மக்களைப் போல


தங்கியிருந்த விடுதியின் மாடியிலிருந்து பார்த்த காலை வேளையில் – எதிர்க்கட்டிட உச்சிக் கூம்பில் நின்று ஒரு பனங்காடை விசில் உருட்டிக் கொண்டிருந்தது. சின்னப் பையனின் விசில் சப்தம் போல் உருண்டது . கால்மணி நேரம் ஏகாந்தமாய் தொண்டையை உருட்டிக் கொண்டிருந்ததை கண்டும் கேட்டும் நின்றபோது, காகங்கள் இல்லாப் பூமி எனச் சொல்லியிருந்தது நினைவில் ஓடியது. அது மணிப்பூர் மாநிலத் தலைநகர் இம்பால்.

தெரு நாய்களை காணமுடியாமல் ஆனது! சந்தைகளில், உணவுவிடுதிகளின் அருகில், குப்பைத்தொட்டியின் பக்கத்தில், பூங்காவில் எங்கெல்லாம் தமிழ்நாட்டில் நாய்கள் நிறைந்திருக்குமோ, அங்கெல்லாம் சுத்தமாய் அந்தப் பிராணிகளில்லை. ‘நாயில்லையோ, நோயில்லையோ’ என நலமாக வாழுகிறது இம்பால், மணிப்பூர் தலைநகர். நம்மூர் நகரத்தெருக்களில் பால்கறந்த பின் அலையவிடும் மாடுகளும் தென்படவில்லை. நந்தமிழகத்தில் பேணப்படாத பொதுச்சமுதாய ஒழுங்கினை அவர்கள் காப்பதில் கவனம் கொண்டுள்ளார்கள்.

மணிப்பூர் மாநில அரசின் கலை இலக்கிய அமைப்பு (Manipur State Kala Akadami) மாநில நான்காம் இலக்கிய விழாவினை (4th Festivel Of Literature) 2015, ஜுன் 6, 7 நாட்களில் தலைநகர் இம்பாலாவில் ஏற்பாடு செய்திருந்தது. முதல்நாள் சிறுகதை அரங்கம், இரண்டாம் நாள் கவிதை அரங்கம். சிறுகதை அரங்குக்கு தலைமை ஏற்று அத்துடன் “கிளியின் சுதந்திரம்” (Freedom of Parrots) என்று எனது சிறுகதையை ஆங்கிலத்தில் வாசித்தேன். நான்கு நாட்கள் தங்கல்.

மணிப்பூர் சுற்றுலா வரும் வெளிமாநிலப் பயணிகளுக்கான எச்சரிக்கை விடுதி அறைகளின் கதவில் ஆடியது. “மது அருந்தத் தடையுள்ளது’” என்னும் வாசகம். அறைக்குள் நுழைந்ததும் ஆட்டம் போடத்துவங்கி விடுகிற நம்மூர் மனிதர்களை சூசகமாகக் குறிக்கிறதாக எண்ணினேன். மணிப்பூர் மனிதர் எவரும் கைகளில் மதுப்புட்டிகளோடு நுழைவதை நான் காணவில்லை.

”குடி, குடித்துக் கொண்டே இரு“ என்ற ஒற்றைக் கதவை தமிழ்நாடு அரசு திறந்துள்ளது; மணிப்பூர் அரசுஅக்கதவை நிரந்தரமாய் மூடியுள்ளது. “இது வறட்சி மாநிலம் (Dry State)” என்று பெருமை கொள்கிறார்கள். தமிழகத்தில் எத்தனை எத்தனை நீர்நிலைகள் வறண்டு போய்விட்டன:எத்தனை சிறு, பெருநதிகள் பறட்டைத் தலையாய்க் கிடக்கின்றன.எத்தனை ஆறுகள் வறண்டு போனாலும் “டாஸ்மாக்” நதி ஓடிக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய சம்பாத்தியதை மட்டுமல்ல, பெண்ணின் சம்பாதனையையும் சேர்த்து குடித்து அழிக்கிறான் என்ற ‘நொட்டைச் சொல்’ மணிப்பூரில் இல்லை.அரசு மதுவிலக்கை பூரணமாய் நிறைவேற்றுகிறது: மக்களின் மனப்பிரதேசம் மதுவிலக்கு வெளியாக மாறியுள்ளது. தமிழ்நாடு அரசோ மக்களைப் போதையேற்றி குவிக்கும் வருமானத்தில் போதையேறி ஒரு பக்கம் மது; மற்றொரு பக்கம் இலவசம் என்று ஆடுகிறது. சுயமாய் வாழத் தெரியாத, வாழமுடியாத, சுயசிந்திப்பு வள்ளிசுமில்லாத மகா சனங்களின் கூட்டடத்தை உருவாக்கிவிட்டார்கள். திராவிடக் கட்சிகளின் ஆட்சி தலையெடுத்த காலமுதலாய் இது பழக்கம்.

