அக்ரகார வன்செயல்


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரம் என்ற எங்கள் ஊரில், அரசு உதவி பெறும் தனியார் இடைநிலைப் பள்ளி இயங்குகிறது. சமச்சீர்க் கல்விக் குளறுபடியை உருவாக்குவதற்கு முன்பாகவே – கடமையுணர்வுள்ள தலைமையாசிரியர் சமச்சீர் கல்விப்பாட நூல்களை வாங்கிச் சேமித்து வைத்துவிட்டார். அவை பள்ளிக்கூட தனி அறையில் பூட்டிக் கிடக்கின்றன. நான் சொல்ல வந்தது, இந்த நாசகாரச் செயலை அல்ல; குளவிக் கூட்டில் கை வைத்து விட்டதால் மக்கள் எதிர்ப்பு எனும் கொட்டு வாங்கி முகம் வீங்கிப் போன ஜெ. அரசு பற்றியும் அல்ல. வேர்ப்புழுவாய் கல்வியை அரித்து வரும் சாதியக் கோளாறைப் பற்றி.

முதல் வகுப்பில் சென்ற ஆண்டு சேர்ந்த பிள்ளைகளின் எண்ணிக்கை 13. அது, 10 ஆகக் குறைந்துவிட்டது. முதலில் இந்தப் பள்ளியில் சேர்த்து விட்டு, பிறகு அருகிலுள்ள சிறு நகர மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இடம் கிடைத்ததால் மூன்று பேர் குறைந்தனர். இவர்கள் சாதி இந்து ரெட்டிகள். இந்த ஆண்டு 14 பேர் சேர்ப்பு. ஒரே ஒரு சாதி இந்து பையன் தவிர்த்து மற்றவர்கள் தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்கள்.

1. விக்னேஷ் – ரெட்டியார்; 2. விஜயராஜு – அருந்ததியர்; 3. அரிகரன் – பள்ளர்; 4. அடைக்கலமுத்து – மறவர்; 5. அருள் – ஏகாலி (வண்ணார்); 6. கவியரசன் – பள்ளர்; 7. கு. மகேஸ்வரி – ராஜ கம்பளம்; 8. மாதரி – அருந்ததி; 9. க. மாலதி – ஏகாலி; 10. மதுநிஷா – ஏகாலி; 11. பானுப்ரியா – மறவர்; 12. மதுபாலா – ராஜகம்பளம்; 13. சென்னராயன் – ராஜகம்பளம்; 14. ஆதிமுத்துமாரி – ராஜகம்பளம்.

பக்கத்து சிறு நகரான விளாத்திகுளத்தில் சாரோன் மெட்ரிகுலேசன் பள்ளி, கவியரசர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி என ஆங்கிலப் பள்ளிகள் இயங்குகின்றன. இவை களின் வாகனங்கள் கிராமங்களுக்குள் வந்து செல்கின்றன. களையெடுப்புக்கு காலங்காத்தாலே ஆட்களை நடத்திச் செல்வதுபோல், தங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்தி ரெட்டி சாதியினர் வாகனங்களில் ஏற்றக் காத்திருக்கும் காட்சி – சொல்லில் அடங்காது. இந்த ஆண்டு இந்து சாதி பிள்ளைகள் ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்

 சமச்சீர் கல்வியை நீக்குவதற்கு கச்சை கட்டுகிறவர்களும் சரி, அதற்காக சண்டை போடுகிற முந்தியவர்களும் சரி – கல்வியில் படிந்து வரும் சாதி உயர்வு தாழ்வு ஆபத்தை உணர்ந்ததாய்த் தெரியவில்லை. ஒருவகைப் பாடத்திட்டத்தைப் படிப்பவன் உயர்ந்தவன்; இன்னொரு பாடத்திட்டத்தில் படிப்பவன் தாழ்ந்தவன்; ஒரு மொழியில் படிப்பவர்கள் உயர்ந்தோர்; மற்றொரு மொழியில் (தாய்மொழி) படிப்போர் தாழ்ந்தோர் என்ற தீண்டாமை, கிராம சாதிய அடுக்கில் நிலை கொள்ளத் தொடங்குகிறது.

