வாழ்வைப் பாடிய தருணம்


இம்முறை குருதியில்லை
கொலையில்லை
பாத்தி பாத்தியாய்க் கட்டிய
வாழ்வின் வயலை
கொத்திக் குதறிடும் குயுக்தி.

கற்றது கைமண் அளவு
கல்லாதது உலகளவு
அய்யா, தருமபுரி அய்யா
உம்மிடமிருந்து கற்க உண்டும்
கடலளவு.
ஊரிலிருந்து
ஒதுக்கப்பட வேண்டியது சேரியோ,
இல்லை என்றது தருமபுரி.

தனிக் குவளை ,
தனி இடுகாடு,
தனிச் சேரி என
நூற்றாண்டுகளாய் தொகுக்கப் பட்ட சாபம்
உம் விரல்நுனியில் வழிகிறது.

எங்கும் யாம் கண்டதில்லை
இந்தப்
புண்ணிய பூமி தவிர;
பாரத நாடு பழம் பெரு நாடு
நீரதன் புதல்வர்
ஆமோம்,
நினைவகற்றினோமில்லை
ஞானம் விளைஞ்ச மண்ணு
ஞானியரும் தீர்த்தமாடி
திளைத்த மண்ணு;
கீதோபதேச கிலு கிலுப்பை
குலுக்கும் மாதா
எல்லா மகுடங்களும் அணிந்த
மாதா தந்தாள்
தருமபுரி புத்திரர்க்கு எமபுரி.

"ஞாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்"
பாட்டன் முப்பாட்டன்
காட்டிய வழியில் பயிராகியது காதல்;
வாழ்வைப் பாடும் வானம்பாடிகளின்
வஞ்சமில்லா தருணம் அது;
தருமபுரி இணையர் பாடினர்
சாதிச் சருகுகள் சேகரித்துச் சேகரித்து
தேர்தல் குளிர்காயும் கொலையாடலை
பிஞ்சு நெஞ்சுகள் அறியார்

ஆயினும்
இம்முறை குயுக்தியுண்டு,
குருதியில்லை கொலையில்லை
பிரிக்கும் கொடுங்கரம் நீண்டதுண்டு
நீதிமன்றம் வரை;
இருப்புத் தண்டவாளத்தில்
இளவரசனைச் சாய்க்கும் வரை

சாதி இரண்டொழிய வேறில்லை என்ற
தமிழ் மகள் அவ்வையும்
சாதி என்பதேதடா
சாட்டை சுழற்றிய சித்தரும்
தாடியும் புன்னகையும் சேர்ந்தசைய
நெருப்பெடுத்து நெருப்பெடுத்து
சாதி ஒழிப்பு எனும்
விளக்குமாறு ஏந்தி ஏந்தி
வீசி அடித்த
ஈரோட்டுப் பெரியவனும்
கொளுத்த விழைந்தது
சுற்றி நாறும் குப்பையை மட்டுமல்ல;
உம்முள்ளும் எம்முள்ளும்
ஒவ்வொரு நெஞ்சினுள்ளும்
இன்னமும் வற்றா நதியாய் ஓடும்
சாதிச் சுவாசத்தையும் தான்.

- சூரியதீபன்
(தருமபுரி வன்முறை தொடர்பில் இக்கவிதை எழுதப்பட்டது)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

பலியாடுகள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்