"இரவுகள் உடையும்" சிறுகதைத் தொகுப்பு முன்னுரை - பேரா.மருதமுத்து


கலை - இலக்கியம் உள்ளிட்ட சமூக இயலைச் சரிவர ஆராய்ந்து முழு உண்மையை அறிந்து தெளிவதற்கு விஞ்ஞானப்பார்வை அவசியமாகிறது. அந்த விஞ்ஞானப் பார்வை இன்று ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் நிலைப்பாட்டை ஏற்றவர்க்கே சாத்தியமாகும். உலகத்தை அறிவதோடு மட்டுமன்றி உலகத்தை மாற்றியமைக்கவும் வேண்டிய கட்டாயமானதொரு நிலையில் இருக்கும் அந்த வர்க்கமே பாட்டாளி வர்க்கமாகும். இழப்பதற்கு எதுவுமில்லாத உழைப்பாளிகளே புரட்சி என்ற முழு மாற்றத்தை முன்னின்று நிகழ்த்துவார்கள். அந்த முழுமாற்றத்துக்குச் சாதகமாக வளர்ந்துவரும் பல்வேறு துறை சார்ந்த விஞ்ஞான அறிவை அவர்களே சுவீகரிப்பார்கள். இதர வர்க்கத்தினர் தங்கள் வர்க்க நலன்கள் பாதிக்குமே என்று பலசமயம் வளர்ச்சியை மறுப்பார்கள்; அறிவைப் புறக்கணிப்பார்கள்.

நிலப் பிரபுவத்தை எதிர்த்துத் தான் வளரவேண்டிய நிலையில் இருந்தபோது, பகுத்தறிவும் நாத்திகமும் பேசிய பூர்ஷ்வா வர்க்கம் இன்று மாறிவிட்டது. மேலும் மனித அறிவு வளர்வதென்பது தனக்கு ஆபத்தையும் அழிவையும் தேடித்தரும் என்பதை உணர்ந்து அந்த வர்க்கம் இப்போது ஆன்மீகத்தைப் பிரச்சாரம் செய்கிறது. அமெரிக்க அரே கிருஷ்ண இயக்கம் போன்றவை இந்த அறிவு மறுப்புக்கு உதாரணங்களாகும்.

இதற்கு நேர்மாறாக பாட்டாளிவர்க்கம் அனைத்துத் துறைகளிலும் விஞ்ஞான வளர்ச்சியை விரும்புகிறது. முன்னேற்றத்தையும் முழுமாற்றத்தையும் விரும்புகிறது. இந்த வர்க்கம் உருவாக்கிக் கொண்ட ஒட்டுமொத்தமான் உலகப்பார்வையே மார்க்சியம்-லெனினியம்-மாசேதுங் சிந்தனையாகும். இதுவே பாட்டாளி வர்க்கப் பார்வை.

பாட்டாளி வர்க்கப் பார்வையில் ஆராயும்போது வரலாறு முழுவதும் வர்க்கப் போராட்டங்கள் இடையறாது நடந்து வருவதை அறிகிறோம். சமூக வாழ்க்கையின் சகல் அம்சங்களிலும் வர்க்க வேறுபாடுகளின் பிரதிபலிப்பு தெரிகிறது.

லெனின் சொன்னார்:
"அறவியல், சமயம், அரசியல், சமூகம் - இவை சம்பந்தப்பட்ட எல்லா வாசகங்களுக்கும், பிரகடனங்களுக்கும், வாக்குறுதிகளுக்கும் பின்னால் ஏதாவது ஒரு வர்க்கத்தின் நலன்கள் இருக்கும். இதைக் கண்டுபிடிக்கக் கற்றுக் கொள்ளும் வரையில் அரசியலில் மக்கள் மோசடிக்கும் எப்போதுமே பலியானார்கள், இனியும் பலியாவார்கள்". (மார்க்சியத்தில் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் என்ற நூலில்)