கிராமங்களுக்குப் போகும் நெடுஞ்சாலைகளிலும், கிராமங்களைச் சுற்றி வளர்ந்து வருகிற சிறு, நடுத்தர நகரங்களிலும் தொழில் நிலையங்கள், வணிக நிறுவனங்கள் பெருகியது போலவே, ஆங்கிலப் பள்ளிகளும் பெருகி வருகின்றன. அவை கிராமப்புறங்களில் உள்ள ஆதிக்க சாதியினர் கிராமங்களில் புதிதாய் உருவாகியுள்ள நடுத்தர வர்க்கப் பிரிவினர் ஆகியோருக்கென உருவாக்கப்படுகின்றன. உலகமயமாக்கலுக்கு மட்டுமல்ல, சாதிய கட்டுமானமும் காக்கப்படுவதை எங்கள் ஊர்ப்பள்ளி முதல் வகுப்புச் சேர்க்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

       அக்ரகாரம் என்பது ஓர் அடையாளம். ஆதிக்கும் ஆதியாய், பழமைக்கும் பழமையாய் தோற்றமெடுத்த வர்ண தர்மத்தினதும், அதிகாரம் கொண்டதுமான குறியீடு அது. அக்ரகார மூளைகள் அக்ரகாரத்தில் என்றில்லை; அந்த வட்டங்களைக் கடந்து எல்லா வட்டத்துக்குள்ளும் நுழைந்துள்ளன. யார் அதிகாரத்தையும் மூடத்தனமான சாதி வேற்றுமையையும் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தமிழ்ச் சமூகமானாலும் பார்ப்பனரே. தமிழர்கள் தலை மேல் கால் வைத்தவர்கள் இந்த நவீன பார்ப்பனர்கள். சூத்திரனாக – தாழ்த்தப்பட்டவனாக இருந்தபோதும், ஒருவன் பார்ப்பன இயல்பு கொண்டவனா என்பதைத் தீர்மானிக்கும் அளவுகோல் ஆட்சியதிகாரம்.

வரலாற்று காலந்தொட்டு நாடாண்ட மன்னர்களாக பார்ப்பன வம்சம் நேரடியாய் இருந்ததில்லை. முடியாட்சியை நடத்திச் செல்பவர்களாக இருந்தார்கள். பார்ப்பனர்கள் நேரடியாக ஆட்சியதிõரத்துக்கு வருதல் இன்றைய ஜனநாயகத்தில் நடக்கிறது. இதுவரை, அவர்கள் வைத்தவர்கள் ஆண்டார்கள். இப்போது அவர்களே ஆளுகிறார்கள்.

பொதுக் கல்வி, பொதுப் பள்ளி என்பவை தாம் அனைவருக்கும் கல்வி சட்டத்தினை செயலாக்கும் அடிப்படைகள். மாநில, மய்ய அரசுகளின் இயலாமையால் அனைவருக்கும் கல்விச் சட்டம் தேனாகப் பாய்வதற்குப் பதில் கசக்கிறது.

எல்லோருக்கும் கல்வியால் ஏற்கனவே நாம் கடைப்பிடித்து வரும் வர்க்க வேறுபாடு மண்ணாவதா? (அதுதான் தரம்) வணிகக் கொள்ளை என்னாவது என்ற கேள்விகளுடன் சில தனியார் ஆங்கிலப் பள்ளிகள் எதிர்ப்புக் கொடி தூக்கினார்கள். இதைச் செயல்படுத்த மாட்டோம் என்ற சிவப்பு அறிவிப்பு செய்தது போதாதென்று, மய்ய மாநில ஆட்சிகளுக்கு பெற்றோர்களையும் கடிதங்கள் அனுப்புமாறு செய்தார்கள். எதிர்ப்பை ஒரு மூலையில் தள்ளத் திராணியில்லாத நடுவணரசு, ‘தனியார் பள்ளிகள் தாம் இயங்குகிற வட்டாரத்திலுள்ள ஏழைக் குழந்தைகள் பயில 25 விழுக்காடு இடம் தர வேண்டும்'' என்று மறு ஆணை அனுப்பியது.

