அதிகார மொழி


மொழி -
உணவு, உடை, இருப்பிடம் வழங்கும்;
உழைத்துக் கொள்ள நிலம் நீச்சு அளிக்கும்.

பிழைக்க, பிறருடன் உறவு கொள்ள, மேலாண்மை செய்ய வாழ்வியல் தொடர்பாடல் வழங்கும். பண்பாடு, சிந்திப்பு என அனைத்துமான மொழியை அகற்றிவிட்டுப் பாருங்கள். ஊமையன் கண்ட கனவாய் எல்லாம் முடமாகியிருக்கும். மொழி என்பது செயல்பாடு.

பேச்சு மொழி ஆதி எனில், பேச்சுக்கும் முந்திப் பிறந்த மொழி ஒன்றுண்டு; ஆதித் தொடர்புமொழி என அனைவரும் ஏற்கிற அழுகை. “பிறந்த குழந்தை கூட, அழுகைப் புரட்சி செய்து, தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது.” என்ற போராளி நேதாஜியின் வாசகத்தை கவனத்தில் கொள்வது நல்லது. பூமிப் பரப்புடன் கொண்ட முதல் தொடா்பாடல் மொழியில், மற்றொரு உயிரின் தொடா்பாடலால் குழந்தை தன் தேவையை நிறைவேற்றிக் கொள்கிறது. அன்னையின் மார்புகளால், மற்றுமுள மனித உறவுகளால், தனக்குத் தேவையானவற்றை அடைந்து கொண்டே வளா்நிலை பெறுகிறது.

அழுகையின் அடுத்த நிலையில் அருத்தம் திருத்தமான ஒலிச்சேர்க்கையுடனான உருவாக்கம் பேச்சு; மனிதனின் துணை நலமாக இயற்கை; இயற்கையின் துணைநலமாக அவன் - மனிதர்களுடன் உறவாடாது இயற்கையுடன் உறவாடல் சாத்தியப்படாது; பேச்சாடல் அவசியமாயிற்று.

ஆதி இசைக் கருவி பறை. வாய்மொழி வீச்சை விட, பல திசையையும் சென்றடையும் ஒலிக் கருவிகள் துணையாற்றிட, விலங்குகளை வேட்டையாடி, வேட்டையைப் பகிர்ந்து உண்ண – பிற இனக்குழு மேல் தாக்குதல் செய்ய என தமிழனின் வாழ்வைத் தொடக்கியது பறை. வாழ்வை நடத்திய பறை இசையை வாழ்வின் கேவலமாக ஒரு மூலையில் ஒதுக்கி வைத்தோம். பறையுடன் சேர்ந்து பாடல் உதித்தது; ஆடல் பிறப்பெடுத்தது. பாணர், கூத்தர், விறலியர் என்று இசை, கூத்து, பாடல், ஆடல் எனத் தனித்தனிக் கலைமொழி உண்டாயிற்று.

தமிழன் முதன்முதல் நாச்சுழட்டிப் பாடியது “தன்னானே” - அது முப்பாட்டன் ராகம். பறை முழக்கி முப்பாட்டன் கண்ட ஆதி ராகத்தை, கற்றோராகிய மேன்மக்கள் பொதுமக்களின் கவனத்திலிருந்து அகற்றி, அவ்விடத்தில் வீணை, வயலின், கீா்த்தனை, கர்நாடக இசை, இந்துஸ்தானி, பரதநாட்டியம், குச்சிப்புடி போன்ற மேட்டிமைக் கலைகளை நட்டு வளா்த்தது பிற்காலத்தின் வரலாறு.

இது எதனுடைய தொடா்ச்சியென்றால் தமிழனின் ஆதிமொழியாகிய பேச்சு மொழியை இழிவாய் ஒதுக்கி, கற்றறிந்த மேட்டிமை கொண்டோரின் எழுத்து மொழியை அதிகாரத்தில் அமரவைத்ததின் தொடா்ச்சி.

ஏட்டுமொழி இன்று சகல அதிகாரத்துடனும் நடை போடுகிறது. முன்பிருந்து கொலோச்சிய கவிதை, செய்யுள் போன்ற ஏட்டு மொழியும், இன்று சகலமுமாகப் பெருக்கெடுத்து ஓடும் உரைநடையும் ’பேச்சு வடிவத்தை’ ஆகாத வடிவம் என ஒதுக்கித் தள்ளும் சக்களத்தி உறவுநிலையைக் காணுகிறோம். சிலர் காட்டும் காரணம் - அது கொச்சை மொழி.இலக்கணமில்லாமல் பேசப்படுகிறது. ஆனால் ஆதியில் உரிமையோடு இல்லத்தரசியாக காலடி வைத்தவள் இவள்;

”வாதுக்குச் சக்களத்தி வந்து முளைச் சிருக்கா
கீரைக்குச் சக்களத்தி கிண்டி முளைச் சிருக்கா”

என்னும் கதையாக, ’எட்டுக்குத்துக்கு இளையவள்’ இன்றைய உரைநடை; ஆதிமொழியாகிய பேச்சினை அண்டவிடாது சக்களத்தி ஆட்டம் நடக்கிறது. அதே வேளை முன்னரான இலக்கிய வடிவங்களோ,சமகால வடிவங்களோ, மொழி என்ற அடிப்படையில் தமிழின் குறைகளைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. தமிழ்மொழிக்கு உரிய குறையாக மட்டுமே இதைக் கருத வேண்டியதில்லை. வரிவடிவ அதிகாரம் நடைமுறையில் உள்ள உலக முழுதுமான அனைத்து மொழிகளும் நிறையுடையன அல்ல, குறைபாடுடையனவே!

ஆங்கிலத்தில் எழுத்து வடிவ மொழிக்கும் உச்சரிப்புக்கும் அதலபாதாள வேறுபாடு உண்டு. ஒரு எடுத்துக்காட்டு, Flowers என்ற சொல்; உச்சரிப்பில் ஓகாரம் வரவேண்டும். ஓகார ஒலி ஒதுக்கப்பட்டு, உச்சரிப்பில் அகரம் ஒலிக்கப்படுகிறது.

Coat – goat – இரண்டுமே ‘கோட்’ தான்; ஓ-காரத்தின் பின்வரும் அகர ஒலி ஏன் ஒலிக்கப்படுவதில்லை? Silent ஆகிவிடுகிறதாம். இந்த silent என்ற சொல் கூட ”சிலென்ட் ” என உச்சரிக்கப்பட வேண்டும். சைலன்ட் என இல்லாத ஐ-ஒலி இணைக்கப்படுகிறது. in-என்னும் வார்த்தையில் இகரமாக ஒலிக்கப்படுவது, silent என்பதில் ஐ-ஒலியாகத் திரிபுபடுகிறது. இவ்வகை ஒலித்திரிபுகள் ஆங்கிலமொழியில் பலநூறு வார்த்தைகளில் காணமுடியும். குறைகள் பல இருந்தும் சீர்செய்யும் எண்ணம் சிறிதும் எழாமல், உலக அரசியல் அதிகாரத்தைக் கைவசப்படுத்தி, உலக மொழியாய் தன்னை நிறுவிக் கொண்டது ஆங்கிலம.

நான் படிக்கும் காலத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் கற்றுத் தரப்பட்டது. ஆங்கிலம் கற்கும் தொடக்கநிலை மாணவனான எனக்கு வார்த்தைக்கு வார்த்தை வேறுபாடான ஒலிப்புகள் உறுத்தலாயிருந்தன. ஆங்கிலப் படிப்பு மண்டைப் புளுவாய் உளுத்தியது. அந்த மொழிக்குரிய விசித்திரத்தன்மையுடன் ஆங்கிலம் இன்றும் கற்றுத்தரப்படுகிறது. நியாயபூர்வமான அத்தனை கேள்வியும் கற்றலில் உருவாகும் உளவியல் சிக்கலும் அமுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுத் தரப்படுகிறது.

உலகில் பெரும்பான்மை மொழிகள் கற்றுத் தருதலில் அதிகாரத் தன்மை கொண்டவை. உச்சரிப்புக்கும், எழுத்துமொழிக்கும் இடையேயான தொலைவு உலகின் பெரும்பான்மை மொழிகளில் காணப்படுகின்றன.பேச்சு மொழி அப்படியே எழுத்து மொழியாக இல்லை; Dialects எனவும் colloquial எனவும் என தனி அடையாளப் படுத்தப் பட்டுள்ளது. இந்தக்கதி தமிழுக்கும் நேர்ந்தது. வரிவடிவம் தோன்றியதும், அது மேன்மக்களின் மொழியாகவும், பேச்சுமொழி கீழ் மக்கள் மொழியாகவும் கருதப்படலாயிற்று.

நாம் எழுதும் வடிவம் மக்கள் மொழியில்லை.

“சொல்லினிடையில் ‘ட், ற்’ என்ற புள்ளியெழுத்துக்களின் பின் வேறொரு புள்ளியெழுத்து வரவே வராது. அப்படி எழுதவே கூடாது” என்பது தமிழ் இலக்கணம். புலவர்கள், தமிழறிந்தோர் இன்றுவரை கடைப்பிடித்து வரும் இலக்கணம். மக்கள் இந்தச் சூத்திரத்தை தாண்டி நடக்கிறார்கள்; ”இப்படிச் சொல்ல ஒனக்கு வெட்க்கமா இல்லே” என்று அழுத்தம் கொடுக்கிற போது, நடுவில் ‘க’ மிகுந்து வருவதைக் கேட்க முடியும். இலக்கணத்தார் சொல்கிறபடி எழுதினால், மக்களின் உச்சரிப்பில் உள்ள எதையும் போதுமானதாக வெளிப்படுத்த முடியாது. உணா்வுகளை வெளிப்படுத்துதலில் நமது எழுத்து மொழியின் போதாமை தென்படுகிறது.

சொல்லின் இடையில், இறுதியில் ’வாரா எழுத்துக்கள்’ என சிலவற்றை இலக்கணம் சுட்டுகிறது. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்தாக வாரா. ஆய்த எழுத்து, ண, ன, ல,ழ, ள, ற, ரா என்னும் எழுத்துக்களும் முத்லெழுத்தாக வாரா எனச் சொல்கிறார்கள்.

“எதுக்கெடுத்தாலும் ஒரு ஃ வச்சே பேசறியே, அது என்ன பேச்சு” என்று பெண்டுகளின் வாயளப்புக்குள் வரும், ஃ-குக்கு இவா்கள் என்ன சொல்லப் போகிறார்கள்? “ன்னா சொல்ற நீ” என்று நாக்கை மடித்து நடுநாக்கில் அழுத்தம் பதித்து வெளிப்படுத்தும் ‘ன்’ முதலில் வருகிறதே? இலக்கண சுத்தமாய் வரிவடித்தில் எல்லாவற்றையும் மக்கள் வெளிப்படுத்த இயலுவதில்லை. தமக்கு எது சுளுவாக, உச்சரிப்பு உணர்ச்சியை வெளிக்கொண்டு தருகிறதோ அதனை பயன்படுத்துகிறார்கள். இலக்கண சுத்தமாய் பேசவும் எழுதவும் வேண்டும் எனக் கூறுவதெல்லாம் மேன்மக்கள் வலியுறுத்துவது. ஏட்டுநடைக்கு உரியது. ஆனால் மக்கள் ஓசை வெளிப்பாட்டுக்கு ஏற்ப, ஒலிப்புக்குத் தக, புதிய எழுத்தாக்கத்திற்கு மொழி நடந்தாக வேண்டும்.மொழி இந்தக் கட்டத்திற்கு நகராமல் செய்வதே இலக்கணப் பூசாரிகளும் கற்றவர்களான ஏட்டுமொழியாளர்களும் தாம். இலக்கண வாய்க்காலில் இப்போது கைவைத்தாக வேண்டிய காலமிது. வாமடையைச் சரி செய்து, புதியபுதிய கிளைவாய்க்கால், பாத்திகளில் நீர் பாய்ச்சியாக வேண்டும். மக்கள் தமிழுக்கு ஏற்ற, உச்சரிப்பு ஓசையை உள்ளடக்கிய புதிய இலக்கணம் வடித்தாக வேண்டும்.

அவரவா் தாய்மொழி ஆயிரம் சீா்திருத்தங்களுக்குரியதாக இருப்பினும், தற்போது எவ்வகைச் சீர்திருத்தத்தையும் அனுமதிக்காத, வளர்ச்சியுற்ற கட்டத்தினை மொழி எட்டி விட்டது, இந்த வளர்ச்சி போதும் என தமிழறிஞர்கள் போலவே அனைத்துமொழியாளரும் கருதுகின்றனர்.

வட்டாரத்துக்கு வட்டாரம் பேச்சுமொழி வித்தியாசப்படுதலால், அனைவருக்கும் புரிதல் சங்கடமிருப்பதால், ஒரு பொதுமை மொழியை, எல்லோருக்கும் பொதுவான ஏட்டு நடையை உருவாக்கும் முயற்சி தீவிரப் பட்டுள்ளது.

“ஒவ்வொரு எழுத்தாளரும், அவரவர் வட்டார நடையில் எழுதத் தொடங்கிவிட்டால், வாசிக்கிறவர்கள் பாடு பெரும்பாடாகி விடுமல்லவா?”

என்று கேள்வி எழும்பிய போது, கி.ராஜநாராயணன் சொன்னார்

”இந்தக் கேள்வி வாதத்துக்கு சரி என்று தோன்றினாலும், இதில் உண்மையில்லை. தமிழ்த் தாய்க்கு எத்தனையோ முகங்கள். நாம் நினைத்திருந்தது போல் அவளுக்கு ஒரே முகம் இல்லை. ’முப்பது கோடி முகமுடையாள்’ என்று பாரதி சொன்னது தேசத்துக்கு. தமிழ்நாட்டுத் தமிழ்த்தாய்க்கு செட்டி நாட்டிலொரு முகம்; கொங்கு நாட்டில் ஒரு முகம்; சோழ நாட்டில் ஒன்று, நெல்லைச் சீமையில் ஒன்று, கரிசல் காட்டில், தொண்டை நாட்டில், நாஞ்சில் நாட்டில், மதுரை மண்ணில், இன்னும் பல (ஈழத்துத் தமிழையும் சேர்த்துக் கொள்ளலாம்). இப்படி வட்டாரந்தோறும் பல திருத்தமான முகங்கள் இருக்கின்றன. முகத்துக்கு ஒரு நாக்கு இருக்கிறது. நாக்குக்கு ஒரு பேச்சு இருக்கிறது. தமிழ்மொழி அவ்வளவு பரந்த விஸ்தாரமான மொழி. நீங்கள் நினைப்பது போல், இப்போது தமிழ் அறிஞர்கள் மேடையிலே பேசுகிற, எழுதுகிற “ஓட்டல் சாம்பார் மொழி” அல்ல, நமது தமிழ்.”

”அதென்ன ஓட்டல் சாம்பார் மொழி?”

”ஓட்டலில் சாப்பிடுவதற்குப் பல்வேறு நாக்கு ருசி கொண்டவா்கள் வருவார்கள். ஒருவருக்குப் புளிப்பு பிடிக்கும், ஒருவருக்குக் காரம் பிடிக்கும், ஒருத்தருக்குக் காரமே உதவாது .இப்படி வரும் எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளும்படியாக ஒரு சமரச(!) சாம்பார் செய்து விடுவான் ஓட்டால்காரன்.ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன் என்றாலும் அவசியம் கருதிச் சொல்கிறறேன். பெரியார் மேடையிலும் கூட, அவருடைய பேச்சு மொழியிலேயே, தாய் மொழியிலேயே பேசினார். ராஜாஜியும் அவருடைய மண்ணின் மொழியிலே தான் பேசினார். கரிசல்காட்டுக் காமராஜரும் அவருடைய மொழியிலேயே தான் பேசினார். இந்த முப்பெரும் தலைவா்களும் மேடையில் பொய்த்தமிழில் பேசவே இல்லை. மெய்யான தமிழ் மொழியில் பேசினார்கள். நாமோ இன்று மேடையில் முகம் இல்லாத மொண்ணை மொழியில், அதாவது தமிழ் போலத் தெரியும், ஒரு பொய்த் தமிழில் முழங்கிக்கொண்டிருக்கிறோம்”.
(மக்கள் தமிழ் வாழ்க – கி. ராஜநாராயணன்)

கற்றோர் உருவாக்க நினைக்கும் பொதுமொழி (ஏட்டு நடை), மக்களின் பேச்சு மொழியிலுள்ள அத்தனையையும் தூக்கிச் சுமந்து செல்லுகிற, மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன் உடையது அல்ல. இதை “பொய்த்தமிழ்” என்று பெயர் சூட்டுகிறார் கி.ராஜநாராயணன்.

பொய்த் தமிழில் பேசுகின்ற தமிழ் அறிஞா்கள், திராவிட இயக்கப் பரம்பரையினரின் மேடைச் சொற்பொழிவு படித்த நடுத்தர வா்க்கத்தினருக்கு சுவையான உணவானது, பாமரா்களுக்கு புரியாவிட்டாலும் பிரமிப்பூட்டியது. “என்னமா பேசறான் பாரு” என்று முகமற்ற மொணணைத் தமிழுக்கு ஒரு மகுடம் சூடினார்கள்.

வட்டார மக்கள் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் வேறு வேறு உச்சரிப்புகளுடன், ஓசையுடன், வார்த்தைகளுடன் பேசுகின்றனர். ஆனால் அவ்வோசைகளை, ஒலிப்பினை உட்கொண்டு வெளிப்படுத்தும் ஆற்றல் நம் மொழிக்கு இதுவரை உண்டாக்கப்படவில்லை.அதற்குரிய வரி வடிவ எழுத்துக்கள் கண்டுபிடிக்கப் படவில்லை. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நம்மவரைவிட, தமிழ் கற்க விழையும் பிறமொழியாளர், பிறநாட்டவரே இந்தக் குறைகளால் திக்குமுக்காடிப் போகின்றனர்.

வட்டார மொழிப் பயன்பாட்டின் முழுப்பரிமாணத்தையும் தாங்கும் சக்தி, ஆற்றல், உயிர்ப்பு கொண்டதாய் இன்னும் நம் ஏட்டுமொழி ஆக்கப்படவில்லை. .ஏட்டு மொழி என்பது- கட்டிப்போடப்பட்ட கூண்டுக்கிளி. பேச்சு மொழி, வட்டார மொழி ஒரு சுதந்திரப் பறவை. பாரதிதாசனின் பறவை அது. தென்னங்கீற்றுப் பொன்னூஞ்சல் ஆடி, சோலைபயின்று, சாலையில் ஆடி, சுதந்திரமாய் உலவும் கிளி இந்த வட்டரப் பேச்சு மொழி.

சில மாதங்கள் முன் வெள்ளத்தை எதிர்கொள்ளும் திறனற்ற அரசால் தலைநகரின் தலைமீது தண்ணீர் நடந்த விபரீதம் அறிவோம்; மழைத்துயரங்களை அனுபவத்திருந்த நான், எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கள் ஊரில் வசிக்கிற ’பொன்னு’ என்ற முதிய சலவைத் தொழிலாளியிடம் கேட்டேன். “நம்ம வட்டாரத்தில் மழை எப்படி?”

”இங்க அடக்கமாத்தான் இருந்தது” என்றார் பொன்னு. எழுத்து வடிவத் தமிழில் இல்லாத உயிர்ப்பு, பேச்சுவழக்கில் இருக்கிறது.

வட்டார அரசு மருத்துவமனையில் பொன்னு ஒரு வாரம் இருந்தார். அங்கு இருப்பதே அவருக்கு சிரமமாயிருந்திருக்கும் போல; “ஆஸ்பத்திரிலேயிருந்து நான் ஓய்வுபெற்று வந்துட்டேன்” என்கிறார். ஒவ்வொரு அசைவையும் உயிர்ப்புள்ள சொல்லால் கட்டி நிறுத்துகிறார்கள். இதுதான் வட்டார மொழி.

நான் முதுகலைத்தமிழ் கற்றவன்; என்னுடைய தமிழ்ப் பேராசிரியா் ஒருவா் வகுப்பறையில், மாணவா்கள், கல்லூரி மற்றும் பொதுவளாகங்களில் எதிர்ப்படுவோரிடம் தூய நல்ல உரைநடைத் தமிழில் பேசுவார்; நான் அவருடைய வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பொது இடங்களில் பேசுகிற மொழி வீட்டுக்குள் செல்லுபடியாகவில்லை என்பதைக் கண்டேன். வீட்டுக்குள் அவா் பருப்பு வேகவில்லை. வீட்டிலுள்ளோரிடம் பேச்சு மொழியிலேயே பேசி உறவாடினார்.

இரண்டு காரியங்களை உடனடியாக மொழிக்கடனாக நம் தோள்மேற் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும்.

ஒன்று பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்குமுள்ள தொலைவைக் குறைப்பது. பேச்சு நடை அல்லது வட்டார நடை என்பது அந்நிய மொழி நடை என்னும் எண்ணத்தை நமக்குள்ளிருந்து அகற்றுவது.

இரண்டாவது மக்களுடைய எண்ணஓட்டத்தை, உணா்ச்சிப் பிரவாகத்தை, உச்சரிப்பை, ஓசையை தனக்குள் கொண்டு வருதல் போல மொழிச்சீா்திருத்தம் செய்வது. பெரியார் வலியுறுத்திய, செயலாக்கிய எழுத்துச் சீா்திருத்தத்தினும் கூடுதலனாது இது. மொழியை மக்களின் உணா்வுகளின் ஓட்டத்திற்கு இயைந்ததாக நாலு கால் பாய்ச்சலில் அடையக் கூடிய புதிய வரிவடிவத்தைக் கண்டடைதல். இப்போதுள்ள எழுத்துக்கள், சொற்கள், வாக்கியக் கட்டமைப்புகளில் மிகப் பெரிய மாற்றம் தேவை.பேச்சு மொழிக்குரிய புதிய இலக்கணம் செய்தல்.

எல்லாம் நவீனமயமாகிப் போனதில் வாழ்க்கை புரண்டு போயுள்ளது. வேளாண்மையை மையமாகக் கொண்ட வாழ்க்கை இருந்தது. அதன் மனிதநேய நியதியும் அறமும் வாழ்ந்தன. வேளாண் வாழ்க்கை காணாமல் போனது போல், அவ்வாழ்வு தொடர்பான வார்த்தைகள், சொல்லாடல், சொல்வடை, கலை, அனைத்தும் மேன்மக்களின் சிந்திப்பு, இலக்கிய வெளிப்பாடுகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளன. எல்லாமும் புரண்டு கொடுக்கிறது. மொழியும் புரண்டு போகும். இப்போதைய தமிழ் எழுத்துக்கள் நமது தமிழ்மக்கள் பாரம்பரியமாகப் பேச்சில் ஒலிக்கும் ஒலிகளைக் கூட எழுத்தில் காட்ட முடியாத தன்மைகொண்டவை அந்தந்த மக்கள் பேசுவதை அப்படியே எழுதிக் காட்ட முடியாத அந்த எழுத்துக்களால் என்ன பயன்?

இந்தக் கேள்வி கூடுதலாக நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

சமகாலததைக் கண்டடைகிற எழுத்தாளன், இலக்கியவாதி, மொழியியல் வல்லுநர் அதற்குரிய மொழியையும் கண்டடைந்தாக வேண்டும்.

அதிகாரம் தலையெடுக்கிற சூழலைக் கண்டறிந்து வெறுக்கிற மனமும், பூண்டோடு அகற்றுகிற செயல்பாடும் இலக்கியப் படைப்பாளிகள், கலைஞா்களின் இயல்பு. இருக்கிற நிலைமைகளுக்கு எதிராக இயங்கிவாறே இருப்பது படைப்புச் சிந்தனை. தான் கையாளுகிற மொழியிலும், மொழியின் அதிகாரத்துவத்தை உடைத்தெறியும் எதிர்ப்பு வெளிப்பட வேண்டும்; நிலவும் அனைத்து அதிகாரத்தையும் எதிர்த்துக் குரல் எழுப்புதல் போல, மொழி அதிகாரத்தையும் நோக்கி எழுந்து வர வேண்டும். வருவார்களா?

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசம் நூல்கள்

ஆளுமைகளுக்கு அஞ்சலி - பா.செயப்பிரகாசம் உரைகள் காணொளி

திசையறிந்த தென்மோடிக் கூத்து

பாரதிபுத்திரன் என்ற மானுடன்