முன்னர் குடி தனிமனித விருப்பம்: அரசே ஆணையிட்டு, வீதிக்கு வீதி மதுக்கடைகள் திறந்து சமுதாயவிருப்பமாக ஆக்கியுள்ளது. இன்று மது உற்பத்தி கார்ப்பொரேட்டுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எரிசாராய, மது உற்பத்தி ஆலைகள் ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடில்லாமல் நடத்தப்படுகின்றன. ’போயஸ் கார்டன் உறவுகளும்’ நடத்துகிறார்கள். ’கோபாலபுரத்து உடன்பிறப்புகளும்’ குறையின்றி நடத்துகிறார்கள்.

இன்று குடும்ப விழாக்களில், திருமண நிகழ்வில்,சடங்குகளில் கூட்டாய் மது அருந்துதலில் உறவு நிரூபிக்கப்படுகிறது. ஆனால் இது வித்தியாசமானதொரு முறை. என் உறவினர் ஒருவரது மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம்.மாப்பிள்ளை வீட்டார் பக்கத்து ஊர். ஒரு ’வேன்’ பிடித்து வந்திருந்தார்கள். நிச்சயிப்பு சடங்கு முடிந்ததும் சாப்பாட்டுப் பந்தி. பெண்கள், சிறு பிள்ளைகள், பெரிசுகளுக்கு பந்தி நடந்தது. ஆண்கள் தென்படவில்லை. மாப்பிள்ளை ஊர்க்காரர்களை கூட்டி வந்திருந்த அவ்வூரைச் சேர்ந்த எனது பழைய நண்பர் ரகசியமாகச் சொன்னார் ”அண்ணே, நம்ம கூட்டத்துக்கு தண்ணி ஏற்பாடு ரெடி பண்ணி வேனிலேயே கொண்டு வந்து விட்டேன். அதை ஒழுங்கு முறையா பகிர்ந்து கொடுத்திட்டு வந்திர்றேன்” என்று என்னிடம் விடை பெற்றுக் கொண்டார். குடும்ப நிகழ்வை ஏற்பாடு செய்வோர் வெளிநாட்டு மது அரக்கனுக்கு தனியாக ஒரு தொகையை ஒதுக்கி விடுதல் என்று ’மொய்’ எழுதுகிறார்கள்.

தேர்தல் என்றால் சாதி, மதம், பணம் - என்பதினோடு மது இப்போது புதிதாய் இணைந்துள்ளது.27-6-2015 அன்று நடைபெற்ற சென்னை ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் கணக்குப்படி சென்னையில் - 415 டாஸ்மாக் கடைகள்; திருவள்ளூரில் 376. நாள்தோறும் சராசரியாக இவைகளிலிருந்து கிடைக்கும் வருமானம் - ரூ.15/= கோடி.ஒருநாள் தேர்தல் கூத்துக்காக மூன்று நாள் மூடப்பட்டதில் இழப்பு ரூ.45/=கோடி. இது ஊடகங்கள் வழங்கிய குறிப்புக்கள்; தேர்தல் நாளுக்கு முன்னரே ’குடிமகன்களுக்கு’ வழங்க மொத்தமாய் வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டார்கள் என்பது ஊடகம் வழங்காத செய்தி. மறைக்கப்பட்ட குறிப்புக்களும் செய்திகளும் உண்மைகளாய் ஆகின்றன. உண்மையை மொத்தமாய் புதைகுழிக்குள் அனுப்பும் சனநாயகக் கூத்து தேர்தல் என பொழிப்புரை எழுதப்பட்டாகிவிட்டது போலும்.

தமிழ்ப் பிரதேசமான புதுச்சேரியில் இந்த வெளிநாட்டுச் சரக்குடன் கள்ளு, சாராயமும் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. 27-06-2015 அன்று புதுச்சேரி கவுண்டம்பாளையம் சாலையிலுள்ள வழுதாவூரில் கள்ளு,சாராயக் கடையை அடித்து நொறுக்கினார்கள் பெண்கள். மக்களின் வசிப்பிடதில், அன்றாட நடமாட்டமான சாலையில் கள்ளு, சாராயக்கடை. சாராயக் கடை முளைத்த நாள்முதலாய் பெண்கள் கலால் துறை, வருவாய்த்துறை, தலமைச் செயலகம், துறை அமைச்சர், முதலமைச்சர் என மனுக்கொடுத்து அலைந்தார்கள். உண்ணாநோன்பு, ஊர்வலம், சாலைமறியல் என்றெல்லாம் உரிமைரீதியான போராட்டங்கள் செய்து பார்த்தார்கள். சனநாயக வழியிலான அனைத்து மெனக்கிடல்களும் தீர்ந்துபோன நிலையில் ‘அனைத்திந்திய பெண்கள் அமைப்பினர்’ கடைக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார்கள்.சாராயக் கேன்களை தூக்கி வழுதாவூர் சாலையில் கொட்டினார்கள். உடனே அப்பகுதியிலிருந்த சாராயக்கடை அகற்றப்பட்டது.

