தமிழறிஞர் மா.லெ.தங்கப்பா: உண்மை என்னும் மெழுகு பூசியவன்



கலைஞர்கள், அறிவுலகத் தலைமைகள், இலக்கியவாதியர், எழுத்தாளுமைகள் தாம் வாழும் காலத்தில் கனம் பண்ணுதலுக்கும் கவுரவப்படுத்துதலுக்கும் உரியவர்கள். தகவுடையவர்களைப் புறந்தள்ளுதல் என்னும் நோய் நல்லவைகளைக் கொல்லும், அல்லவைகளை வாழ வைக்கும்.

செக்கோஸ்லோவிகா என்ற நாட்டுக்குச் செல்கிறீர்கள். அந்நாட்டின் தலைநகரான 'பிராக்' விமானநிலையத்தில் இறங்குகிறீர்கள். விமான நிலையத்தின் எதிரில் மின்னும் ஒரு அறிவிப்புப் பலகை: இசைக்கலைஞன் 'மொசாட்', எழுத்துலகமேதை 'காப்கா' பிறந்த பூமி உங்களை வரவேற்கிறது.

புதுச்சேரி விமான நிலையம், தொடர் வண்டி நிலையம், பேருந்து நிலையம் – எங்கும் நீங்கள் போய் இறங்கிக் கொள்ளுங்கள். பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி, 'கெடல் எங்கே தமிழின் நலம், அங்கெலாம் கிளர்ச்சி செய்க' – என்னும் போர்க்குரலின் சொந்தக்காரன் பாரதிதாசன் பிறந்த பூமி உங்களை மகிழ்வுடன் வரவேற்கிறது என்றொரு அறிவிப்புப் பலகையை நீங்கள் காண இயலாது. கற்பனையில் கண்டுகொள்ளலாம்.


சான்றோரை மதித்தல் பிறநாடுகள் புதிதாய்க் கண்டு பிடித்துச் சொன்னதல்ல. ஈராயிரம் ஆண்டுகள் முன் நம் முப்பாட்டன் வலியுறுத்திச் சென்றிருக்கிறான். ஒரு நகரம், ஒரு நாடு, ஒரு பிரதேசம் எதனால் அடையாளம் காணப்பட வேண்டும்? இந்தக் கவிஞன், இந்த அறிஞன், இந்தச் சான்றோன் இங்கு வாழ்ந்தான் என்று சுட்டிக் காட்டப்படுவது மாத்திரமே மண்ணுக்கு அடையாளம்.
நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
மிசையாக ஒன்றோ வளியாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே
ஆடவர் எனில் சான்றோர். சான்றோர்கள் பிறந்து வாழ்ந்தனர் என்பது மண்ணின் பெருமிதம்! புதுவை மண் பாரதி என்ற சான்றோனால் அடையாளம் கொண்டது.
கெடல் எங்கே தமிழின் நலம்,
அங்கெலாம் கிளர்ச்சி செய்க
என்னும் பாரதிதாசனால் அடையாளம் பெற்றது. கவிஞர் தமிழ் ஒளியால் பெருமிதம் அடைந்தது. தமிழறிஞர், பண்பாளர், மாமனிதர் தங்கப்பா எனும் சான்றோனால் புதுவை அறியப்படுவது தற்காலம்.

ம.இலெனின். தங்கப்பா ஒரு பேராசிரியர், மொழியாக்கப் படைப்பாளி, கட்டுரையாளர், கவிஞர், பன்மொழி அறிஞர், அனைத்துக்கும் மேலாய் தமிழ்த் தேசியப் போராளி. தன் தந்தையாரிடமிருந்து தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் தெளிந்து கொண்டவர். இன்றுவரை அந்த வேர் விட்டுப் போகாது, இன்னுமின்னும் ஆழமாய் ஆணிவேர் போட்டு நின்றார். இறந்த பின் எந்தவித சடங்குகளுமின்றி அவர் உடல் ஜிப்மர் மருத்துவமனைக்கு மாணவர் கற்கைக்காய் உடற்கூறியல் பிரிவுக்கு (Anotomy) வழங்கப்பட்டமை அவர் கடைப்பிடித்து வந்த உன்னதமான பகுத்தறிவின் வழியினை மெய்ப்பித்தது.

தங்கப்பா ஐயாவும் நானும் சந்தித்துக் கொண்டது போராட்டக் களங்களில். எதிரெதிர் களங்கள் அல்ல. இணைந்து கைகோர்த்துச் சென்ற களங்கள்.

பிரெஞ்சுக் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற அல்ஜீரியா போராடியது. அல்ஜீரிய இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி விடுதலைப் போராட்டத்தில் நின்றனர். அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தில் சேர முன்வருமாறு பிரான்சு அரசு இளைஞர்களை அழைத்தது. நோபல் விருதை முதன்முதல் நிராகரித்த எழுத்துலகப் போராளி ழீன்பால் சாத்தரே தனது பிரான்சு நாட்டு இளைஞர்களை - அல்ஜீரிய விடுதலைக்கு ஆதரவாக இராணுவத்தை எதிர்த்துப் போராடுமாறு தூண்டினார். 'சாத்தரே பிரான்சுக்கு எதிராக இளைஞர்களைத் தூண்டிவிடுகிறார், சாத்தரேயைக் கைது செய்வீர்களா?' என்று செய்தியாளர்கள் பிரான்சு அதிபரைக் கேட்டார்கள். பிரான்சின் அதிபர் பதவியில் இருந்தவர் இராணுவத் தளபதி துக்காலே. துக்காலே சொன்னார் 'செய்யமாட்டேன். சாத்தரைக் கைது செய்வது பிரான்சைக் கைது செய்வதாகும்'.

துக்காலேக்குள் இயங்கிக் கொண்டிருந்தது இராணுவ மனம். இராணுவ மனத்தினூடாக எழுத்தாளர்களைக் கவுரவிக்கும் உளவியல் கூடுகட்டியிருந்தது.  அது குஞ்சும் பொரித்தது. எழுத்தாளனையும் தேசத்தையும் சமநிலையில் கருதிய இந்தப் பார்வை, இங்குள்ள அரசியல் தலைமைகள் பெற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை.

ஆனால் தமிழறிந்த அறிஞரை தமிழ்நாடு அரசு கைது செய்த துன்பியல் மேற்குக்கடற்கரை நாகப்பட்டினத்தில் 2007-ல் அரங்கேறியது.

பள்ளியில் பணியாற்றிய போது தென்மொழியில் பாடல்களும் கட்டுரைகளும் எழுதினார். தென்மொழியில் பாக்கள் புனைந்தகாலம் முதற்கொண்டே ஆங்கிலத்திலும் பாடல்கள் எழுதினார். தங்கப்பா எழுதிய கவிதை நூல்கள் 13, குழந்தைகளுக்கான பாடல் நூல்கள் 3, கட்டுரை நூல்கள் 8, மொழிபெயர்ப்பு நூல்கள் 3, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நூல்கள் 4. இவர் எழுதிய 'சோலைக் கொல்லைப் பொம்மை' என்ற சிறுவர் இலக்கிய நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது. இத்தகு எழுத்தாளுமையை தங்களின் சுயநல அரசியலின் பொருட்டு கைது செய்தார்கள் அப்போதைய தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்.

ஈழவிடுதலைப் போர் உச்சம் நோக்கிப் போய்க் கொண்டிருந்த ஆண்டுகள். வாழ்வா சாவா என்ற புள்ளியில் போராளிகளும், சாகடிப்பே இலட்சியம், எத்தனை கொலைகளானாலும் எமக்கில்லை தயக்கம் என்னும் புள்ளியில் இலங்கை பாசிசமும் களத்தில் நிற்கின்றனர். இலங்கை இராணுவக் குண்டு வீச்சால் காயமுற்ற, உயிரிழந்த மக்களின் சேதி நாடோறும் வந்துகொண்டிருக்க, உயிர்காக்கும் மருந்துகள், நாட்படினும் கெடா உணவுப் பொருட்களைச் சேகரித்து ஈழம் அனுப்பிவைக்க தமிழர் தேசிய முன்னணி பழ.நெடுமாறன் முயன்றார். 2007-ல் அனைத்தும் சேகரமாகிவிட்டன. கலைஞர் தலைமையிலான அரசு, காங்கிரஸ் நடுவணரசின் ரத்த அணுக்களில் அசையும் சேதி அறிந்து முடிவுகள் மேற்கொண்ட காலமது. பொருட்களை அனுப்ப அனுமதி மறுக்கப்பட்டது. நாமே படகுகளில் எடுத்துச் செல்வோமென பழ.நெடுமாறன் முடிவு செய்தார். ஈழம் செல்ல ஒரு கடற்பாதை நாகப்பட்டினம். மற்றொரு கடற்பாதை இராமேசுவரம் மண்டபம். இருமுனைகளும் தேர்வு செய்யப்பட்டன. நாகப்பட்டினம் கடலில் படகுகளில் ஏற எத்தனித்த வேளையில் பழ.நெடுமாறன் தலைமையிலான அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழறிஞர் மா.லெ.தங்கப்பா, மயிலாடுதுறைப் பேராசிரியர் ந.செயராமன் (தற்போது மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்புத் தலைவர்), புதுச்சேரி – தமிழர் தேசிய முன்னணிப் பொறுப்பாளர் நா.மு.தமிழ்மணி, நான் எனக் கைது ஆகி, ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். சிறைப்பட்ட 250 பேரை 15 நாள் காவலில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்க முடிவு எடுத்து எங்களிடம் கையெழுத்தும் பெற்றது காவல்துறை. அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது. சூரியக்கதிர் சாய்ந்துமெல்ல இருள் சரியும்   வேளையில் கறுத்த பானைகள் போல் வானத்தில் மேகங்கள் திரண்டன.

சுனாமி என்னும் இயற்கைப் பேரிடர் கடலில் மையம் கொண்டு உருவாகி   வருவதாய் சேதி கிடைத்தது. 2001-இன் சுனாமிப் பேரழிவுகளை இந்த நாகப்பட்டினம் போலீஸ் கண்டிருந்தது. சுனாமி ஓய்ந்த பதினைந்து நாட்கள்   பின்னும் நாகப்பட்டினம் கடற்கரையோரமாய் பிணங்கள் நீந்திக் கொண்டிருந்தன. குடும்பம், மனைவி, வீடு, மக்கள், தாய், தந்தை என்று காவல்துறையினருக்கும் இருந்தார்கள் தானே! சிறைப்பட்டவர்களை விடுதலை செய்தனர். கலைஞர் அரசின் சனநாயக உணர்வினாலோ, காவல் துறையின் கருணையாலோ அல்ல நாங்கள் விடுதலையானது. சுனாமி எங்களை விடுதலை செய்தது.

மொழி, இன, மண்காப்புப் போராட்டங்களுக்குத் தமிழகத்தில் பஞ்சமில்லை என்ற நிலையை, நடுவணரசு தொடர்ந்து தோற்றுவித்துக் கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் பற்றி உதட்டு உச்சரிப்பு மட்டுமே கொண்டு மாறி மாறி ஆட்சிக்கு வந்த கழக அரசுகள் தாளம்போடும் போக்கைக் கைக்கொண்டன. 2010-இல் அ.தி.மு.க ஆட்சி. நடுவணரசு மாவட்டத்திற்கு ஒன்று என மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கத் திட்டமிட்டது. அ.தி.மு.க அரச ஒப்புதல் அளித்தது. ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட நடுவணரசுப் பள்ளிகளில் (கேந்திரிய வித்தியாலயா) இனி இந்தி பயிற்று மொழியாக அமையும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம். மாவட்டந்தோறும் உண்டாக்கப்படும் மாதிரிப் பள்ளிகளில் இந்தியே பயிற்று மொழியாக ஆக்கப்படும் என்பது அறிந்திருந்தும், கல்வி அமைச்சர் பங்கேற்பதாக இருந்தார். மாதிரிப் பள்ளிகள் வருகையை எதிர்த்து பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் மணி தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தங்கப்பா ஐயாவும் நானும் புதுச்சேரியிலிருந்து பேருந்தில் பயணமானோம். ஆர்ப்பாட்டத்தில்,  தங்கப்பா தொடக்க உரையாற்றினார். கடல் போராட்டத்தைச் சுனாமி வந்து தடை செய்தது போல, களப்போரை இடையில் மழை வந்து தடைசெய்தது.   விடாது மழையடித்துக் கொண்டிருந்தது.

2010-இல் தி.மு.க ஆட்சி. 2011-இல் ஏப்ரலில் சட்டமன்றத் தேர்தல். முதல்வர் கருணாநிதி உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தும் அவசரத்தில் இருந்தார். உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்த எத்தனித்து, அதற்குரிய முறைமையினைப் புறந்தள்ளினார். உலகத் தமிழ் மாநாட்டை நடத்தும் பொறுப்பிலிருந்த நிறுவனத்தலைவர் நொபாரு கரோஷிமா 'மாநாட்டை நடத்துவதற்கான கால அவகாசம் போதாது' என மறுப்புத் தெரிவித்தார். தயாரிப்புப் பணிகளுக்கு ஓராண்டாவது வேண்டும். 2011-இல் நடத்தலாம் என அவர் தெரிவித்தபோது, 'அப்போது தேர்தல் வந்துவிடும்' எனப் பேசினார் கலைஞர். தமிழக முதல்வரின் தேர்தல் நோக்கிய உத்திக்குப் பணிந்துவிடாமல் நொபாரு கரோஷிமா, உலகத் தமிழாராய்ச்சி அமைப்பின் தற்சார்பைப் பேணும் வகையில் ஒப்புதல் அளிக்கவில்லை. உலகத் தமிழ் மாநாடு என்பதற்குப் பதிலாக 'முதலாவது உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு' கோவையில் நடைபெறும் என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

2009-இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் ரத்த ஈரம் இன்னும் காயவில்லை. நிண வாடை அழியவில்லை. ஈழத்தமிழர் இனவழிப்புப் பிரச்சனையில், உலக அளவில் சரிந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் உயர்த்த இப்படி ஓர் அரசியல் மாநாடு எனக் கருதினர் சிந்திப்பு கொண்ட பெருமக்கள்.

உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகத் தலைவர் நொபாரு கரோஷிமா என்னும் பேரறிஞராலும் தடுத்துநிறுத்த இயலாத செயலை எங்களால் முடிக்க முடியும் என நாங்கள் எண்ணவில்லை. எதிர்ப் பரப்புரை செய்ய முடிவெடுத்து சென்னையில் 'தமிழ்ப் படைப்பாளிகள், உணர்வாளர்கள் கூட்டமைப்பினை' உருவாக்கினோம். பின்னால், நொபாரு கரோஷிமா தன் தற்சார்பைக் காக்கும் விதமாக, அப்பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்.

பேரா.சரசுவதி, கவிஞர் இன்குலாப், சூரியதீபன், இராசேந்திரசோழன்,  கவிபாஸ்கர், பொறியாளர் பொன்.ஏழுமலை ஆகியோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினர். சூரியதீபன் ஒருங்கிணைப்பாளர். 27.09.2009 அன்று ஒருங்கிணைப்புக் குழுவினரையும் உள்ளடக்கிய செயல்பாட்டாளர்களின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 01.01.2010 அன்று 'தோழமைக்குரிய இளையோரே, இளம் ஆய்வாளர்களே' - என்னும் துண்டறிக்கை வெளியிடப்பட்டது.

'எலும்புக் கூடுகள் மீதும் நடைப்பிணங்கள் மீதும் நடக்க இருக்கிறது முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு! முதலாவது செம்மொழித் தமிழ் மாநாட்டைப் புறக்கணிப்போம். முதலாவது செம்மொழித் தமிழ் மாநாட்டைப் பார்க்காதீர்! கேட்காதீர்! பேசாதீர்!' என 01.02.2010-இல் ஒரு துண்டுப் பிரசுரம் ஆயிரம் படிகள் அச்சிட்டு விநியோகம் செய்தோம்.

'தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் - பழி எனின் உலகுடன் பெறினும்'

என்னும் ஒரு அறிக்கை - கவிஞர் இன்குலாபும் நானும் இணைந்து எழுதி - அச்சிடப்பெற்றது (10.11.2009). அறிக்கையை உலகம் முழுதுமுள்ள தமிழறிஞர்கள், அன்பர்கள் அனைவருக்கும் அனுப்ப மின்னஞ்சல்கள் சேகரிக்கப்பட்டன. தமிழகம் தவிர உலககெங்குமுள்ள பிறமொழியாளர்களுக்கு ஆங்கில மொழியாக்கம் தேவை. ஆங்கில மொழியாக்கத்துக்கு புதுச்சேரி தமிழையா தங்கப்பாவை அணுகினேன். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இரு மொழிப்புலமையாளர். கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ் இலக்கியம் கற்பித்த ஒருதமிழ்த் தேசியப் பாவலர். இருமொழிப் புலமைகொண்ட மேதையை அன்றி வேறெவரை நான் அணுகியிருக்க முடியும்!

சங்க இலக்கிய அகப்பாடல்களை Love Stands Alone என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்த பெருந்திறனை நாங்கள் உணர்ந்திருந்தோம். மேலும் Red Lilies & Frightened birds,  Bharathidasan Songs,  Songs of Grace (Vallalar), Prince Who Become a Monk எனப் பல்வேறு மொழியாக்கங்களைச் செய்துள்ளார்.

A4 வடிவ நான்கு பக்க துண்டுப் பிரசுரத்தைத் தங்கப்பாவிடம் தந்து மொழியாக்கம் செய்யக் கேட்டபோது அவரிடம் எப்போதும் ஒரு புன்னகை உதடுகளில் ஒட்டிக்கொண்டிருக்குமே அது கண்டேன். நன்மை பயக்கும் பணி எனில் மறுப்பேதுமின்றி ஏற்றுக்கொள்வது அவர் வழமை. 15.11.2009-இல் அவரிடம் கையளிக்கப் பெற்று ஆறு பக்கங்களில் ஆங்கில மொழியாக்கம் செய்து சில நாட்களுக்குள் எங்களுக்கு அளித்தார். முதலாவது செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கான எதிர்ப்புணர்வை உலகெங்கும் கொண்டு செல்ல ஐயா தங்கப்பாவின் மொழியாக்கம் வழிசெய்தது.

“An Appeal to all Tamils,  including scholars,  Researchers and creative writers...”,  “The whole world will not be accepted as a present if it brings Dishonour” - தமிழ் மூலத்தின் தகவு சிதையாமல், கவித்துவம் இழைய அவர் வடித்த ஆங்கில மொழியாக்கம் இல்லையெனில் இது எங்களுக்குச் சாத்தியப் பட்டிருக்காது.

ஆங்கில ஆக்கத்தை நொபாரு கரோஷிமா, ஜார்ஜ் ஹார்ட் (அமெரிக்கா), குரோ (பிரான்ஸ்), எனப் பல நாடுகளிலுமுள்ள பேரறிஞர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பிவைத்தோம்.

2011-இல் நான் புதுவைக்குக் குடியேறியிருந்தேன். தங்கப்பா ஐயா வசித்ததற்கு முந்திய தெருவில் எங்கள் வீடு. அடிக்கடி சந்திக்கவும் உரையாடவும் அருகாமை கிடைத்திருந்தது. ஈழத்தின் விடுதலைப் போரின் பின்னான நிகழ்வுகளை எமக்குள் பறிமாறிக் கொள்வோம். ஈழ விடுதலைப் போரை தமிழீழ மக்களும் போராளிகளும் முன்னெடுத்துக் கொண்டிருந்த வேளையில், கவிதைகள், கட்டுரைகள், உரைகள் என உணர்வுள்ள ஒரு போராளியாய் ஆற்றிய பங்களிப்புகள் கனம் கொண்டது.

இயற்கையோடு இயைந்த வாழ்வு உயரிய வாழ்வு என்னும் கருத்தில் ஊன்றிக் கடைப்பிடித்தவர். நோயுற்று மருத்துவமனையிலிருந்து மீண்டு, அதே உடல்நலக் குறைவுடன் வீட்டில் படுத்திருந்தார். மூத்த மகன் செங்கதிர், விண்மீன் பாண்டியன், மகள் மின்னல் ஆகியோர் ஒவ்வொரு மணித்துளியையும் தப்பவிடாது அவரைக் கவனித்து வந்தனர். அவர் கொள்கைப்படி இயற்கை மருத்துவ மருந்தும் உணவுமே அவருக்கு ஊட்டப்பட்டது.

வாழ்க்கையை முழுமையாய்க் காதலித்து வந்தவருக்கு, வாழ்க்கைத் துணையும் காதலால் அமைந்தார். விசாலாட்சி என்றழைக்கப் பெற்ற தடங்கண்ணி அம்மையாரை காதலித்து மணந்து கொண்டார். துணைவியார் தடங்கண்ணி அம்மையார் பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றியவர். பள்ளி நிர்வாகத்தில் தேர்ந்தவர். நல்லாசிரியர் விருதும் தேடிவந்தது. பணி ஓய்விற்குப்பின் புதுவை தாய்த்தமிழ்ப் பள்ளியில் ஊதியம் பெறாத ஆசிரியராகப் பணியாற்றினார். தங்கப்பாவும் தடங்கண்ணியும் சமூகப் பற்றாளர்கள் மட்டுமல்ல, சமூகச் செயற்பாட்டாளர்கள்.

அவரது இல்லத்திற்குச் செல்கிறபோதெல்லாம் அவருடைய துணைவியார்     'சூரியதீபன் ஐயா வந்திருக்கிறார்' என்று தெரிவிப்பார். தங்கப்பா அவர்களுக்கு சூரியதீபனைத் தான் தெரியும். எங்களின் தோழமை உருவான தொடக்க நாட்கள் முதலாக அவர் சூரியதீபனாய் என்னை அறிவார்.

அவரைச் சந்திக்க அவர் இல்லத்துக்குச் செல்கிறபோது ஒரு வித்தியாசமான காட்சியைக் காணுவேன். அந்தி முற்றம், பெண்டிர் சளசளப்புக்கு, பொறணி பேசப் பயன்படுவது கண்டிருக்கிறேன். ஆனால் விசாலாட்சி அம்மா தனியாளாய் அமர்ந்து 'தெளிதமிழ்' திங்களிதழை அனுப்புதல், உறையில் பெயர், முகவரி எழுதுதல், அடுக்கிவைத்தல் என உள்முற்றவெளியில் வித்தியாசமான காட்சி காண்பேன். 'தெளிதமிழ்' இதழில் ஆசிரியராகச் செயல்பட்ட திருமுருகனார் மறைவிற்கு பின்னர் தங்கப்பா ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார். 'தெளிதமிழ்' ஆசிரியராக தங்கப்பா இருந்தாலும், அதன் நிர்வாகியாக அம்மா இருந்தார். 'தெளிதமிழ்' பக்கங்கள் ஒவ்வொன்றின் வடிவமைப்பிலும் உள்ளேயும் அம்மாவின் முகம் தெரியும்.

தங்கப்பா சிகரம் தொட்டிருக்கிறார் என்றால், அவரை சிகரத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றவர் அம்மா.

மா.லெ.தங்கப்பா இரு குணவாகுகளால் தனித்துத் தெரிகிறார். முதலாவதாக அமைதியானவர். அல்லது இப்படிச் சொல்லலாம் – அவரைப் போல் நான் அமைதியானவன். அதனாலேயே அவரை எனக்கு நிறையப் பிடிக்கும்.

இரண்டாவதாக, எழுத்து, சொல், மேடை எனத் தனியாய் ஒரு வாழ்வையும், சொந்த வாழ்வு தனியாயும் என இருவாழ்வு கொண்டவர் அல்ல. தன் வாழ்வுக்கும், எழுத்து, சொல் என்பவற்றிற்கும் இடைவெளி அகற்றியவர்.

தங்கப்பா சிகரம் சென்றடைந்த மற்றொரு தருணம் 2001-இல் புதுச்சேரி அரசு தனக்களித்த தமிழ்மாமணி விருதைத் திருப்பியளித்த தருணம்!

விருது பெறுதல் அரிது. அதனினும் கடினமானது பெற்ற விருதினைத் திருப்பியளித்தல். புதுவை அரசின் தலைமைச் செயலகத்தில் தமிழே ஆட்சி மொழி விதியுள்ளது. பணியாளர்கள் அலுவலகத்திற்குச் சென்றதும், வருகைப் பதிவேட்டில் தமிழில் கையெழுத்திட வேண்டுமென்ற ஆணையைக் கடைப்பிடிப்பதில்லை. புதுவை அரசு தங்கப்பாவுக்கு 'தமிழ்மாமணி' விருது அளித்திருந்தது. ஆட்சி மொழி தமிழ் என்று சட்டம் இயற்றிய புதுவை அரசு அதைக் கடைப்பிடிக்கவில்லை. குறைந்த அளவுக்கு அரசு ஊழியர்கள் தம் கையெழுத்தைத் தமிழில் இடுவது பற்றிக்கூட அரசுக்குக் கவலை இல்லை.   தமிழ்மாமணி விருதை அரசுக்கே திருப்பித் தருவதென்று முடிவெடுத்து அறிஞர் திருமுருகனோடு இணைந்து, ஊர்வலமாகச் சென்று திருப்பியளித்தார். தாய்மொழிப் பற்றற்ற அரசு தனக்களித்த விருதினை அரசிடமே திருப்பியளித்து சுயமரியாதையைக் காத்துக் கொண்டார் தங்கப்பா.

விருதுகளும், அவர் மேல் குவியும் பாராட்டுரைகளும் புகழுரையும் அவரை எதுவும் செய்யாது. கொஞ்சமும் அவரை அசைக்காது. தன்னைப் பற்றிய அளவீட்டைப் பிழையின்றிச் செய்தார் ஒரு கவிதையில்.
அவன்,
உண்மை என்னும்
மெழுகு பூசிக் கொண்டிருக்கிறான்
பாலும் தேனுமாய்
பாராட்டுரைகளை
அவன் மேல் ஊற்றினும்
வழிந்து கீழே போகுமன்றி
ஒன்றும் அவன்மேல் ஒட்டுவதில்லையே!
இது தான் தங்கப்பா. இவர்தான் தங்கப்பா!

தோற்றம்: 08-03-1934                         
மறைவு: 31-05-2018



நன்றி: பொங்குதமிழ் - 9 ஜூன் 2018

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

Manal Novel - Jeyapirakasam deftly blends many folktales, rituals, folk beliefs with the modern day political happenings

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்