எல்லா சமுதாயச் சங்கதிகளிலும் குறிப்பாக இலக்கியத்திலும் வர்க்கச் சார்பு இருப்பதை உணர்வதற்கு விஞ்ஞானப்பார்வை தேவைப்படுகிறது. பாட்டாளிவர்க்கத்தின் பார்வை அல்லாத இலக்கியவாதிகள்தான் தூய்மையான இலக்கியம், நடுநிலை இலக்கியம், பொதுவான இலக்கியம் என்றெல்லாம் குழம்பிக்கொள்வார்கள். இந்த மாதிரியான இலக்கியங்களின் உள்ளடக்கத்தை ஆராய்ந்தால் ஒரு வர்க்கச் சார்போ பல்வேறு வர்க்கங்களின் பாதிப்போ தவிர்க்கமுடியாமல் வெளியாகிறது.
இங்கே ஒரு சிறு விளக்கம். பாட்டாளிவர்க்கச் சார்பு என்றால் எப்போதும் பாட்டாளிகளைப் பற்றியும், புரட்சிகர எழுச்சிகளைப் பற்றியும் மட்டுமே எழுதுவது போலும் என்ற நினைப்பில் சில படைபாளிகள் வர்க்கச்சார்பு என்பதை ஒரு சிறையாக மாற்றிக் கற்பனை செய்துகொண்டு தப்பிச் செல்கிறார்கள். தப்பிச்சென்றவர்கள் இன்னொரு வர்க்கத்தின் கருத்துச் சிறைக்குள்ளேதான் அடைபட நேர்கிறது. இந்த இலக்கியவாதிகளுக்காகவே மாவோ சொல்கிறார்:
"சிறு உடைமை வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் அறிவு ஜீவிகளுமான பல தோழர்கள் அறிவுஜீவிகள் மத்தியிலேயே நட்பு கொள்கிறார்கள். அவர்களை ஆராய்ந்தறிதலிலும் வருணிப்பதிலும் முனைப்பு காட்டுகிறார்கள். இத்தகைய ஆராய்ச்சியும் வருணணையும் பாட்டாளிவர்க்கத்தின் நிலைபாட்டிலிருந்து செய்யப்படுமானால் முறையானதேயாகும்"(யேனான் கலை இலக்கியச் சொற்பொழிவு)

பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டில் எழுதப்படும் இலக்கியத்தை இனம் பிரித்துக் காட்டுவது எது? பரந்துபட்ட மக்களை ஒன்றுபடுத்தி, ஊக்கம் கொடுத்து, வெற்றியில் நம்பிக்கையூட்டி, மக்கள் விரோதிகளை அம்பலப்படுத்தி அவர்களை எதிர்த்துப் போராடும்படி தூண்டும் தன்மை படைத்திருந்தால் அதுவே பாட்டாளிவர்க்க இலக்கியத்தின் இலக்கணமாகும்.அத்தகைய இலக்கியம் புரட்சிக்குச் சாதகமானது, இதற்கு மாறாக மக்கள் விரோத வர்க்கங்களுக்குப் பயன்படும் உணர்வுகளையும் கருத்துகளையும் பரப்பும் இலக்கியம் பிற்போக்கானதும் புரட்சிக்கு எதிரானதுமாகும்.

தற்காலத் தமிழ் இலக்கியவாதிகளையும் அவர்களின் படைப்புகளையும் சிலவகை மாதிரிகளாகப் பிரித்தறியலாம்:

1. சமுதாய நிஜத்தை அணுகுவதில் சமரசப் போக்கு கொண்டவர்கள். இவர்கள் விமர்சனநோக்கு அற்றவர்கள். அரசியலில் காந்தியத்தையும் தத்துவத்தில் இந்திய ஆன்மிகத்தையும் ஏற்றவர்கள். முற்போக்காளர் போல சமுதாய சீர்திருத்தம் பற்றி எழுதும் இவர்கள் சாராம்சத்தில் நிலப் பிரபுத்துவ மதிப்புகளையே அழுத்தமாக உணர்த்தினார்கள். முதுகெலும்பில்லாத இந்திய முதலாளிகளின் இலக்கியப் பிரதிநிதிகள் இவர்கள்.

2. சமுதாய நிஜத்தை நேருக்கு நேர் பார்க்கத் துணிந்தவர்கள். மார்க்சியம் தெரியாததால் முழு உண்மையை ஆழமாக அறிய முடியாதவர்கள். இந்திய நிலைமைகளில் வர்க்கப் போராட்டம் சித்தாந்த வரையறையுடன் தெளிவான நிலைபாடு எடுத்துக் கூர்மையாக நடைபெறாத காரணத்தால் "நண்பர்கள் யார் பகைவர்கள் யார்?" என்று கறாராகப் புரிந்து கொள்ளாதவர்கள். ஆனால் அரைகுறையாக அறிந்த நிஜத்தை அச்சமில்லாமல் படைத்துத் தந்தவர்கள். முதலாளித்துவ போலிச் சீர்திருத்தங்களையும், நிலப் பிரபுத்துவ "புனிதங்களையும்" தங்கள் எழுத்தால் சுட்டுப் பொசுக்கியவர்கள். இருந்தும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலும் தகுதியிலும் நம்பிக்கை ஏற்படாமையால் அந்த நம்பிக்கை வறட்சியைத் தங்கள் படைப்பின் அடிநாதமாகக் கொண்டவர்கள். இவர்கள் சிறு உடைமை வர்க்கத்தின் முத்திரை பதிந்த அறிவுஜீவிகளாவர். சமுதாய விமர்சனத்தில் இலக்கிய ரீதியாக இவர்கள் பங்கு கணிசமானது. ஆனால் எண்ணிக்கையில் இவர்கள் மிகக்குறைந்தவர்களே.

3. சமுதாய நிஜத்தை நேருக்கு நேர் பார்க்காமல் தனி மனித வக்கிரத் தன்மைகள் மேலோங்க தன்னிச்சையாகப் படைக்க முனைந்தவர்கள். நம்பிக்கை வறட்சி என்ற நிலையிலிருந்தும் சரிந்து படுபாதாளத்துக்குள்விழுந்து ஆளுமை அழுகிப் போனவர்கள். எந்த வர்க்கத்தோடும் நேரடியாக இணைய முடியாமற் போனதால் வர்க்க சமுதாயத்தின் உண்மைகளை மறுதலிப்பதோடு, இலக்கிய யதார்த்த நெறிமுறைகளைச் சின்னாபின்னமாக்குவதன் மூலம் மறைமுகமாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவகம் செய்பவர்கள். ஏகாதிபத்திய நாடுகளில் உதிரிகளாய் அழுகிப்போன தனிமனிதவாதிகள் சிலரின் வக்கிர மனோபாவங்களும் இலக்கிய சேஷ்டைகளும் இவர்களை ஆட்கொண்டுள்ளன. தங்களை காப்கா என்றும் ஜாய்ஸ் என்றும் எலியட் என்றும் சொல்லிக்கொள்வதில் மோகமுள்ளவர்கள்.

4. பல்வேறுவர்க்க இயல்புகளைப் பல்வேறு அளவுகளில் கலந்துகொண்ட படைப்பாளிகள். சமுதாய விமர்சனத்திலிருந்து சிறு பூர்ஷ்வாவின் மிகையுணர்ச்சிக்கும், கற்பனாவாதத்துக்கும் தாவுபவர்கள் இதில் அடக்கம். உக்கிரமான சிறு பூர்ஷ்வா புரட்சிக்காரர்களாக வாழ்ந்து பிறகு நிலப்பிரபுத்துவ ஆன்மீக கஞ்சாக்காரர்கலாக மாறுபவர்களும் இந்த வகையினரே.

மேற்குறித்தவர்கள் அல்லாமல் மார்க்சிய இலக்கியவாதிகள் என்கிற வகையினர் இங்கு ஆராயத்தக்கவர் ஆவர். இவர்களை 1967க்கு முந்தியவர்கள் என்றும் பிந்தியவர்கள் என்றும் நோக்கவேண்டும்.

இந்திய பொதுவுடைமைத் தலைமை, நிலப்பிரபுத்துவ-தரகு முதலாளித்துவ இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் எதிர்த்துப் போரிடத் தவறிவிட்டது.

ஒரு மார்க்சியவாதி இந்தியாவில் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை எதிர்ப்பதானால் பார்ப்பனீயத்தை எதிர்த்தாகவேண்டும். சாதிக்கொடுமைகளைக் கடுமையாகக் கண்டித்தாக வேண்டும். ராமாயணம், பாரதம், குறள் போன்ற நூல்களை மக்கள் நோக்கில் விமர்சிக்கவேண்டும். இந்த கலாச்சாரப் பணியை பெரியார் போன்றவர்கள் செய்யத் துணிந்தபோது நமது "மார்க்சியவாதிகள்" எதிர்த்தார்கள்.

இதற்கெல்லாம் காரணமாக மார்க்சிய அறிவின் தேக்கத்தைத்தான் சொல்லவேண்டும். இங்கு அறிவு என்னும்போது புத்தகப்படிப்பு முக்கியமல்ல. மார்க்சிய-லெனினியப் பார்வையில் இந்திய யதார்த்தத்தை உணர்தலே சரியான படிப்பு ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் மார்க்சிய இலக்கியவாதிகள் கட்சிக்கட்டுப்பாடில் இருந்தபடியால் கட்சியே எதிர்க்கத் துணியாத நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை இவர்களும் எதிர்க்கவில்லை. இந்தியாவின் அரசியல், சமூக, கலாச்சார அம்சங்களை தீர்க்கமாக விமர்சிக்க முன்வராததால் இவர்களின் படைப்புகலில் மேலோட்டமான சமுதாய உணர்வு என்கிற பூச்சு மட்டுமே மிஞ்சுகிறது. இவர்களை மார்க்சிய இலக்கியவாதிகள் என்று குறிப்பிடுவதைவிட சிறு பூர்ஷ்வாவர்க்கம் சார்ந்த மனிதாபிமானிகள் என்றால் பொருத்தமாகும். இவர்களின் மனிதாபிமானமும்வெறும் மிகையுணர்ச்சித் தன்மையாக முடங்கிப் போவதைப் பல இலக்கியப் படைப்புகளிலும் பார்க்கின்றோம்.

ரகுநாதனின் "பஞ்சும் பசியும்" இதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்த நாவல் இந்திய யதார்த்தங்களைப் பிரதிபலிக்கவில்லை. பட்டினி ஊர்வலம் செல்வது நாவலின் மகத்தான உச்சிக்கட்டமாகக் காட்டப்படுகிறது. அப்படி காட்டப்பட்டிருப்பது கூடத் தவறாகாது. ஆனால் அந்தப் பாதையின் போதாமை பற்றிய உணர்வு நாவலில் எங்குமே தொனிக்கவில்லை. எழுத்தாலர் தாமே ஊர்வலப் போராட்ட முறையை ஓகோவென்று கருதுவதால் ஏற்படும் விளைவு இது. பஞ்சும் பசியும் மட்டுமல்ல, 'கரிசல்' போன்ற நாவல்களிலும் சரியான போராட்ட முறை பற்றிய தெளிவின்மை வெளிப்படுகிறது. இவர்கள் புரட்சி அரசியல் நடத்தாத ஒரு இயக்கத்தையும் அதன் வீச்சையும் புரட்சிகரமாக சித்திரிக்கமுயன்று சோப்புக் குமிழிகளை ஊதி வேடிக்கை காட்டுகிறார்கள்.