தமிழ்நாட்டிலும் பரவலாக மதுவுக்கு எதிராக - ஊடகங்கள் சொல்வது போல் மக்கள் ஒரு யுத்தத்தை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.சனநாயகம் சனநாயகம் எனப் பீத்துகிறார்களே, அந்த சனநாயக வழிமுறைகள் அனைத்தையும் கையாண்டு செல்லாக் காசாகிய வேளையில், பின்னர் மதுக்கடைகளைச் சூறையாடுகிறார்கள். உடனே மக்கள்நல அரசு துப்பாக்கி, லத்தியுடன் பாய்கிறது.

அதிருப்தியின் சிறு முணுமுணுப்பைக் கூட கேட்டுவிடும் காதுகள்; விரக்திமேலேறும் கண்ணின் வெஞ்சிவப்பைக் கண்டுவிடும் விழிகள்; கைகள் உயர்த்தி வீதிக்கு எழுதலை உணர்ந்துவிடும் கூர்த்த புலன் – இவை கொண்டுள்ளோர் சனநாயகவாதிகள். இன்றைய தமிழ்ப் பூமியில் மக்களிடமிருந்து வெளிப்படுகிற கோரிக்கை அல்லது முறையீடு ஒருவழிப் பாதை சனநாயகமாக இருக்கிறது. சனநாயகம் செயல்படுமுறை என்பது அதுவல்ல; சனநாயகம் எவ்வேளையும் இருவழிப் பயணமுடையது. மக்களது விருப்புக்களை மனதிலேற்று செயல்படுத்த வேண்டிய ஆட்சியாளர்களின் இன்னொருபாதை இங்கு முற்றாக அடைபட்டுள்ளது.

“2013-ஆம் ஆண்டு தமிழக மக்கள் மதுவுக்குச் செலவிட்ட தொகையில், 5 லட்சம் வீடுகள் கட்டியிருக்காலாம்; 200 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியிருக்கலாம்: 10 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் கட்டியிருக்கலாம்” (அசுரர்களின் அரசியல்: தலித்துகளும் மது விலக்கும் - பக் 5)

ஆட்சியாளர் மூஞ்சியில் மட்டுமல்ல ,குடிக்கிற மனநிலையின் மூஞ்சியிலும் சப்பென்று அறைகிற குறிப்பு ரவிக்குமார் எழுதிய நூலில் காணப்படுகிறது.

கல்விக் கூடங்கள் நடத்துங்கள்; மருத்துவ மனைகள் நிறுவிடுங்கள்; நல்வாழ்வுக்கு அடிகோலுங்கள்; நன்னீர் குடிநீர், வழங்குங்கள்; அரசால் வழங்கப்பட வேண்டுவன இவை என சட்டத்தில் இருக்கிறது. சட்டபூர்வமாக செய்ய வேண்டியதைச் செய்யாமல் சட்ட விரோதச் செயலை அரசு செய்கிறது.

“போதைப் பொருட்களையோ, அது சார்ந்த வஸ்துக்களையோ விற்பது குற்றம்.”

குற்றவியல் சட்டம் சொல்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் காணைவியலாதபடி, அரசே போதை வஸ்துக்களை விற்பது இங்கு நடக்கிறடுது.

அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப் பட்ட அந்த ஆகஸ்டு பதினைந்து 2015-ம் கடந்து போனது. மதுக்கடைகள் மூடப்பட்டால் வாக்குவங்கி வற்றிப்போகுமோ என்று அஞ்சுகிறார்கள். தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கிற வாக்குவங்கித் திறவுகோல் டாஸ்மாக் கடையில் மட்டுமே இல்லை. இன்று அது பல தொழில் நுட்பங்களின் கூடம். பலப்பல தேர்தல்கலைகள் கற்ற விற்பன்னர்கள் நிறைந்துள்ள இயக்கம், அய்யா கழகத்திற்கும் மேலே இன்று அம்மையார் கழகம் என்பதில் அய்யமில்லை. ஆகவே தேர்தல் தீர்த்துக் கட்டிவிடுமோ என்ற அச்சம் தேவையில்லை.

பண்பட்ட சமுதாயமா, பாழ்பட்ட ஒரு சமுதாயமா? எதை உருவாக்கப் போகிறோம்?