சென்னை சேத்துப்பட்டில் இருக்கிறது பெருமாட்டி ஆண்டாள் மெட்ரிக் பள்ளி (Lady Andal Matriculation School), லேடி ஆண்டாள் வெங்கடசுப்பராவ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியும், சிறீ சங்கர மேனிலைப் பள்ளியும் பெற்றோர்க்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பின. லேடி ஆண்டாள் மேனிலைப் பள்ளியின் தாளாளர் விஜயலட்சுமி சீனிவாசன், ஏப்ரல் 28, 2011 அன்று அரசுக்கு அனுப்பிய அறிக்கை இது : ‘அனைவருக்கும் கல்வி வழங்கும் பொறுப்பை அரசு எமது தலையில் சுமத்தக் கூடாது. எங்கள் மாணவர் பெறும் கல்வித்தரம், அறிவு, கட்டட, ஆராய்ச்சிக்கூட வசதிகள் முதலானவைகளை அருகாமையில் வாழும் ஏழைக் குழந்தைகளும் பெற வேண்டுமென அரசு எதிர்பார்த்தால், அவர்களுக்காக தனி ஷிப்டுகளை நாங்கள் நடத்திட அனுமதிக்க வேண்டும். அவர்களை ஒரே வகுப்பில் உட்கார அனுமதிப்பது சரியல்ல.''

பள்ளியில் பயில்கிற மாணவர்களின் பெற்றோரையும் அரசுக்கு எதிர்ப்பைக் காட்டுமாறு தூண்டினார்கள். தமது குழந்தைகளுடன் தெருக் குழந்தைகள் கலக்க அனுமதிக்காதீர்கள் என வாய்மொழியாக உதிர்த்தார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கேரளாவிலும் தமிழகத்திலும் செயல்படுத்தப்பட்ட தீண்டாமையை நவீன வடிவத்தில் எடுத்துவர முயற்சி செய்கிறார்கள். பார்ப்பனர், வெள்ளாளர், முதலியார், ரெட்டிமார் ஆகியோருக்கு இத்தனை அடி தூரத்தில் மனிதன் நிற்க வேண்டுமென்ற தீண்டாமை முறை ஒரே வகுப்பில், ஒரே நேரத்தில் கற்க அனுமதியோம் என்பதாக மாறுகிறது, சிறீ சங்கர மேனிலைப் பள்ளி மற்றும் லேடி ஆண்டாள் மேனிலைப் பள்ளியின் நிர்வாகிகளான இவர்கள் ‘சுத்த பார்ப்பனர்கள்'.

ஏப்ரல் 2011இல் தி.மு.க. அரசுதான் அதிகாரத்திலிருந்தது. தேர்தல் முடிவுகளுக்கு காத்திருந்தார்கள். முந்திய அரசும், இப்போதைய அ.தி.மு.க. அரசும் கல்வித் தீண்டாமை பற்றி ஒரு முணுமுணுப்பும் காட்டவில்லை. அனைவருக்கும் கல்வி என அரசியல் சட்டம் வலியுறுத்தும் மாண்பை குழி தோண்டி மண்போட்டு மூடுவார்கள் இந்த பார்ப்பன நிர்வாகிகள். ஆட்சிக்கு வருகிற சூத்திரனாக இருந்தால், அவனும் இரண்டு கை மண் அள்ளிப் போடுவான். மாறி மாறி வந்த திராவிடப் பாரம்பரியங்கள் இதையே செய்தார்கள்.

‘கல்வி என்பது வாழ்வதற்கான கல்வி, இணைந்து வாழ்வதற்கான கல்வி'' என்று யுனெஸ்கோ வரையறுத்ததை – ‘கல்வி எல்லோரும் வாழ்வதற்கானதாகவும் கூடாது. இணைவதற்காகவும் கூடாது'' என்று தீண்டாமையை வெளிப்படையாக அறிவிப்புச் செய்துள்ளார்கள். இந்தக் குழுவின் சாதிய மனோபாவமும் வர்க்க இயல்பும் ஜெயலலிதாவிடம் ததும்பி அலையடிக்கிறது. தீண்டாமைக் கோட்பாட்டின் அசிங்கமான பிரகடனம் லேடி ஆண்டாள் என்றால், அதன் அப்பட்டமான முழக்கமே ஜெயலலிதாவின் உச்ச நீதிமன்றப் படையெடுப்புகள்.

கல்வி நிலையம் என்பது, பிஞ்சுகள், சாதி, நிற, இன, வர்க்க வேறுபாடின்றி கலக்கும் அரங்கம். கற்பதில் ஒருவருக்கு ஒருவர் வழங்கவும் ஒருவருக்கொருவர் எடுத்துக் கொள்ளவும் வாய்ப்பான இடம். ஒவ்வொரு வர்க்கத்தில் – ஒவ்வொரு சாதியில் வட்டாரங்களிலிருந்தும் வரும் குழந்தைகள் மற்றவர்களைப் பற்றி அறியவும் பழகவும் மனம் ஒன்றவும் தடையகற்றி, ஒரு குடும்பத்துக்குள் உள்ள இணைப்பை சமூக இணைப்பாக கல்வித்தறி நெய்து தரும்.

ஒவ்வொருவருள்ளும் இயங்கும் தனிநபர் சிந்தனைகளைச் சுத்திகரிப்பு செய்து சமமான கல்வி, சமமான வாய்ப்பு, சமநிலைச் சிந்தனை போன்றவற்றை வழங்கும் நீரேற்று நிலையங்களாக விளங்க வேண்டியவை கல்விச் சாலைகள். சாதிய ரீதியாக, வர்க்க ரீதியாக வேறுபாட்டைத் தக்க வைக்க எண்ணுகிறவர்கள் – இந்த மனக் கலப்பின் இணைப்பை விரும்புவதில்லை. பிரித்து வைப்பதை உளவியல் காரணம் காட்டி ஆதரிக்கிறார்கள்.

‘ஏழ்மை நிலையில் இருக்கும் குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும்போது, பணக்காரப் பிள்ளைகளோடு தம்மை ஒப்பிட்டுப் பார்த்து தாழ்மையாக உணருவார்கள். அவனுடைய மதிய உணவு, பயன்படுத்தும் உபகரணங்கள், உடை, அணியும் காலணி எல்லாவற்றையும் ஒப்பிட்டு நோக்குவான். படிப்பில் கவனம் கலையும். இந்தக் கல்வி அவனுக்கு அந்நியப்பட்டுப் போகும். அவனது பெற்றோர்களும் இந்த சிந்தனைக்குத் தள்ளப்படுவர்.'' வாழ்நிலையே எண்ணங்களை உருவாக்குகிறது என்ற அறிவியல் இங்கும் உண்மையாகி விடுகிறது.

       மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி அரசியல் செய்வது என்று சிந்திப்பவர்களுக்கு எதிரிகள் அதி கம் இருப்பதில்லை. எதிர்த் திசையில் ஜெயலலிதா சிந்திப்பதால் (சாதிய, வர்க்க சிந்தனை) மக்களின் எதிரிகளை நிபுணர் குழுவில் இணைத்தார். அவருக்குப் பின்னணியில் ‘சோ' போன்ற மக்கள் எதிரிகள் ஆலோசனை வழங்குகிறவர்களாய் நீடிக்கிறார்கள்.

இதற்கு முந்தைய தி.மு.க. ஆட்சியாளர்கள் இதே அரசியலில் இயங்கினாலும், ஜெயலலிதா போலவே கருணாநிதியும் தன் புகழ்பாடும் மேதைகளின் கூட்டத்தை குறிப்பாக, தமிழறிஞர் எனப்படுவோர் குழுவைக் கொண்டிருந்தார். இவர்கள் அளித்த கல்வியால் யாரை இவர்கள் முன்னேற்றினார்கள்? முந்தியவர்கள் அறிவித்த தர வரிசைப் பட்டியல் போலவே, இன்றைய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் வி.எல். விஜய் வெளியிடுகிறார்.

எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று இடம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது பள்ளிகள் : 1. க. சிவரஞ்சனி – வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் பள்ளி, ராசிபுரம் 2. எல்.எஸ். தக்ஷிணி – கிரீன்பார்க் மெட்ரிகுலேசன் பள்ளி, நாமக்கல் 3. ஸ்ருதி கணேஷ், டி.ஏ.வி. மெட்ரிகுலேசன் பள்ளி, கோபாலபுரம், சென்னை 4. மோ. சுரேஷ் பால்ராஜ் – ஹோலிபேமிலி கான்வென்ட், சென்னை 5. ஆ. ஹரிநிவாஸ், ஏ.கே.டி. மேல்நிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி 6. ம.ஜே. துனணீபா சவுந்தர்யா – சென்னை 7. பு. அகிலா – ஆதர்ஷ் வித்யாலய மெட்ரிகுலேஷன் பள்ளி, அந்தியூர் 8. ரா. மணிகண்டன் – ஏ.கே.டி. மேனிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி 9. ச. சிவசக்திவேல் – எஸ்.ஆர்.வி. மேனிலைப் பள்ளி, ராசிபுரம் 10. அருண்குமார் – ஏ.கே.டி. மேனிநிலைப் பள்ளி, கள்ளக்குறிச்சி

இவர்களைப் போல் மேலும் 56 மாணவர்கள் 200க்கு 200 பெற்று, தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களும், இதேபோன்று தர வரிசை கொண்டவர்களும் தமிழகத்தின் 17 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ள 1653 இடங்கள் பல் மருத்துவக் கல்லூரியிலுள்ள 85 இடங்களில் சேர்வதற்கான மாணவர்கள் எல்லோரும் ஆங்கில வழிப் பள்ளிகளில் பயின்றவர்கள். முதல் பத்தியிலுள்ள பெயர்களைப் பார்த்தால் புரியும் – ஆதிக்க சாதி, ஆதிக்க வர்க்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதாகும்.

எங்கள் ஊர்ப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த பிள்ளைகளில் மதுநிஷா, பானுப்ரியா, மதுபாலா ஆகிய பெயர்கள் சற்று வித்தியாசமானவை. கரும்பன், இடும்பன், பச்சை என்று பழைய பெயர்களின் அடையாளத்தை தவிர்த்து, ‘மேன் மக்கள்' திரளில் இணைந்து கொள்வதற்கான பரிதவிப்பில் உண்டானவை. இந்த மண்ணே கேவலமாகத் தெரிவதால், மண்ணின் பெயர்களைத் தவிர்ப்பதை பெருமையாகக் கருதினர். பெயரளவிலாவது மேல்நிலையாக்கம் பெற முண்டும் இயல்பு இதில் வெளிப்படுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் பொறியியல் தொழிற் படிப்புகளில் முழு இடங்களையும் அபகரித்துக் கொள்கிறவர்கள் முழுக்க முழுக்க +2 வரை மெட்ரிக் பாடத்திட்டத்தில் பயில்கிறவர்கள் அல்லர்; பத்தாம் வகுப்பு வரை மெட்ரிக் பாடத்திட்டம், அதன் பின் மாநிலப் பாடத்திட்டத்துக்கு மாறியவர்கள். மான ரோஷம் உள்ளவர்களாக இருந்தால் மெட்ரிக் முறையிலேயே +2 தேர்வை எழுத வேண்டாமா என எவரும் கேட்க முடியாது. பத்தாம் வகுப்புக்குப் பின் மாநிலக் கல்வி முறைக்கு ஒரே தாவாய்த் தாவி – இடைவழியில் எல்லாவற்றையும் பறித்துச் செல்கிற வழிப்பறிக் கொள்ளையர்களே. வழிப்பறி செய்கிற இவர்களை வாழ்த்தி தர வரிசைப் பட்டியலை வழங்குகிறார் – தமிழக மருத்துவத் துறை அமைச்சரும், கல்வி அமைச்சரும். கொள்ளையர்கள் கொள்ளையர்களுக்கு துணை நிற்பார்கள். இந்த உலக உண்மையை முந்தைய ஆட்சியாளர்களும் உணர்ந்து செயல்படுத்தினார்கள். சமச்சீர் கல்வி ஆங்கிலத்தில் இருக்கலாம் என்று அதற்கும் வழிசெய்து போயிருக்கிறது தி.மு.க. அரசு.

எதற்குள்ளும் எப்படி வேண்டுமானாலும் நுழைந்து கொள்கிற திறமை கொண்டவர் கருணாநிதி. பாடநூற்களின் பின் அட்டையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவை என்ற படம். அந்த வட்டத்துக்குள் திருவள்ளுவர். அதுவும் கருணாநிதி நிறுவிய கன்னியாகுமரி திருவள்ளுவர். கருணாநிதி கூடாது என்றால் திருவள்ளுவரும் கூடாதுதானே. திருவள்ளுவர் சிலைக்குக் கீழே ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற குறள் வரி. அது கருணாநிதி கையெழுத்தில்! அக்ரகார நெஞ்சம் வஞ்சம் கொள்ள அது ஒன்று போதாதா? மொத்தமாய் பின் அட்டையை ஒட்டி மூடினார்கள். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வரியை வெற்றாய்ச் சொல்வதன் மூலமோ, எழுதுவதன் மூலமோ எல்லோருக்கும் மேலாய் தன் உயர்வை முன்வைக்கும் கருணாநிதியை நினைத்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை.

கருணாநிதியின் இந்த திறமையைக்கூட ஆளுமை என்று பேர் சொல்ல அறிஞர் குழாம் இருக்கிறது. மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், ‘ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையா நின் சீரிளமைத் திறம் வியந்து வாழ்த்துதுமே'' என்ற உண்மை உரைக்கும் வாசகத்தை உருவி எடுத்த கருணாநிதியின் அச்சத்தையும் ஆளுமை என்று போற்றுவார்கள் இவர்கள். கருணாநிதியையோ, அவர் தயாரித்த பாடநூலையோ காட்டி சமச்சீர் கல்வியை ஒழிப்பது அல்ல ஜெயலலிதாவின் மூலநோக்கம். உயர் நீதிமன்றம் விட்டால் உச்ச நீதிமன்றம் என்று மறுபடி மறுபடி ஓடச் செய் வதற்கு – உயர் சாதிக் கொழுப்பும், ஆங்கில உயர் வர்க்கத் திமிருமே மூலகாரணிகள். நடுவணரசில் இருக்கிற பார்ப்பனர்கள் முதல் ‘உச்சி நீதிமன்ற'ப் பார்ப்பனியம் வரை தனது முயற்சியை காப்பாற்றி விடாதா என்ற நம்பிக்கை, மக்களுக்கு எதிராய் ஓடச் செய்கிறது.

- தலித் முரசு, ஜூலை 2011 

கருத்துகள்

பிரபலமான பதிவுகள்

பஞ்சாபி இலக்கியம் - ஆட்காட்டிக் குருவிகளாய் பெண் குரல்கள்

வட்டார வழக்கும் இலக்கியமும் சிறுகதை - நெடுங்கதை

நா.காமராசன் ஓய்ந்த நதியலை

பா.செயப்பிரகாசத்தின் சிறுகதை ‘அம்பலகாரர் வீடு’ - பெ.விஜயகுமார்

பா.செ.வின் 'அம்பலகாரர் வீடு' - செ.சண்முகசுந்தரம்