ஜெயகாந்தனோ இதே திசையில் எல்லோருக்கும் முன்னால் ஓடிப்போய் இந்தியாவில் எங்குமே இல்லாத இயக்கம் ஒன்று(செகுவேரா இயக்கம்) இருப்பதாக பாவனை செய்துகொண்டு "ஊருக்கு நூறுபேர்" போன்ற கதைகளை விடுகிறார்.

மார்க்சிய இலக்கியவாதிகள் என்று பெயரளவுக்கு எழுதிக் கொண்டிருக்கிற இவர்களின் இலக்கிய கர்ப்பம் குறைப்பிரசவமானது.

ஆனால் வரலாற்றின் நிர்ப்பந்தம் அபாரமானது.

இந்தியப் பொதுவுடமை இயக்கத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு சில காலமாகிறது. அந்த விடியலின் வெளிச்சம் இந்தியா எங்கும் பெருகிப் பரவி வருகிறது. இந்தியப் புரட்சியின் வழிமுறைகளைக் கண்டு கைப்பற்றும் தருணம் இது.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில் கலை-இலக்கியத் துறையில் புரட்சிகரமாகப் பணியாற்றப் பல படைப்பாளிகள்-படையாளிகள் தேவைப்படுகிறார்கள். இந்த சிறுகதைத் தொகுப்பு இப்புரட்சிப் பணியில் ஒரு முன்முயற்சி. இதன் சிறப்பு பிரதானமாக ஒன்றே. இது புரட்சிக்கு ஆதரவாக சமுதாய உண்மைகளை எடுத்துக்காட்டுகிறது என்பதோடு முற்றிலும் பாட்டாளிவர்க்கத்தின் கண்ணோட்டத்தில் படைக்கப்பட்டிருப்பதாகும். இத் தொகுப்பில் இந்தியப் புரட்சியாளர்கள் சிலரைக் கணநேரம் சந்திக்கிறோம். கனத்த இருட்டில் கீறிக்கொண்டு பாயும் நீலநிற மின்னல் ஒளியில் பார்த்ததுபோல அவர்களின் கணநேர சந்திப்பு நமது மனதில் பதிகிறது. இத்தொகுப்பில் பரந்துபட்ட மக்கலில் பல்வேறு குணங்கள் கொண்ட நல்லவர்களைச் சந்திக்கிறோம். அவர்களின் குறைகளையும் கவனிக்கிறோம். ஜனங்களின் குறைபாடுகளைப் பரிவோடு எழுதும் படைப்பாளர் ஆதிக்கக்காரர்களின் தன்மைகளை ஆத்திரப்படும்படி சித்திரிக்கிறார். பாட்டாளிவர்க்கப் பார்வைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இக்கதைகளில் சமூக அவலங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் அவலங்களைக் கலையவேண்டும் என்ற ஆவேசம் ஏற்படுமாறு எழுதப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கப் பார்வைக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு. சுருக்கமாகச் சொன்னால் பாட்டாளிகளின் தலைமையில் இந்திய மக்கள் ஒன்று திரண்டு போர்செய்ய இந்தக் கதைகள் பயன்படும். தங்களைப் பற்றியும் தங்களின் பகைவர்கள் பற்றியும் மக்கல் உண்மையை உணர இவை பயன்படும். எத்தகைய அரசியல் சக்தி புரட்சியை வழிநடத்தி பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மலரச் செய்யும் என்பதைக் குறிப்பால் உணர்வதற்கு இந்தக் கதைகள் பெரிதும் பயன்படும். இதுபோல் ஏராளமான படைப்புகள் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குத் தேவை.

- பேரா.மருதமுத்து (ஓய்வு, ஆங்கிலத்துறை, அரசு கலைக் கல்லூரி)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

பா.செயப்பிரகாசம் (சூரியதீபன்) வாழ்க்கை வரலாறு

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை