும்.   ஏறுகிறபோது வலப் புறத்தில் “அசாம் ரைபிள்ஸ்” என்ற சிறப்பு ஆயுதப் படை முகாம் இருந்ததைக் கண்டேன்; “அசாம் ரைபிள்ஸ்”  போன்ற சிறப்பு இராணுவ முகாம்கள் நிரத்தரமாக மணிப்பூர் மண்ணில் இருக்கின்றன.


பொர்கன்யா, அகோம் யாண்டிபாலா தேவி, கவிஞர் தேவதாஸ் மரின்பாம் ஆகியோர் இரண்டாம்நாள் அரங்கில் கவிதைகளால் விளாசினர்.

சாகித்ய அகாதமியின் ’இளம்புரஸ்கார் விருது’ பெற்றிருக்கிறார் ’அகோம் யாண்டிபாலா’. அடக்குமுறையால், அடாவடித்தனங்களால் அங்குள்ள மக்கள் போல் கலை, இலக்கியவாதிகளும்  நொந்து நொம்பலப்பட்டுப் போயிருக்கிறார்கள் என்ற சேதி அவர்களின் படைப்புகள் வழியாகவும் பேச்சிலும் வேளிப்பட்டது. போராடிப் போராடி அலுத்துப் போயுள்ளார்கள். அந்த அலுப்பும் அவர்கள் கவிதைகளில் வேர்கொண்டு மேலே வந்தது.

மணிப்புரி கவிதைகள்
ஒற்றைப்பச்சை இலைக்காய்,
ஒரு வெண்புறா
சுற்றிச் சுற்றி அலைப்புண்டு
வலம் வருகிறது உலகை.
மேலேறி, விண்சாடி
பூமிப் பரப்பின்மேல்
பார்வை பதித்து,
மறுபடி வருகிறது வருகிறது
மண்ணுக்கு.
ஒளிக் கதிர் பட்டுத்தெறித்து
ஒற்றைப் பசிய துளிர்
வெளித் தெரியாது மறைத்த
நிலவும், விண்மீன்களும்
கையசைத்துக் கைகொட்டி
நகைக்கின்றன.

காரணம் சொல்
ஒன்றோ, பலவோ,
இதுவோ அதுவோ
என் சாவுக்கு ஒரு
காரணம் தா.
இல்லையெனில்
இவ்வுலகிலோ,
சொர்க்கத்திலோ
எனக்கு இடம் கிடையாது.

எத்தனை காலம்
நானிவ்வாறு ஓடிக்கொண்டிருப்பது
எனது குற்றம் எதுவென அறியாது?
மரணத்தை முத்தமிடும் நாளில்
என் அறிவிலாப் பயணத்துக்காய்
உறுதியாய் வெட்கப்படுவேன்
கொலையாளியே,
குற்றப் பத்திரிகையேனும் கொடு.
அதற்காய் நன்றி சொல்வேன்.
அது எனது அடையாள அட்டை அதனைக் கையளித்து
என்னை சொர்க்கத்துக்கு அனுப்பு வைப்பாயாக.
எனது சாவுக்கு,
ஒரு காரணமேனும் காட்டு.

வாக்குத் தவறாமை
மதுக்குடுவையில்
வாய்பதித்து
சந்திரமுகியோடு தேவதாஸ்
அருந்துகிறான்.
களிப்பின் உச்சிகளில்
நீ நடனமிடுகிறாய்
நரையீரல் வெந்து
மீண்டும் நிரந்தர நோயாளியாகிறாய்
ஆனாலும்,
நடுங்கும் கரங்களால்
மதுக்குடுவையின் மூடியை
மறுபடியும் திறக்கிறாய்.

புத்தாண்டு
தவிரவும்,
ஒவ்வொரு குழந்தையின்
களிபேரு வகையிலும்
ஒரு துப்பாக்கி ரவையை
செலுத்திக் கொண்டே
கையில் வெடிகுண்டுகளுடன்
அவர்கள்,
புத்தாண்டை வரவேற்கிறார்கள்
தூலமாய் உடல்கொண்டு உலவும் விலங்குகளை அடையாளம் கண்டு கொள்கிறோம். முகம் சுளிக்கிறோம். வெறுக்கிறோம். விலங்கின் அசைவு கண்ணெதிரில் தெரிவதால் விலக்க ஏதுவாகிறது. ஆனால் மனிதக் கொசுக்கள்?

கொசு நமக்குத் தெரியப் பறக்கிறது: நாம் அறியாமல் விசக்கொடுக்கு பதிக்கும்; ரத்தம் குடிக்கும்; நிம்மதிதொலைத்து புரளவைக்கும்.

ஆனால் மணிப்பூர் கவிஞர் தேவதாஸ் மைன்பாம் கொசுவின் உரையாடல் வழி வேறொரு பொருளை உணர்த்துகிறார்.
ரத்த தாகத்துடன் கொசு
ரீங்கரித்தவாறு பறக்கிறது
விரட்டுகிறேன்
மீண்டும் மீண்டும்
பறந்து தாக்குகிறது
சில நேரத்தில்
கண் மறைவான பிரதேசத்தில்
சில நேரத்தில்
தீண்ட இயலாப் பாகத்தில்
நீயொரு ஏமாற்று சனநாயகவாதி
நீயொரு ஏகாதிபத்திய சனநாயகவாதி
நீயே காலனிய சனநாயகவாதி
‘கார்ப்பரேட்’ சனநாயகவாதி
கொசுவுக்குப்
பட்டங்கள் சூட்டினேன்
கொசு பேசியது
நானில்லை, அது நானில்லை
திடமாக மறுத்தது
சவால்விட்டுப் பேசியது.
அடுக்கங்கள்
வணிகவளாகங்கள், சொத்துக்கள் என
அறியப் படாத பகுதிகளைக்
கொண்டிருக்கிற அங்கெல்லாம்
அமைச்சர்கள், அரசியல்வாதிகள்
மறைவிடங்களை
என்னால் தொட இயலாது
கண்டுபிடிக்கவும் முடியாது
ரத்தம் உறிஞ்சுதலே
கொள்கையாய்க் கொண்ட என்னால்
கடிக்கவும் முடியாது.
சபாஷ் போடத் தோன்றியது கவிஞனின் ஆக்ரோசத்துக்கு: கவிதை வாசிப்பு முடிந்து அந்த மணிப்புரிக் கவிஞன் தேவதாஸ் மைரெம்பாமை கைகுலுக்கினேன்.

(பொர்கன்யா, (Borkanya)அகோம் யாண்டிபாலா தேவி, கவிஞர் தேவதாஸ் மரின்பாம் ஆகியோர் இரண்டாம் நாள் அரங்கில் கவிதைகளால் விளாசினர். சாகித்ய அகாதமியின் ’யுவபுரஸ்கார் விருது’ பெற்றிருக்கிறார் அகோம் யாண்டிபாலா. அடக்குமுறையால், அடாவடித்தனங்களால் அங்குள்ள மக்கள் போல் கலை, இலக்கியவாதிகளும்  நொந்து நொம்பலப்பட்டுப் நிற்கிறார்கள். போராடிப் போராடி அலுத்துப் போயுள்ளார்கள். இந்த அலுப்பு ’அகோம் யாண்டிபாலா’ கவிதைகளில் வேர்கொண்டு மேலே வருகிறது.)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்