பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

இந்தியாவின் தென்மேற்கு எல்லைக்கு அண்டக் கொடுத்தது போல் உள்ள பஞ்சாப் பிரதேசம்; முட்டுச்சுவர் போல் மலைகள் உண்டென்றாலும் படையெடுப்புகள் வரும் போது, திறந்து கொள்கிற கணவாய்கள் உண்டு. தென் மேற்கிலிருந்து எந்த ஆக்கிரமிப்பானாலும் முதல் 'மொத்து' பஞ்சாப்புக்கு. இந்தியா ஒரு நாடாய் உருவெடுப்பதற்கு முன்பிருந்து மத்திய ஆசியாவிலிருந்து, கிரேக்கத்திலிருந்து, ஆப்பானிஸ்தான், பலுசிஸ்தானிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள், நாடு பிடிக்கும் வேட்டையர், அவர்களின் கொடுக்குப் பிடித்தபடி குடியேறி மக்களும் - அத்தனை பேரும் பஞ்சாபில் குதித்தார்கள்.

மலைவழி, வனவழி குதிக்காமல் நீர்வழி வந்து ஆக்கிரமித்தவர்கள் வெள்ளைக்காரர்கள்; போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என ’டக்கு டக்காக’ கடல்வழி வந்திறங்கினாலும் இறுதியில் நிலைத்து நின்றது ஆங்கிலேயர்கள் தாம். வெள்ளைக்காரர் என்ற சொல் மேற்கிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர் அனைவருக்கும் பொத்தாம்பொதுவான ஒரு சொல்.

ஆங்கிலேய ஆக்கிரமிப்பின்போது தான் இந்தியா என்ற பெயரில் ஒரு நாட்டை அடையாளப்படுத்தினார்கள்.

தென்மேற்கிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளர்கள் குளித்தெழும் ரத்தக் குளமாகியது பஞ்சாப் சீமையின் ஐந்து நதிகளும். பஞ்சாபியர் தம் வாழ்க்கைக்காக போரை எதிர் கொண்டார்கள். அவர்கள் போரை வாழ்ந்தார்கள். எதிர்ப்புப் போர் என்னும் தொடர் நிகழ்வில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அச்சமற்ற வீரர்களாய்த் திகழ்ந்தனர். பஞ்சநதி பாயும் பூமியில் ஒவ்வொரு பெண்ணும் போர் வீரனை விரும்பினாள். ஆண்களுக்கே உரியது போர்க்களம். இன்று வரை இந்தக் கருத்தாக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஆண்களைப் போர்க்களத்திற்கும் வேலைத் தளத்துக்கும் அனுப்பிவிட்டு, வீடு காத்தல், வீட்டில் குழந்தை வளர்ப்பு, குடும்பாரம் சுமப்பு என்பதில் இன்றளவுக்கும் பெண்டிர் இயல்பில் பெரிய மாற்றமில்லை. இந்திய ராணுவத்தின் எண்ணிக்கை இதற்கு ஒரு சான்று, மிகப் பெரிய சான்று. ஆண்களின் இராணுவம் அது.

பஞ்சாபிப் பெண், போருக்குச் செல்லும் ஆணுடன் கூடவே செல்ல விரும்பினாள். போர் நிலைக்குச் செல்லும் போது, அவளையும் அள்ளிச் செல்ல வேண்டுமென வீரனைக் கேட்டுக் கொண்டாள். பெண்டிர் மரபுக்கு மாறான வேண்டுகோளிது.
”நீலக்குதிரை ஓட்டிச் செல்பவனே
என்னையும் உன் குதிரையின்
சேனத்தில் கட்டிக் கொள்
இரவு இறங்குகிற போது
ஓ, நீலக்குதிரை வீரனே,
என்னை வெளியே எடுத்து
கைகளில் ஏந்திக் கொள்“
வீரமும் காதலும் நிரம்பி வழிந்தன பஞ்சாபி நாட்டார் பாடல்களில்; குறிப்பாகப் பெண்களின் பாடல்கள், கதைகள், வழக்காறுகள் என பெண்களது இலக்கியச் சொத்தாக நாட்டார் இலக்கியங்கள் இருக்கின்றன. எடுப்பாகத் தெரியும் இந்த போர்க் குணம், பஞ்சாபி இனத்தின் ஒட்டு மொத்த போர்க் குணத்தின் ஒரு வெளிப்பாடு. இனத்துவ அடையாளங்களில் பாரம்பரியக் குணமென்பது ஊடாடிக் கொண்டே இருப்பது தெளிவானது. பஞ்சாபி இனப் பெண்களின் குணவார்ப்பு, நிலவியல் அடிப்படைகளிலும், நிலவியலைச் சூறையாடுகிற நிகழ்வுகள் அடிப்படையிலும் உருவாகி வந்த எதிர்ப்புக் குணமாக அமைந்திருப்பது அதிசயமில்லை.

இப்போக்கின் தொடர்ச்சியாய் பஞ்சாப் பெண்கள் எண்ணிக்கையிலும் அளவதிகமாக, உயரத்திலும் வீரியத்திலும் கூடுதலாய் எழுத்துலகின் முக்கியப் பக்கமாய் நிற்கிறார்கள். பஞ்சாபி இலக்கியவாதிகள் கூட்டத்தில் முக்கியமான அம்சம் - பெண் எழுத்தாளர்கள் நிரம்பி வழியப் பெற்றிருப்பதாகும். எண்ணிக்கையிலும் பண்பு ரீதியாகவும் கூட, அவர்கள் ஆண் சகாக்களை மிஞ்சிவிட்டார்கள். பஞ்சாபியில் ஒப்பீட்டளவில் பெண்ணிலக்கியப் பேனாக்களின் உயரம் கூடுதலாகத் தெரிகிறது. இதற்கான மூல காரணம் - ஆதிக்கக் கருத்துகளுக்கு எதிரான எதிர்க்கருத்துக்கள் எப்போதும் வீரியமுள்ள இனப் பெண்களிடம் வெளிப்படும் என்பதே!

முக்கியமானவர்கள் - அம்ருதா ப்ரீதம், மஞ்சித் திவானா தாலிப் கவூர் திவானா, அஜீத் கவூர், பால் கவுர், சுர்ஜித் கல்சி, நிருபமாதத் சுஜ்ஜன்கில் கா நா சிங், அமர்ஜியோதி, கமல் சிகார்கி, விநீதா ஆகியோராவர். அவர்கள் ஆண், பெண் உறவை இன்னும் சனநாயகமான வடிவில் பார்க்கின்றனர்.

முன் தலைமுறைப் பெண் கவிஞர்கள் ஆணின்றித் தாம் முழுமை பெற்றதாக உணரவில்லை. இது இனியும் தொடராது என்று கருதினார்கள். மன்ஜித்சிங் திவானா நமது சமுதாயத்தில் பெண்களின் தகுதிப்பாட்டுக்கு ஒரு புதிய பொருள் கொடுக்க முனைகிறார். அவருடைய கவிதையில் பெண் அனுதாபம் கொள்ளக் கெஞ்சுவதில்லை. அவள் சமத்துவத்தையும் கேட்பதில்லை. ஆண் ஆண்தான். பெண் பெண்தான் என்று நம்புகிறாள். பெண் ஆணினின்றும் வேறுபட்டவள். ஆனால் எந்த வகையிலும் தாழ்ந்தவளல்ல. அவர் தனது சாவித்ரி என்ற நீண்ட கவிதையில் பெண்ணின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறார். 'அமர்ஜோதி' கவிதைத் தொகுப்பின் தலைப்பு ”என்னை சீதையென்று அழைக்காதே” (மாயீனூன் சீதா நஹி கஹோ) இத்தொகுப்பில் இவர்” புத்தர் யாராக இருந்தார் ” (கவுன் புத்தா சீ?) என்று கேள்வி எழுப்புகிறார்.
அது யாருடைய கதை?
அதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்
யசோதராவின் கதையா அல்லது சித்தார்த்தனுடையதா?
அரச மரபுகளுக்கும் வழக்கங்களுக்கும்
இணக்கமாக இருக்கும்படி
ராகுலை வளர்க்க
யரோதராவை விட்டுவிட்டு
காட்டின் அமைதியை சீர்திருத்த யார் சென்றது?
அவளது ஒளி வீசும் கண்ணாடி வீடு போன்ற
வாழ்க்கையை அழித்தது யார்?
அழகுமிகு அரண்மனை நுழைவாயிலுக்குப் பின்னே,
அங்கே அவளது விழித்திரை
முடிவற்ற பாதையாய் மாறி
சித்தார்த்தனுக்காகக் காத்திருக்கும்.
அவன் அமைதியான இருப்பிடத்தில்
அமைதியிலிருந்து புத்தனாக,
புத்திசாலியாகத் திரும்பிய போது
யார் ஞானோதயம் பெற்றது
சித்தார்த்தனா அல்லது யசோதராவா?
புத்தனை, புத்தன் பற்றி நமக்குள்ளிருக்கும் பிம்பத்தை கிழித்துப் போடுகிறது மஞ்சித் திவானாவின் கேள்வி இது.

இக்கவிதாயினிகள் தமது கண்ணோட்டத்தில் முழுவதுமாக மதச்சார்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கடவுட் தன்மையை அழகியல் உணர்திறனுடன் சமமாக்கி, தங்கள் கவிதையின் ஆதாரமாகக் கொண்டார்கள். உள்நோக்கிச் சென்று வெளியே வந்து சேர்வது தான் அவர்களது முயற்சி. அவர்கள் உயர் கலாச்சாரத்தின் சுவர்களை உடைத்தெறிந்தார்கள். படைப்பாக்கம் என்பது அவர்களுக்கு கற்பனையின் விடுதலையாக இருக்கிறது.

உண்மையில் படைப்பாக்கம் என்பது கற்பனா ரீதியான ஒரு விடுதலையே, நாட்டுப்புறக் கதைகள், பெண்கள் 'பொறணி பேசுதல்' – போன்ற வடிவில் உதிர்க்கும் குடும்ப உறவுகள் பற்றிய கதையாடல்கள் அனைத்தும் புனைவியலாக முதலில் தங்கள் மனதை விடுதலை செய்து கொள்வதும், பிறகு புற நிலைகளில் ஒரு அழுத்தம் தருகிறவையுமாகும். எந்தப் படைப்பிலக்கியமும் தொடக்க வேலையாக மனதில் சலனத்தை, கிளர்ச்சியை, மௌன அசைவுகளை உண்டாக்குகிறது: வாழ்வை யதார்த்தம் ஒட்டி கற்பனா விடுதலையில் யோசிக்கச் செய்கிறது. பின்னர் அந்த யோசிப்பு யதார்த்தச் செயல்பாட்டுக்கு இட்டுச் செல்கிறது.


அம்ரிதா ப்ரீதம்(பிறப்பு - 1919):
பாரதீய ஞானபீட விருது பெற்ற அம்ரிதா ப்ரீதம், சமகால இந்திய எழுத்தாளர்களில் பெண் விடுதலையின் ஒரு சின்னமாக இருக்கிறார். பல லட்சியங்களுக்காக புனிதப் போர் தொடுக்கும் ஒரு வீரம் மிக்க போராளியாக இருந்து வருகிறார். அவர் வெற்றிகரமான பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். தனது வாழ்க்கையின் சில நிகழ்ச்சிகளைத் துணிச்சலாகச் சொல்லியமைக்காக மிகவும் அவதூறுக்குள்ளானவர் அம்ரிதா ப்ரீதம். தனது திடநம்பிக்கைகளின் துணிச்சலை சீராகத் தெளிவாக்கியிருக்கிறார். ஒரு எழுத்தாளர் அவன் அல்லது அவளது இதயத்தையும் எண்ணத்தையும் வெளிப்படையாகப் பேசுவதற்குள்ள பிரிக்க முடியாத உரிமையை சிறப்பாக நிலை நாட்டியிருக்கிறார்.

அம்ரிதா பிரீதம் கடந்து வந்திருப்பது, எளிதில் கடக்க முடியாத நீண்ட கடினமான பயணமாகும். தனது விருப்பங்களை, மரபு உடையணிந்த சொற்களில் கவிதை வாழ்க்கையைத் தொடங்கிய அம்ரிதா பிரீதத்தின் படைப்புகள், இன்று பாலியல் குற்றம் புரியும் தந்தையரையும் மகன்களுடன் ஓடிப்போகும் தாய்மார்களையும் கொண்டவையாக இருக்கின்றன. உணர்ச்சிமிகு கலைஞரான அவர் சமூக யதார்த்தப் போர்வையை நெய்வதன் மூலம் இவற்றைச் செய்கிறார். பழமை வாதத்தைத் தனது காலால் மிதித்து நடக்கிறபோதும். அவர் நல்ல உணர்வுகளை ஒரு போதும் புண்படுத்துவதில்லை.

அவரது ஆரம்ப காலக் கவிதையின் பழைய தேவதைக் கதைகளின் மந்திரத்திலிருந்து வெகுதூரம் கடந்து வந்துவிட்டார். அவரது இன்றைய எழுத்தில், நைந்துபோன செல்லரித்துப் போன எல்லாவற்றின் எதிர்ப்பும் இருக்கிறது.

அவர் பெண்ணின் மீதான ஆணின் நேசமின்மையை தொடர்ந்து வெளிப்படுத்துகிறார். இதே மையக் கருத்தைக் கொண்டு ஆர்வமிக்க விருப்புடன் தொடர்ச்சியாக கவிதைகளையும் உரைநடையையும் தந்துவருகிறார். 'காகிஜ் தெ கேன்வாஸ்' தொகுப்பில் 'குமரி' (கன்னி) என்ற தலைப்பிட்ட கவிதை ஒரு நவீனப் பெண்ணின் கதையை, கற்றறிந்த முக்கியப் பாத்திரமான பெண் கவிஞருக்குள் நேர்ந்த மாற்றத்தை எல்லா சீதளத்துடனும் பேசுகிறது.
நான் உன் படுக்கைக்கு வந்தபோது
நான் தனியாக இல்லை
நாங்கள் இருவராய் இருந்தோம்
ஒரு மணமான பெண்ணும் கன்னியும்;
உன்னுடன் உறங்க
நான் என்னுள்ளிருந்த கன்னியைத் தரவேண்டியிருந்தது
நான் தந்தேன்
இந்தப் படுகொலை சட்டத்தில்
அனுமதிக்கப்பட்டிருக்கிறது
அவமதிப்புக்கு சட்டத்தில் இடமில்லை
நான் அந்த அவமதிப்புத் தாக்குதலைத்
தாங்கிக்கொண்டேன்
அடுத்த நாள் காலை
நான் எனது ரத்தக்கறை படிந்த கரங்களைப் பார்த்தேன்.
எனது கரங்களை நான் கழுவிக்கொண்டேன்.
அதேபோல நாற்றமடித்த உறுப்புக்களையும் !
ஆனால் கண்ணாடியின் முன்பு நின்ற அந்தக் கணம்
அவள் அங்கு நிற்பதைக் கண்டேன்.
நேற்றிரவே நான் கொன்றுவிட்டதாய் நினைத்த அவளை
ஓ கடவுளே! நான் கண்டேன்
உனது படுக்கை அவ்வளவு இருளாகவா இருந்தது
நான் கொல்ல வேண்டியிருந்தது ஒருவரை,
கொன்றது மற்றொருவரை!“
ஆணின் அடக்குமுறை நமது சமூகத்தில் அவனை முன்பின் அறிந்திராத ஒரு பெண்ணுக்கு முதலிரவில் தொடங்குகிறது. ஒவ்வொரு இரவிலும் அது தொடருகிறது. இந்த வன்முறையை எதிர்த்து போராடக் கொலையும் செய்யவேண்டியிருக்கிறது. நுட்பமாகக் கேள்வி எழுப்புகிறார்- அந்தக் கொலை யாருடையது? கொலை செய்தது யாரை?

அம்ரிதா பிரீதம் பாகிஸ்தானிலும் இதே அளவுக்குப் பிரபலமானவர். முதன்மையாக அவரது புகழ்பெற்ற கவிதை, ”நான் இன்று வாரிஸ் ஷாவுடன் பேசுகிறேன் ” ('ஆஜ் அக்ஹான் வாரிஸ் ஷா நூன்' ) காரணமாகவே அந்தப் புகழ். அக்கவிதை 1947 – ன் பிரிவினைப் பேரழிவுக் காலத்தின் வேதனைப் புலம்பலாகும்.

1956-ல் பெற்ற சாகித்ய அகாடமி விருது, 1973-ல் டெல்லிப் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட கௌரவ முனைவர் பட்டம், அதைத் தொடர்ந்து பற்பல பல்கலைக் கழகங்கள் அளித்த பட்டங்களும் ஏராளமான பெருமைகளும் அவரது புகழுக்குக் கிடைத்த அங்கீகாரங்களாகும். பஞ்சாப் இலக்கியத்தின் அழியாப் புகழ் பெற்றோரிடையில் தனக்கென ஓரிடத்தை உறுதியாகக் கொண்டிருக்கிறார் அம்ரிதா ப்ரீதம்.

அம்ரிதா ப்ரீதமின் மிகச் சிறப்பான துணிச்சலான தன் வரலாறு. ”ரசிடீ டிக்கட்” இந்நூலின் தலைப்பு பற்றியே ஒரு சுவையான கதை உள்ளது. அம்ரிதா ப்ரீதம் குஷ்வந்த் சிங்கிடம் தனது தன் வரலாற்றை எழுதத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. குஷ்வந்த் சிங் அதைக் கேட்டு குறைகாண் வகையில் 'நல்லது, உன் வாழ்க்கை முத்திரை வில்லைக்குள் (ரெவின்யூ ஸ்டாம்ப்) அடங்கி விடும்' என்று குறிப்பிட்டாராம். அசாதாரணமாக உணர்ச்சிமிகு எழுத்தாளரான அம்ரிதா அதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு தன் வரலாற்றை எழுதினார். அது அவரது இதுவரையிலான உரைநடை எழுத்துக்களிலேயே மிகச் சிறந்ததாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
”நான் பிறரைக் காதலித்தேன் என்றால்,
தந்தையே
நான் உறுதிபடச் சொல்கிறேன்,
உங்களையே மிக அதிகமாகக் காதலித்தேன்“
பஞ்சாப்பின் கலகக்கார மகளான அம்ருதாவின் மிக இழிவு படுத்தப்பட்ட இக்கதையைப் படித்த பிறகு வாசகர் மனதில் தோன்றும் எண்ணம் இதுதான். அவர் அதைச் சொல்லும் முறைக்குப் போற்றப்படுகிறார். ஆனால் அவரது வாசகர்கள் தமது இதயங்களின் ஆடி ஆழங்களிலிருந்து கண்டிக்கக் கூடியதாக இருக்கிறது. அம்ரீதா ப்ரீதம் சொற்களால் மயக்குபவர். எழுத்துக்காக வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட அவரது கட்டளைக்கு அவரது எழுதுகோல் அடிபணிகிறது. அவரது சமகாலத்தவர்களில் ஒரு சிலரே இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அவர் தனது புகழுக்கு- அறிவான்மையான தனது மனப்போக்குக்கே கடமைப்பட்டிருக்கிறார். அவரது ஒரே மனத்துடன் கூடிய முயற்சி அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட எந்தத் துறையானாலும் அதில் அவருக்கு வெற்றி மகுடம் சூடியது. அவரது கதையைப் படிக்கும் ஒருவர் ஆணாதிக்க சமுதாயத்தினால் அவர் அதிகமாகப் பாவப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை உணர்வார். அவரது வாழ்க்கைதான் எவ்வளவு சாகசங்கள் நிறைந்தது! ஆழ்ந்த மத ஈடுபாடு கொண்ட தந்தையின் ஒரே மகளான அவர் சுதந்திர இந்தியாவின் மதச் சார்பின்மைப் புகழின் உச்சியை அடைந்திருக்கிறார்.


தலிப் கவூர் திவானா (பிறப்பு - 1935):
பஞ்சாபிப் பெண் கவிஞர் தாலிப் கவூர் திவானா, உரைநடை எதிரிணை ஆவார். நவீன இந்திய சமுதாயத்தின் பெண்களின் மீதான ஒடுக்கு முறையே அவரது கதைகளின் மையக் கருத்து. அவருடைய பெண்கள்- ஒன்று அனாதைப் பெண்களாய், விதவையராய், சுயநலம் பிடித்த கொடுமைக்கார ஆண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள் அல்லது குழந்தைப்பேறு இல்லாமையால் கணவன் வேறு திருமணம் செய்து கொண்டு விட, வாழ்க்கை இரட்டைத்தூரம் ஆகிவிட்டவர்களாய் அவதிப்படுகிறார்கள்.

அந்தப் பெண்கள் பொதுவாக அன்புக்காக ஏங்குகிறார்கள். அல்லது அதில் ஏமாற்றுமடைபவர்களாக இருக்கிறார்கள். தாலிப் கவூர் திவானாவின் பெண்களுக்கு வாழ்க்கையில் காதல் ஒரே ஒருமுறை வருகிறது. ஆனால் அது ஒருபோதும் திருமணமாய்க் கனிவதில் வெற்றியடைவதில்லை. இந்தப் பெண்கள் உணர்வுக்குள் தோய்ந்து பின்னர் அவற்றை இழப்பவர்களாய் வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ”பத்தாண்டுகளுக்குப் பிறகு” (தஸ் வர்ஷியான் மகரான்) கதையில், அதன் நாயகி, சிறுவயது முதல் காதலித்து தன் கற்பனையில் விரித்து வைத்திருந்தவனைத் திருமணம் செய்துகொள்ள இயலாமல் போய் விடுகிறது. ஏனெனில் அவளது பெற்றோர் போதிய வரதட்சணை கொடுக்க முடிவதில்லை. அந்த இளைஞன் உயர்கல்விக்கு வெளிநாடுசென்று திரும்பி, வேறு ஒரு பெண்ணை மணக்கிறான். ஆனால் அந்தத் திருமணத்தில் மகிழ்ச்சி கிட்டுவதில்லை. அவன் பெரிய குடிகாரனாகிறான். பத்தாண்டுகளுக்குப் பிறகு இருவரும் ஒரு புகைவண்டியில் சந்திக்கிறார்கள். ஆனால் அவர்கள் இருவருக்குமே ஒருவரையொருவர் அழைத்துப் பேசத் துணிவில்லை.

அதே போல ’தூசி’ (தூர்)கதையில், பீபி அருகாமையில் குடியிருக்கும் ஒரு பையன் மீது காதல் கொளகிறாள். ஆனால் அந்தப் பையனின் மீதுள்ள தனது காதலை நசுக்கிவிட்டு வேறொரு பையனைத் திருமணம் செய்து கொள்கிறாள். திவானா இந்த மையக் கருத்தைக் கொண்டே வெவ்வேறு வகையில் பெரும்பாலான கதைகளை எழுதுகிறார். இன்னொரு கதையான ”சித்தி” யில் (மௌச) மாலி தாயை இழந்தவள். அவளது தந்தை இந்திய சமுதாயத்தில் நிலவும் வழக்கப்படி மனைவியின் தங்கையைத் திருமணம் செய்து கொள்கிறான். சித்தி, பொதுவாக சிற்றன்னைகளுக்கு இருக்கும் பண்புக்கு மேல் உயர்வானவளாக இல்லை. பாலி, தனது சொந்த மூத்த சகோதரியின் மகளாக இருந்தும் கூட கொடுமைப்படுத்துகிறாள். ”யாரோ ஒருவரின் மகள்” ('கிஸே தி தீ' ) - ஒரு இளம் பெண் தனது இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இறந்துவிடுகிறாள். அந்தப் பெண்ணின் தாய் தனது பதிமூன்று வயதிலிருக்கும் இரண்டாவது மகளை மனைவியை இழந்த தனது மருமகனுக்குத் திருமணம் செய்விக்கிறாள். ஆனால் மருமகன் தனது மூத்த மனைவியின் குழந்தைகளைத் தாய் போல் இருந்து பராமரிக்க வேண்டுமென்ற நோக்கத்துடனே அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறான். அவள் மீது கொண்ட காதலினால் அல்ல. அவளோ தனது கணவனின் அன்பைத் தனக்காகவும் வேண்டுகிறாள். அது கிடைக்காமல் போகவே அவள் ஏமாற்றமடைகிறாள். அவளது இளமை தேய்கிறது. அவளுடைய தாய் மகளைப் பார்த்து மனவேதனை அடைகிறாள். மருமகனிடம் அவனுடைய குழந்தைகள் பராமரிக்கப்பட வேண்டியது சரியே, ஆனால் இந்தப் பாவப்பட்ட பெண் அதற்கு என்ன செய்வாள். அவளும் இன்னொருத்தியின் மகள் தானே என்று முறையிடுகிறாள்.

”கசாப்புக் கடைக்காரன் மகன்" கதையில் ('ஜட்கா தாமுண்டா') கசாப்புக் கடைக்காரன் ஒரு குடும்பத்துக்கு இறைச்சி வழங்கி வருகிறான். அந்தக் குடும்பத்துப் பெண்ணின் காதலைப் பெற முயற்சி செய்கிறான். அதற்காக அந்தக் குடும்பத்துக்க நல்ல தரமான இறைச்சியைக் கவனத்துடன் வழங்குகிறான். ஆனால் அதனாலெல்லாம் அந்தப் பெண் கவரப்படுவதில்லை. ”மூக்குத்தித் தழும்பு” என்ற கதையில் திவானா திடீரென உணர்ச்சி வயப்படுவராகி விடுகிறார். கல்வியறிவு பெற்ற ஒரு விதவைப் பெண், விதவைக்கென நிர்ணயிக்கப்பட்ட மரபுவழிப் பண்புகளில் நம்பிக்கையில்லாதவளாக இருக்கிறாள். ஆனால் ஒரு சூழ்நிலையில் தனது தாயுடன் ஒரு கோயிலுக்குச் செல்லும்போது அங்கு இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் சடங்குகளில் கலந்துகொள்ளத் தூண்டப்படுகிறாள். கல்வியறிவு பெற்றவளாயிருந்தும் கூட, பழைய மரபின் வடு அவளது இதயத்தில் இன்னும் இடம் பெற்றிருக்கிறது.

திவானா கதை சொல்லும் முறை உரையாடல் வகைப்பட்டதாகவும், அதன் ஏற்ற இறக்கங்களின் தொனியில் இலக்கிய நடையைக் காட்டிலும் பெண்பாலியல் பேச்சுமொழி வடிவம் கொண்டதாகவும் இருக்கிறது.

முனைவர் தாலிப் கவுர் திவானாவின் 'தன்வரலாறு' - ஒரு கால்நடைப் பயணம் (நாங்கேபைரோன் தா சஃபார்) ஒரு நீண்ட சிறுகதை போன்று செல்கிறது. அந்த வகையில் அவருக்கு இணையாக எவரும் இல்லை எனலாம்.

ஒரு சிறுகதை எழுத்தாளர் நாவல் எழுத முனையும்போது ஒவ்வொரு அத்தியாயமும் தன்னளவில் நிறைவு பெற்றதாக எழுதுகிறார். அதனால் நாவல் வாசிப்பதற்கு சிறுகதைகளின் சங்கிலிக் கண்ணிகள் அறிவுக் கூர்மையுடன் இணைக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. ஒரு நாவல் எழுத்தாளர் தன் வரலாற்றை எழுதும்போது, வாழ்க்கை நிகழ்ச்சிகளின் அப்பட்டமான யதார்த்தத்தின் மீது போர்த்துவதற்கு தன்னுடைய கற்பனையைப் பயன்படுத்தமுனையும் தூண்டுதலைத் தடுத்து விட முடியாது.

இதுவே தாலிப் கவூரின் 'எனது கால்நடைப் பயணம்' – நூலுக்கு நேர்கிறது. ஆண்வாரிசை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணைப் பற்றிய மனதைத் தொடும் கதை அது. தனது கணவனுக்காக ஒரு மகனைப் பெற்றுத் தரும் முயற்சியில் திரும்பத் திரும்பத் தோல்வியடைந்த அவரது தாயைப் போன்று தானும் கைவிடப்பட்டவராக, மறக்கப்பட்டுவிட்டவராக தாலிப் கவூர் இருக்கிறார். அவருடைய தந்தை தனது நிலவுடமை மனப்போக்குகளுடன் குடிகாரராக, தீயொழுக்கம் கொண்டவராக இருக்கிறார். பெற்றோர்களுக்கு ஒரே மகனான அவர் தனது சொத்துக்களுக்கு ஒரு ஆண் வாரிசை உருவாக்க வேண்டிய வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தேவைப்படாத பெண்ணாக 'அவத்' எனும் நகரிலுள்ள அத்தையிடம் வளர்ப்பு மகளாகச் சென்றார். இவ்வாறு மூடநம்பிக்கைகள் மூடிய- பின்தங்கிய- தொலைதூரக் கிராமத்திலிருந்தும் தனக்கு ஆண் வாரிசைப் பெற்றுத் தர இன்னொரு மனைவியைத் தேடி அலையும் தந்தையிடமிருந்தும் அவர் மீட்கப்பட்டார்.

அவர் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்ட பாட்டியாலா நகரின் நிலைமையும் அவ்வளவொன்றும் சிறந்ததாக இல்லை. மக்கள் இன்னும் 360 மனைவியரை மணந்த மாமன்னரின் நினைவுகளை உதிர்த்து விட்டிருக்கவில்லை. அவர்கள் மன்னரை இன்னும் இறைவன் கிருஷ்ணனின் மறு அவதாரமாகவே கருதினர். தங்கள் மன்னர் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணுக்கு வரதட்சணையாக சிம்லாவைத் தர வேண்டியிருந்தும், ஒரு வெள்ளைக்கார ஆளுநரின் மகளை குடிவெறியில் கெடுத்து, இழுத்துக் கொண்டு வந்து விட்டதற்காக பெருமையடித்துக் கொண்டனர்.

தாலிப் கவுரின் அத்தை மகன் குடித்துவிட்டு அவரைப் பலாத்காரம் செய்ய முனைகிறான். வளர்ந்துவிட்ட ஒரு பெண்ணைப் பற்றிய பொறுப்பை உதறித்தள்ளும் பொருட்டு அவரது விருப்பத்திற்கு மாறாக பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் செய்விக்கப்படுகிறார். குடிகார மாமனார் தொல்லை கொடுக்க அவரது கணவரது வீட்டிற்கு திருமணத்திற்குப் பிறகு ஒரே ஒரு முறை சென்றார். அடுத்து நாம் காண்பது - இந்தத் தொகுதியின் இறுதியில் வருவது, அவரது கணவர் சட்டபூர்வமான விடுதலையை அவரிடமிருந்து கோரி வருவதாகும். அதற்கு அவர் ஒத்துக் கொள்ளத் தயாராகக் காத்திருக்கிறார்.

இக்கதை ஒரு தேர்ச்சி பெற்ற கலைஞரால் சொல்லப்படுகிறது. அது நமது சமுதாயத்தின் இன்றைய நிலையை அதன் வெளிச்சத்தில் நுட்பமான முறையில் காண்பிக்கிறது. மாமியார் இறந்து விட்டாரானல் அது மிகவம் வரவேற்கப்படுவதாக இருக்கிறது. மருமகள் குடும்பப் பொறுப்பைத் தான் நேரடியாக எடுத்துக் கொள்ள முடியும். கணவன் குடிகாரனாக இருந்தால் அவன் அந்த அளவுக்கு வசதி பெற்றவனாக இருக்கக் கூடும். இந்தக் காலத்தில் யார்தான் குடிப்பதில்லை? பையன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதனாலென்ன? அடுத்த ஆண்டு தேர்ச்சி பெறுவான். அவன் அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? வெற்றி பெற அவர்களுக்குத் தொடராகப் பல பேருந்துகள் காத்திருக்கின்றன. ஆனால் பெண் திருமணம் செய்து கொடுக்கப்பட வேண்டும்; அல்லது பயனற்றது என்று ஒதுக்கப்பட்ட குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டும்.

ஒரு தனிப்பயிற்சி ஆசிரியர் தன்னைப் பதிலுக்குக் காதலிக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக தாலிப் கவுரை அச்சுறுத்துகிறார். கொஞ்சமும் கற்பனைத் திறனற்ற பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் தமது மனங்களில் பல்வேறு நலன்களைத் திட்டமிட்டுக் கொண்டு வேறு வேறு மட்டங்களில் ஆதரவு காட்டுகிறார்கள். பஞ்சாபி இலக்கியத்தின் மிக மூத்த மனிதரான முதல்வர் தேஜா சிங்குடன் தாலிப் நிகழ்த்த வேண்டியிருந்த போராட்டங்கள் தான் எத்தனை வகை மாதிரியானவை.

“என்னை ஐயா என்று அழைக்காதே! என்னைப் பாபாஜீ என்று நீ அழைக்க வேண்டும். உன்னைப் போன்ற அழகான மகள் எனக்கு இருக்கிறாள். அவள் மரணத்தால் பறிக்கப்பட்டு விட்டாள்”. முதல்வர் தேஜா சிங் தனது முதிய வயதில் சந்திக்க நேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களிடம் இவ்வாறு கூறிக் கொண்டிருந்திருக்க, தாலிப் அடக்கமான எளிய வாழ்க்கையோடு வாழ்க்கை நெடுக வதைபட்ட பெண்ணாகத் தோன்றுகிறார்.
அவர் மிகவும் துன்புற்ற போதிலும் இதயத்தால் ஒரு சிம்மமாக இருக்கிறார். அறிவுத்திறன் கொண்ட இளம் பெண்ணாக அவர் தன்னை கொடுமைப்படுத்துகிறவர்களிடம் சொல்கிறார்: "இதுவரை பட்டது போதும் அவர்கள் தமது தவறினைத் தொடர்ந்தார்களானால், ஒரு சுழல் துப்பாக்கியையோ, கைத் துப்பாக்கியையோ எப்படிக் கையாள்வது என்று எனக்குத் தெரியும். அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு நானும் செத்து விடுவேன்” என்கிறார். அடுத்தநாள் அவர்கள் அனைவரும் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கின்றனர்.

அடுத்தடுத்து துரோகமிழைக்கப்பட்டவராக அத்தகைய ஒரு மாறாத பண்புடையவராக தாலிப் ஆகிவிட்டார். ஒரு முறை அவரைப் பேட்டி கண்ட அம்ரிதா பிரீதம் அவரைக் கேட்டார், 'உங்களைச் சுற்றிப் பல ஆண்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அவர்களில் ஒருவரைக் கூட நண்பராக்கிக் கொள்ளவில்லையா?'

தாலிப் சொல்கிறார்: 'அவர்கள் அனைவரும் பஞ்ச தந்திரக் கதைகளிலிருந்து வழிதவறி வந்தவர்கள். ஒருவர் நரியென்றால் மற்றொருவர் குள்ளநரி. இன்னொருவர் ஓநாய். அவர்கள் பார்ப்பதற்குத்தான் மனிதர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மனித இனத்தைச் சேர்ந்தவர்களல்ல'.

அது அழமான உணர்ச்சியுள்ள ஒருவரால் எழுதப்பட்டது. அதற்காக அவர் மிகுந்த விலை கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. சில இடங்களில் அது கூடுதலான ரத்தத்தில் நனைத்தெடுக்கப் பட்டிருக்கிறது. பிற இடங்களில் அது கண்ணீரால் நனைந்திருக்கிறது.

இங்கு ஒரு மூத்த பஞ்சாபி எழுத்தாளர் இருக்கிறார். அவர் தமது பணியென்னவென்று உறுதியாக அறிந்திருக்கிறார். அவர் கொடுமை மிகு சமுதாயத்தின் கரங்களால் மிகுதியும் காயப்படுத்தப் பட்டிருக்கிறார். அதற்கு அவர் அதன் சொந்த நாணயங்களாலேயே பட்டுவாடா செய்திருக்கிறார்.

பெண் எழுத்தாளர்கள் மட்டுமல்ல, தமிழ்ச் சூழலில் எந்த இலக்கியவாதியும் தன்வாழ்வின் பக்கங்களை, வெளிப்படையாக வைத்ததாகத் தெரியவில்லை. பெண் எழுத்துலகவாதிகள், நிறைய ரணங்களோடும், தடுப்புக்களோடும் அச்சலாத்தி கொண்டு அலைகிறார்கள். எவரும் திறப்பாய் முன்வந்ததில்லை. புரட்சிகர இயக்கத்தில் தீவரமாக முழு நேரமாய்ப் பங்காற்றி, மீண்டும் இலக்கியப் பணிக்கு வந்துள்ள பெண் போராளியின் பேனாவை, தன்வரலாற்றை எழுதத்தயாரகும்படி வேண்டுகோள் வைத்தேன். என் முயற்சி பலிக்கவில்லை. தமிழ்ச் சூழலில் சுயானுபவங்களை கவிதையாக, கதையாக, ஏதோ ஒரு படைப்பாக தருகிறார்கள். தன் வரலாறாக அல்ல.அவ்வாறே படைப்புகளாகத் தந்தாலும் தங்களுக்கு அப்பாலுள்ள, தம்மைச் சுற்றியுள்ள மற்றவர் வாழ்வினை எழுதுவார்கள். சொந்த வரலாறை, சுக துக்கங்களையல்ல.



ஷீலா குஜ்ரால் (பிறப்பு 1924):
இந்தியில் ஏழு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள ஷீலா குஜ்ரால் 1986-ல் பசலைக்கொடி (அமர்வேல்) என்ற கவிதைத் தொகுப்புடன் பஞ்சாபிக் கவிதைக்குள் நுழைந்தார். தனது கன்னி முயற்சியிலேயே குறிப்பிடத் தகுந்த தனிச்சுவை கொண்டவராக தெரிந்தார். பஞ்சாபிக் கவிதையின் எந்தப் பிரபலக் கவிஞரின் அச்சான நகலாகவும் அவர் இல்லை. இந்தி வழியாக பஞ்சாபிக் கவிதையின் அழகுமிகு நுழைவாயிலில் நுழைந்த அவர், மஹீப் சிங் பஞ்சாபிக் கவிதைத் துறைக்குள் வந்ததைப் போல, ஒரு புதிய அணுகுமுறையைக் காண்பிக்கிறார். அவரது சொல்மரபு, சொல் நடை, பாடுபொருள்களின் தேர்வு, மையக் கருத்துக்கள் ஆகியவை முழுக்க முழுக்க அவருக்குச் சொந்தமானவை.

எவ்வாறாயினும், பெண்மையின் உணர்திறனின் மறைவிடங்களைத் திரை நீக்கிக் காட்டும் துணிச்சலான தகுதியை அவர் அம்ரிதா பிரீதம் போன்ற முக்கியமான பெண் எழுத்தாளர்களுடன் பங்கிட்டுக் கொள்கிறார். ஒரு பெண்ணால் மட்டும் தான் 'பலாத்கார்' (பாலியல் வன்முறை) போன்ற கவிதையை எழுத முடியும். ஆனால் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட கன்னிப் பெண்ணின் வேதனை முழுவதையும் அதன் எல்லா நுட்பமான மாறுபாடுகளையும் சித்தரித்துக் காட்ட ஷீலா குஜ்ராலின் உணர்ச்சி தேவைப்படுகிறது. தூரிகையின் மூன்று மெல்லிய கோடுகளில், அவள் விரும்பாத பாலுறவால் அழிக்கப்பட்ட பெண்ணின் சித்திரத்தை முழுதாகத் தீட்டி விடுகிறார். திரைச் சீலையில் வரையப்பட்ட வாழ்க்கையின் பொன்னிற உருவம் முழுவதும் புகை படிந்து கரித்துணியாய் ஆகிவிடுகிறது.
எனது மனமென்னும் தங்கத் திரைச்சீலையில்
அவன் சிதறிய மைக்கூடாய் வந்தான்
ஒரு கண் சிமிட்டலில்
எங்கும் எண்ணற்ற கறைகளை ஏற்படுத்திச்
சென்று விட்டான்.
மீண்டும் தனது முழுமையான திறமையுடன் ஷீலா குஜ்ரால் இயற்கையின் சித்திரங்களைத் தீட்டுகிறார். அவரது பார்வையிலிருந்து ஒரு சிறு விவரம் கூடத் தப்புவதில்லை. அவரது சித்திரங்கள் வாழ்க்கைத் துடிப்பினை வெளிப்படுத்துகின்றன. அவர் அவற்றில் இதந்தரும் உணர்ச்சி மிகு உள்ளடக்கத்தை தொடுகிறார். அதிகாலையை ஒரு விளையாட்டுத் தோழியாக - பூமியில் தனது காதலனைத் தேடி இறங்கி வருவதாக சித்திரம் தீட்டுகிறார்.

சில சமயங்களில் அவர் ஒலி கொண்டு சித்திரங்களுக்கு வண்ணம் தீட்டுகிறார். சொற்களை அறிவுக் கூர்மையுடன் பயன்படுத்தி அவர் தீட்டும் உருவத்தின் எல்லைக் கோடுகளுக்கு ஒளியூட்டி, வாசகரின் மனதில் தனது இசையினாலேயே மீண்டும் மீண்டும் ஒலிக்கும் படியாகச் செய்து விடுகிறார். தனது புல்லாங்குழல் ('ஷெனாய்') என்ற கவிதைப் படைப்பில், நிறைவான படிமங்களுடனம் நயம் மிகுந்த சொல்நடையுடன் குழலின் இசைக் குறிப்பைப் பின்பற்றுகிறார்.

உயர்ந்த கல்வி, பரந்த பயணம், செறிவான அனுபவங்கள் பெற்ற ஷீலா குஜ்ராலுக்குள் இருக்கும் படைப்பாளி, ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்பு மீது ஆழ்ந்த கவலை கொண்டவராக இருக்கிறார். அவர் நடுத்தர வர்க்கத்தின் போலித்தனங்களின் மீதும், பணக்காரர்களின் பகட்டின் மீதும், அரசியல்வாதிகள் தகுதிக் கொவ்வாச் சதிச் செயல்கள் மீதும் இரக்கம் காட்டுவதில்லை. அவரது சொந்த இனமான கவிஞர்கள், எழுத்தாளர்களைக் கூட விட்டுவைப்பதில்லை.
நான் கவிதை எழுதுகிறேன்
நான் சாதாரண நிகழ்ச்சிகளைப் பற்றிக் கவலை
கொள்வதில்லை
ஒரு மணப்பெண் உயிருடன் எரிக்கப்படுகிறாள்
ஒரு நிலப்பிரபு சுடப்படுகிறான்
ஒரு அரிசனக் காலனி தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது
ஜனநாயகம் சீர்குலைக்கப்படுகிறது
இவை அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன
அவற்றை நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஷீலா குஜீரால், தனது இன்னொரு பஞ்சாபிக் கவிதைத் தொகுப்புக்கு ”விநோதமான இந்தியா” ('நியாரா ஹிந்துஸ்தான்') என்று பெயரிட்டுள்ளார். முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ்க்கை முழுவதுக்குமான சமூக அர்ப்பணிப்பையும், வேட்கையையும், நாட்டின் சமகால அரசியல் காட்சியின் மீதான நுண்மை அறிவுத் திறனையும் அதில் இணைக்கிறார். இவையே தமது படைப்புத் தூண்டுதல்களின் முக்கிய ஆதாரம் என்று கருதுகிறார். இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் தான் தனது நாட்டை அவர் நியாரா (விநோதமானது) என்று அழைக்கிறார். ஆடை அணிகலன்கள் நன்கணிவித்து, பொன்நகை பூட்டி, மேளம் முழங்க, ஒரு குப்பை மூட்டையைப் போல எரியும் சிதைக்குள் ரூப் கன்வரை உருட்டி விடப்படும் ஒரு நாடு, உலகில் சிறந்த நாடு அல்ல (சாரே ஜஹான் சே அச்சா) என்கிறார் ஷீலா குஜ்ரால்.

அஜீத் அதிர்ச்சியூட்டும் வகையில் துணிச்சலானவர். அவர் தனது வழிகாட்டியான அம்ரிதா ப்ரீதத்தையும் மிஞ்சி விடுகிறார். மாண்டோ அவரது சில படைப்புகள் குறித்து மிகுந்த சங்கடத்துக்குள்ளாவார். ஆனால் அவர் நேர்மையானவர். அவர் காட்டு மிராண்டிக் கால கள்ளங்கபடமற்ற வகையில் இருப்பதாகத் தோற்றம் தருகிறார். அவர் ஆபாசத்தில் இறங்குவதில்லை. ஏனெனில் அது நாகரீகமானது. அவரது குரல் உரத்ததாக இருக்கிறது. ஏனெனில் அவர் தனது வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் அநாகரிகத்தையே சந்தித்திருக்கிறார். அவரது அவதானிப்புக்கள் வாழ்க்கையின் சித்திரங்களை, பண்படாததாக, அதன் எல்லா நிர்வாண அழகுடனம் அழுக்குடனும் கொடுக்கின்றன. அவருக்குள் இருக்கிற உணர்ச்சிமிக்க கலைஞர் மனிதனின் சிறுமைகளைப் பதிவு செய்திருக்கிறார். இருப்பினும் எதிர்நிற்க இயலாத, அவருக்குள்ளிருக்கிற பெண்மையையும் அவர் பதிவு செய்திருக்கிறார். விதியன் இரக்கமற்ற தன்மை இருக்கிறது. இருப்பினும் அதன் கட்டளைகளுக்கு அவர் விரும்பியே பணிகிறார். அவரும் அதற்காக ஏங்குகிறார். அவர் அதன் இனிப்பும் கசப்புமான வேதனையை மீண்டும் அனுபவிக்க விரும்புகிறார். அவரது முந்தைய வலி குறைவதற்கு முன்பே அஜீத், ஒரு காதல் வயப்பட்ட பெண்மானைப் போல காட்டுத் தனமாகத் தனது ஆண்மானை, எந்த ஆண்மானையாவது தேடுகிறார். அவர் அவரது வயதொத்தவராகவோ அவருக்குப் பல வயது மூத்தவராகவோ இருக்கலாம்.

தனது நாற்பதுகளிலும், அஜீத் சாகாத உயர்வுகளையும் தாழ்வுகளையும் தனது வாழ்க்கையில் கண்டிருக்கிறார். காதலிக்கப்பட்டிருக்கிறார். விலக்கப்பட்டிருக்கிறார். நாடப்பட்டிருக்கிறார். இகழப்பட்டிருக்கிறார். திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பிரிந்திருக்கிறார். செல்வத்தில் வாழ்ந்திருக்கிறார். மிக்க ஏழ்மையிலும் துன்புற்றிருக்கிறார்.

இத்தொகுதி 'சபேத் தோ காலீ ஹவா தி தஸ்தா'-னுடன் தொடங்கியிருக்க வேண்டும். அதில் அவர் தனது கன்னிக் காதலின் போதையூட்டும் கதையைச் சொல்கிறார். அவர் மிகவும் இளமையாய் இருக்கிறார். அவன் போதிய அளவுக்குப் பண்படாதவனாக இருக்கிறான். இருவரும் நாள்தோறும் தனிமையிலும் தனிமைமிக்க இடங்களிலும் சந்தித்துக் கொண்டு மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்களது காதல் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது தந்தையாதிக்க ஒழுக்கநெறிகள் திணிக்கப்படுகின்றன. அந்த இளைஞன் அவளை மணக்க விரும்புகிறான். அவரது பெற்றோர்களும் அரைமனதோடு தமது ஒப்புதலைத் தெரிவிக்கின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக திருமணம் நடைபெறவேயில்லை. அஜீத்துக்கு, தங்களால் இயன்ற அளவு பாவம் எதையும் செய்யாமலிருந்திருக்கிறோம் என்பதைத் தவிர அதில் வருத்தம் ஏதும் இல்லை.

இப்பகுதியைத் தொடர்ந்து 'ஃபால்தூ ஒளரத்' என்ற நீண்ட சிறுகதை வந்திருக்க வேண்டும். ஒளிமிக்க ஒரு படைப்பான அது தீவிரமான சுயதேடல் முயற்சிக்காக அதை எழுதிய யாருக்கும் பெருமை சேர்க்கும். கைத்திறன் மிக்க கலைஞரான தனது எழுதுகோலைச் சுழற்றிச் சுழற்றி திருமணமின்றி ஆடவருடன் வாழும் ஒரு பெண்ணின் சித்திரத்தைத் தீட்டுகிறார். அவள் ஒரு நண்பருமல்ல. மனைவியுமல்ல. அவள் அவனுடைய ஒரு மாலை நேரச் சேர்க்கைக்காக நாற்பத்திரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒரு முறை அவள் அவனுடைய படுக்கையில் இதமாக இழந்துவிட்ட பின்னர், அவளால் அவனுக்கு எந்தவிதப் பயனும் இல்லை. அவள் தனது பணியிடத்துக்குத் திரும்பும் முன்பு நகரில் அவனுக்கு மற்றபடி வேலைகள் உள்ளன. அவனுக்காக அவள் எவ்வளவு ஏங்குகிறாள்! மேலும் அவள் எப்படி அவமானத்தின் புகைந்த கரித்துண்டாய் தனித்து விடப்பட்டிருக்கிறாள்.

அதற்குப் பின்னர், 'ஒன்று பூஜ்யம் ஒன்று' வந்திருக்க வேண்டும். ஒரு பிரெஞ்சு மருத்துவமனையில், ஆதரவற்ற தாய் தனது மகளின் உடல் முழுவதும் அங்குலம் அங்குலமாக வதைப்படுத்திய தீக்காயங்கள் இருப்பதைக் கண்ணாடித் தடுப்புக்கப்பாலிருந்து கண்டு அழுது புலம்புகிறாள். ஏனெனில் அவள் வெளியில் இருந்து வருகிறாள். அதனால் தொற்றுநோய் தாவக்கூடும் என்பதால் அவள் தனது மகளை அந்த அறைக்குள் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.

அவள் நோயாளியிடம் தொலைபேசி உள் இணைப்பு வழியாகத் தான் பேச முடியும்; ஏழு நீண்ட நாட்களாக, அஜீத்திற்குள் இருக்கும் தாய்க் கட்டுப்பாடு என்ற உணர்ச்சி கொண்ட சுவரில் மோதித் தனது தலையை உடைத்துக் கொண்டு துன்பத்தில் காத்திருக்கிறாள். உதவி பெற்றுப் படிக்கும் அவளுடைய மகள் ஒரு மிடறு தண்ணீருக்காகக் கெஞ்கிறாள். ஆனால் அவள் தண்ணீர் அருந்தக் கூடாது. அவளது நோய் அத்தகையது. அவள் என்ன கெஞ்சியும் பொறுப்பில் இருந்த மருத்துவ ஊழியர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. அதன் பின்னர் தவிர்க்க இயலாதது நடந்து விடுகிறது. இருபத்தியோறே வயதான அவருடைய மகள் தனது தாயை எஞ்சிய வாழ்நாளெல்லாம் அழுது புலம்பும்படி விட்டுவிட்டுப் போய் விடுகிறாள்.

இதன் பின்னர் 'மேரா கமீரா' மூலம் அஜீத்தின் வாசகர் அவரது இலக்கிய வாழ்க்கையை அறிந்து கொள்ளச் செய்திருக்க வேண்டும். எப்படி, எங்கே, எப்பொழுது அவர் எழுதுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் இருண்ட குழப்பத்தில் ஆழ்ந்திருந்த அவர் எவ்வாறு இந்த அளவுக்கு எழுத முடிகிறது என்பது உண்மையிலேயே அதிசயமாகும். அளவை விடவும், வாசகரை வியக்க வைப்பது அவரது எழுத்தின் தரம், ஒரே மாதிரியாக மனநிறைவளிப்பதாவும் கலையுணர்ச்சில் மிகச் சிறந்ததாகவும் இருப்பதுதான்.

'மான் தெ மைன்' என்ற சொற்களிலான அவரது தன்னோவியம் அவரைப் பற்றிய சித்திரத்தை முழுமையாக்குகிறது. அது ஒரு வகையான முடிவுரையாகவும், விரைவாகவும் மேலோட்டமாகவும் அவரது துன்பமயமான வாழ்க்கையைக் காண்பதற்கு உதவுவதாகவும் இருக்கிறது. இதயம் பலமுறை உடைபட்டு அதன் சிதறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் புதைக்கப்பட்டு இருக்கின்றன. அவை தமது நெஞ்சமெனும் கல்லறையில் கிடக்க, அஜீத் அவ்வப்போது விலா எலும்புகளைப் பிளந்து கொண்டு அழுது புலம்பித் தீர்க்கிறார்.

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்