“மது என்பது என்னவென்று அறியாமல் ஏற்கனவே இரு தலைமுறை கடந்துவிட்டது. அந்தத் தமிழ்ச் சமுதாயத்துக்கு மதுவை நான் அறிமுகப் படுத்த மாட்டேன்.”

1967- ல் ஆட்சிக்கு வந்ததும் அண்ணா சொன்ன வாசகம்: அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தார் என்பது மட்டுமல்ல: முந்தைய, இன்றைய கழகங்களுக்குத் தலைவராகவுமிருந்தார்; “அண்ணா வழியில் அயராது உழைப்போம்” என பாட்டிசைப்போரும், அண்ணாயிசத்தின் சாரத்தைப் பிழிந்து ஆட்சி நடத்துகிறோம் என்பவர்களும் இந்த வாசகம் பக்கம் கொஞ்சமேனும் தலைவைத்துச் சிந்தித்தால் நல்லது.

2

கதைசொல்லி சர்க்கரை அருகே வந்து அமர்கிறார். தனது கதைப்பெட்டியை திறக்கிறார். குடி பற்றிச் சொல்வதற்கு அவருக்குள் ஒன்று அல்ல, பல கதைகள் வாசம் செய்கின்றன. எல்லாம் தன் சாமர்த்தியத்தால் கோர்த்துக் கோர்த்து பத்திரப்படுத்திச் சேர்த்தது.
”கொக்காகி, இராவணன் ஆகி,
மூளியாகி, மடநாயாகி-” என்கிறார்.
சொற்கள் அக்கக்காக (தனித்தனியே) இருந்தாலும், சொற்களுக்கு ஊடே ஓடும் அர்த்தச் சங்கிலியை பிரித்து எடுத்துக் காட்டுகிறார்.

கள், சாராயம், மது குடிக்கிறவர்கள் பற்றிய சொல் அடுக்கு அது.

குடிக்கப் போகிறபோது, கொக்கு மாதிரி, செட்டையை (இறக்கை) விரித்துக் கொண்டு போவார்கள்; நீ வா, நீ வா என்று ஆள் சேர்த்துக் கொண்டு கொக்குக் கூட்டம் மாதிரி போவது - அதுதான் கொக்காகி.

குடி உள்ளே போனதும், மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு ”‘நான் யார் தெரியுமா? அவனை உண்டு, இல்லைன்னு சண்டாக்கிருவேன்”
(சண்டாக்குவது - தூளாக்குவது) என்று சவடால் விடுவார்கள் - அதுதான் இராவணன் ஆவது.

குடித்து வந்ததும் புத்தி மூளியாகி விடும். உடல் வலியும், புத்தித் திறனும் ஊனப்பட்டு தூங்கிப் போவது - அதாவது மூளியாவது.
“இப்படி மடத்தனம் பண்ணிட்டு வந்து நிற்கிறாரு?”

காலையில் மற்றவர்கள் சுண்டிக் கேட்கிற அளவுக்கு மடத்தனம் பண்ணிட்டமே என்று குற்ற உணர்வு கொண்டு நொந்து கொள்வது - அதுதான் ‘மட நாயாகி’.

குடித்துவிட்டால், மனுசகுணங்கள் ‘சடக், சடக்’ கென்று மாறுவதை சித்தரிக்கின்றன இந்த உவமைகள்.மனுசனை மடநாயாய்க் கைப்பிடிக்குள் வைத்திருக்க கழகஆட்சிகள் விரும்புகின்றன.

குடித்துவிட்டால் மனுச நாயைப் பிடிக்க முடியாது.

குடி பொய் சொல்லச் செய்யும்; வாக்குப் பிறழ வைக்கும்; ஏமாற்றச் சொல்லும்; திருடவைக்கும்; கொலை செய்யச் சொல்லும்; காமப் பித்தைத் தூண்டி, கண்ட பெண்களை கை வைக்கத் தூண்டும்; தேள், பூரான், பாம்பு, கட்டு விரியன் என்ற விஷ ஜந்துக்கள் புத்தியினிடத்தில் குடியேறும்.

ஒரு உண்மை புரிந்தது. மக்களை, மக்களைப் போல் வாழவைக்க இவர்கள் விரும்ப வில்லை. மற்றவையாக இருக்கச் செய்யவே இவர்கள் விரும்புகிறார்கள். ஆதிக்க நலன் கொண்டோர் மட நாயாக வைத்திருக்கும்வரை திருப்தி கொள்கிறார்கள்.

- காக்கை சிறகினிலே (செப்டம்பர் 2015)

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

ஆய்வு: பா.செயப்பிரகாசம் சிறுகதைகள் காட்டும் கரிசல்காட்டு மக்களின் வாழ்வியல்

சாதி ஆணவக் கொலைகள்: அச்சம் கொள்

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

இன்குலாப் - பாரதிக்குப் பின்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை